இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்



இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்


1931ம் வருடம் அக்டோபர் மாதம் லண்டன் நகரம். மகாத்மா காந்தி பேசுகிறார்: "நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இந்தியாவின் பழைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல் இருந்தது. அந்த மரம் இப்போது அழிந்து விட்டது.' ஆங்கிலேயர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி. கல்வி அறிவை உலகுக்கு கொடுத்ததாக பறைச்சாற்றிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. அவர்கள் சவால் விட்டனர். "உங்கள் பேச்சு உண்மையென நிரூபியுங்கள். அல்லது மன்னிப்பு கேளுங்கள்.' காந்திஜி தன்னால் இதை நிரூபிக்க முடியுமென சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுதந்திர இயக்கப்பணிகள் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரால் அதற்காக நேரம் கொடுக்க இயலவில்லை. எனவே அந்தப்பணி முடியாமலேயே காந்திஜி அமரரானார்.
அதற்கு பின் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அப்புறம் காந்திஜியின் ஆயுளில் நிறைவேறாத அந்தப்பணியை நிறைவு செய்யப்புறப்படுகிறார் அவரது சீடர். அந்த சீடரின் பெயர் தரம்பால். 1922 ம் வருடம் பிறந்த இவர் முதன்முதலாக தனது எட்டுவயதில் காந்திஜியை லாகூரில் பார்க்கிறார். கல்லூரிக் காலங்களிலேயே காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு தேசப்பணிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கத் துவங்குகிறார். அதன்பின் கிராம முன்னேற்றம் மற்றும் ஆய்வுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தரம்பாலின் ஆய்வுகள் காந்திஜியின் கல்வி குறித்த கருத்துக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்தது மட்டுமன்றி இந்திய தேசத்தின் பொருளாதார மற்றும் சமுதாய ஆதாரங்களை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் அமைந்தன. இவை மூலம் ஆங்கிலேயேர் இங்கு வருவதற்கு முன்னரே கல்வி, விவசாயம், தொழில், அறிவியல் எனப்பல துறைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது தெரிய வருகின்றது.
1960 களில் தொடங்கி தமது ஆய்வுகளை மேற்கொண்ட தரம்பால், புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலமே சேகரிக்கின்றார். அதற்காகப் பல ஆண்டுகள் லண்டன் மியூசியம் உள்ளிட்ட இடங்களில் செலவு செய்கின்றார். அதிக வருமானம் ஏதும் இல்லாமல் பிரதி எடுப்பதற்கே கஷ்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆவணங்களைப் பார்த்து கையாலேயே எழுதுகின்றார். அதன் மூலம் இந்திய தேசம் சம்மந்தமான பல விசயங்களை தொகுக்கின்றார். பின்னர் இவற்றை பல்வேறு புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிடுகின்றார். சொற்பொழிவுகள் ஆற்றுகின்றார். இவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்திய நாட்டின் பாரம்பரியங்களையும், பழைய அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இதன் மூலம் வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும், பொருளாதார மற்றும் அறிவியல் கண்டறிய தவறிய பல அடிப்படை உண்மைகள் நமக்கு தெரிய வருகின்றன.
அவரது ஆய்வுகள் குறித்துக் குறிப்பிடும் போது முதலில் கல்வி குறித்த அவரது பணியினை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆங்கிலேயேர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியாவில் எடுத்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. பம்பாய் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சிகளில் 1820 களிலும், வங்காள பிரசிடென்சியில் 1830 களிலும் இந்த கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடமும், வங்காளத்தில் மாவட்டத்திற்கு பத்து என்ற கணக்கில் பிரசிடென்சி முழுவதும் 1800 உயர் கல்வி நிலையங்களும் இருந்திருக்க வேண்டுமென ஆடம்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தரம்பால் எடுத்துரைக்கின்றார்.
