பொருளாதாரத்தின் மையம் நமது குடும்பங்கள்
பொருளாதாரம் என்றாலே இரண்டே வகையான சித்தாந்தங்கள் தான்; ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று கம்யூனிசம் என்கின்ற கருத்து   மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதுவமே உலக முழுமையும் அதிகமான கேள்விகளின்றி பரவிக் கிடந்தது.  அவற்றுக்கு எதிரான சில கருத்துக்கள் சிந்தனையாளர்கள் சிலரால்  எடுத்து வைக்கப்பட்டாலும்  அவை  முழுமையானதாக அமையவில்லை.

 நமது நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, சுதந்திரத்துக்குப் பின்னர் அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகு முறைகள் குறித்து பரவலாகக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  எனவே  சுதந்திரம் பெற்ற பின்னர், நேருவின் காங்கிரஸ் அரசு பொருளாதார அணுகுமுறைகள் குறித்து எந்த விதமான பெரிய விவாதங்களுமின்றி மேற்கத்திய சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்தது. அதன் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே ஐரோப்பியாவில் தோன்றியவை. ஐரோப்பாவுக்கெனப் பெரிய வரலாறோ, அனுபவமோ கிடையாது.  பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் அங்கு நிலவிய குறுகிய அனுபவங்களை வைத்து அவர்களின் கண்ணோட்டத்தில்   அந்தச் சித்தாந்தங்கள் எழுதப்பட்டன.  அவை உலக முழுமையையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை அல்ல.

 நீண்ட நெடிய வரலாற்றையும், பல்வேறு வகையான சிறப்புகளையும் பெற்றது நமது நாடு. உயர்ந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து தனித் தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட தேசம் நம்முடையது.  பல நூற்றாண்டுகளாக உலகின் எந்த நாட்டையும் விட பொருளாதாரச் செழிப்பும் வரலாறும் இங்கு நிலவி வந்ததைக் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக உலக அளவில் நடந்து வரும் ஆய்வுகள் தெளிவாக்குகின்றன.

மேற்கத்திய சிந்தனைகளே உலக முழுவதும் மட்டுமன்றி, நமது நாட்டிலும் கோலோச்சி வந்த சமயத்தில், நமது பண்பாடு மற்றும் உயர் சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டுக்குப் பொருத்தமான ஒரு தத்துவத்தை முன் வைத்தவர் பண்டித தீன தயாள் உபாத்யாயா அவர்கள். 1965 ஆம் வருடம் முதலாளித்துவமும் கம்யூனிசமும் மிக முக்கியமான இரு பெரும் சித்தாந்தங்களாக நடைமுறைப் பட்டு வந்த காலத்தில்,  அவற்றுக்கு மாற்றாக நமது நாட்டின் மண் வாசனை சார்ந்த சிந்தனைகளை அவர் எடுத்து வைத்தார்.

மேற்கத்திய கோட்பாடுகளில் பொருள் சார்ந்த வாழ்க்கை முறைகளே மையமாக உள்ளன. அவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். அவை மனிதனின் முழுமைத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  எனவே ஒட்டு மொத்த மனிதனை மையமாக வைத்த சிந்தனா முறையை நாம் உருவாக்கிக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

அதற்காகத் தான் தனது சிந்தனைகளை ‘ஒருங்கிணைந்த மனித நேயம்’ என்கின்ற அடிப்படையில் அவர் முன் வைத்தார். அவை மிகவும் ஆழமானவை. தொன்மையான நமது தேசத்தின் உயர் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையினையும் அடிப்படையாகக் கொண்டவை. மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல; மனம், ஆன்மா, புத்தி ஆகிய அனைத்தையும் ஒரு சேரக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.

மேற்கத்திய பொருளாதாரச் சித்தாந்தங்கள் குவியல் தன்மையை ஆதராமாகக் கொண்டவை.  அதனால் மனித இனம் தனது நல்ல  குணங்களை இழந்ந்துள்ளது. எனவே மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப் பரவலான பொருளாதார முறை வேண்டும் என அவர் கூறினார். ’ கடவுளின் உயர்ந்த படைப்பான மனிதன் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டுள்ளான். அவனைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அவனுடைய பெருமையை உணர வைத்து, அவனுடைய திறமைகளை விழித்தெழுமாறு செய்து, அவனது தெய்வீக உயரங்களை அடைய முயற்சிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும். அது பரவலான பொருளாதாரம் மூலமே முடியும்.’

