வெற்றிக்கதைகள்-22


குடிசைகளில் குவியும் கோடிகள்


தாராவி!
இந்தப் பெயரை நம்மில் பல பேர் சினிமாவில் குடிசைகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாக பார்த்திருக்கலாம். ஆனால் தாராவி ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் தொழில் மையம் என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.தாராவி மும்பை நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் இரண்டு முக்கிய ரயில்வே இணைப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மேற்கில் மாஹிம் மற்றும் பந்த்ரா, கிழக்கில் மாதுங்கா, வடக்கில் மிதி ஆறு, தெற்கில் சியான் ஆகியவை தாராவியின் எல்லைகள்.300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு தீவுகளைக் கொண்ட பகுதியாக இது இருந்தது. கோலி இன மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு அங்கு வாழ்ந்து வந்தனர். நீர்தேங்கியிருக்கும் ஈரமான பகுதிகள் அந்த தீவுகளைச் சுற்றியும் இருந்தன. பின்னர் அப்பகுதிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு ஒரே நிலப்பகுதியாக மாறிவிட்டது. மீன்பிடி தொழிலும் காலப்போக்கில் அழிந்தது. வெளியில் இருந்து வந்த மக்கள் குடியேறத் தொடங்கினர்.19,20 ம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து குஜராத், தமிழகம், உத்திரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மும்பைக்கு பிழைப்பு தேடி வரத்தொடங்கினர். அவர்கள் வாழ்க்கை நடத்த வாய்ப்பையும் தங்குவதற்கு இடத்தையும் தாராவி கொடுத்தது. மும்பை மக்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்ய ஆட்கள் கிடைத்தனர். நகரை விட்டு தள்ளி அவர்கள் வெளியே இருந்ததால் நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தாராவி அடித்தட்டு மக்களின் புகலிடமாக மாறியது.காலப்போக்கில் மும்பை நகரம் வளர்ந்து வடக்கு நோக்கி சென்றதால், இப்போது தாராவி மும்பையின் மையப்பகுதியில் முக்கியமான இடத்தில் உள்ளது. புதியதாக உருவாகியுள்ள நிதி மற்றும் வணிக மையமான பந்த்ராகுர்லா காம்ப்ளக்ஸ் தாராவியிலிருந்து கல்லெறி தூரத்தில் அமைந்துள்ளது. மும்பையின் பூகோள அமைப்பும், நிலப்பற்றாக்குறையும் தாராவியின் இட மதிப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேறியதன் விளைவாக வித்யாசங்கள் இல்லாத அனைத்துப் பிரிவு மக்களும் வாழும் இடமாக தாராவி மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அதிகமாக உள்ளனர். இதற்கு அடுத்ததாக உத்ரபிரதேச மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தாராவி 100 க்கும் மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த நகர் மற்றும் குடியிருப்புகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. வாழ்க்கையில் சாதாரண நிலையில் உள்ள மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அங்கு வாழ்ந்து வருகின்றனர். போதுமான ரோடு வசதி, சுகாதார வசதிகள் தாராவியில் இல்லை. தகரங்கள் சுவர்களாகவும், பிளாஷ்டிக் சீட்டுகள் ஓடுகளாகவும் கொண்ட வீடுகள் தான் அங்கு அதிகம். ஒரே அறையில் வாழக்கூடிய குடும்பங்கள் ஏராளம். கழிவறை வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் வாழ்பவர்கள் தான் தாராவி மக்கள்.ஆனால் தாராவியின் சிறப்பே அங்கு வாழும் மக்கள் பல விதமான கஷ்டமான வாழ்க்கைக்கு இடையேயும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை பெருக்கும் தன்மை தான். ஆரம்பத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து வந்த மக்கள் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு ஒரு காலனியை உருவாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற பல பேர் தோல் சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டனர். உத்ரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரெடிமேடு ஆலைத் தொழிலில் முனைந்தனர்.பின்னர் பல விதமான தொழில்கள் அங்கு பெருகின. அவற்றில் பிளாஷ்டிக், கண்ணாடி போன்றவற்றை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகத்துக் கொண்டு வரும் தொழில், ரெடிமேடு துணிகள் தயாரிப்பு, தரமான தோல் பொருட்கள் தயாரிப்பு, பானைகள் மற்றும் பிளாஷ்டிக் தொழில்கள் ஆகியவை முக்கியமானவை. கனரக உலோக வேலைகள், மரவேலைகள், நகைத்தயாரிப்புகளும் அங்கு நடக்கின்றன.நமது நாட்டில் விற்கப்படும் விலை உயர்ந்த மிக முக்கியமான வெளிநாட்டு ரக ரெடிமேடு பிராண்டுகள் கூட தாராவியில் தான் தயாரிக்கப்படுகின்றன. நகரங்களில் வாழும் நவீன பெண்கள் விரும்பும் கைப்பைகள், சூட்கேஸ்கள், காலணிகள் ஆகியவையும் தாராவியில் தயாராகின்றன. நாடு முழுவதும் விற்பனையாகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்து 902 யூனிட்டுகள் தாராவியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் ஜவுளி சம்மந்தமாக ஆயிரத்து 36 யூனிட்டுகளும், பானைத் தொழிலில் 932 யூனிட்டுகளும், தோல் தொழிலில் 567 யூனிட்டுகளும், பிளாஷ்டிக் பிராசசிங் தொழிலில் 478 யூனிட்டுகளும் இருப்பது தெரியவந்தது. பல தொழில்கள் குறுந்தொழில்களாக வீடுகளிலேயே செய்யப்படுவதால் அவை குறித்த சரியான கணக்குகள் இல்லை. ஒரே ஒரு அறையில் மட்டும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மட்டும் தாராவியில் 15 ஆயிரம் உள்ளன.தாராவியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அங்கேயே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி அங்கு வேலை செய்வதற்காக பிறப்பகுதியிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள மறுசுழற்சிக்கான தொழிலில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தாராவி மக்களின் சாராசரி மாத வருமானம் 3 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.இந்த தொழிற்சாலைகளுக்கு சைக்கிள்களில் எடுத்துச் சென்று டீ விற்பது, முறுக்கு விற்பது போன்ற தொழில்களிலும் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். தாராவியில் குடிசையில் தங்கி தொழில் செய்து சம்பாதித்து தங்கள் சொந்த ஊர்களில் பல லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள மாளிகைகளை கட்டுபவர்கள் பல ஆயிரம் பேர். இப்படி தாராவியில் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானஉற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.மிககஷ்டமான சூழ்நிலையில்வாழ்ந்த போதும் வேறு யாராவது தங்களுக்கு வாய்ப்பைத் தருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தொழில் முனையும் தன்மையுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தாராவி மக்கள் உழைப்புக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். அதனால் தாராவி பகுதியையே அமைப்பு சாராத் தொழிஞூலகளின் முக்கிய மையமாக உருவாக்கியுள்ளனர். எனவே தாராவி சாதாரண மக்கள் வாழும் நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மட்டுமல்ல. அவர்கள் குடிசையில் வாழ்ந்துவந்தாலும் அசாதாரணமான தொழில் முனையும் தன்மையை பெற்ற பலர் வெற்றிகரமாக தொழில் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புரளும் முக்கியமான இடமும் ஆகும்.



*ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக உருவாகியுள்ள தாராவியின் மக்கள் தொகை குறித்த சரியான புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை. ஆனால் 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை அங்கு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தாராவியின் மத்திய பகுதியான சாம்ரா பஜாரில்தான் மக்கள் மிகவும் அதிகம். உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கமாக வாழம் இடங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 29 ஆயிரத்து 500 பேர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாராவியில் மும்பையின் சாராசரியை விட 11 மடங்கு மக்கள் நெருக்கம் உள்ளது.

வெற்றிக்கதைகள்-21

அகதிகளின் உழைப்பால் உயர்ந்த லூதியானா

லூதியானா பஞ்சாப் மாநிலத்தின் தொழில் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும் கூட. சட்லெஜ் நதியின் பழைய கரையில் அமைந்துள்ளது. மான்செஸ்டர் ஆப் இந்தியா என்பது அதன் இன்னுமொரு பெயர். லூதியானா மாவட்டம் தான் பஞ்சாப்பின் செல்வந்த மாவட்டமாக கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக விலையுள்ள நீர்வளம் பெற்ற நிலங்களை உடைய மாவட்டமும் இது தான்.லூதியானாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலுறைகள் தயாரிக்கும் இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டன. அந்த சமயத்தில் சில தொழில் நிறுவனங்களும் தோன்றின. 1920 களில் பவுண்டரி தொழிலும் அங்கு ஏற்பட்டது. இதைத்தவிர குறிப்பிடத்தக்க தொழில்கள் ஏதும் அப்போது அங்கில்லை. லூதியானா நகரின் பெயரை தொழில்கள் மூலம் உலகறியச் செய்தவர்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் தான் என்பது ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது. இந்தியா துண்டாடப்பட்டு 1947 ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றது. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் வசித்து வந்த மண்ணின் மைந்தர்களின் அங்கிருந்து விரட்டப்பட்டனர். பலர் தங்கள் நிலம், வீடு, சொத்துக்களை இழந்து நிர்கதியாக இந்தியாவிற்கு வந்தனர். அப்படி தங்கள் உடமைகளை விட்டுவிட்டு வெறுங்கையுடன் லூதியானா வந்த அகதிகள் பலர் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கடினமாக உழைத்தனர். கிடைத்த தொழிலை கிணற்றில் மூழ்குபவனுக்கு கிடைத்த கயிறுபோல பயன்படுத்தி கிடுகிடுவென முன்னேறினர். அவர்களின் அந்த உழைப்பு, லூதியானாவை இன்று இந்தியாவின் முக்கிய தொழில்மையமாக உருவாக்கிக் காட்டியிருக்கிறது.1950 மற்றும் 60 களில் புதியவர்களும், இளைஞர்களும் பல தொழில்களில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டனர். சைக்கிள்களின் உதிரிபாகங்கள், இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், டீசல் இன்ஜின்கள், ஜெனரேட்டர்கள், டயர், டியூப்புகள், எஃகு தயாரிப்பு போன்ற தொழில்களில் நுழைந்தனர். அவற்றை ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினர். அதன்விளைவாக தொழில் வேகமாக வளர்ச்சிப் பெற்றது.எனவே தற்போத குறுந்தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தர தொழில்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் எனப் பல்வேறு நிலைகளில் தொழில்கள் நடந்து வருகின்றன. பதிவு செய்யப்பட்ட சிறு, நடுத்தர மறறும் பெரிய தொழில்கள் மட்டும் 40 ஆயிரம் உள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவில் வுல்லன் பஞ்சாலைகள் 150 உள்ளன.பின்னலாடைத் துறையை பொருத்தவரøயில் உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதியில் லூதியானா தனி பெயர்பெற்ற நகரமாக விளங்குகிறது. இறககுமதி செய்யப்படும் வெளிநாட்டு இயந்திரங்கள் அனைத்தையும் அதேமாதிரி உருவாக்குமளவு திறமை பெற்ற ராம்கடியா இனத்தைச் சேர்ந்த மக்கள் லூதியானாவின் வெற்றிக்கு பின்னணியில் உள்ளனர். லூதியானாவைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக விலை மதிப்புள்ள வெளிநாட்டு இயந்திரத்தின் உதிரிபாகம் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதற்கு மாற்று பாகத்தை அனுப்பி வைக்குமாறு இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டு கம்பெனியை அதன் உரிமையாளர் நாடினார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த உதிரிபாகம் வந்து சேரவில்லை. உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க உள்ளூர் ராம்கடியா நண்பரை தொழிலதிபர் அணுகினார். அவர் இரண்டே நாட்களில் அந்த உதிரிபாகத்தை தரமானதாக தயாரித்து அளித்துவிட்டார். அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை மிகமிக குறைவு. அதற்கு சில தினங்களுக்கு பின்னர் இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டுகம்பெனிகளின் பிரதிநிதிகள் லூதியானா வந்து ராம்கடியா நண்பர் தயாரித்த உதிரிபாகத்தைக் கண்டு பிரமித்து போனார்கள்.இதுபோன்ற தொழில்நேர்த்தியும் லூதியானாவை வெற்றியடையச் செய்திருக்கிறது.தையல் இயந்திரத் தயாரிப்பில் நாட்டின் முதலிடம் லுதியானாவிற்கு தான். விதவிதமான தையல் இயந்திரங்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் 400 க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ரெடிமேடு துணி ரகங்கள் அதிகளவில் லூதியானாவில் தயாரிக்கப்படுகின்றன. அதில் 95 சதவீதத்திற்கு மேல் சிறு தொழில்களாக நடப்பது சிறப்பு. மற்ற எல்லாத் தொழில்களையும் விட லூதியானாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருப்பது அங்கு உற்பத்தியாகும் சைக்கிள்கள் தான். பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு குடும்பம் தான் லூதியானாவின் சைக்கிள் தொழிலுக்கு வித்திட்டிருக்கிறது. மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரில் 1944 ம் ஆண்டில் முஞ்சால் குடும்பத்தினர் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினர். வியாபாரம் சற்று சூடுபிடிக்கும் சமயத்தில் பிரிவினை நடந்தது. வாழ்க்கையைத் தேடி லூதியானாவிற்கு முஞ்சால் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். அந்த குடும்பம் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள 9 ஆண்டுகள் பிடித்தது. பின்னர் 1956 ம் ஆண்டு சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிலை இங்கேயும் ஆரம்பித்தனர். நல்ல வரவேற்பு கிடைத்ததும் முழு சைக்கிள்களை உருவாக்கி விற்பனை செய்யதுவங்கினர். வெறும் 25 சைக்கிள்களில் தொடங்கிய அவர்களது தொழில் நாளடைவில் தினசரி 18 ஆயிரத்து 500 சைக்கிள்கள் தயாரித்து விற்பனை செய்யும் பிரமாண்டமான "ஹீரோ' சைக்கிள் நிறுவனமாக உயர்ந்தது. உலக அளவில் அதிக சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக 1986 ல் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இந்திய சந்தையில் ஹீரோ சைக்கிள் 48 சதவீதத்தை பிடித்துக் கொண்டுள்ளது.பின்னர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு, கம்ப்யூட்டர் தயாரிப்பு என்று தொழிலை பெருக்கி தற்போது 20 கம்பெனிகளையும், 5 ஆயிரம் விற்பனை நிலையங்களையும், 25 ஆயிரம் பணியாளர்களையும் கொண்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது முஞ்சால் குடும்பத்தின் நிறுவனம்.ஒரு நிறுவனத்தில் அதிகமாக ஒரே சமயத்தில் பொருட்களை வைத்திருக்கும் போது தேவையில்லாத பணமுடக்கம் ஏற்படும், அதை தவிர்ப்பதற்காக தேவைப்படும் நேரத்தில் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளும் "ஜிட்' என்ற முறையை நாட்டிலேயே முதன்முறையாக அமல்படுத்தியவர்களும் இவர்கள் தான். ஒரு பணியாளர் ஒரே நேரத்தில் இரண்டு இயந்திரங்களை இயக்கும் முறையை அமல்படுத்தி அதில் பெரும் வெற்றியை கண்டவர்களும் இவர்கள் தான். 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இந்நிறுவனத்தின் தலைவராக 86 வயதான பிரிஜ்மோகன் முஞ்சால் உள்ளார். ஹீரோ நிறுவனம் குறித்த பாடங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டவரும் இவர்களது தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் நல்ல உறவு பேணப்படுவதால் தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. ஹீரோ நிறுவனத்தைப் போலவே ஆவன் நிறுவனம் நவீன தொழிற்சாலையை நிறுவி சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.சிறிய அளவிவில் லூதியானாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் இன்று உலக அளவில் பெரிய தொழில் குழுமங்களாக மாறி நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்காற்றி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த தொழில்நிறுவனங்களில் 21 சதவீதம் லூதியானாவில் உள்ளதாகவும், அவை மாநிலத்தின் உற்பத்தியில் 28 சதவீதம் அளிப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.எல்லாவற்றையும் இழந்து ஊர்பெயர்ந்து வந்தமக்களின் உழைப்பால் லூதியானா இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் லூதியானா. வந்தவர்களால் வாழவைக்கப்பட்ட ஊர் லூதியானா.


