புளியன்குடி: தமிழகத்தின் எலுமிச்சை நகரம்


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டத்தைச் சேர்ந்தது புளியன்குடி நகரம். பிரசித்தி பெற்ற சிவன், சங்கர நாராயணன் மற்றும் கோமதி தேவியார் கோவில்களைக் கொண்ட சங்கரன் கோவில் நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்னொரு விதமாகச் சொல்வதானால் இராஜபாளையம் நகரிலிருந்து வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவு.  

2001 ஆம் வருட கணக்குப்படி புளியன் குடி நகராட்சியில் வசிக்கும் மக்களின் அதிகார பூர்வ எண்ணிக்கை 60,124 பேர். தற்போது சுமார் 70,000 அளவு இருக்கும் எனச் சொல்கிறார்கள். நகராட்சி பகுதிக்குள் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி. பருவ மழைக் காலங்களைத் தவிர பொதுவாக வறட்சியான கால நிலையைக் கொண்டது. எலுமிச்சைச் செடி வளர ஏற்ற மண் மற்றும் சூழ்நிலையை உடைய பகுதி. 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இடம். அதையொட்டி வியாபாரம், இதர தொழில்கள் மற்றும் கல்வி  ஆகியன பெருகியுள்ளன. விவசாயத்தை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் கருதி 1970 களிலேயே சில உள்ளூர் முன்னோடிகள் சேர்ந்து சிறு விவசாயிகள் சேவா சங்கம், புளியன் குடி  என்கின்ற அமைப்பை ஆரம்பித்ததாக அதன் செயலாளர் திரு. கோமதி நாயகம் ஐயா அவர்கள் பெருமையுடன் கூறுகிறார்.

எழுபத்தி ஒன்பது வயதாகும் ஐயா அவர்கள் அக்காலத்திய காந்திய நடைமுறைக் கல்வியைக் கற்று பின்னர் புளியன்குடி அரசுப் பள்ளியிலேயே சுமார் முப்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரும் ஒரு விவசாயி. மேலும் அந்தப் பகுதியின் கல்வி மற்றும் விவசாயத்துறைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுபவர்.

புளியன்குடி விவசாயிகள் சேவா சங்கம் ஆரம்பம் முதலே மாவட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அரசின்  திட்டங்கள் மூலம் அந்தப் பகுதிக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும். மேலும் சேவா சங்கத்தின் உறுப்பினர்களான  திரு. அந்தோணிசாமி மற்றும் அமரர் திரு. வேலு முதலியார் ஆகிய இருவர் விவசாயத் துறையில் தங்களின் முன்னோடியான முயற்சிகளுக்குத் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று விருது பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தியாகும்.

திரு.அந்தோணிசாமி அவர்கள் அந்தப் பகுதியின் முன்னோடியான விவசாயி. இயற்கை விவசாயத்தில் உள்ளார்ந்த நாட்டமும் அனுபவமும் உடையவர். எலுமிச்சை, கரும்பு, காய்கறிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். வறட்சிக்கும் நோய்களுக்கும் எலுமிச்சை விவசாயம் ஆட்பட்டு வருவது கண்டு அதற்கு முடிவு காண ஒரு புதிய ரகத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்.




படம்: நடுவில் உள்ள திரு.அந்தோணிசாமி அவர்களின் புதிய ரக எலுமிச்சை தோட்டத்தில் திரு. கோமதி நாயகம் மற்றும் கனகசபாபதி.

தண்ணீர்ப் பாசனமும் பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு, அதனுடன் நாட்டு எலுமிச்சையை ஒட்டுக் கட்டி, பின்னர் நாட்டுச் செடியை முறையாக வளர வைத்து தனது புதிய ரகத்தை உருவாக்கியுள்ளார்.  மேலும் நாற்று நடுவதற்கு ஆறு மாதத்துக்கு முன் தொடங்கி நிலத்தை முறையாகத் தயார் படுத்தி, சரியான நாற்றுகளை நட்டு வளர்க்கும் போது தொடர்ந்து அதிகமான விளைச்சல் எடுக்க முடியும் எனக் காட்டி வருகிறார்.  