அவரது கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பதை மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டும் தோற்றுப் போய் விட்ட இந்தக் காலத்தில் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் அவர் எவ்வாறு காலத்தை மீறிய ஒரு தத்துவ ஞானியாக விளங்கியிருக்கிறார் என்பதுவும் தெரிய வருகிறது.  மனித இனத்துக்கு விரோதமான சித்தாந்தமான கம்யூனிசம் முழுதும் தோற்றுப் போய் விட்டது.  மக்களின் ஒட்டு மொத்த  வளர்ச்சிக்குப் பொருத்தம் இல்லாததாக மேற்கத்திய முதலாளித்துவம் உணரப்பட்டு விட்டது. 

நமது நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் மிகப் பெரும்பான்மையான காலம் அதிகார வர்க்கம் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டிய அணுகு முறைகள் மற்றும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த  முயற்சித்து வந்தது.  அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளை அது உணரவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ஆனால் நடைமுறையில் இன்று வரை நமது பாரம்பரியம் சார்ந்த குடும்ப அமைப்பு முறையே சமூக, கலாசார, பொருளாதார விசயங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் நமது பொருளாதாரம் இன்றைக்கும் பெருமளவு வலுவாக இருந்து வருகிறது. அதனால் நமது தேசத்தில் ‘ ஏட்டுச் சித்தாந்தங்களை மீறிய முன்னேற்றம்’ தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது.

பாரம்பரியம் மிக்க நமது குடும்ப அமைப்பு முறை இந்தியப் பொருளாதாரத்துக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்து வருகிறது என்பது குறித்து அறிவு ஜீவிகளோ, பல்கலைக் கழகங்களோ எடுத்துச் சொல்வதில்லை என்பது நமது பெரிய குறைபாடு. ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை என்பதை நமது கள ஆய்வுகளும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கும் உணர்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை  அதிகமான சேமிப்பு, அதிக மூலதனம், கடின உழைப்பு, தொழில் முனையும் தன்மை உள்ளிட்ட காரணிகள் தான். இவை அனைத்தும் குடும்பங்களின் மூலமாக நமது நாட்டில் இயற்கையாகவே கிடைக்கின்றன.

சேமிப்பது என்பது நமது மக்களின் வாழ்க்கை முறை. அது  சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கின்றது. அதனால் இன்று நமது நாடு உலக அளவில் அதிகமான சேமிப்புகளைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.  சுதந்திரம் வாங்கிய போது நமது நாட்டில் ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசித்து வந்தனர். ஆனால் அப்போது கூட சேமிப்பு ஒன்பது விழுக்காடு இருந்தது. இன்றைக்கு  பணக்கார நாடுகள் பலவற்றில்  ஒன்பது விழுக்காடு சேமிப்பு என்பது இயலாத காரியம்.

பின்னர் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்து கடந்த பல வருடங்களாகவே முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட அளவில் சேமிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.  அதனால் முதலீடுகளுக்கான தொகை உள் நாட்டிலேயே அதிக அளவில் கிடைக்கின்றது. எனவே வெளி நாடுகளை அதிகமாக நம்பக் கூடிய பொருளாதாரமாக நமது நாடு இருக்கவில்லை. அதிகமான சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் காரணம் தங்களை  விடத் தமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென எண்ணும் பெற்றோர்களைக் கொண்ட குடும்ப அமைப்பு முறைதான்.

குடும்பத்தின் நலனுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பது நமது கலாசாரம் சொல்லும் தர்மம். அதற்காகத் தாய்மார்களும், தந்தையர்களும், மூத்தவர்களும் அதிக அளவில் உழைப்பை மேற்கொள்கின்றனர். தங்களின் சொந்த விருப்பங்களைத் துறந்து குடும்ப நலனையே முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.  அதற்காகப் புதிய தொழில்களில் நுழைகின்றனர். பல விதமான சிரமங்களையும் துணிச்சலாக மேற்கொள்கின்றனர்.  அதன் மூலம் குடும்பத்தை முன்னேற்றுகின்றனர். அதனால் நாடும் வளர்கின்றது.