பம்பாய் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடமும், பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் இருந்ததாக மூத்த ஆங்கிலேயே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருந்ததாக தாமஸ் மன்ரோ குறிப்பிட்டுள்ளார்.1850 வாக்கில் பஞ்சாபிலும் இதே சூழ்நிலை நிலவியுள்ளது.
இந்த பள்ளிகள் அனைத்தும் கிராம மக்களின் நிதி உதவிகளாலேயே நடத்தப்படுவதாக மேற்கூறிய அறிக்கைகள் கூறியுள்ளன. மேலும் சென்னை பிரசிடென்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து தரம்பால் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜமுந்திரி மாவட்டத்தில் 173, தஞ்சை பகுதியில் 109 என உயர்கல்வி நிறுவனங்கள் பல பகுதிகளிலும் செயல்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். இந்தக் கல்வி நிறுவனங்கள் எந்தவித ஜாதி மத வேறுபாடுமின்றி செயல்பட்டு வந்ததாகவும் அவர் புள்ளி விபரங்களுடன் குறிப்பிடுகிறார். அதேசமயத்தில் இங்கிலாந்து நாட்டில் பள்ளிக் கல்விமுறை பரவலாக மக்களுக்குக் கிடைக்காமல் இருந்ததாகவும், இந்திய முறையை வைத்தே அவர்களின் பள்ளிக் கல்வி முறை பின்னர் அமைக்கப்பட்டதாகவும் தரம்பால் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாடு கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்ததாகச் சொல்லுகின்றார். கல்வி குறித்த தமது புத்தகத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு காந்திஜி லண்டனில் உபயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்தே அமைந்தது. "அழகிய மரம்; பதினெட்டாம் நூறறாண்டின் இந்திய கல்வி'.
கல்வி மட்டுமன்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய அரசியலும் பஞ்சாயத்து ராஜ்ஜியமும், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து அவர் புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பாரம்பரிய முறைகள் பற்றி ஆங்கிலேயர் இங்கு கண்டு எழுதிய விசயங்களையும் தரம்பால் தொகுத்துத் தந்துள்ளார். மேலும் இரும்பு தயாரிக்கும் முறைகள் பரவலாக இருந்ததையும், ஐரோப்பியயர்களுக்கு தெரியாத மருத்துவ முறைகள் இங்கு சாதாரணமாக மக்களிடையே பிரபலமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை பிரசிடென்சி பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் பெரும்பாலான வருடங்களில் நிலவரியானது விவசாய விளைச்சலை விட அதிகமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1800 முதல் 1850 வரையான ஐம்பது வருடங்களில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்வதையே விட்டுவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1820 களுக்குப் பின்னர் விவசாயமும், கிராமப் பொருளாதாரமும், உற்பத்தித்துறையும் ஆங்கிலேயேர்களின் வரிச்சுமைகளாலும், தவறான கொள்கைகளாலும் சிதைக்கப்பட்டதாக தரம்பால் எடுத்தச் சொல்லியுள்ளார்.
இந்திய நாட்டின் கொள்கைள் மற்றும் திட்டங்கள் நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் ஒட்டியே அமைய வேண்டும் எனவும், மேற்கத்திய நாடுகளின் முறைகளை அப்படியே பின்பற்றுவது தவறு எனவும் தரம்பால் அறிவுறுத்துகின்றார். மாணவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதன் மூலம், ஆர்வத்தையும், நேரடி தொடர்பையும் உண்டாக்கி, அதன்மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனச் சொல்கின்றார்.
இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்து இந்தியாவுக்கு எனத் தனியான சிந்தனை முறை உண்டு என உணர்த்திய தரம்பால் சென்ற அக்டோபர் மாதம் வார்தா ஆசிரமத்தில் காலமானார்.
அன்னாரது முயற்சி நமது தேச வரலாற்றுக்கு ஒரு புத்துயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. நூறு கோடி மக்களுக்குப் பெருமை அளிக்கும் பல விசயங்களை தரம்பால் வெளிக்கொணர்ந்து உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் அவரது ஆய்வுகள் புத்தகங்களாக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இந்திய நாடு, தனது வேர்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

தினமணி 2.12.2006



No comments: