நம்பிக்கை தரும் புளியன்குடி – எலுமிச்சை நகரம் மற்றும் இயற்கை விவசாயம்


புளியன்குடி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சியாகும். அதன் தற்போதைய உத்தேச மக்கள் தொகை எழுபதாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த நகரம் இன்று வளர்ந்து பல தரப்பட்ட வியாபாரம், கடைகள் எனப் பெருகியிருந்தாலும் அதற்கு ஆதாரமாக இருப்பது எலுமிச்சை வியாபாரமே ஆகும்.

அதனால் புளியன்குடி எலுமிச்சை நகரம் எனவே அந்தப் பகுதி மக்களால் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தொழில்களை வைத்தும் இயந்திரங்கள்  மூலமான உற்பத்திகளை வைத்தும் நமது நாட்டில் பல நகரங்கள் அறியப்படுகின்றன. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் திருப்பூர் பனியன் நகராகவும் சிவகாசி பட்டாசு நகராகவும் நாடு முழுவதும் மட்டுமன்றி வெளி நாடுகளிலும்  கூடப் பிரபலமாக  அறியப்படுகின்றன.

ஆனால் ஒரே ஒரு விவசாயப் பொருளை மட்டுமே வைத்து அந்தப் பகுதி பிரபலமாகி, அதன் பெயரிலேயே நகரம் அறியப்படுவது என்பது அநேகமாக தமிழ்நாட்டில் புளியன் குடி ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அதுவும் கூட எலுமிச்சை என்பது அரிசியையோ அல்லது உப்பையோ போல அத்தியவசியமான உணவுப் பொருள் அல்ல. அது ஒரு துணைப் பொருள் மட்டுமே.

எப்படியாயினும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமாக விளங்கி வருவது எலுமிச்சையே ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அந்தப் பகுதியின் காலச் சூழ் நிலை எலுமிச்சை விளைச்சலுக்கு ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்தப்பகுதியில் விளையும் எலுமிச்சை பழங்களில் சாறு ( நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற பகுதிகளின் எலுமிச்சைகளை விட நீண்ட நாட்களாகும் என்பது முக்கியமான அம்சமாகும்.

சிவகிரி மற்றும் சங்கரன் கோவில் வட்டங்களைத் தவிர இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த  பல ஊர்களிலும் எலுமிச்சை விவசாயம் பிரதானமாக உள்ளது. அண்மைக் காலங்களில் தென்னை போன்ற விவசாயங்களில் இருந்து சில பேர் விவசாயத்துக்கு முழுமையாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

அந்தப் பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் பிரபலமாக இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் புளியன்குடியில் செயல்பட்டு வரும் எலுமிச்சை சந்தையாகும். ஆரம்பத்தில் எலுமிச்சை வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரில் சென்று பழங்களை வாங்கி வந்து பின்னர் அவற்றை வெளியூர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பின்னர் 1981 ஆம் வருடத்தில் அவர்கள் புளியன்குடி எலுமிச்சம்பழம் கமிசன் மண்டி என்ற பெயரில் சந்தையை ஏற்படுத்தினர்.

தற்போது இருபத்தி ஏழு வியாபாரிகள் அந்தச் சந்தையில் தொழில் செய்து வருகின்றனர். விவசாயிகள் பகல் பன்னிரெண்டு மணிக்குள் தங்களின் தோட்டங்களிலிருந்து உற்பத்தியைக் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்கின்றனர். பின்னர் மதியத்துக்கு மேல் லாரிகள் மூலம் எலுமிச்சை வெளியூர்களுக்கு அனுப்பப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, சேலம், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும் அவை செல்கின்றன.

மேலும் வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவற்றுக்கும் அவை அனுப்பப்படுகின்றன. கேரள வியாபாரம் தான் மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது. கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு வாரமும் விவசாயிகளின் வியாபாரக் கணக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு முடிக்கப்படுகிறது. சிறு விவசாயிகள் மற்றும் அவசரமாகத் தேவைப் படுவர்களுக்கு அன்றைக்கே பணம் கொடுக்கப்படுவதும் உண்டு. விவசாயிகள் தேவைப் படும் போது வியாபாரிகளிடம் முன்னரே பணம் வாங்குவதும் உண்டு.

பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சந்தையின் மூலம் பலன் பெறுவதாக அதன் தலைவர் திரு.செ.குழந்தைவேலு தெரிவிக்கிறார். இவர் கடந்த நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக வியாபாரத்தில் இருந்து வருகிறார். எலுமிச்சை வியாபாரத்தில் சிறு வயது முதலே ஈடுபட்டு மிகுந்த அனுபவம் பெற்றவர். துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் அடிபட்டு கால்கள் பாதிக்கப்பட்டவர்.  