சுதந்திரம் பெறுகின்ற போது நமது நாட்டின் விவசாயம், தொழில்,வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளும் ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டிருந்தன. தொன்று தொட்டு உலகின் செழிப்பான தேசமாக விளங்கி வந்த இந்தியா அந்நியர்களால் பெருமளவு சிதைக்கப் பட்டிருந்தது.  ஆனால் சுதந்திரத்துக்கு அப்புறம்  உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவாகி வந்து கொண்டுள்ளது. அதற்குக் காரணம் குடும்பம் சார்ந்த நமது பல்துறை வளர்ச்சியாகும்.

கடந்த எழுபது வருடங்களில் தொழில், வணிகத்துறைகள் பெரிய  வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.  இந்தியப் பொருட்கள் இன்று உலகின்பல பகுதிகளிலும் விற்பனையாகி வருகின்றன. நமது தொழில் மையங்களான சூரத், லூதியானா, திருப்பூர், கரூர், ஆக்ரா உள்ளிட்டவை உலக முழுவதும் பிரபலமான பெயர்களாக உள்ளன. அதற்குக் காரணம் நமது மக்களின் தொழில் முனையும் தன்மை.

பல வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக இருந்து வந்த இடங்கள் இன்று நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. சிவகாசி, நாமக்கல், திருச்செங்கோடு, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின்  பகுதிகள்  அனைத்தும் நமது சாதாரண மக்களின் கடும் உழைப்பால் நமது நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. நமது குடும்பங்கள் மற்றும்  சமூகங்களின் குணங்களே அதற்கு அடிப்படையாகும்.

சீரழிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம், உலகமே எதிர்பார்க்கும் பெரிய பொருளாதார சக்தியாக ஓரு எழுபது வருடத்துக்குள் மாறியிருக்கின்ற அதிசயம் உலகப் பொருளாதார வரலாற்றில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. அது நமது நாட்டில் நடந்து வருகின்றதென்றால் அதற்குக் காரணம் தொன்மை வாய்ந்த நமது கலாசாரமும், குடும்ப மற்றும் சமூக நெறி முறைகளும் தான். எனவே நமது பொருளாதார அணுகுமுறை என்பது மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றானது. அதைத் தான் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் எடுத்து வைத்தார்கள். அதனை அங்கீகரித்து முழுவதும் நடைமுறைப் படுத்துவது நமது கடமை.

( ஒரே நாடு – பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா சிறப்பிதழ், சென்னை, ஏப்ரல் 2017)

ஐதரேய, கேன உபநிடதங்கள் புத்தகம் - வாழ்த்துரை


ஆசிரியர்: பேரா.ஜெ. ஞானபூபதி, வெளியீடு: திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர்

வாழ்த்துரை

வேதங்களும் உபநிடதங்களும் தொன்மை வாய்ந்த இந்தியப் பண்பாட்டின் பெரும் பொக்கிஷங்கள்.   தவ வலிமை மிக்க ஞானிகளும், ரிஷிகளும் தங்களுடைய அயராத தேடுதல்களால் பல்லாண்டு கால முயற்சிகள் மூலமாக உருவாக்கிய சிந்தனைக் களஞ்சியங்கள். நமது தேசத்தின் உயர்ந்த தத்துவப் பாரம்பரியத்தை  இன்றளவும் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் கலாசார அடையாளங்கள்.  

உலக நாடுகள் பலவற்றுக்கும் தனித் தன்மை என ஒன்று உண்டு. நமது நாட்டைப் பொருத்த வரையில் தனித்தன்மை என்பது ஆன்மிகமே ஆகும்.  அதனால் தான் இன்று வரைக்கும் எல்லாவற்றிலும் நாம் இறைவனைப் பார்க்கிறோம்; எல்லாவற்றையும் இறை வடிவாகக் காண்கிறோம். ‘ காக்கை , குருவி எங்கள் ஜாதி,  நீள் கடலும் மலையும்   எங்கள் கூட்டம்,  நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி சொல்வது அந்த நோக்கின் அடிப்படையில் தான்.

