தீனதயாள் உபாத்யாய என்னும் தீர்க்கதரிசி

 

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பன்முகத் திறமைகள் பெற்ற அசாத்தியமான   ஆளுமை. சமூக சேவகர், அமைப்பாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூகபொருளாதார ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் அரசியல் தலைவர் எனப் பல துறைகளிலும் பரிணமித்தவர். வெறும் ஐம்பத்திரண்டு வருடங்களுக்குள்ளாகவே பெரும் சோகத்தில் முடிந்து போன அவரது வாழ்க்கை அளப்பரிய அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்தது.

அவர் 1916 ஆம் வருடம் செப்டம்பர் 25 ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் மதுரா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, எட்டு வயதுக்கு முன்னரே தாய்- தந்தையரை இழக்கிறார். எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்து பட்டங்களைப் பெறுகிறார். பின்னர் தனது சொந்த வாழ்க்கையைத் துறந்து, தேசப் பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்.  

1950 களிலேயே தேசிய கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில்ராஷ்ட்ரா தர்மம்என்கின்ற மாதாந்திரப் பத்திரிக்கையை நிறுவி வழி நடத்தினார். தொடர்ந்து வந்த காலகட்டங்களில் பஞ்சஜன்யாஎன்னும் வாராந்திர மற்றும் ஸ்வதேஷ்என்னும் தினசரிப் பத்திரிக்கைகள நிறுவி நடத்தினார்.

1951 ஆம் வருடம் பாரதிய ஜன சங்க கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதில் இணைந்து பணியாற்றினார். ஆரம்பத்தில் உத்திரபிரதேசத்திலும், பின்னர் தேசிய அளவிலும் பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தினார். 1951 முதல் 1967 வரை கட்சியின் அகில பாரத பொது செயலாளராக இருந்து அமைப்பை வடிவமைத்து வலுப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த சிரமான காலகட்டத்தில் பதினாறு வருட காலம் அமைப்பின் முதன்மைப் பொறுப்பாளராக இருந்து திறம்பட செயல்பட்டார்.

அவரது உயர்ந்த சிந்தனைகளும், எளிமையான வாழ்க்கை முறைகளும், திறமையான அமைப்பு பணிகளும் அனைவரையும் அவர்பால் ஈர்க்க வைத்தன. அதனால் கட்சி பல மாநிலங்களில் வேகமாக வளர முடிந்தது. எனவே முதல் பாராளுமன்றத் தேர்தலில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த ஜனசங்கம், 1967 தேர்தலில் முப்பத்தைந்து இடங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியானது.

மேலும் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த காங்கிரஸ், 1967 தேர்தல்களில் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. ஜனசங்கம் பங்கு வகித்த எதிர்க்கட்சி கூட்டணிகள் உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தன.

பின்னர் 1967 டிசம்பர் மாதம் ஜனசங்கம் கட்சியின் கோழிக்கோடு கூட்டத்தில் தீனதயாள் அவர்கள் அதன் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் வெறும் 43 நாட்கள் கழித்து, 1968  பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அவரது உடல் உத்திரப்பிரதேசத்தின் முகல்சராய் ரயில் நிலையத்திற்கு அருகில் உயிரற்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய அந்த துரதிர்ஷ்ட வசமான நிகழ்வு ரயில் பிரயாணத்தின் போது நடைபெற்றுள்ளது. அதற்கான உண்மைக் காரணம் இன்னமும் முழுமையாகத் தெரியாமல் உள்ளது.

தீனதயாள் அவர்கள் ஜனசங்க கட்சியை திறம்படக் கட்டமைத்து ஒரு வலுவான அமைப்பாக உருவாக்கியதுதான், பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 1977-80 கால கட்டத்தில் ஜனதா கட்சி உருவாகி ஆட்சி அமைப்பதற்கும் அது முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் அவரது சிந்தனா முறைகள் ஆதாரமாக அமைந்துள்ளன என்பது மிகவும் முக்கியமானதாகும்.