*சைக்கிள் நகரம்
இந்தியாவின் சைக்கிள் நகரமாக லூதியானா விளங்குகிறது. ஹீரா, ஆவன், அட்லாஸ், நீலம் உட்பட பல சைக்கிள்கள் இங்கு தயாராகின்றன. இந்த தொழிலில் ஆயிரத்து 800 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புபெற்றுள்ளனர்.
*ஆசியாவின் பெரிய விவசாயப்பல்கலைக்கழகம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகமாகும். ஆயிரத்து 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

வெற்றிக்கதைகள்-20









அமராவதிக்கரையிலிருந்து அமெரிக்கா வரை

நாட்டின் மற்ற தொழில் நகரங்களுக்கு இல்லாத பல பெருமைகள் கரூருக்கு உண்டு. இந்நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையும், சங்கப்புலவர்களால் பாடப்பட்ட சிறப்பையும் உடையது. சங்க காலத்திலேயே கரூர் முக்கியமான வணிக மையமாக திகழ்ந்து வந்துள்ளது.அக்காலத்தில் கரூவூர், வஞ்சி என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கரூர், சேரன் செங்குட்டவன் ஆட்சி காலத்தில் சேரநாட்டின் தலைநகராக இருந்துள்ளதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு அரசர்களின் ஆட்சி காலத்தின் போதும் தலைநகராக விளங்கி வந்தது. 1850 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது பொதுயுகம் 150 ல், கரூர் நம் நாட்டின் முக்கியமான சர்வதேச வணிக மையமாக இருந்து வந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியரான தாலமி குறிப்பிட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் கரூர் பகுதியில் பல இடங்களில் ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. அந்த காலக்கட்டங்களிலேயே முக்கியமான நகை தயாரிக்கும் மையமாக கரூர் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூர் நகரின் மக்கள் தொகை 2001 ம் ஆண்டு கணக்குப்படி 1.5 லட்சம். மாவட்டத்தின் மக்கள் தொகை 10 லட்சம். தமிழகத்தில் அதிகமான பெண்கள் உள்ள மாவட்டங்களில் கரூரும் ஒன்று. பெரும்பான்மையான மக்களின் தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. நெல், வாழை, கரும்பு< வெற்றிலை, பயிறு வகைகள், மரவள்ளி, நிலக்கடை உள்ளிட்ட பொருள்கள் விளைகின்றன.கடந்த பல ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நிதி சம்மந்தமான தொழில்கள், பஸ் பாடி பில்டிங், கொசுவலை உற்பத்தி என்று பல தொழில்கள் மக்கள் ஈடுபட்டு அவற்றில் முன்னேற்றமும் கண்டு வருகின்றனர். இதில் கைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்ற ஊராக கரூர் விளங்குகிறது. அந்த துறையில் கரூருக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நெசவுத்தொழிலின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் நெசவுத்தொழிலில் நுழைந்து அதை பெரிய அளவில் எடுத்துச் சென்றுள்ளனர். அதன்விளைவாக இன்று நாட்டின் முக்கிய ஜவுளி ஏற்றுமதி மையமாக கரூர் விளங்குகிறது.1975 ம் ஆண்டு கரூரில் 15 ஏற்றுமதியாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 500 பேருக்கு மேல் ஏற்றுமதித்தொழிலில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான வால்மார்ட், டார்ஜெட் ஆகியவற்றிற்கு இங்கிருந்து பொருட்கள் செல்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஆப்பிரிக்க உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கரூர் தொழிலதிபர்கள் துணியை உற்பத்தி செய்து அதை அப்படியே விற்க நினைக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யத்துவங்கியதால் தான் சர்வதேச அளவில் தனியான இடத்தை தனக்கென பிடித்துள்ளது. துணிகளில் விதவிதமான பொருட்கள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அவற்றில் குளியலறை, சமையலறை, படுக்கையறை சம்மந்தப்பட்ட துணி வகைகள் முக்கியமானவை. படுக்கை விரிப்புகள், துண்டுகள், தரையில் விரிக்கப்படும் துணிகள், சிற்றுண்டி துண்டுகள், நாப்கின்கள், ஏப்ரன்கள், திரைச்சீலைகள், தலையணை உறைகள் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.அண்மை காலங்களில் ஜவுளித்துறையில் விசைத்தறிகள் அதிகமாகி கைத்தறிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றதால் அதையொட்டி அரவை மற்றும் நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், டெய்லரிங், பேக்கிங் தொழில்களும் வளர்ந்து அவை 3 லட்சம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிகளின் மூலம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை கரூர் ஈட்டித்தருகின்றது.கரூர் தொழிலதிபர்களின் வெற்றிக்கு பின்னால் அவர்களது கடும் உழைப்பு உள்ளது.விவசாயத்தில் வருமானம் குறைந்ததால் வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடன் அதிகமான விவசாயிகள் கைத்தறித் தொழிலில் நுழைந்தனர். அவர்களில் 50 சதவீதம் பேர் வேலையாட்களாகவே நுழைந்து பின்னர் தொழிலில் பங்குதாரர்களாக சேர்ந்து தங்களது கடின உழைப்பு காரணமாக முன்னேறியுள்ளனர். அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதி செய்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தொழிலாளிகளாக இருந்து முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உறவுகளும் அவற்றின் அடிப்படையில் அமைந்த பங்குதாரர்கள் சார்ந்த அமைப்பு முறையும் முக்கிய காரணமாக உள்ளது.