பொருளாதார நெருக்கடிக்குப் பின் சேமிப்பை நாடும் அமெரிக்கர்கள்

பேராசிரியர்.ப.கனகசபாபதி

             2008 ஆம் வருடத்தின் இரண்டாவது பாதியில் அமெரிக்காவில் எரிமலையாய் வெடித்த நிதி நெருக்கடி நமக்கு ஞாபகம் இருக்கும். உலகளவில் பெரிய மூலதன நிறுவனங்களாக விளங்கிய பிரபலமான கம்பெனிகளில் ஆரம்பித்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வங்கிகள் எனத் தொடர்ந்து பின்னர் உற்பத்தித் துறையையும் பாதித்து, மிகப்பெரிய வாகன நிறுவனங்களான ஜெனரல் மோட்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சுனாமி போலே பாதித்தது
              அந்த நெருக்கடி. அப்போதே  ஐரோப்பாவிலும் பரவி உலகின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியாக தோன்றிய ஒரு நிகழ்வு குறுகிய காலத்திலேயே உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறி உலக நாடுகளை, குறிப்பாக மேற்கத்திய பொருளாதாரங்களை, சில மாதங்கள் நிலை குலைய செய்து விட்டது. தொடர்ந்து அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாயினர்.
                         உதாரணமாக அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பத்து சதவீதத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும், மக்களையும் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற அரசுகள் பல லட்சம் டாலர்களை உதவித் தொகைகளாக அளித்து வருகின்றன. ஆயினும் சென்ற 2009 ஆம் வருடம் முழுவதுமே பெரிய அளவில் முன்னேற்றமில்லை. சென்ற வருடம் மட்டும் அமெரிக்காவில் 120 ௦க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இந்த வருடமும் இதுவரை அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
                   மேற்கு நாடுகள் பலவற்றின் பொருளாதார நிலைக்கு முக்கியமான காரணம் அங்கு நிலவும் சேமிப்பு இல்லாத தன்மையேவாகும். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சேமிப்பு குறைந்தும், பூஜயத்துக்கும் கீழேயும் உள்ளது. பூஜ்யத்துக் கீழே சேமிப்பு என்றால் வரவுக்கு மீறிய செலவு என்று அர்த்தம். அதாவது கடன் வாங்கி செலவு செய்யும் நிலை. அதனால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை. ஆயினும் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிக முயற்சிகள் இல்லை.
                                 ஏனெனில் அவர்களது நவீன பொருளாதார சித்தாந்தமே செலவு செய்வதை மையமாகக் கொண்டு அமைக்கப் பெற்றது. அதனால் கடன் வாங்கியாவது செலவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். செலவு செய்யாமலிருப்பது நல்லதல்ல என போதிக்கப்பட்டது. செலவு செய்யாமல் இருப்பவர்கள் விபரம் தெரியாதவர்கள் எனவே கருதப்பட்டனர்.     
                 அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ஆலன் க்ரீன்ஸ்பேன் என்பவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஓய்வு பெற்றவர். அண்மைக்காலம் வரையில் அவர் அமெரிக்கர்களுக்கு எதிர்காலம் இருப்பதால் சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதே சமயம் இந்தியா, சீனா போன்ற தேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிர் காலம் குறித்த அச்சமிருப்பதால் அவர்களுக்கு சேமிப்பு அவசியமாகிறது என்றும் கருத்து தெரிவித்தார்.
                          அங்கெல்லாம் கிரெடிட் கார்டு கம்பெனிகள் கடன் அட்டைகளை சுலபமாகக் கொடுத்து மக்களை செலவு செய்ய ஊக்குவித்தன. அரசின் கொள்கைகளும், வங்கிகளின் செயல்பாடுகளும் அதற்கு ஏதுவாக அமைந்தன. சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளில் பெருமளவு குறைக்கப்பட்டு மக்கள் எளிதாகக் கடன் வாங்குமாறு துண்டப்பட்டனர். அதனால் வங்கிகளின் வட்டி விகிதம் ஒரு சதவீதத்துக்குக் கீழும் குறைக்கப்பட்டது. எனவே மக்கள் சேமிப்பது முட்டாள் தனம் எனக்கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
                      ஆனால் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்களது எண்ணங்களில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. தங்களது பொருளாதார வழிமுறைகள்தான் சரியானது; உலக முழுமைக்கும் பொருத்தமானது எனக்கருதி வந்த பெரிய நிபுணர்களில் சிலரே தங்களின் தவறுகளை உணர ஆரம்பித்துள்ளனர்.
