தமிழகப் பல்கலைக்கழங்கள் சீர்பெறுமா ?


                                        

அண்மைக் காலமாகத் தமிழகத்தின் பெரிய பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக் கழகத்தின் மதிப்பெண் மறு கூட்டல் மற்றும் தேர்வுகள் சம்பந்தமாக  அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. அங்கு பல வருடங்களாகவே தேர்வு முறையில் பெரிய குளறுபடிகள் நடந்து வருவதாகவும், அதற்காகப் பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. அதையொட்டி சில பேராசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன. அதனால் பல்கலைக் கழகத்தின் நம்பகத் தன்மை பற்றியே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகப் பல்கலைக் கழகங்கள் குறித்துக் கடந்சில வருடங்களாகவே தொடர்ந்து  கவலையளிக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு இறுதியில்  அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஊழல் நடவடிக்கைகளுக்காகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்து வருட சிறை தண்டனை பெற்றார். பின்னர் 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம்       கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர், ஒரு துணைப் பேராசிரியரிடம் பணம்  வாங்குகின்ற போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். அதன் மூலம் துணைவேந்தர் ஒருவர் பொறுப்பு வகிக்கும் போதே பல்கலைக் கழகம் ஒதுக்கியுள்ள தனது அதிகார பூர்வமான வீட்டில் கையும் களவுமாகப் பிடிபடுகின்ற அவலம் நடந்தேறியது.

அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இன்னொரு முன்னாள் துணைவேந்தர் மற்றும் சட்டப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆகியோர் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் பேர்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளைப் பதிவு செய்தது. மேலும் அவர்களுக்குத் தொடர்புடைய வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடந்து   கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களுக்கான ஆவணங்கள்   பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

முன்பு 2012 ஆம் வருடத்திலேயே தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் அப்போதைய  துணை வேந்தரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனைகள்  நடத்தப்பட்டு பின்னர் ஊழல் வழக்கு போடப்பட்டது. கடந்த பல மாதங்களாகவே பல்கலைக் கழக நிர்வாகிகள் மேல் அந்த வகையான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மேலும் திருவள்ளுவர், பெரியார், பாரதிதாசன், மதுரை காமராசர், அழகப்பா, டாக்டர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களிலும்  ஊழல்களும், விதி மீறல்களும் நடந்துள்ளதாகவும்,  அதற்காக  நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும்  கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.  

எனவே தவறுகள் ஏதோ விதிவிலக்காக ஒரு சில பல்கலைக் கழகங்களில் மட்டும் நடப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவை மாநிலத்தின் பல பல்கலைக் கழகங்களிலும் விரிந்து பரவியுள்ள கொடிய புற்று நோயாகப் பரிணமித்துள்ளதாகத் தெரிகிறது.  மேலும்  இவை ஏதோ புதியதல்ல என்பதும்    தெளிவாகிறது.  இவை பற்றிக்  கடந்த பல வருடங்களாகவே சில நேர்மையான கல்வியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதன் விளைவுகளைத் தான் நாம் இப்போது கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்த அவலங்களுக்கெல்லாம்  அடிப்படைக் காரணம் அரசியல் தலையீடுகள் மூலமாக நிகழும் துணைவேந்தர் நியமனங்களில் ஆரம்பிக்கிறது. கடந்த சுமார் பதினைந்து வருடங்களாகவே துணை வேந்தர்களின் நியமனங்கள் நேர்மையானதாக இல்லை என்பதும் ந்தப்  பதவிகளுக்கு  வந்தவர்கள் பெரிய அளவில் செலவுகளைச் செய்து வர வேண்டி இருந்தது என்பதும் கல்வித்துறை துறையில் பரவலாகப் பேசப்படுகின்ற விசயமாகும். அதனால் பதவியேற்ற உடனே தங்களின் முதலீடுகளைப் பல மடங்காகத்  திரும்ப எடுப்பதற்காக அவர்கள் எல்லா விதமான தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். 