அதற்காக 2005 ஆம் வருடத்தில் குடியரசுத் தலைவரின் கண்டுபிடிப்புக்கான விருதினைப் பெற்றுள்ளார். சொட்டு நீர்ப் பாசனம் மூலமே விவசாயம் செய்கிறார். அவரது விவசாயம் பத்து மாதத்துக்குப் பலன் கொடுப்பதாகச் சொல்கிறார்.  மற்ற முறைகளில் எட்டு மாத விளைச்சலே சாத்தியம் என்கிறார். கொத்துக் கொத்தான காய்கள், தொடர்ச்சியான காய்ப்பு ஆகியனவற்றை இயற்கை முறைகள் மூலம் பெற முடியும் எனக் காட்டி வருகிறார்.

புளியன்குடி மட்டுமின்றி சிவகிரி வட்டம், சங்கரன் கோவில் வட்டம் மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் எலுமிச்சை உற்பத்தி அனைத்தும் சேர்ந்துதான் புளியன்குடியை எலுமிச்சை நகரமாக உருவாக்கி உள்ளன. ஏனெனில் எலுமிச்சைக்கான முதன்மையான சந்தை அங்குதான் உள்ளது.



1981 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சந்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமன்றி கேரள மாநிலம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் செல்கிறது. கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தங்களது சந்தை மூலம் 15000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகிறார்கள் என புளியன்குடி எலுமிச்சை கமிசன் மண்டி தலைவர் திரு.செ.குழந்தைவேலு தெரிவிக்கிறார்.



படம்: கமிசன் மண்டி தலைவர் திரு.குழந்தைவேலு அவர்களுடன்

கமிசன் மண்டி மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 50000 ஆயிரம் பேருக்கு மேலாகவும் வேலை கிடைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மண்டியை ஒட்டி லாரித் தொழில்   மற்றும் சாக்கு வியாபாரம்,  பனை ஓலை பின்னுதல் ஆகிய தொழில்கள் நடைபெறுகின்றன. அதனால் பத்து சாக்குக் கடைகளும், பட்டமடை சமூகத்தினரின் பனை ஓலை பின்னும் வேலைகளும் சுறுசுறுப்பாக நடை பெற்று வருகின்றன.

நாட்டின் பிற தொழில் மையங்களைப் போலவே இங்கும் வியாபாரம்  நம்பிக்கை அடிப்படையிலேயே நடைபெறுகிறது. வாரம் ஒருமுறை கணக்குகள் முடித்துக் கொள்ளப்படுகின்றன. எலுமிச்சை விவசாயம் மேலும் வளருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். அதனால் விவசாயிகள் தென்னையிலிருந்து எலுமிச்சைக்கு மாறி வருகின்றனர்.

எலுமிச்சை விவசாயம் மேலும் வளர அரசு முழு மானியம் கொடுக்க வேண்டுமென அவர்கள் வேண்டுகின்றனர். தற்போது அது குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் இல்லை. மேலும் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்குகளை அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும். அதன் மூலம் இயற்கை விவசாயாத்தின் பலன்கள் அனைவருக்கும் சென்றடைய முடியும் என கோமதி நாயகம் தெரிவிக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளில்  விவசாயிகள் நம்பிக்கை இழந்து காணப்படும் போது, விவசாயத்தை ஆர்வத்துடன் செய்பவர்களை புளியன்குடியில் பார்க்க முடிந்தது. மேலும் இயற்கை விவசாயம் மூலம் நன்கு விவசாயம் செய்ய முடியும் என்பதையும் அவர்களில் சிலர் எடுத்துக் காட்டி வருகின்றனர். அதற்காக சேவா சங்கமும் சில முன்னோடி விவசாயிகளும் எடுத்து வந்துள்ள முயற்சி பாராட்டத் தக்கது.


நாடு முழுவதும் பெரும்பாலும் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த மையங்களே பெரிய அளவில் செயல் பட்டு வருகின்றன. அந்த வகையில் முழுவதும் விவசாயம் சார்ந்த ஒரு வியாபார மையம் நல்ல முறையில் இயங்கி வருவது நமது சாதாரண மக்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. இந்த பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்து எனக்கு உதவி புரிந்த சென்னையைச் சேர்ந்த எனது  நண்பரும் இயற்கை வேளாண்மை ஆர்வலுருமான கம்பெனி ஆலோசகர் திரு.நந்தகுமார்  அவர்களுக்கும் எனக்கும் இந்த அனுபவம் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. 

மன்மோகன் சிங் என்ன செய்கிறார்?


2004 ஆம் வருடம் மே மாதம் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற போது அவரிடமிருந்து நாடே பெரிதாக எதிர்பார்த்தது. அவரது கட்சியைச் சாராதவர்களும் பொது மனிதர்களும் கூட அவரை  மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அரசியல் தலைவர்களைப் பார்த்தே பழகிப் போன மக்களுக்கு முதல் தடவையாக ஒரு பொருளாதார நிபுணர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது நல்ல மாற்றமாகக் கூடத் தெரிந்தது.

மன்மோகன் சிங்கிற்கு நாட்டின் பொருளாதாரத் துறைகளுடன் உள்ள  தொடர்பு அலாதியானது. பொருளாதாரம் சம்பந்தமான அரசின் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். வணிக மற்றும் நிதி அமைச்சகங்களில் பொருளாதார ஆலோசகர், நிதித் துறை செயலர், திட்டக் குழு துணைத் தலைவர், பிரதமரின் ஆலோசகர், மத்திய வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார். 

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் வணிக மற்றும் முன்னேற்ற அமைப்பில் பணியாற்றியும்,  பின்னர் ஜெனிவாவில் வளரும் நாடுகள் சம்பந்தப்பட்ட குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் நேரடியான அனுபவத்தைப் பெற்றுள்ளார். எனவே பொருளாதாரத் துறைகளில் வெவ்வேறு நிலைகளில் அவர் பெற்ற அனுபவம் பரந்து பட்டது. 

அவரின் மேற்படிப்புகள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் இருந்தன. ஆரம்ப காலத்தில் தனது பணியைப் பொருளாதார ஆசிரியராக பஞ்சாப் மற்றும் டெல்லி பல்கலைக் கழகங்களில் ஆற்றியிருந்தார். எனவே அவரது படிப்பு மற்றும் உயர்  மட்டத்தில் பொருளாதாரம் சம்பந்தமான கொள்கைகள் வகுப்பதில் அவரின் அதிகப்படியான அனுபவங்கள் ஆகியன அவரிடமிருந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அவரை 1991 ஆம் வருடம் நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற போது நிதி அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து வந்த காலத்தில் தாராள மயம் மற்றும் உலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டன. அதற்கு முன்னர்  தொழில்கள் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களிலும் அதிகார வர்க்கங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொழில் தொடங்குவதற்கு உரிமம் கொடுப்பதில் தொடங்கி, கம்பெனிகள் பங்குகளை வெளியிடும் போது விலையை நிர்ணயிப்பது வரை பல விசயங்களிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்தது.

நமது நாடு தொழில் முனையும் தன்மையை அதிகமாகக் கொண்ட மக்களை உடையது. ஆனால் அவர்களுக்குத் தொழில் செய்யப் பல விதத் தடைகள் இருந்தன. எனவே அரசின் கொள்கைகளில் இருந்த நடைமுறை இறுக்கங்கள் மற்றும் தேவையில்லாத கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென பரவலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. அந்த வகையில் தாராள மயமாக்கல் தேவைப்பட்டது.

 ஆனால் கூடவே உலகமயமாக்கல் கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தன. உள் நாட்டுக் கட்டமைப்புகளையும் நிறுவனங்களையும் வலுப்படுத்தாமலேயே வெளி நாட்டுக் கம்பெனிகளையும் முதலீடுகளையும் அனுமதிப்பது தவறான செயலாகும். விவசாயம் மற்றும் பல வகையான சிறு தொழில்களில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வரும் நமது நாட்டில் திடீரென பன்னாட்டு முதலீடுகளை அனுமதிப்பது நாட்டின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விசயமாகும். ஆனால் அது குறித்து பரவலான விவாதங்கள் எதுவுமின்றி புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. 

அப்போது முதல் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பிதாமகனாக சித்தரிக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அந்தக் கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்துவதற்குக் காரணம் பிரதமராக இருந்த நரசிம்மராவ் எனக்  கூறப்படுகிறது. ஏனெனில் பிரதமரின் ஆதரவு இல்லாமல் அரசின் கொள்கைகளை முற்றிலும் வேறான வழியில் அமைத்திருக்க முடியாது. மேலும் அதற்கு முன்னர் மன்மோகன் சிங் உலக மயமாக்கல் கொள்கைகளுடன் அறியப்பட்டவராக இல்லை.  

