ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான நிதி நிலை அறிக்கை


2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பல வகைககளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. வழக்கமாக பிப்ரவரி 28 ஆம் தேதி தான் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடை முறைக்கு வரும் போது போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. அதனால் திட்டப்பணிகளைச் செயல்படுத்துவதில் அரசுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த வருடம் முதல் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலந் தொடங்கி இது வரை இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வருடம் முதல் அது பொது நிதி நிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இனி மேல் இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதி நிலை அறிக்கை இல்லை.

2017-18 நிதி நிலை அறிக்கையானது  ஏழைகள்  மற்றும் சாதாரண மக்கள், விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு, சிறு தொழில்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. எனவே விவசாயம் மற்றும் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கான கடன் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில்  பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்குள்ள முக்கிய பிரச்னை நீர் மேலாண்மை இல்லாத தன்மை. எனவே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகும்.  அவை சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் நமது தேசத்திலுள்ள மொத்த வேலை வாய்ப்பில் அவை தான் 92 விழுக்காட்டுக்கு மேல் கொடுக்கின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான சிரமங்கள் இருந்து வருகின்றன.  போதிய நிதி வசதிகள் இல்லை. அதற்காகத் தான் மத்திய அரசு 2015 ஆம் வருடம் முத்ரா வங்கியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிதி நிலை அறிக்கை ரூபாய் ஐம்பது கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவற்றின் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி நபர் வரி விகிதத்தைப் பொறுத்த வரையில் ரூபாய் 2,50,000 முதல் ரூபாய் 5,00, 000 வரை வருமானம் பெருபவர்கள் இது வரை பத்து விழுக்காடு வரி செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சாதாரண மக்களுக்கான வரிச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஐம்பது இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு சுமார் 12,5000 ரூபாய் அளவு பலன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ரூபாய் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு பத்து விழுக்காடு சர்சார்ஜ் வரி போடப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு பதினைந்து விழுக்காடு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டும், அதிகமாக உள்ளவர்களுக்கு  அதிக வரி போடப்பட்டும் உள்ளது.  

கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.  2018 மே மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட உள்ளது.  
ஏழை மற்றும் சாதாரண மக்களுக்காக வீடு கட்டும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கான வட்டிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வீடுகள் கட்டுவதற்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையில் மேற்படிப்புகளுக்கான தேர்ச்சிகளை மேற்கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வெவ்வேறு அமைப்புகள் தேர்வு நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீரான முறை உண்டாகும். உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழக மானியக் குழு சீரமைக்கப்பட்டு, திறமையாக இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படும்.

அரசியல் முறையில் இருக்கும் முக்கியமான பிரச்னை கட்சிகள் பிறரிடமிருந்து நன்கொடை பெறும் முறை. அதில் நேர்மையும் நம்பகத் தன்மையும் இல்லை. இனி மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கணக்கில்லாமல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவு. இதன் மூலம்  தூய்மையான அரசியலுக்கு ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது என நம்பலாம்.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. இதன் மூலம் நமது தேசம் சரியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, உலக அரங்கில் சீக்கிரமே முதல் நிலைக்குச்  செல்லும் நிலைமை வர  வேண்டும்.   

( விஜய பாரதம், சென்னை, பிப்.2017)