கரூரின் தொழில்வளர்ச்சிக்கு அங்கு உள்ள நிதி அமைப்பு முறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆரம்ப காலங்களில் தொழில்களுக்குத் தேவையான நிதியை அப்போதிருந்த வட்டிக்கடைகள், மற்றும் உறவுகள் மூலமே தொழில் முனைவோர் பெற்று வந்துள்ளனர். தொழில் வளர்ந்த போது அங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே கூட்டாக சேர்ந்து நிதி அமைப்புகளை உருவாக்கினர். அதன்மூலம் நூற்றுக்கணக்கான சிறியதும், பெரியதுமான நிதிஅமைப்புகள் பங்குதாரர்களை வைத்து துவக்கப்பட்டன. 1980 களில் அவற்றின் வளர்ச்சிஅதிகரித்தது. சராசரியாக ஆறு முதல் 10 பேர் வரை சேர்ந்தும் சில சமயங்களில் 20 பேர்கள் வரை சேர்ந்தும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். உறவுகள் மற்றும் நட்புகள் மூலம் கிராமங்களின் சேமிப்புகள் மூலதனங்களாகவும், வைப்புகளாகவும் வந்தன. அதனால் வைப்புகள் அதிகரித்து தொழில்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டன. லாபங்கள் மேலும் முதலீடாக போடப்பட்டதால் நிதி அமைப்புகள் வேகமாக வளர்ந்தன.கடன்களும் உறவுகள், நட்புகள் மற்றும் தொடர்புகளை மையமாக வைத்தே கொடுக்கப்பட்டதால் பெரும்பாலும் முறையாக திருப்பி செலுத்தப்பட்டன. பெரும்பாலான கடன்கள் நம்பிக்கை, நாணயம் மற்றும் பங்குதாரர்களின் உத்தரவாதம் ஆகியவற்றை வைத்து கொடுக்கப்பட்டன. ஒரு வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல் போய்விட்டால் பல சமயங்களில் சம்மந்தப்பட்ட பங்குதாரரே அந்த தொகையை செலுத்தி நிறுவனத்திற்கு வராகடன் இல்லாமல் செய்து விடுவார். வங்கிகளை விட அங்கு நடத்தப்பட்ட நிதி அமைப்புகளில் வைப்புகளுக்கும், கடன்களுக்கும் வட்டி அதிகம். கடன்களுக்கு வட்டி அதிகமாக இருந்த போதும் தொழில் முனைவோர் பெரும்பாலும் நிதி அமைப்புகளையே அதிகம் நாடுகின்றனர். இதற்கு காரணம் கடன்பெறுவதற்கு உள்ள எளிதான வழிமுறைகள் மற்றும் நிறைய சமயங்களில் சொத்துக்களை அடமானமாக வைத்து உத்தரவாதம் கொடுக்கத் தேவையில்லாத, சூழ்நிலை ஆகியவை ஆகும். மேலும் கடன் வாங்கியவருக்கு தொழில் சிரமங்கள் ஏற்படும் போது நிதி அமைப்புகள் தங்கள் நடைமுறைகளை தளர்த்தி உதவுகின்றன. அதுமட்டுமன்றி அவசர தேவைகளுக்கு உடனே உதவி கிடைக்கிறது. எனவே வங்கிகளை விட மக்கள் நிதி அமைப்புகளை அதிகம் நாடுகின்றனர்.கரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாமக்கல், சங்ககிரி பகுதிகளை பின்பற்றி கரூரிலும் மோட்டார் வாகனத்தொழில் ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் பஸ் பாடி பில்டிங் என்றாலே கரூர் என்ற பெயர் பெற்றுள்ளது. துவக்கத்தில் சிறிய அளவில் துவக்கப்பட்ட பஸ் பாடி பில்டிங் தொழில் தற்போது தென்னிந்தியாவில் உள்ள 90 சதவீத தனியார் பஸ்களுக்கு பாடி கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சாதாரண பஸ் முதல் நவீன பஸ்கள், சொகுசு பஸ்கள், நவீன ஸ்கேனிங் வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகள் என்று பஸ்கள் கரூரில் உருவாகின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு 350 கோடி ரூபாய் வருமானம் கரூருக்கு கிடைக்கிறது.விவசாயத்திலிருந்து ஜவுளி, நிதி, மோட்டார் வாகனத்தொழில் போன்றவற்றில் இறங்கி அதில் பெரும் வெற்றியை பெற்றுள்ள கரூர் தொழில்முனைவோர் நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். வங்கித் தொழிலில் முன்னோடி நகரம் இரண்டு வரையறுக்கப்பட்ட வங்கிகள் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே கரூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரூர் வைஸ்யா வங்கி 1916 ம் ஆண்டு வெங்கட்ராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார் ஆகியேரால் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 285 கிளைகளுடன் 13 மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. லட்சும விலாஸ் வங்கி 1926 ம் ஆண்டு ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி 246 கிளைகளுடன் 14 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிகள் கரூர் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன. * கரூரில் 2002 ம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்றில் கரூரில் தொழில்துறையின் மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த காலக்கட்டத்தில் கரூரில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வந்தன. தொழில்துறைக்குத் தேவையான நிதியில் பெரும்பங்கை தனியார் நிதி அமைப்புகளால் கொடுக்கப்படுகிறது. இங்கு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்கள் தொழில் ரீதியாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டு வளர்ந்தாலும் பல விதங்களில் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. ஒரு நிறுவனத்தில் கடன் வாங்கியவரின் நம்பகத்தன்மை சரியில்லை என்றால் மற்ற நிறுவனங்கள் அவரைப் பற்றிக் கேட்கும் போது அது குறித்து ரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதன்மூலம் பிற நிதி நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. *கரூரில் அரசு நிறுவனமான தமிழ்நாடு பேப்பர் மில்ஸ் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காகித உற்பத்தி ஆலையாக விளங்குகிறது.