 எனவே கடந்த பல ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களின் எல்லா   மட்டங்களிலும் விதி முறை மீறல்கள், ஊழல்கள், பணப் பரிமாற்றங்கள்  மற்றும் முறை தவறிய நியமனங்கள் என்பதெல்லாம் நடைமுறையாகி விட்டன.  பணம் சம்பாதிப்பதற்காகப் பல விதமான புதிய உத்திகள் அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்படுகின்றனர.  உதாரணமாக, அவசியமே இல்லாமல் பல்கலைக் கழகங்களில் புதிய துறைகளை உருவாக்குவது மற்றும் காரணமே இல்லாமல் ஒரு துறையை இரண்டாகப் பிரிப்பது போன்றவற்றைச் சொல்லலாம். எனவே மாணவர்கள் போதுமான அளவில் இல்லாமல், ஆனால் ஆசிரியர்கள் மட்டும் தேவைக்கு அதிகமாக உள்ள துறைகள் பல்கலைக் கழகங்களில்  இருப்பதாகத் தெரிகிறது.

வற்றுக்கான நோக்கமே புதியதாகப் பேராசியர் உள்ளிட்ட பணி நியமனங்களைத் தவறுதலாக அதிக அளவில் மேற்கொண்டு தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது என்பது மட்டும் தான். அதற்கான விதிமுறைகள்  பல சமயங்களில்  கண்டு கொள்ளப் படுவதே  இல்லை.  அவை முறைப்படி நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல் கூட இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.  மேலும் சட்டம் வரையறை செய்துள்ள இட ஒதுக்கீடுகள் கூட முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லையெனக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

ஆசிரியர்கள் நியமனங்களுக்குப் பதவிக்குத் தகுந்த மாதிரி   தனித் தனியாக விலை வைத்து ஏலம் விடப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.  அதனால் தகுதி வாய்ந்தவர்கள் வாய்ப்புகளை இழந்ததையும், அதில் பல பேர்   வெறுப்படைந்து சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சென்று பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.

தேவைக்கு அதிகமாக நியமனங்கள் செய்வதனால் பல்கலைக் கழகத்தின்  நிதி நிலைமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாமல் கூட சிரமங்கள் ஏற்படும்.  தனது மூன்றாண்டு காலத்தை முடித்துச் சென்று விட்டால் எதுவும் செய்யமுடியாது என்கின்ற எண்ணம் துணை வேந்தர்களைத் தவறுகள் செய்ய ஊக்குவிக்க்வழிவகுக்கிறது.

 தவறான வழியில் வந்தவர்களே அண்மைக் காலங்களில் பல பல்கலைக் கழகங்களில் பதிவாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், துறைத் தலைவர்களாகவும், நியமிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனால்  ஒட்டு மொத்த நிர்வாகமும் ,படிப்பும், ஆராய்ச்சிகளும்  கெட்டு வருகின்றன.  ஊழல் புரிபவர்கள் பதிவாளராகவும், துறைத் தலைவர்களாகவும் இருக்கும்  போது எப்படி நிர்வாகம்  நேர்மையானதாக நடக்க முடியும்?

மேலும் பல்கலைக் கழகங்களில் வெவ்வேறு  முக்கியமான நிர்வாகப் பொறுப்புகள் உள்ளன. அவைகளின் தேர்வுகளில் பலவிதமான தவறுகள்  நடக்கின்றன. துணைவேந்தர்கள் தமக்கு ஒத்துப் போவோரையே பொறுப்புகளில்  நியமிக்கின்றனர். இல்லையெனில் அந்த வகை நியமனங்களை மேற்கொள்வதே இல்லை.  ஏனெனில் அந்த நியமனங்கள்  மூலம் சில நேர்மையானவர்கள் வந்து விடக் கூடும். அதனால் அவர்கள் விரும்புகிற மாதிரி தவறுகள் செய்ய முடியாது.

எனவே நியமனங்களை முறைப்படி மேற்கொள்ளாமல், பல்கலைகழகத்தில் உள்ள தமது நடவடிக்கைகளுக்கு உடந்தையாஇருக்கும் பேராசிரியர்களை வைத்தே நிர்வாகத்தை நடத்துகின்றனர்.  ஆட்சி மன்றக்  குழுக்களுக்களுக்குக் கூட அப்படிப்பட்ட நபர்களே வருமாறு பார்த்துக் கொள்கின்றனர். அதன் மூலம் தட்டிக் கேட்க யாருமின்றி எல்லா விதமான தவறுதல்களும் நடக்கின்றன. தங்களுக்குச்  சாதகமில்லாத  சமயங்களில் முக்கியமான பொறுப்புகளுக்கு நியமனங்களை  மேற்கொள்வதே இல்லை .