மேற்கத்திய சிந்தாந்தங்கள் குறுகிய நோக்குடையவை; ஒட்டு மொத்த வாழ்க்கையையும் முழுமையாக நோக்கும்  சிந்தனை அவற்றில் இல்லை. தனி மனிதத் தேவைகள் மற்றும் பொருளை மட்டுமே மையமாகக் கொண்ட பார்வை ஆகியவையே  அவற்றில் அடிப்படையாக உள்ளன. எனவே அந்த சித்தாந்தங்களை ஒட்டி அமைந்த வாழ்க்கை முறைகள்  தோல்வியடைந்து வருகின்றன.

பிரபஞ்சம், கடவுள், மனிதன், குடும்பம், ஆன்மிகம், பொருளாதாரம் என எல்லாவற்றையும் இணத்து ஒரு சேரப் பார்க்கின்ற தன்மை நமது கலாசாரத்துக்கே உரிய சிறப்பாகும்.  மேலும், உடல், ஆன்மா மற்றும்  வாழ்க்கையின் நோக்கம் உள்ளிட்ட நுட்பமான விசயங்களைப் பற்றி எல்லாம் ஆழமாக ஆராய்ந்து எடுத்துச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள்.

 அந்த வகையில் தான் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட உயர் நூல்கள் நமது தேசத்தில் தோன்றி வந்துள்ளன. அவற்றின் முக்கிய அம்சமே  வாழ்வின் நிலையான உண்மைகளை எடுத்துச் சொல்லுவதுதான்.  அதனால் தான் உலகின் பல பகுதிகளிலும்  எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள போதும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக என்றைக்கும் மாறாத விசயங்களைச் சொல்லுபவையாக அவை நிலைத்து நின்று வருகின்றன. 

பழமைமையான நமது இந்து ஞானப் பாரம்பரியத்தில் உபநிடதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மகரிஷி அரவிந்தர் அவர்கள் உபநிடதங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தேர்ந்தெடுத்த   வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவை ’இந்திய அறிவின் உயர்ந்த பங்களிப்பு’ எனச் சொல்லுவார்.   ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் ‘ உபநிடதங்களை விட உணர்ச்சியும், எழுச்சியும், ஊக்கமும் ஊட்டக் கூடிய நூல் உலகில் வேறெதுவுமில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக நிலவி வரும் நமது இந்தியக் கல்வி முறையின் குறைபாடுகளால், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஆன்மிக நூல்கள் பாடத்திட்டங்களில் இல்லை. அதனால் தொடர்ந்து பல தலைமுறைகளாக  அவை மக்களுக்குத் தெரியமாலேயே உள்ளன.

அதுவும் வேதங்களும், உபநிடதங்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதன் காரணமாகவே அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை நாம் தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதனால் நாம் நமது  சந்ததிகளுக்கு எவ்வளவு பெரிய தவறு செய்து வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பேராசிரியர் ஜெ.ஞானபூபதி ஐயா அவர்கள் செய்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதாகும். ஐயா அவர்கள் ஆன்மிகத்தில் மிகுந்த அனுபவம் பெற்றவர். தமிழ் மற்றும் பிற மொழி ஆன்மிக இலக்கிய நூல்களைப் பெரிதும் கற்றறிந்தவர். முன்னமே கடோபநிடதம் குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளவர்.

உபநிடதங்கள் இந்து மதத்தின் மையத் தத்துவக் கோட்பாடுகளைச் சொல்லுபவை. அவை பிரம்மனின் உண்மைத் தன்மையை எடுத்து வைத்து, மனித மோட்சத்துக்கான வழி மற்றும் குணங்களை விளக்குகின்றன. இந்திய மதங்கள் மற்றும் கலாசாரத்தில் அவை மிக முக்கியமான இலக்கியங்களாக உள்ளன. மேலும் பண்டைய காலந் தொட்டு இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்துள்ளன.

பேராசிரியர் ஐயா அவர்கள் இந்த நூலுக்கு ஐதரேய மற்றும் கேன உபநிடதங்களை எடுத்துள்ளார். 108 உபநிடதங்களில் அவை இரண்டுமே முக்கிய உபநிடதங்களாகக்கருதப்படும்  பதின்மூன்றில் வருபவை. பகவான் ஆதி சங்கரரால் விளக்கம் எழுதப்பட்ட பெருமைக்குரியவை.

தொன்மையான ஐதரேயா உபநிடதம் மூன்று முக்கிய தத்துவக் கருத்துகளை முன் வைக்கிறது. கேன உபநிடதம் பிரம்மனை விவரிக்கிறது.  இது இந்து மதத்தின் வேதாந்த சிந்தனை வழிமுறைக்கு அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.

இந்த நூலின் மிகச் சிறப்பான அம்சம் ஆசிரியர் உபநிடதங்களை விளக்கிச் சொல்லும் முறையாகும். உபநிடத வாக்கியங்கள் முதலில் சமஸ்கிருதத்தில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அவற்றின்  தமிழ் உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சமஸ்கிருதம் தெரியாதவர்கள் தமிழில் படித்து அதனைத் தெரிந்து கொள்ள முடியும்.

 பின்னர் அவற்றுக்கான விளக்கம் அழகிய தமிழில் கவிதையாக வடிக்கப்பட்டுள்ளது.  அதற்கடுத்து சுலபமாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல்லோரும் சிரமம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும். தேவைப்படும் இடங்களில் சொல்லியுள்ள விசயங்களுக்கான அர்த்தங்கள்   விளக்கப்பட்டுள்ளன.

மேலும் உபநிடதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் பகவான் சங்கரரின் விளக்கம், திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த ஆன்மிகத் தமிழ் இலக்கியங்கள், பாரதியார் கவிதை, ஆங்கில மொழி பெயர்ப்புகள், அண்மைக் காலங்களில் செய்தியாக வந்த பொருத்தமான கருத்துக்கள் ஆகியவற்றை நூலாசிரியர் எடுத்துத் தந்துள்ளார்கள்.  உபநிடதங்களை எளிமையாகவும், அதே சமயத்தில் முழுமையாகவும் எடுத்துச் சொல்லப் பேராசிரியர் எடுத்திருக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் ‘ உபநிடதங்கள் வலிமை அளிக்கக் கூடிய பெரும் சுரங்கம். அங்கு மொத்த உலகையே தட்டி எழுப்பக் கூடிய போதுமான வலிமை உள்ளது’ என எடுத்துக் கூறினார்.   அதனால் ‘ ஒளிரக் கூடியதும் ,வலிமை தரக் கூடியதும், பிரகாசமான தத்துவமான துமான உபநிடதங்களுக்குச் செல்லுங்கள்’ என்கின்ற அறைகூவலை விடுத்தார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அந்தப் பணியைச் செவ்வனே செய்யும் முயற்சியைப் பேராசிரியர் ஞான பூபதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அளப்பரிய மதிப்பு மிக்க உபநிடதங்கள் தற்காலத்துக்கும் பொருத்தமானவை.  கேன உபநிடதம் அன்றே            ’அறிவும் ஆன்மாவும் அடைய வேண்டிய இலக்குகள்; எல்லா உயிரனங்களும் அவற்றை அடைய ஏங்குகின்றன’ எனச் சொல்லி  ’ஆன்மிக மனிதன்’ பற்றிப் பேசியது. அதையே இன்று நவீன மேலாண்மை நிபுணர்கள் மனிதனின்  ‘ ஆன்மிகத் தன்மை’  மூலமே வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கோட்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.

பேராசிரியர் ஐயா அவர்களின் இந்த முயற்சி தமிழ் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் உபநிடதங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்து ஞான மரபின் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் ஆன்மிக வெளிச்சம் பெற வேண்டும்.

இந்நூல் உருவாகக் காரணமாக இருந்து ஊக்கமளித்த மதிப்புக்குரிய திரு. எக்ஸ்லான் கே. இராமசாமி அவர்களுக்கும், திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.