வெற்றிக்கதைகள்-19




வைரம் பட்டை தீட்டும் தொழிலால் மின்னும் சூரத்

வெற்றிக்கதைகள்-18

பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

சூரத்!
நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் சூரத்திற்கு தொழில் நகரம் என்ற அந்தஸ்த்தை அளித்தவர்கள் அந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் என்பதும், அவர்கள் தொழிலை கற்க நகரத்திற்கு வரும் போது இன்று வரை பிளாட்பாரங்களில் தான் தங்குகிறார்கள் என்பதும் வியப்பான செய்தி.சூரத் நகரம் ஜவுளி, வைரம் என்று இரு முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது. குஜராத்தின் மொத்த ஜவுளி விற்பனையில் 80 சதவீதம் சூரத்தில் நடக்கிறது. இங்கு 30 ஆயிரம் கடைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜவுளி சந்தை உள்ளது. குஜராத் மாநிலத்தின் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்து வரும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஜவுளி தொழிலிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 60 சதவீதம் பேர் இவர்கள் தான். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நூல் உற்பத்தி, விவிங், பிராசசிங் மற்றும் எம்ப்ராய்டரிங், செயற்கை இழை நூல் தயாரிப்பு என்று ஜவுளித் தொடர்பான அனைத்து தொழில்களும் ஒருங்கே அமைந்துள்ள சூரத்தில் நாளொன்றிற்கு 6 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு 25 சதவீதம் ஆகும். அதற்கு சூரத் நகர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுவதால் இங்கு மட்டும் 400 சொந்த பிராண்டு ஜவுளி ரகங்களை உருவாக்கியுள்ளனர். ஜவுளி தொழிலில் மட்டும் ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியஸ்டர் நூல் உற்பத்தியில் 90 சதவீதம் இந்நகரில் தான் உற்பத்தியாகிறது. ஜவுளி தொழிலில் பல லட்சம்பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத் நகரில் வைரம் பட்டைத்தீட்டும் தொழில் 1909 ல் துவங்கியது. குஜராத் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்ற சிலர் அங்கு வைரம் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 1909ல் நாடு திரும்பினர். சூரத் நகருக்கு வந்த அவர்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலை சிறிய அளவில் துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நகை தொழில் உட்பட வியாபாரத் தொழிலில் சிறந்து விளங்கி வந்த பாலன்பூரி ஜெயின் சமூகத்தினர் இந்த தொழிலில் இறங்கியதும், வைரம் பட்டைத் தீட்டும் தொழிலின் வளர்ச்சி அதிகரித்தது. சூரத் நகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இத்தொழில் மிக வேகமாக வளர்ந்தது விவசாயிகளாக இருந்த படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தொழிலில் இறங்கிய பின்னர் தான். குஜராத் மாநிலத்தின் சவுராஷ்ட்ர பகுதியில் மானாவரி விவசாயமே அதிகம். இதில் விவசாயிகள் ஆண்டில் 6 மாதம் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடியும். அதிலும் போதிய வருமானம் இருக்காது. இதனால் பலர் விவசாய வேலை இல்லாத சமயங்களில் வேறு தொழில் செய்து வருமானம் பார்ப்பதும், மழை பெய்ததும் விவசாயத்திற்கு திரும்புவதும் வாடிக்கையான ஒன்று. இப்படி பல தொழில்களில் இறங்கிய விவசாயிகள், விவசாயத்தைவிட தொழிலில் லாபம் அடையும் போது விவசாயத்தில் காட்டிய ஈடுபாட்டையும், உழைப்பையும் புதிய தொழிலில் காட்டியதால் பெரும் வளர்ச்சிப் பெற்றனர். சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் இப்படித் தான் வளர்ந்தது. சவுராஷ்ட்ரா பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலையில்லாத ஆறு மாதங்கள் சூரத் நகருக்கு வந்து வைரம் பட்டைத்தீட்டும் பட்டறைகளில் வேலைக்கு சேருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேலை பழகும் வரை தொழிலதிபர்கள் குறைந்த சம்பளம் கொடுப்பது குறித்து இவர்கள் கவலைக் கொள்வதில்லை. காலையிலிருந்து மாலை வரை பட்டறைகளில் வேலை செய்யும் இவர்கள், வேலை முடிந்தவுடன் ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரங்களிலேயே தூங்குகின்றனர். விவசாய வேலை இல்லாத சமயங்களில் மட்டும் சூரத் வரும் இவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் தொழிலை கற்றுக் கொண்டுவிடுகின்றனர். பின்னர் தாங்களே சொந்தமாக சிறிய பட்டறையை ஆரம்பித்து சூரத்திலேயே தங்கிவிடுகின்றனர். இதற்கு தேவையான மூதலீட்டை அவர்களது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அளிக்கின்றனர். தொழிலில் லாபம் கிடைத்ததும் அவற்றை திருப்பி செலுத்தும் இந்த தொழில் முனைவோர், தங்களது கிராமங்களுக்கு தேவையான ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தல், கோயில்களை புணரமைத்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த நடைமுறை இன்றும் தொடருகின்றது. இதனால் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் புதிய தொழில் முனைவோர் வைரம் பட்டை தீட்டும் தொழிலை துவங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலை கற்கும் வரை பிளாட்பாரவாசிகளாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாதாரண ஏழை மக்களால் வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத்தில் பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உலகில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் 80 சதவீதம் சூரத்தில் பட்டை தீட்டப்பட்டுகிறது.10 லட்சம் பேர் இந்த தொழிலில் இங்கு ஈடுபட்டுள்ளனர். இதில் 20 சதவீதம் பேரின் மொத்த முதலீடே 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் தான். சில தொழிலதிபர்கள் சீனாவில் தங்களது கிளை நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளில் கிளை நிறுவனங்கள் அமைத்து நேரடி ஏற்றுமதி வர்த்தகம் நடக்கின்றது. வைரத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் சூரத்தில் நடக்கின்றது.பெல்ஜியம் நாட்டில் உள்ள உலகின் வைரச்சந்தையான ஆன்ட்வர்ப் நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தகம் சூரத் வர்த்தகர்களால் நடத்தப்படுகிறது. இதனால் அந்த வைரச்சந்தையில் சூரத் வியபாரிகளின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்கின்றது.