எனவே அவர் தனக்கென சொந்தக் கொள்கைகள் எதுவும் இல்லாதவராகவும், பல வருடங்களாக அரசாங்கத்தில் ஒரு பணிவான உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தால் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செயல்படுவர் எனக் கூறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எப்படியாயினும் போதுமான கவனமில்லாமல் இந்தியாவில் உலக மயமாக்கல் கொள்கைககளை அறிமுகப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்குள்ளது. அதற்கு பன்னாட்டு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களும் காரணமாக அமைந்திருந்தன.

2004 ஆம் வருடம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது அவர் பிரதமராகப் பொறுப்பேற்றது ஒரு தற்செயலான நிகழ்வாகவே அமைந்தது. பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2009 ஆம் வருடத்திலும் அவரே பிரதமராகப் பொறுப்பேற்றார். எனவே சென்ற மே மாதத்துடன் அவர் பிரதமராகப் பொறுப்பேற்று ஒன்பது வருடங்கள் முடிந்து விட்டன.

அதன் மூலம் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு அடுத்த படியாக அதிக வருடங்கள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதுவும் இந்தியாவைப் போன்ற பரந்த நாட்டில் அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் இவ்வளவு ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு வகித்திருப்பது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்வாகும். எனவே கடந்த ஒன்பது வருட காலத்தில் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான போக்குகளைப் பார்க்கலாம். அவற்றின் மூலம் அவர் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும் நாட்டு நடைமுறையையும் புரிந்து கொள்ள முடியும்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பொருளாதார சீர்திருத்தம் என்கின்ற பெயரில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எல்லாமே மக்களின் ஒட்டு மொத்த நலன் குறித்து மேற்கொள்ளப்படுவை அல்ல. அவற்றில் பெரும்பாலானவை வெறும் கொள்கை மாற்றங்கள் மட்டுமே. நாட்டின் கொள்கைகளில்  அடிப்படையாக எந்த ஒரு மாற்றம் கொண்டு வரும்போதும் அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.  .

அந்த வகையில் நமது பொருளாதார அடிப்படைகள், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகள் ஆகியவற்றை மையமாக வைத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசுகள் கொண்டு வந்த முக்கிய மாற்றங்களில் மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் மற்றும் ஆலோசனைகளே மையமாக அமைந்துள்ளன. அவற்றில்  பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனங்களின் பலன்களே அடிப்படையாகத் தெரிகிறது.

வெளி நாட்டு முதலீடுகள் பல துறைகளில் தேவையில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஈர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் சலுகைகள் அரசு பணத்தில் மானியமாகச் செல்கின்றன. அதே சமயம் வேலை வாய்ப்பைத் தரக் கூடிய உள் நாட்டு சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டாம் பட்சமாகவே நடத்தப் படுகின்றன.  எனவே அவற்றின் செயல்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் வெளிநாட்டு மூலதனம் மூலமாகவே இந்தியாவில் மூதலீடுகளை அதிகப்படுத்தி தொழில்களைப் பெருக்க முடியும் என்ற தவறான கருத்தை மன்மோகன் அரசும் சந்தைப் பொருளாதார ஆதரவாளர்களும் உருவாக்கி விட்டனர். அதன் மூலம் நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும்  ஒரு அவப் பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் தவறான வகையில் நமது மக்களின் தன்னம்பிக்கை குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விட நமது சேமிப்பு மற்றும் முதலீடு விகிதங்கள் மிகவும் அதிகமாகும். 

1991 முதல் இன்று வரை கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, இந்தியாவின் மொத்த முதலீடுகளில் உள்நாட்டு முதலீடுகளே 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய குறு, சிறு மற்றும் மத்திய வகை தொழில்கள் அனைத்தும் உள்நாட்டு மூலதனங்கள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் குடும்ப அமைப்புகள் மூலம் உண்டாகும் சேமிப்புகளில் இருந்து அரசுத் துறை மற்றும் பெரிய கம்பெனிகளுக்கு அதிக அளவு தொகைகள் முதலீடுகளாகச் செல்கின்றன. இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்களில் பல்லாயிரம் கோடி வியாபாரம் மற்றும் ஏற்றுமதி உள்நாட்டு முதலீடுகள் மூலமே  நடந்து வருகிறது.

அந்த வகையில் மன்மோகன் அரசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்துள்ளது மிகப் பெரிய தவறாகும். சில்லறை வணிகம் அதில் ஈடுபட்டுள்ளவர்களால் சொந்தமாக மூலதனம் திரட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தத் துறை அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பளித்து,  புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி பொருளாதாரத்தில் வலுவான பங்கு வகிக்கிறது. அதில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தது அந்தத் துறையை மட்டுமன்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் செயலாகும்.

