சேமிப்பு சார்ந்த இந்திய பொருளாதாரம்

பேரா. ப.கனகசபாபதி


தினமணி 14.10.2006


உலகின் முதல் நிலை பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக வங்கியின் கணக்குப்படி வாங்கும் திறனின் அடிப்படையில் 2005 ம் ஆண்டு இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருமானம் 3.7 டிரில்லியன் டாலர்களுக்கு ÷
மல் (ரூபாய் மதிப்பில் 1,74,20,200 கோடி) உள்ளது. 2007 ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெருளாதார நாடாக இந்தியா இருக்கும் என கணிக்கப்பட்டள்ளது. இந்தியவைச் சேர்ந்த பல கம்பனிகள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றில் பல வெளி நாடுகளுக்குச் சென்று, அங்கும் தொழில்களை பெருக்கி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜீன் வரையிலான ஆறு மாதங்கள் மட்டும் இந்தியக் கம்பனிகள் 6 பில்லியன்
டாலர் (ரூபாய் 27,600 கோடி) முதலீடு செய்து எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியும் அல்லது தம்முடன் இணைத்தும் உள்ளன. உலகின் மிக வேகமாக வளரக்கூடிய 12 நாடுகளில் இருந்து உள்நாட்டில் செயல்படும் நூறு கம்பெனிகளை பாஸ்டன் ஆராய்ச்சி மையம் பட்டியலிட்டுள்ளது. அதில் இருபத்தியோரு கம்பெனிகள் இந்தியாவை சேர்ந்தவை.நமது நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. இம் மையங்கள் ஒவ்வொன்றிலும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்காண தொழில் நிறுவனங்கள் செயல் படுகின்றன.உதாரணமாக சூரத், ராஜ்கோட், லூதியான,திருப்பூர்,சிவகாசி ஆகியவற்றை சொல்லலாம் இவை ஒவ்வென்றும் பல இலட்சங்களில்
இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தியை ஈட்டுபவை. இம்மாதிரி தொழில் மையங்களில் பல உலக அளவில் முக்கிய துவம்பெற்று, சர்தேச வியாபாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் பெயர் பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? நமது மக்களின் அதிகமான சேமிப்பும் அதையொட்டிய மூலதனமும். சேமிப்பு என்பது நமது நாட்டில் அத்தியாவசியக் கடமையாக தொன்றுதொட்டே போதிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி குன்றி மக்களின் தனிநபர் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1860 களில் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம் வெறும் முப்பது ரூபாயாக இருந்ததாக தாதபாய் நௌரோஜி கணக்கிட்டார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டதால் நிறைய சேமிப்பு செய்ய வாய்ப்புகள் இல்லை. சுதந்திரம் பெற்றவுடனேயே மக்கள் தனக்குக்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் உழைக்கவும் அதன் மூலம் முடிந்தவரை சேமிக்கவும் தலைப்பட்டனர். 1951 மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 9 விழுக்காடு சேமிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலையில் இது மிகவும் அதிகமான சேமிப்பாகும். ஏனெனில் அந்தச் சமயத்தில் 45 விழுக்காடு மக்கள் வருமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். படிப்பறிவு பெற்றவர்கள் 18 விழுக்காடு மட்டுமே. சராசரி ஆயுள் 32 வருடம். அந்தச் சூழ்நிலையிலும் 9 விழுக்காடு சேமிப்பு. இன்றைக்கு வசதியான நாடுகளாகப் பேசப்படுகிற பல மேற்கத்திய நாடுகளில் இந்த அளவு சேமிப்பு இல்லை. இந்தச்சேமிப்பில் சராசரியாக நான்கில் மூன்று பங்குக்கு மேல் குடும்பங்களும் குடும்பம் சார்ந்த தொழில்களும் கொடுக்கின்றன. கம்பனி மற்றும் அரசுத் துறைகள் மீதியை சேமிக்கின்றன. அதிலும் அரசத் துறையின் பங்கு மிகக் குறைவு. இவ்வகை சேமிப்பு மூலம் பல்வேறு நிலைகளில் தொழில்களை ஏற்படுத்த மூலதனம் உருவாகிறது. அதனால் நிறைய அளவில் தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. மேலும் கம்பனி மற்றும் அரசுத் துறைகளும் வங்கிகள் மூலமாக இவ்வகை சேமிப்பகளைத் தங்கள் மூலதனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. சுதந்திரம் பெற்றது முதல் சேமிப்பும் மூலதனமும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் அரசு கணக்குப்படி அதிகாரப் பூர்வ சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.1 சதவீதம் ஆகும். இந்த அதிகாரப்பூர்வ சேமிப்பு முழுமையானதல்ல. ஏனெனில் நமது