1.விலை மதிப்பு மிக்க வைரங்களை கையாளும் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் சிறு முறைகேடு நடந்தாலும் தொழில்முனைவோர் பெருத்த நஷ்டம் அடைய நேரிடும். சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடக்க இந்த தொழிலில் இறங்கியுள்ள பாலன்பூரி ஜெயின்களும், படேல் சமூகத்தினருக்கும் உள்ள அதீத கடவுள் நம்பிக்கையும் மதத்தலைவர்கள் மீதான மதிப்பும் தான் காரணம். பாலன்பூரி ஜெயின்களின் மத குருமார்கள் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வைக்க வேண்டிய லாபம் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளனர். அந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வருவதால் நிறைந்த தரமும், சரியான விலையும் அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அதன்காரணமாகவே சர்வதேச அளவில் வைர வியாபார போட்டியில் வெற்றியை அள்ளியிருக்கிறார்கள். இவர்களைப்போலவே படேல் சமூகத்தினரின் தொழில் நேர்மை அவர்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
2: சூரத் வைரத் தொழில் வெற்றிக்கு பட்டை தீட்டுவதில் உள்ள தரம் மற்றொரு காரணமாக உள்ளது.
3: சூரத் பிளாட்பாரங்களில் ஆறுமாதங்கள் முகாமிடும் தொழிலாளர்களால் நகரின் அழகு கெடுகிறது என்ற புகார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அவர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். அப்போது வைரம் பட்டைத் தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சந்தித்து, நாங்களும் ஒரு காலத்தில் பிளாட்பாரவாசிகளாக இருந்தோம், தற்போது தொழில் துவங்கி வரி செலுத்தி வருகிறோம். சூரத் மாநகராட்சி நிர்வாகம் இதை வைத்தே நடக்கிறது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, வருங்கால தொழிலதிபர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
4: சூரத் வைர ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளவர்களில் 26 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். மீதமுள்ளவர்கள் பள்ளிக்கூட படிப்பு மட்டுமே படித்தவர்கள். தங்கள் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு உதவ ஆங்கில மொழி தெரிந்த பட்டதாரிகளை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். அவர்களை "ஆடிட்டர்' என்று அழைக்கின்றனர். ஆங்கில மொழி தெரியாத வெளிநாட்டு அதிபர்கள் வரும் போது மொழிபெயர்ப்பாளர்கள் உடன் வருவது போல, சூரத் தொழிலதிபர்கள் ஏற்றுமதி தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த "ஆடிட்டர்களை' உடனழைத்து செல்கின்றனர்.

புள்ளி விபரங்கள்:
சூரத் வைர தொழிலதிபர்களில்....
* உறவினரை பின்பற்றி தொழிலுக்கு வந்தவர்கள் 51 சதவீதம்* உறவினர் மூலம் முதலீடுக்கான தொகை பெற்றவர்கள் 90 சதவீதம்* தொழிலின் நடைமுறை மூலதனத்திற்கு சக தொழில்முனைவோரை சார்ந்திருப்பவர்கள்(கைமாற்றுதல் முறை): 60 சதவீதம், வங்கிகளை சார்ந்திருப்பவர்கள் 9 சதவீதம்* சூரத் நகரில் வசிக்கும் தொழில் முனைவோரின் சராசரி ஆண்டு வருமானம் 4.6 லட்சம் ரூபாய்* ஆண்டு மொத்த வர்த்தகம்: 50,000 கோடி ரூபாய்
* சூரத்தின் வளர்ச்சி விகிதம் 11.6 சதவீதம். இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை காட்டிலும் அதிகம். இந்தியாவின் மிக வளர்ச்சி விகிதம் பெற்ற நகரங்களில் சூரத்தும் ஒன்று.