அந்த மாதிரி தற்காலிகப் பொறுப்பு என்ற பெயரில் பணிபுரியும் பேராசிரியர்கள் விதிமுறைகளுக்கு மாறாக பல வருடங்களாகத் தொடர்ந்து அந்தப் பொறுப்புகளிலேயே நீடித்து வருகின்றனர். அவர்களில் ‘திறமைசாலிகள்’ தொடர்ந்து பல துணை வேந்தர்கள் வந்த போதும் அதே பதவியில் நீடிக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டிய சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்கள் வேலை செய்வதில்லை. அதனால் மாணவர்களின் படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் தவறான முறையில் பணிக்கு வரும் துணைவேந்தர் தனது சொந்த லாபங்களுக்காக கட்டிடங்கள் கட்டுவது, வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறார். ஆளாளுக்கு மூன்றாண்டுகளுக்கொருமுறை புதியதாக வாகனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது வாடிக்கையாக நடைபெறுகிறது.  இதற்காகப் பல்கலைக்கழகங்களில் உள்ள குழுக்களை எல்லாம் துணை வேந்தர்கள் தம் வசப்படுத்தி  வைக்கின்றனர். பணி அனுபவம் மற்றும் நேர்மையாக உள்ளவர்கள் பல மட்டங்களிலும் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

பதவியேற்ற உடனேயே தமது பல்களைக்கழகத்தின் கீழ்வரும் உறுப்புக் கல்லூரிகளில் குறிப்பிட்ட தொகையைக் கொண்டு வந்து கொடுக்குமாறு ஒரு முன்னாள் துணைவேந்தர் சொல்லியதாகத்  தமிழகத்தின் தலை சிறந்த கல்வியாளர் ஒருவர் கவலையுடன் குறிப்பிட்டிருந்தது சில மாதங்களுக்கு முன் செய்தியாக   வெளி வந்தது. பின்னர் தமது பதவிக்காலத்தில் தொடர்ந்து பல சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட தொகைகளை துணைவேந்தர் வசூல் செய்வது என்பது வாடிக்கையாகி விட்டதாகக்  கல்வி நிறுவனங்கள் குறை கூறுகின்றன.

ஒரு ஊழல்  துணைவேந்தர் பதவிக்கு வந்தபின்னர், அவர் மட்டும் ஊழல் செய்வதில்லை. தனக்குத்துணையாகப் பலரையும் உடந்தையாக்குகிறார். அதனால் நிர்வாகம் சீரழிந்து, கல்வி தடைப்பட்டு, பல்கலைக் கழகமே   பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் இன்று பல்கலைக் கழகங்களின் பல  மட்டங்களிலும் பொறுப்பின்மையும் மெத்தனமும் தலை தூக்கி நிற்கின்றன.

அதிர்ஷ்டவசமாக  தமிழகப் பல்கலைகழகங்களில் இப்போதும் நேர்மையான  பேராசிரியர்கள், அர்ப்பணிப்பு உள்ளவர்கள்  பல பேர் உள்ளனர். அவர்கள் முடிந்தவரை நன்கு பாடங்களை போதித்து ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் இடையிலும்  தமிழகப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் அதே சமயம் தவறு செய்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதால், நல்லவர்களின் ஊக்கமும் செயல்பாடுகளும் தடைபட்டு வருகின்றன. நல்ல தலைமை இல்லாத போது பேராசிரியர்களும் மாணவர்களும் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். பல்கலைகழகத்துக்குள் காலையில் எதிர்பார்ப்புகளுடன் நுழையும் மாணவன், தவறு செய்பவர்கள் பலரும் தன் கண் முன்னால் பொறுப்புக்கு வருவதையும், தொடர்ந்து அவர்கள் தவறு செய்வதையும் பார்க்கிறான். அதனால் அவன் பாதிப்புக்குள்ளாகிறான்.

எனவே தமிழகப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பெரும் வருத்தத்தை அளிக்கின்றன. ஆகையால்  அவற்றின் எதிர்காலம்  குறித்து நாமெல்லாம் கவலைப்பட வேண்டியுள்ளது. ‘கல்வி சிறந்த தமிழ் நாடு’ என்று பாரதி பாடிய தமிழகத்தில் உயர்கல்வித்துறை ஏராளமான சிக்கல்களில் தவித்துக் கொண்டுள்ளது. குழந்தைகளைப் படிக்க வைக்க எல்லாத் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ள பெற்றோர்கள் நம் மாநிலத்தில் உள்ளனர். நல்ல முறையில் படித்து சாதனைகள் செய்யது துடிக்கும்  மாணவர்களும் இங்குள்ளனர். இந்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி நமது கல்வித்துறையை மேலெடுத்துச் செல்வது நமது கடமை.