சந்தை ஆரம்பிக்கப்பட்ட பின் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் தொழில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கிறார். உற்பத்தியைப் பொறுத்து வியாபாரம் வருடத்தில் சில மாதங்கள் கூடவும் குறையவும் இருக்கும். வியாபார நாட்களில் சராசரியாக  இருநூற்றைம்பது டன்கள் அளவு எலுமிச்சை கொண்டு செல்லப்படுவதாகத் தெரிகிறது.

எலுமிச்சை சந்தை மூலமாக சந்தைக்குள்ளும் வெளியிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலை கிடைக்கின்றது. ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் என வெவ்வேறு வகையான வேலைகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.  வியாபாரத்தை ஒட்டி உப தொழில்களும் நடைபெறுகின்றன. எலுமிச்சைகளைப் போடுவதற்கான சாக்குகளைத் தைக்கும் தொழில் மற்றும் சாக்குகளுக்குள் வைப்பதற்கான பனை ஓலைகளைப் பின்னும் தொழில் ஆகியன அவற்றில் குறிப்பிடத் தக்கவை. 

எலுமிச்சை வியாபாரம் மூலமாக அந்தப் பகுதி சார்ந்த விவசாயிகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த புளியன்குடி நகரமும் அதன் சுற்றுப்பகுதிகளும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதனால் மக்களுக்குத் தேவைப்படும் வெவ்வேறு வகைப்பட்ட கடைகள், வியாபாரம் ஆகியவையும் கல்விக் கூடங்கள் மற்றும் வசதிகளும் பெருகியுள்ளன.

நாடு முழுவதும் விவசாயம் நசிந்து போவதற்கு ஒரு முக்கிய காரணம் விளை பொருட்களுக்கான சந்தைகள் அருகில் இல்லாததுதான். அதனால் விவசாயிகள்  நல்ல விலைக்குத் தங்களின் உற்பத்திகளை விற்க முடிவதில்லை. அந்த வகையில் தமது விளை பொருளுக்கான சந்தையை தங்கள் பகுதியிலேயே ஏற்படுத்தி அதன் மூலம் வியாபாரம் செய்யும் போது அது விவசாயத்துக்கு எவ்வளவு துணை புரிய முடியும் என்பதற்கு புளியன்குடி ஒரு நல்ல உதாரணமாகும்.

அதுவும் அரசு இயந்திரங்களின் தலையீடு இன்றி உள்ளூர் மக்களே சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  மேலும் இது போன்ற சந்தைகளை மக்கள் தங்கள் பகுதிகளில் உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏதுவாகும். அதனால் விவசாயிகள் உரிய பலனைப் பெற்று விவசாயம் பாதுகாக்கப்படும்.   
வியாபாரத்துக்கு மட்டுமன்றி, புளியன்குடி பகுதி முன்னோடி விவசாயத்துக்கும்  ஒரு நல்ல உதாரணமாக உள்ளது. வறண்ட பகுதிகளில் நீர்த்தேக்கம், புதிய ரக செடிகள் உருவாக்கம், இயற்கை முறையில் மருந்தில்லா விவசாயம் எனப் புது உத்திகளை அங்குள்ள விவசாயிகள் புகுத்தி அதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாகவே நல்ல வெற்றியும் கண்டு வருகின்றனர். 

வறட்சியான பகுதியில் கிடைக்கும் மழை நீரை முறையாகத் தேக்கி விவசாயத்துக்குப் பயன் படுத்துவதற்கான புதிய முறையை மறைந்த திரு. வேலு முதலியார் அவர்கள் தன்னுடைய நிலத்தில் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். அதற்காக அவர் கடுமையான முயற்சிகளைத் தனி மனிதராக எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார். அதற்காக அவருக்கு அரசு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.  

இயற்கை விவசாயத்தைப் பொறுத்த வரையில், அந்தப் பகுதியில் சில பேர் முன்னோடிகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திரு. அந்தோணிசாமி அவர்கள் முக்கியமாக குறிப்பிடத்தக்க வேண்டியவர். எழுபத்தி இரண்டு வயதாகும் அவர், எலுமிச்சை விவசாயத்தை மருந்தில்லாமல் முழுவதும் இயற்கை முறையிலேயே செய்து வருகிறார். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் செயற்கை உரங்கள் எதுவுமின்றி எலுமிச்சையை உற்பத்தி செய்து வருகிறார்.