வெற்றிக்கதைகள்-17


பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

ராஜ்கோட்டின் ராஜநடை
வெற்றிக்கதைகள்17நம் நாட்டின் தொழிற்வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கடந்த 50 ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ள தொழில் மையங்கள் தான். இவற்றில் பெரும்பாலானவை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தால் விவசாயத்தை தொடர முடியாமல் புதிய தொழில்களில் இறங்கி வெற்றியடைந்ததால் உருவானவை. விவசாயத்தில் காட்டிய கடும் உழைப்பை நேரம் காலம் பார்க்காமல் புதிய தொழில்களிலும் காட்டியதால் அவர்களால் வெற்றிக்கொடியை நாட்ட முடிந்தது. இந்த வரிசையில் குஜராத்தின் நான்காவது பெரிய நகரமான ராஜ்கோட்டும் ஒன்று. இங்கு விவசாயத்தில் படேல் இன மக்களும், விவசாயத்திற்கு தேவையான கருவிகளை செய்யும் பணியில் "ராம்கடியா' இன மக்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு இயந்திரத்தை பார்த்தவுடன் அதேபோல செய்துவிடும் திறன்படைத்த ராம்கடியா மக்களும், கடும் உழைப்பாளிகளான படேல் இன மக்களும் ஒன்று சேர்ந்து மாற்றுத் தொழில்களில் இறங்கினர். விளைவு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழில்நகரமாக ராஜ்கோட் தற்போது உருவாகி நிற்கின்றது.ஆஜி மற்றும் நயாரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ள ராஜ்கோட் நகரம் 1612 ம் ஆண்டில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த ஜடேஜா ராஜபுத்திர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் வரை விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகரமாக இருந்து வந்தது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இறைக்கும் டீசல் இன்ஜின்களை லீசஸ்டர் என்ற இங்கிலாந்து நிறுவனம் விற்பனை செய்து வந்தது. 1950 களில் லீசஸ்டர் டீசல் இன்ஜின் ஒன்றை பிரித்து பார்த்த படேல் ஒருவர், அதேபோல இன்ஜினை உருவாக்கி லீசஸ்டர் மாடல் டீசல் இன்ஜின் என்று பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார். ஒரிஜினல் லீசஸ்டர் இன்ஜினைவிட விலை குறைந்தும், தரமானதாகவும் லீசஸ்டர் மாடல் இன்ஜின்கள் இருந்ததால் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மேலும் பலர் டீசல் இன்ஜின் உற்பத்தியில் இறங்கினர். சில ஆண்டுகளிலேயே லீசஸ்டர் இன்ஜின்களின் விற்பனை பாதாளத்திற்கு போய்விடவே அந்த கம்பெனி நிர்வாகிகள் ராஜ்கோட்டிற்கு வந்து ஆராய்ந்தனர். இனி லீசஸ்டர் இன்ஜின்களை இந்தியாவில் விற்பது சிரமம் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். "லீசஸ்டர்' என்ற பெயரிலேயே இன்ஜின்களை தயாரித்து விற்றுக் கொள்ள அனுமதிப்பதாகவும், அதற்கு ராயல்டியாக ஒரு தொகையை அளிக்கும்படியும் ராஜ்கோட் டீசல் இன்ஜின் தயாரிப்பாளர்களான படேல்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு படேல்கள் உடன்படவில்லை. மாறாக புதிய பெயர்களில் இன்ஜின்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கினர். 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்டேண்டர்டு ஆக்ரோ, பீல்டு மார்ஷல் இன்ஜின்கள். தற்போது ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. விவசாயத்திலிருந்து விவசாயத்திற்கு தேவையான டீசல் இன்ஜின் தொழிலுக்கு மாறிய ராஜ்கோட் விவசாயிகள், விவசாயத்தைவிட தொழில்துறை நல்ல லாபத்தை அளிக்கவே மெல்ல மெல்ல மற்ற தொழில்களிலும் இறங்கினர்.முதலில் டீசல் இன்ஜின்பாகங்கள் தயாரிப்பதற்காக வார்ப்படத் தொழிலும், லேத்துப்பட்டறைகளும் துவங்கப்பட்டன. டீசல் இன்ஜின் உற்பத்தியிலேயே முடங்கிப்போய்விடாமல் வாய்ப்புகளைத் தேடி தொழில்முனைவோர் சென்றதால் ஆட்டோமொபைல், ஜவுளி இயந்திரங்கள் போன்றவற்றிற்குத் தேவையான உதிரிபாகங்களும் இந்த பட்டறைகளில் உற்பத்தியாகத் தொடங்கின. முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே இல்லாமல் தற்போது மதர்மெஷினரி எனப்படும் உற்பத்தி இயந்திரங்களை உருவாக்கத் தேவைப்படும் இயந்திரங்கள் ராஜ்கோட்டில் தான் உருவாகின்றன. உலகில் அறிமுகப்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், வாகனம் அறிமுகமாகி நான்கே மாதத்தில் ராஜ்கோட்டில் உற்பத்தி செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீட்டில் பயன்படும் கேஸ் அடுப்பு முதல் இந்திய விமானப்படைக்குத் தேவையான உதிரி பாகங்கள் வரை பல ஆயிரக்கணக்கான பொருட்கள் தற்போது ராஜ்கோட்டில் உற்பத்தியாகின்றன.ராஜ்கோட்டின் இந்த அசுர வளர்ச்சியின் பின்னணியில் அந்நகர மக்களுக்கே உரித்தான சில விசேஷ குணங்கள் காரணமாக அமைந்துள்ளது.ராஜ்கோட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கி பல ஆண்டுகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனர். மாதந்தோறும் தங்கள் செலவிற்கு மட்டும் பணம் பெற்றுக் கொள்ளும் இவர்கள் குறைந்ததது 5 ஆண்டுகள் வரை தங்களது சம்பளத்தை நிறுவன உரிமையாளரிடம் விட்டு வைக்கின்றனர். தொழிலை நன்கு கற்றுத் தேர்ந்தவுடன் இதுவரை விட்டுவைத்த மொத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு தொழிலாளியும் சொந்தமாக தொழிலை ஆரம்பிக்கிறார். அப்போது பழைய நிறுவன முதலாளியே முதல் ஆர்டரை கொடுப்பதுடன் முதலீட்டிற்கு தேவையான கூடுதல் பணத்தையும் அன்பளிப்பாக தந்து உதவுகிறார். இதன்காரணமாகவே ராஜ்கோட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.ஒவ்வொரு தொழிலாளியும் தானும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் உழைப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை என்பதோடு தொழிற்சங்கங்களும் இந்நகரில் இல்லை.இதுதவிர இந்நகரில் உள்ளவர்களுக்கு குடிபழக்கம் இல்லாததும் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. மது அருந்துவது கேவலம் என்ற மக்களின் மனநிலையே இதற்கு முக்கிய காரணம்.ராஜ்கோட் நகரம் தொழில்வளத்தில் சிறந்து வழங்கி செல்வ செழிப்பில் திகழ்ந்தாலும் இந்நகர மக்கள் ஆன்மீகம், சமுதாய சேவை போன்றவற்றிலேயே அதிக ஈடுபாடு காட்டி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

* ராஜ்கோட் நகரின் தொழிற்வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் ராம்கடியா மக்கள் எந்த ஒரு இயந்திரத்தையும் ஒரு முறை பார்த்தவுடனேயே அதைப்போலவே தயாரித்துவிடும் வல்லமை பெற்றவர்கள். இதனால் ஜெர்மனி போன்ற இயந்திர தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் ராம்கடியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
ராஜ்கோட்டில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள்:13,000*பிரபல எஸ்கேஎப் பேரிங்குகள் மற்றும் ரிங்குகள் ஜெர்மனிக்க மட்டும் ஆண்டிற்கு 10 லட்சம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.*பொறியியல் உற்பத்தி 700 கோடி ரூபாய். * பவுண்டரிகள் 500* ராஜ்கோட் தங்க சந்தை நாட்டின் முக்கியமான தங்க சந்தைகளில் ஒன்றாகும். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகிறது.
தொழில்கள் பட்டியல்:வார்ப்படத்தொழில், ஏர்கம்பரசர், பர்னிச்சர், மரம்வெட்டும் இயந்திரங்கள், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு, லேத் மெசின்கள் தயாரிப்பு, வைரம் வெட்டும் இயந்திரங்கள், ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பு, வெள்ளிநகை தயாரிப்பு, தங்கநகைத்தயாரிப்பு, கேஸ் லைட்டர் தயாரிப்பு, பித்தளை பாகங்கள் தயாரிப்பு, பேரிங்குகள், மினிடிராக்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஐடி மென்பொருள் தயாரிப்பு என்று ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன.

வெற்றிக் கதைகள் -16


வெற்றிக்கதைகள்-16

முட்டைத்தொழிலில் கொடி கட்டிய நாமக்கல்
குடும்பத்தலைவர்கள் லாரி தொழிலில் ஈடுபட்டு நாமக்கல்லிற்கென்று தனி முத்திரை பதித்தார்கள் என்றால், குடும்பத்தலைவிகள் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல்லிற்கு பெயர் பெற்று தந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க செய்தி.நாமக்கல் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. தமிழகத்தின் மொத்த முட்டை உற்பத்தியில் 65 சதவீதம் நாமக்கல்லில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு நாமக்கல் முட்டை உற்பத்தி 3 கோடியாகும். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் 90 சதவீதம் நாமக்கல் முட்டைகள் தான். நாளொன்றிற்கு அதிகபட்சமாக 45 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு தேவையான முட்டைகள் நாமக்கல்லிருந்தே பெரும்பாலும் சப்ளை செய்யப்படுகின்றன. முட்டை உற்பத்தியில் முன்னணி வகிப்பதால் நாமக்கல் முட்டை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முன்னணி இடத்தை பெற்றதற்கு லாரி தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி தான் காரணம். லாரி தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைவர்கள் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வெளியூர்களிலேயே இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் பெயரளவிற்கு விவசாயத்தில் ஈடுபட்டும், மாடுகளை வளர்த்தும் வந்த குடும்ப பெண்கள் சிறிய அளவில் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடும் போது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவும் முடியும் என்பதால் பெண்கள் தயக்கமின்றி இந்த தொழிலில் இறங்கினர். அதிக வெப்பம், அதிக மழை இல்லாத சூழ்நிலை நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் வளருவதற்கு உதவியாக இருந்தது. கோழிப்பண்ணைக்குத் தேவையான தீவனம், மருந்து உள்ளிட்ட பொருட்களை லாரி உரிமையாளர்கள் தங்கள் சொந்த லாரிகளிலேயே கொண்டு வர முடிந்ததால் மற்ற இடங்களைவிட குறைந்த செலவில் கோழிகளை வளர்க்க முடிந்தது. கொங்குப்பகுதி பெண்களுக்கே உரித்தான கடும் உழைப்பு பண்ணைகளின் எண்ணிக்கையையும் கோழிகளின் எண்ணிக்கையையும் விடுவிடுவென உயர்த்தியது. இதில் கிடைத்த வெற்றியை கண்டு பின்னாளில் பல ஆண்களும் கோழிப்பண்ணைத் தொழிலில் முழுநேரமாக ஈடுபட்டது தனி வரலாறு. ஆனால் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முக்கிய இடம் பிடித்ததற்கு அப்பகுதி பெண்களின் கடும் உழைப்பு தான் காரணம்.லாரி, கோழிப்பண்ணைத் தொழிலில் முத்திரைப்பதித்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களின் தொழில்முனையும் தன்மையால் விசைத்தறி தொழில், நூல்மில்கள், ஆத்தூர் பகுதியில் விளையும் மரவல்லிக்கிழங்கைப் பயன்படுத்தி சாகோ தொழிற்சாலைகள், காகித தொழிற்சாலைகள் என்று பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அண்மைக் காலமாக கல்வித்துறையிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. தரமான பள்ளிகள் இப்பகுதியில் உருவாகியதால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநிலஅளவிலான ரேங்குகளை இப்பகுதி மாணவர்கள் குவித்து வருகின்றனர். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கென்றே தனியான பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். சில பிரபல பள்ளிகள் தங்களது கிளைகளை வெளிமாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளன. கல்லூரி கல்வியிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் 25 மாணவிகள் கல்லூரி கல்வி கற்று வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து இளம்பெண்களும் கல்லூரி கல்வி முடித்த பெண்களாக இருப்பார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பிடத்தக்க வளம் ஏதுமில்லாத நாமக்கல் கடந்த 30 ஆண்டுகளில் பல தொழில்களின் மையமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிக படிப்பறிவு இல்லாவிட்டாலும், கடுமையான உழைப்பை மூலதனமாக்கி பாடுபட்ட சாதாரண விவசாயக் குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களது கடின உழைப்பு, தொழில்முனையும் தன்மை, சேமிப்பு, அர்பணிப்பு ஆகியவை நாமக்கல் என்ற பெயரை உலக அறியச் செய்திருக்கின்றது.
* நெம்பர் 1 நாமக்கல்!
நாட்டிலேயே அதிக சரக்கு வாகனங்கள் உள்ள பகுதி
நாட்டில் அதிக அளவு முட்டை ஏற்றுமதி
மாநிலத்தில் அதிக அளவு முட்டை உற்பத்தி