மக்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்

 

1951 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேச நலனை மையமாக வைத்து பாரதிய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது மாமனிதர் திரு தீனதயாள் உபாத்யாய அவர்களுடன் கட்சியை வளர்க்க அனுப்பப்பட்டவர் திரு வாஜ்பாய் அவர்கள். தொடர்ந்து பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளில் சுமார் அறுபது ஆண்டுகள் முழு நேரமாக கட்சிப் பணிகளுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். சுதந்திர இந்திய வரலாற்றில் மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி  இல்லாத ஒரு ஆட்சியை ஐந்து வருடங்கள் முழுமையாக நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.

அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியில் இன்றிலிருந்து சரியாக நூறு வருடங்களுக்கு முன்னால் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒரு எளிய குடும்பத்தில் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தார். 1939 ஆம் வருடம் தனது இளம் வயதிலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. தனது பட்டப்படிப்புக்குப் பின்னர்  ஆக்ரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிப்பை முடித்தார். சங்க அதிகாரி கர்ம யோகி பாபா சாகிப் ஆப்தே அவர்களால் ஈர்க்கப்பட்டு, சங்கத்தின் பயிற்சி முகாம்களில் பங்கேற்றார். தொடர்ந்து 1947 ஆம் வருடம் தனது இருபத்தி மூன்றாவது வயதில் சங்க அமைப்பில் முழு நேர பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திரு உபாத்யாய அவர்கள் வெளியிட்டு வந்த பத்திரிக்கைகளில் பணியாற்றினார். ஜனசங்கத்தில் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டு நாட்டின் வடக்கு மண்டலத்துக்குப் பொறுப்பாளராக இருந்தார். தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற  இரண்டாவது பொது தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது தொடங்கி அரை நூற்றாண்டு காலத்துக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தனது பேச்சாற்றல் மற்றும் சேவைகளால் மக்களுக்குத் தொண்டாற்றினார். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,  டெல்லி என நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்து முறை மக்களவைக்கும், இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது  நாடு முழுவதும் அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கைப் பறை சாற்றுகிறது. 

ஆரம்ப  காலங்களில் ஜனசங்கத்தைக் கட்டமைத்து  தலைசிறந்த அமைப்பாளராக விளங்கிய திரு உபாத்யாய அவர்கள் தனது ஐம்பத்து மூன்றாம் வயதில்,  கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக குறுகிய காலத்தில்,  1968 ஆம் வருடம் மர்மமான முறையில் உயிர் நீத்தது கட்சிக்குப் பேரிடியாக அமைந்தது.  அதன் பின் கட்சிக்குத் தலைமை தாங்கும் மிக முக்கியமான பொறுப்பை திரு வாஜ்பாய் அவர்கள் ஏற்றார். திருவாளர்கள் நானாஜி தேஷ்முக், பால்ராஜ் மதோக் மற்றும் அத்வானி ஆகியோருடன் இணைந்து கட்சியைத் திறம்பட நடத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அரசியலை முன்னெடுப்பதிலும், மாநிலங்களில் ஜனசங்கத்தை வளப்பதிலும் திறமையுடன் செயல்பட்டார்.  திருமதி இந்திரா காந்தி அரசியலமைப்புச் சட்டத்தை  மதிக்காமல் அவசர நிலைப் பிரகடனம் செய்த பின்னர், மாற்று அரசியலை முன் வைத்து கடுமையாக உழைத்தார். அதனால் 1977 ஆம் வருடம் ஜன சங்கம் முக்கிய பங்கு வகித்த ஜனதா கட்சி உருவாக்கப்பட்டு, ஆட்சியைப் பெற்றது. அதில் திரு வாஜ்பாய் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பல முயற்சிகளை முன்னெடுத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் முதன் முதலாக இந்தி மொழியில் பேசினார்.

தொடர்ந்து சில சுயநல சக்திகளின் காரணமாக  ஜனதா கட்சி பிளவு பட்டபோது, பாரதிய ஜனதா கட்சி உருவானது. 1980 ஆம் வருடம் அதன் முதல் தலைவராக திரு வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின் வந்த காலங்கள் கட்சிக்குக் கடுமையான சோதனைகள் மிகுந்த காலமாக அமைந்தன. அந்தக் கால கட்டங்களில் பிற தலைவர்களுடன் இணைந்து கட்சி வளர்ச்சிக்கு பெரும் பாடு பட்டார்.

1996 ஆம் வருடம் கூட்டணி கட்சிகள் இணைந்து அவரை தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுத்தன. அதன் மூலம் சுதந்திர பாரதத்தில் பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் சுயம்சேவகர் என்னும் பெருமையைப் பெற்றார். ஆனால் அந்த ஆட்சி கூட்டணி கட்சிகளின் பிரச்னைகளால் சில நாட்களே நீடித்தது. பின்னர் 1998 ஆம் வருடம் மீண்டும் பாஜக தலைமை வகித்த கூட்டணி கட்சிகள் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தன. பதிமூன்று மாதங்கள் ஆட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப்பட்டு, நமது தேசத்தின் சக்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் வெளிநாட்டினர் நம் மேல் தடைகளை விதித்த போது பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொண்டார்.

தொடர்ந்து 1999 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. பின்னர் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பல கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சியை திறமையாக நடத்திக் காட்டினார். அந்த சமயத்தில்  பல முக்கியமான திட்டங்களை மேற்கொண்டார்.  நாடு முழுவதும் போக்குவரத்தைச் சுலபமாக்கி பொருளாதாரம் வளர்ச்சி பெற தங்க நாற்கர சாலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.

அதன் பலனாக நாட்டின் பல பகுதிகளும் சாலைகளால் இணைக்கப்பட்டன. மேலும் பொருளாதாரத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாடு எதிர்பாராத சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது. 2001 ஆம் வருடம் நாட்டின் பாராளுமன்றமே தாக்குதலுக்கு ஆளானது. அந்த சூழ்நிலையில்  துணிச்சலுடன் செயல்பட்டு நாட்டை வழி  நடத்தினார். 

தனது வாழ்நாளில் எழுபது வருட காலம் முழுமையாகத் தேசப்பணியாற்றிய பின்னர், தனது எண்பத்தைந்தாவது வயதில் உடல் நலம் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.  அதன் பின் ஒன்பது வருடங்கள் கழித்து 2018 ஆம் வருடம் ஆகஸ்டு பதினெட்டாம் நாள் தனது தொண்ணூற்று நான்காவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

வாழ்க்கை முழுவதையும் தேசத்துக்கே அர்ப்பணித்து வாழ்ந்த திரு வாஜ்பாய் அவர்கள் சுதந்திர பாரதத்தின் ஒரு பெரும் அரசியல் தலைவர்; மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான பேச்சாளர்; நல்ல கவிஞர்; பல வகைகளில் முன்னோடி. அவரது சேவைகளைப் போற்றி திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2015 ஆம்  வருடம் அவருக்கு நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பித்தது.  மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவராக வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதரின் நினைவைப் போற்றுவது நமது கடமையாகும். 

 

( விஜய பாரதம், சென்னை, டிச 2024)