அவர்களின் பகுதியில் அதிகமான தண்ணீர் வசதி இல்லை. மேலும் எலுமிச்சைச் செடிகள் நோய்க்கு ஆளாகி வந்தன. எனவே அவர் வறட்சியையும் நோய்களையும் தாங்கக் கூடிய ஒரு புதிய ரக எலுமிச்சையைக் கண்டு பிடிப்பதன் மூலமே தங்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கருதினார். அவரே அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்காக தண்ணீர் பாசனத்தையும்  பூச்சி மருந்துகளையும் பார்த்திருக்காத காட்டு எலுமிச்சை ரகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அதைத் தாய்ச்செடியாகக் கொண்டு நல்ல நாட்டு எலுமிச்சையுடன்  ஒட்டுக் கட்டினார். ஒரு வருடம் வரை தாய்ச் செடியின் தழுகுகளை வெட்டி, நாட்டு எலுமிச்சையை வளர விட்டார். அதன் மூலம் வறட்சியையும் நோய்களையும் தாங்கக் கூடிய ஒரு புதிய ரக எலுமிச்சையை நமது நாட்டில் முதன் முறையாக உருவாக்கினார்.

அவரது முயற்சி தேசிய அளவில் முக்கியமான கண்டுபிடிப்பாக அறியப்பட்டு, அதற்காக 2005 ஆம் வருடம் குஜராத்தில் நடைபெற்ற விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் குடியரசுத்தலைவர் விருது பெற்றார். அந்த விழாவிற்குப் பின்னர் அங்கு தன்னுடைய புதிய ரகச் செடிகளை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக இவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்து, அந்தச் செடிகளைப் பற்றி விரிவாக விசாரித்து, பணம் கொடுத்து தன்னிடமிருந்து ஒரு செடியை குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி  வாங்கிச் சென்றதை பெருமையுடன் அவர் நினைவு கூர்ந்தார்.  

எலுமிச்சை விவசாயத்தின் வெற்றி என்பது செடிகளை நடுவதற்கு முன் நிலத்தைத் தயார் படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது எனச் சொல்கிறார். செடிகளை நடுவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே அவர் தனது நிலத்தில் குழிகளைத் தோண்டி அவற்றில் பசுந்தழைகள், ஆட்டு எரு, குளத்து வண்டல் ஆகியவற்றைப் போட்டு மண்ணை மூடி தண்ணீர் விட்டு நனைக்கிறார். அதன் பின்னர் குறிப்பிட்ட காலம் கழிந்த பின்னரே அவர் செடிகளை நடுகிறார். இடைப்பட்ட காலத்தில் மண்ணுக்குள் போடப்பட்டவை எல்லாம் நல்ல உரமாக மாறி விடும் எனச் சொல்கிறார்.

வழக்கமான செடிகள் வருடத்துக்கு எட்டு மாதம் மட்டுமே விளைச்சலைக் கொடுக்கும் எனவும், ஆனால் தனது ரகம் மூலம் பத்து மாதங்களுக்குக் காய்ப்பு கிடைக்கிறது எனவும் கூறுகிறார். மேலும் முப்பது ஆண்டுகளுக்கு உற்பத்தி இருக்கும் எனவும் காய்கள் கொத்துக் கொத்தாக விளையும் எனவும் செடிகளைக் காட்டுகிறார். சொட்டு நீர்ப் பாசனம் மூலமே வேகமான வளர்ச்சியும் அதிக பலனும் கிடைக்கும் எனச் சொல்கிறார். அதனால் ஒரு செடிக்கு வருடத்துக்கு மூவாயிரம் காய்கள் உற்பத்தி செய்ய முடியம் எனக் கூறுகிறார்.

எலுமிச்சையை மட்டுமன்றி, கரும்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட எல்லா விவசாயத்தையும் அவர் செயற்கை உரங்கள் போடாமல் இயற்கை முறைகள் மூலமே செய்து வருகிறார். வழக்கமாகக் கரும்பு பயிரிட்ட பின் இரண்டு அல்லது மூன்று விளைச்சலுக்கப்புறம் விவசாயிகள் அதைத் தோண்டி விடுவார்கள். ஆனால் அவர் இருபத்தியோராவது முறையாக அதே கட்டை மூலம் கரும்பு விளைச்சல் செய்து வருவதைக் காண்பித்தார். 

ஒரே கட்டையில் பத்துப் பதினைந்து  கரும்புகளுடன் ஒவ்வொரு கரும்பும் வலுவாக இருப்பதைக் காண முடிந்தது. சொட்டு நீர்ப் பாசனம் மூலமே தண்ணீர் பாய்ச்சினாலும் மண் தேவையான ஈரப்பதத்துடன் உள்ளது. கரும்புத் தோகைகள உரித்து வெளியில் எடுத்து வராமல் அப்படியே நிலத்தில் மண்ணோடு மக்க வைத்து விடுகிறார். மண்ணின் இயற்கைத் தன்மை அப்படியே பாதுகாக்கப் படுவதால், மண் நல்ல நறுமணத்துடன் இருக்கிறது.

புளியன்குடி பகுதியின் முன்னோடி முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கம் கொடுத்து, வேலு முதலியார், அந்தோணி சாமி போன்றவர்களின் செயல்பாடுகளை வெளியில் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது  அங்கு செயல்பட்டு வரும் சிறு விவசாயிகள் சேவா சங்கம் என்னும் அமைப்பாகும். கடந்த முப்பத்தி ஏழு வருடங்களாக செயல்பட்டு வரும் அந்த சங்கத்தின் தற்போதைய செயலாளர் திரு. கோமதி நாயகம் பிள்ளை ஆவார். எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவரும் ஒரு இயற்கை விவசாயி.

அப்போதைய காந்திய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அதே ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆரம்ப காலத்தில் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நண்பர்கள்  சிலரால் சேர்ந்து துவக்கப்பட்ட  அந்த சங்கம், அந்தப் பகுதி விவசாயிகளுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பெருமையுடன் சொன்னார். மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி  அதன் மூலம் முடிந்த அளவு அரசு திட்டங்கள் வழியாகவே உதவிகளைப் பெறுவதாகக் கூறினார். உதாரணமாக அங்குள்ள பல கிராமச் சாலைகள் அவர்களின் முயற்சியால் மாவட்ட ஆட்சித் தலைவரின் நிதி  உதவிகள் மூலம்  செயல்படுத்தப்பட்டுள்ளன.

அக்கறையுள்ள சில பேர் சேர்ந்து தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டால் எவ்வாறு ஒரு பகுதி முன்னேற்ற பெற முடியும் என்பதற்கு புளியன்குடி விவசாயிகள் சேவா சங்கம் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. அந்தப் பகுதியில் மேலும் விவசாயம் வளர அவர்கள் சில முக்கியமான உதவிகளை அரசிடம் எதிர்பார்க்கிறார்கள். .

தற்போது சொட்டு நீர்ப் பாசனத்துக்கான மானியம் ஒரு குறிப்பிட்ட தொகை அளவு மட்டுமே அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. அதனால் மானிய அளவுக்கு மேலாக சொட்டு நீர்ப் பாசனத்துக்குப் போக விவசாயிகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை. எனவே அந்த வரைமுறையை நீக்கினால் சொட்டு நீர்ப் பாசன விவசாயம் அதிகமாகும் எனவும்  அதன் மூலம் விவசாயம் பெருகும் எனவும் உறுப்பினர்கள் சொல்கின்றனர்.

மேலும் இயற்கை விவசாயத்தைப் பற்றி அவர்களில் பலர் அறிந்திருந்தாலும் அதற்கான நடைமுறைகள் மற்றும் முக்கியத்துவம் இன்னமும் அனைவருக்கும் முழுமையாகத் தெரிவதில்லை.  எனவே இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்குகள் தங்கள் பகுதிகளில் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பெருமளவு நசிந்து வரும் வேளையில் புளியன்குடி பகுதி நமக்கு ஒரு வித நம்பிக்கையை அளிக்கிறது. அங்குள்ள விவசாயிகளின் முன்னோடியான முயற்சிகள், அவர்கள் அமைதியாக நடத்தி வரும் விவசாய சேவா சங்கம் மற்றும் அங்கு நன்கு நடைபெற்று வரும் எலுமிச்சை சந்தை எனப் பலவும் விவசாயத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நிறைய புளியன்குடிகள் உருவாக வேண்டும் என மனது விரும்புகிறது. 

( ஓம் சக்தி, செப்.2013)
விவேகானந்த கேந்திரம் புத்தக வெளியீட்டு விழா

விவேகானந்த கேந்திரம் புத்தகங்கள்  வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி மேல் நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது.  வேதாந்தம் குறித்த ஆங்கில நூல் வெளியீடு (தினமணி, ஆகஸ்ட் 2, 2013)


Prosperous India Book Release at Chennai

'Prosperous India' book was released in a function organised by the Vivekananda Kendra Prakashan Trust at R.K.Swamy Auditorium, Sir Sivasami Kalalaya Senior Secondary School, Mylapore, Chennai on Aug 1, 2013.(From left) Shri. Badri Sheshadri, Managing Director, New Horizon Media, Chennai, Dr.P.Kanagasabapathi (author), Swami Atmashraddhananda, Editor, Vedanata Kesari, Ramakrishna Mission, Chennai, Shri.A.Balakrishnan, Vice President, Vivekananda Kendra, Kanyakumari and Shri.Vijaya Sarathy, Television anchor/actor, Sun TV, Chennai.