துரதிஷ்டவசமாக இப்போது நமது பல்கலைக்கழகங்களின் பெயர்களில் மட்டுமே மகத்தான நமது தமிழ் மண்ணின் அடையாளங்களாக விளங்கும் திருவள்ளுவர், பாரதியார், காமராசர் உள்ளிட்ட ஆளுமைகள்  உள்ளனர்.  அவர்களின் போதனைகள் எவற்றைப் பற்றியும்   பல்கலைக்கழகங்கள் துளியும் கண்டு கொள்வதில்லை.   

இந்த தவறுகள் அனைத்திலும் ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. பல்கலைக் கழகங்களின் சீரழிவே அங்குதான் ஆரம்பிக்கிறது. பேராசையும் குறுகிய நோக்கமும் கொண்ட பேராசிரியர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் மூலம் நமது தேசத்தில் புனிதமாகப் போற்றப்படும் ஆசிரியப் பணிக்குக்  களங்கம் விளைவித்து வருகின்றனர்.

எனவே இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் உயர்கல்வித் துறையில் நேர்மையும் திறமையும் அடிப்படையான தகுதிகளாக்கப்பட வேண்டும்.   அதிர்ஷ்டவசமாகத் தற்போதைய ஆளுநர் பொறுப்பேற்ற பின்னர் துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான முறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இது பல வருடங்களுக்கு அப்புறம் தமிழக உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள  ஒரு நல்ல மாற்றம். இந்த நிலை  தொடர வேண்டும்.  புதிய துணைவேந்தர்கள் நிர்வாகத்தைச் சரி செய்ய எல்லா முயற்சிகளையும்   மேற்கொண்டு  பல்கலைக் கழகங்களுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.  
(http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/sep/15/பல்கலைக்கழகங்கள்-சீர்பெறுமா-3000338.html )
தினமணி, 15.09.2018


பிரச்சன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்கள் – தமிழாக்கம்


வாழ்த்துரை

பேரா..கனகசபாபதி

உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி

உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு, பாரதியார் பல்கலைக் கழகம், கோவைஉபநிடதங்களை  ’உலகத்தின் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் பாடல்கள்’ என சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். அவை தொன்மையான நமது கலாசார வரலாற்றுக்கு   ஆதாரமான இலக்கியங்கள். பண்டைய காலந்தொட்டு இந்து சமயத்தின் மையக் கருத்துக்களையும் எண்ணங்களையும் தாங்கி நிற்பவை. மேலும் பன்னெடுங்காலமாக நமது  தேசத்தின்  ஆன்மிக எண்ணங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருபவை.

பாரத நாடு உலகின் மிக உயர்ந்த பண்பாடு; பல்லாயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையெனத் தொடர்ந்து நடை போட்டு வரும் பெருமைக்குரியது. பொருளாதாரம், அறிவியல், வாழ்க்கை முறை எனப் பலவற்றிலும் உயர்ந்து நின்று தனித்தன்மை வாய்ந்த சிறப்பான முறைகளை அமைத்துக் கொண்டது. மனித வாழ்வின் இறுதி நோக்கம் எதுவாக இருக்க முடியும் என்று தீர்க்கமாகக் கண்டறிந்தது.  அதன் வெளிப்பாடுகள் தான் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள். உபநிடதங்களைப் பொருத்த வரையில் பிரம்மா மற்றும் ஆத்மா ஆகிய இரண்டும் தான் கருப்பொருட்கள். ’உனது ஆன்மாவை அறிந்து கொள்’ என்பது அவற்றின் மையக் கருத்து.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் போதுதான் ஒவ்வொருவரின் வாழ்வும்  அர்த்தமுள்ளதாகிறது. அந்த வகையில் வேதங்களும் உபநிடதங்களும்  வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித இனத்துக்குப் போதிக்கின்றன. அந்த உண்மைகள் பாரதப் பாரம்பரியம் உலகுக்கு அளித்த வரப்பிரசாதங்கள்.  அவற்றின் சிறப்புகளை அறிந்த வெளி நாட்டு அறிஞர்கள், பதினாறாம் நூற்றாண்டு முதலே அவற்றை மொழி பெயர்க்கத் தொடங்கினர். அதனால் உபநிடதங்கள்  பெர்சியன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், உருது மற்றும் ஜப்பானிய மொழி உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளிலும்  தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன.

அவற்றைப்  படித்த உலகின் முக்கியமான சிந்தனையாளர்கள்  மற்றும் தத்துவ ஞானிகள் பலரும் அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.  ஆங்கிலக் கவிஞர் மில்டன், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்,  அமெரிக்க சிந்தனையாளர்கள் எமர்சன் மற்றும் ஹென்றி டேவிட் தோரோ,  கவிஞர்  வால்ட் விட்மன் மற்றும் ஆங்கிலேய மொழியியல் ஆய்வாளர்  வில்லியம் ஜோன்ஸ் மற்றும்  மேக்ஸ் முல்லர் உள்ளிட்டவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்.  அதனால் அவர்கள் வேத உபநிடதங்களை வெகுவாகப் பாராட்டினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஆர்தர் ஸ்கோபென்ஹௌர் உபநிடதங்களை மனித இனத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு’ எனப் புகழ்ந்து கூறினார்.  அவை அசாத்தியமான  திறமை கொண்டவர்களால் படைக்கப்பட்ட  உச்சபட்சமான முயற்சி எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.  உபநிடதங்களின்  தாக்கத்தை அவர்களின் சிந்தனைகளும்  எழுத்துக்களும்  மேற்கத்திய நாடுகளில் பிரதிபலித்தன. அதனால் அங்கு சிந்தனை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் வருடத்தில் அமெரிக்கா சென்ற போது,  அங்கு  உபநிடதங்கள் பற்றி மக்களிடையே பேசினார். அப்போதே அவர்களுக்கு உபநிடதங்கள் குறித்துக் கேட்பதற்கான ஒரு அடித்தளம் போடபட்டிருந்தது. அதற்குக் காரணம் எமர்சன், தோரோ மற்றும்  விட்மன் போன்ற  அமெரிக்க சிந்தனையாளர்கள் உபநிடதக்  கருத்துக்களையொட்டிய சிந்தனைகளை அதற்கு முன்னரே மக்களிடையே விதைத்திருந்தனர்.  

நமது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகள் நமது பாரம்பரியக் கல்வி முறையை வெகுவாகப் பாதித்தன. பின்னர் சுதந்திரம்   பெற்ற பின்னரும் போதுமான அளவு தேசிய நோக்கில் மாற்றங்கள் நிகழவில்லை. அதனால் நமது பெரும் பொக்கிஷங்களான உபநிடதங்கள் குறித்துப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படுவதில்லை. எனவே அந்த ஞானச் செல்வங்களின் பலன்  கிடைக்காமல் நாம் இருந்து வருகிறோம்.

அந்த வகையில் பேரா.செ.ஞானபூபதி ஐயா அவர்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் போற்றுதலுக்குரியவை. முக்கியமான தேர்ந்தெடுத்த உபநிடதங்களை அழகிய முறையில் தமிழாக்கம் செய்து நமக்கு அளித்து வருகிறார். இந்தப் புத்தகத்தில் பிரச்ன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்களை நமக்கு அளித்துள்ளார். 

உபநிடதங்களை எடுத்துச் சொல்ல அவர் கையாண்டு வரும் விதம் அற்புதமாக உள்ளது. முதலில் சமஸ்கிதத்தில் உள்ளவாறு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவற்றை அப்படியே தமிழ் உச்சரிப்புடன் கொடுத்துள்ளார். தொடர்ந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உரைநடையில்  விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாடல்களில் உள்ள விசயங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள் வருகின்றன. மேலும்   தேவைப்படும் இடங்களில் சுவாமி  ஆசுதோஷானந்தர் அவர்களின் மொழி பெயர்ப்புகள், தமிழ் இலக்கியங்களிலிருந்து மிகப் பொருத்தமான வரிகள், , பகவத் கீதை, பிற உபநிடதங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்கள் எனக் கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான முறையில் நூல் எழுதப்பட்டுள்ளது.

உபநிடதங்களின் மொழி பெயர்ப்பாகத் தமிழில் கொடுத்துள்ள பாடல்கள் மிகவும் கவித்தன்மை உடையதாகவும் அதே சமயம் எளிமையாகவும் அமைந்துள்ளன. அதனால் அந்த மொழிபெயர்ப்புகள்,  புத்தகத்தை மேலும்  படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  உதாரணமாக மழையாகப் பிராணன் பொழிந்து,  அதனால் உணவு வகைகள் அனைவருக்கும் கிடைத்து உயிரனங்கள் மகிழ்ச்சியுடன் வாழும் என உபநிடத வரிகள் வருகின்றன. அதற்கான மொழி பெயர்ப்பு இப்படி வருகிறது.

மழையாகப் பிராணன் நீ பொழியும் போது

மகிழ்வுடனே உயிரினங்கள் நிலைத்திருக்கும்

பிழையாமல் உணவு வகை அனைவருக்கும்

பெருமளவில் மனமாரக் கிடைக்கும் அன்றே!

மிகவும் அருமை. எவ்வளவு எளிமையான தமிழில்  உபநிடதங்கள்!

இந்தப் புத்தகத்தின் மூலம் ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் இரண்டு முக்கிய வகைகளில் பங்களித்துள்ளார்கள்.  முதலாவதாக உலகின் மிக உயர்ந்த உபநிடதக் கருத்துகளை தமிழ் மக்களிடையே கொண்டும் செல்லும் அரிய பணி. இது மகத்தானது; மிகவும் அவசியமானது. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐயாவின் இந்தப் பணி தொடர வேண்டும். அதன் மூலம் அதிகம் புலமையில்லாத மக்களுக்கும் உபநிடதக் கருத்துக்கள் சென்றடைய வேண்டும்.

இரண்டாவதாக தமது புத்தகங்கள் மூலம் மொழி பெயர்ப்புத் துறையில் ஒரு தனிப் பாதையை ஐயா உருவாக்கி வருகிறார்கள். பிற மொழியில் உள்ள விசயங்களை  புத்தகம்  படிப்பவர்களுக்கு எந்த வித சிரமமும், சந்தேகமும் இல்லாமல் எளிய முறையில் தெளிவாகப் படைக்க முடியும் என்பதை   எடுத்துக் காட்டி வருகிறார்கள்.

ஐயாவின் ஆழ்ந்த புலமையும்,  தெளிந்த அறிவும், உயர்ந்த நோக்கும்,  அர்ப்பணிப்பு மனப்பான்மையும் புத்தகம் படிக்கும் போது தெரிய வருகிறது.  எல்லாம் வல்ல முருகப் பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளையும், வேண்டிய அனைத்து செல்வங்களையும் அளிக்க வேண்டும்.  உபநிடதம் குறித்த புத்தகங்கள் வெளி வருவதற்கு பக்தர் பேரவையின் மாநிலச் செயலாளர் எக்ஸ்லான் திரு. கே.இராமசாமி அண்ணா அவர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் சமுதாய மற்றும் கல்விப்பணிகள்  மென்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.

இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தர் உபநிடதங்களின் முக்கியத்துவம் குறித்துச் சொன்ன கருத்துக்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  உபநிடதங்கள் வலிமையளிக்கும்  மிகப் பெரிய ஊற்று. மொத்த உலகத்துக்கும் புத்துயிர் அளிக்கக் கூடிய வலிமை அவற்றில் உள்ளது; அவற்றின் மூலம் உலக முழுவதையும் வலிமையாக்க முடியும்.  நலிவடைந்த நிலையிலும், கீழான நிலையிலும் இருக்கக் கூடிய எல்லா வித மக்களும் அவற்றின் வார்த்தைகளால் சொந்தக் கால்களில் நின்று சுதந்திரமாக உலவ முடியும். உடல், மனம் மற்றும் ஆன்மிக விடுதலைதான் உபநிடதங்களின் நோக்கம்.

இந்தப் புத்தகம் இரண்டு உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள நுட்பமான விசயங்களைத் தெளிவாக விளக்குகிறது. இதை அனைவரும் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

உபநிடதங்களைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் புனிதமான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

( புத்தக வெளியீடு -  திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர், விளம்பி வருடம், சித்திரை 1, 2018)