           2008 ஆம் ஆண்டுக்கான நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியர் கிரக்மேன் என்பவர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கு நாடுகள் உருவாக்கித் தந்த பொருளாதார கோட்பாடுகள் தவறாகிப் போய்விட்டன என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
                   தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு என்பது அவசியம் என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. சென்ற ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான 'நியூஸ் வீக்' பொருளாதார நெருக்கடிக்குப்பின் அங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது. சில ஆய்வுகளை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் மக்களின் சேமிப்பு 4.5 சதவீதம் வரையிலும் அந்நாட்டில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
                          சேமிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு அந்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் 15 சதவீதம் வரை மக்கள் சேமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்டுரை அங்கு ஏற்பட்டு வரும் மன மாற்றங்களை எடுத்து வைக்கின்றது.
                          இப்போது மக்கள் மனங்களிலே அங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அவர்கள் இதுவரை பரவலாக நம்பி வந்த கருத்துக்களுக்கு மாற்றான சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் துவங்கி இருப்பதற்கான அறிகுறியை இந்த மாற்றங்கள் உணர்த்துகின்றன. அவற்றின் முலம் அவர்கள் வாழ்கையை நோக்கும் தன்மையும் மாறி வருவதாகத் தெரிகிறது. உதாரணமாக அங்கெல்லாம் கடைக்குச் செல்லும் மக்களில் வசதி படைத்தவர்கள் வழக்கமாக அதிக விலை பெரும் பொருட்களை தங்களது தகுதிக்குத் தகுந்தவாறு நிறைய வாங்குவது வழக்கமாகும். ஆனால் இப்போது வசதி படைத்த மக்களில் சிலர் கூட விலை அதிகமில்லாத பொருட்களை தேர்ந்தெடுக்கத் துவங்கியுள்ளனர்.
                                   நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யும் வழக்கம் உலக அளவில் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. சுமார் 55 சதவீதம் மக்கள் அங்கு நிதிச் சந்தை சார்ந்த முதலீடுகளில் முலதனம் செய்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனல் அங்கு நிதிச் சந்தைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். வங்கி சேமிப்பு போன்ற குறிப்பிட்ட வருமானம் தரும் பாதுகாப்பான முதலீடுகளை விட பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் மக்கள் அதிக அளவு சேமிப்புகளை போட்டு வருகின்றனர். அவற்றில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்ப்புக்கள் இருந்த போதும், அதிக வருமானம் கருதி அந்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் மக்களும் அவ்வாறே செய்தும் வந்தனர். எனவே நம்மைப் போன்ற நாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டி, இங்கு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களை அதிகரிக்க வேண்டும் என அறிவுரையும் சொல்லி வந்தனர்.
                   ஆனால் நியூஸ் வீக் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு, தங்கள் சந்தித்தவர்களில் பாதிப்பேர் சந்தைகளில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டதாகவும், அதில் பெரும்பான்வையானவர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் பங்குகளில் பணம் போடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் முலம் அந்நாட்டு மக்களும் தங்களது சேமிப்புகளை சிரமமில்லாத முதலீடுகளில் முலதனம் செய்ய தற்போது விரும்புவது தெரிய வருகிறது.
                                  மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் வாழ்க்கை பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதாக அமைந்துள்ளது நமக்குத் தெரியும். அதனால் குடும்பம், உறவுகள், சமுகம் உள்ளிட்ட அடிப்படையான பந்தங்கள் எல்லாம் அவர்களுக்கு அப்புறம்தான். ஆனால் நெருக்கடிக்குப் பின்னால் அந்த விஷயங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. பணம் சம்பாதிப்பதை விட குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவு செய்வதை அவர்கள் முக்கியமாக கருதத் துவங்கியுள்ளனர்.
                                         ஆக பொருளாதார நெருக்கடி சேமிப்பு முதல் குடும்ப உறவுகள் வரையான அவர்களது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது தெரிய வருகிறது. அமெரிக்க பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் சேமிப்பை பற்றிய பாடம் அறிமுகப்படுத்தப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டது.
                                      எனவே மேற்கத்திய நாடுகள் இது வரை கொண்டிருந்த முக்கியமான சிந்தனைகளில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறியை மக்களின் நடவக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களின் வாழ்க்கை முறை, இப்போது அவர்களில் சிலர் கடைப்பிடிக்கத் துவங்கியிருக்கும் சிந்தனைகளைச் சார்ந்த நம்பிக்கைகளைத்தான் காலங்காலமாக இறுகப்பிடித்து வந்துள்ளது. நவீன கோட்பாடுகளை மீறிய அந்த நம்பிக்கைகள்தான் நம்மை இன்று, எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும், வாழ வைத்துக் கொண்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கவும் உதவி புரிகிறது.
                        அவர்களெல்லாம் பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் இப்போதுதான் அரிச்சுவடி கற்க ஆரம்பித்துள்ளனர். அதே சமயம் நமது நாட்டிலேயே சிலர் ஆடம்பரப் பொருட்களை தேவையில்லாமல் வாங்கி அளவுக்கு மீறி செலவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனரே? அவர்களை என்ன சொல்ல?-----தினமலர் - 21.02.2010