நாட்டுக்கு அடிப்படையான விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றன.  தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நீடித்து வருகிறது சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது விவசாயத் துறையாகும். அது வீழ்ச்சியடைவது நாட்டின் எதிர்காலத்துக்குக் கேடு விளைவிக்கும். 
 .
பணக்கார நாடுகள்  பல கோடிக்கணக்கான டாலர்களை விவசாயிகளுக்கு மானியமாகக் கொடுத்து தங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். அதே சமயம் உலக மயமாக்கல் என்ற பெயரில்  எந்த ஆதரவுமில்லாத சாமானிய இந்திய விவசாயிகளை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பெரும் பண்ணைகளுடன் சமமாகப் பாவிப்பது எந்தவித நியாயமும் இல்லாத செயலாகும். பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகள் எதுவுமில்லை. ஆனால்  உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பெரிய கம்பெனிகளுக்கு மட்டும் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  சலுகைகள் அவசியமில்லாமல் கொடுக்கப்படுகிறது.

நாட்டில் வேலை வாய்ப்பை அதிக அளவில் கொடுக்கக் கூடிய குறு மற்றும் சிறு தொழில்கள் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளால்  பாதிப்படைந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க  அரசிடமிருந்து உறுதியான முயற்சிகள் எதுவுமில்லை. மக்கள் கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கிச் செல்வது அதிகரித்து வருகிறது. அங்கும் அவர்களில் மிகப் பெரும்பாலனவர்களுக்கு கடும் போராட்டங்களே காத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை பற்றியெல்லாம் பேசப்படுவது கூட இல்லை.

மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகளின் இன்னொரு பரிணாமமாக மதிப்பிட முடியாத நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இதுவரை பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பலன்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்காகத் தாரை வார்த்துக்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. அலைக்கற்றை, கனிமங்கள் மற்றும் நிலக்கரி ஆகியவை அந்த வகையைச் சார்ந்தவை. இயற்கை வளங்கள் நாட்டு மக்களுக்குச் சொந்தமானவை. அவை மிகுந்த கவனத்துடனும் கடுமையான விதிமுறைகளுடனும் கையாளப்பட வேண்டியவை. ஆனால் சரியான கொள்கைகளும் தேவையான ஒழுங்கு முறைகளும் இல்லாமல் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடு அவை சூறையாடப்பட்டு வருகின்றன. 

அதே சமயம் கடந்த பத்து வருடத்தில் சென்ற நிதியாண்டு வரைக்கும் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. உள்நாட்டில் பல தொழில்கள் வளர்ச்சியடைந்தும், பிற நாடுகளில் இந்திய நிறுவனங்களின்  மூலதனங்கள் மற்றும் வியாபாரம் ஆகியன அதிகரித்தும் வந்துள்ளன. ஆனால் வளர்ச்சியின் போக்கு பரவலானதாகவும் அனைவருக்கும் பலனளிப்பதாகவும் இல்லை. அதிலும் சென்ற நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து ஐந்து விழுக்காட்டுக்குச் சென்றுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்குச் சுமைகள் அதிகரித்தவாறே உள்ளன.

மேற்கத்திய சிந்தனைகளை மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகள் அங்கேயே பெரும் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. அதனால் அந்தப் பொருளாதாரங்கள் நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றன. மேலும் உலகின் பிற  நாடுகளிலும் பொருளாதாரங்களுக்கும் கடும் சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது ஒரு பொருளாதார நிபுணராக உள்ள மன்மோகன் சிங் அதே கொள்கைகளை நமது நாட்டில் கடைப்பிடித்து வருவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. 

நமது பொருளாதாரம் இயற்கையாகவே வலுவான அடிப்படைகளைக் கொண்டது. அதிக சேமிப்புகள், முதலீடுகளை உருவாக்கும் திறன், சிறு தொழில்கள், தொழில் முனைவதில் ஆர்வம் மற்றும் அரசுகளை நம்பி வாழ விரும்பாத மக்கள் ஆகியன  அதன் தனித்தன்மைகள். அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பதற்குப் பொருத்தமான கொள்கைகளை நாம் தான் வகுக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக வேறான சூழ்நிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் உருவான  கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவது பெரிய தவறாகும். அதனால் நாட்டுக்குச் சிரமங்களே மேலும் அதிகமாகும்.


( ஆழம், ஜூலை 2013)