1950 -60 கால கட்டங்களில் உலக முழுவதும் முதலாளித்துவமும், கம்யூனிசமுமே இரு பெரும் அரசியல்சமூக- பொருளாதார சித்தாந்தங்களாக முன் வைக்கப்பட்டன.  அவை இரண்டுமே மேற்கத்திய நாடுகளில் அங்கு நிலவிய சூழ்நிலைகளை வைத்து உருவாக்கப்பட்டவை. அவற்றுக்கு மாற்று என்று எதுவுமில்லை; எனவே அவற்றில் ஒன்றைக் கடைப்பிடிப்பது மட்டுமே முன்னேற்றத்துக்கு வழி என்று கருதப்பட்டது. அதனால் தான் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி சோசலிச அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுத்தது.

அந்தக் காலகட்டத்தில் 1965 ஆம் வருடம் தீனதயாள் உபாத்யாய அவர்கள் பாரதிய பண்பாட்டின் சிந்தனா முறைகளை ஒட்டிஒருங்கிணைந்த மனித நேயம்என்னும் கோட்பாட்டை தொகுத்தளித்தார். அதன் மூலம்   மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் இரண்டுமே நமது நாட்டுக்குப் பொருந்தாதவை என்று எடுத்து வைத்தார்.

நமது நாடு தொன்மையானது. உலக அளவில் பல நூற்றாண்டுகள் நாம் செல்வச் செழிப்புடன் உயர்ந்த வாழ்க்கை முறைகளைப் பெற்று வாழ்ந்து வந்துள்ளோம். அது குடும்பம் சார்ந்த கலாசாரப் பின்னணி கொண்ட வாழ்க்கை முறை. அதில் தனி நபர் என யாவரும் இல்லை. எனவே மனித  வாழ்க்கையே  ஒருங்கிணைந்த தன்மையுடையதாக கருதி  நாம் வாழ்ந்து வந்தோம். அதே சமயம் மேற்கத்திய சித்தாந்தங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அவர்களது குறுகிய அனுபவங்களை வைத்து தனிநபரை மையமாக கொண்டு எழுதப்பட்டவை.

எனவே நமது நாட்டுக்கான வழிமுறைகளை நமக்கேற்ற முறையில் நாம் தான் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும் என அவர் எடுத்துரைத்தார். அவர் அன்று கூறியது இன்று உலக அளவில் உண்மையாகி விட்டது.  மேற்கத்திய சித்தாந்தங்கள் தோற்றுப் போய் விட்டன. எனவே காலத்தை மீறிய ஒரு தீர்க்கதரிசியாக அவர் இருந்துள்ளார். அவரது கோட்பாட்டை பாரதிய ஜன சங்கமும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியும் அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டன.

மக்களாட்சியின் பலன்கள் கடைசி வரிசையில் இருக்கும் கடைசி மனிதனுக்கும் முழுமையாகப் போய்ச் சேரும் போது தான் முன்னேற்றம் சரியானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார். அதை அவர்அந்த்யோத்யாஎனக் குறிப்பிட்டார். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக பிரதமர் மோடி அரசு அந்தக் கருத்தை மையமாக வைத்துத் தான் பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

நமது நாடு முழுமையான பலத்துடன் உலகில் சக்தி வாய்ந்த நாடாக உருவாக நமது அடையாளத்தை நாம் புரிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். “நமது தேசத்தின் அடையாளம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்; இல்லையெனில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமில்லைஎன்பது அவரது வாக்கு. எனவே நமது சொந்த அடையாளத்துடன் இந்த மண்ணின் மைந்தர்களாக நாம் கடமையாற்றித் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்போம்.

( பிப்ரவரி 11, தீனதயாள் உபாத்யாய அவர்களின் நினைவு நாள். தினமலர், பிப்,11, 2023 )