மக்கள் பல்வேறு வழிகளில் சேமிப்புகளில் ஈடுபடகின்றனர். உதாரணமாக உலகில் உற்பத்தியாகும் தங்கத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு நமது மக்களால் வருடாவருடம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த முதலீடு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சேமிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இது மட்டுமின்றி சிட்பண்டுகள் போன்ற முறைகள் மூலமும், உறவுகள் அடிப்படையிலும் சேமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடியுமானால், நமது சேமிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும். அமைப்பு சாரா துறையின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் நாடு முழுவதும் உள்ளதாக மத்திய அரசின் 1998 பொருளாதாரக் கணக்கெடுப்பு கூறுகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றிலும் சொந்தப்பணத்தில் மூலதனம் போட்டு நடத்தப்படுபவை. 5 சதவீத அமைப்பகள் மட்டுமே அரசு மற்றும் நிதி நிறுவன உதவியைப் பெறுபவை. சிறு தொழில் துறையில் கீழ் 1 கோடியே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 96 சதவீதம் தனிநபர் அமைப்புகளாகவும், கிட்டத்தட்ட 2 சதவீதம் பங்குதாரர் அமைப்புகளாகவும் நடத்தப்படும் தொழில்கள். மொத்தத்தில் சுமார் 98 சதவீத எண்ணிக்கை நிறுவனங்கள் தனிநபர்களும் பங்குதாரர்களும், முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தப்படும் தொழில்கள் ஆகும். இந்த விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், இந்தியப் பொருளாதாரம் சொந்த சேமிப்பு மூலமே நடத்தப்படுகிறது என்பதாகும். சிறிய தொழில்கள் மிகப்பெரும்பாலும் சொந்த சேமிப்பிலேயே நடத்தப்படுகின்றன. அவைகளில் நிறைய தொழில்களுக்கு தாங்கள் விரும்பியபோதும் வங்கிகள் மூலம் போதிய நிதி கிடைக்க மிகுந்த சிரமங்கள் உள்ளன. பெரிய கம்பெனிகளை பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் எளிதாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியம். அதனால் தொழில் துறைக்கான கடன்களில் முக்கியப்பங்கு கம்பனிக்கே செல்கின்றன. ஆயினும் உலக நாடுகளில் தனியார் துறைக்கு கிடைக்கின்ற வங்கிக் கடன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் கிடைக்கும் கடன் விகிதம் குறைவாகும். இதன் முலமாக ஒட்டு மொத்தமாக நமது பொருளாதாரம் சுயசார்பு மிக்க பொருளாதரமாக விளங்குவது நமக்குப் புரியும். வெளிநாட்டு மூலதனம் கடந்த 1992 முதல் இந்தியாவுக்குள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வகை மூலதனம் குறித்த கட்டுப்பாடுகள் கடந்த வருடங்களில் பல நிலைகளில் தளர்த்தப்பட்டு, இன்று குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் பெரிய கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை, இந்தியாவில் பொருளாதாரம் சொந்த நிதியையே ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இன்று உலகில் சேமிப்பு அதிகமாக இருப்பதே சீனா, இந்தியா உள்ளிட்ட முன்னேறும் நாடுகளிடமும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடமும்தான். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சேமிப்பு மிகக்குறைந்தும் இல்லாமலும் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் சேமிப்பு என்பது இல்லை. அவர்கள் எதிர்காலத்தில் வர உள்ள வருமானத்தை கூட கணக்குப்போட்டு, அதை வைத்து கடன் வாங்கி, இப்போதே செலவு செய்து விடுகின்றனர். அதனால் அவர்களின் மூலதனமும் குறைந்து வருகின்றது. இந்திய மக்கள் இயற்கையாகவே சேமிப்ப குணம் உள்ளவர்களாதலால், சேமிப்பை உக்குவிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை எல்லாத் துறைகளிலும் வரவேற்கவேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு மூலதனம் இங்கு வரும்போது பெரிய அளவில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.அந்தச் சலுகைகளை உள்நாட்டுத் தொழில் முனைவேருக்கு அளித்தால், நிறைய சமயங்களில் அவர்களே போதிய நிதியை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். உள்நாட்டு மூலதனத்தால் வரக்கூடிய லாபம், மேலும் மேலும் இங்கேயே பயன்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேலும் வலுவடையும். வெளிநாட்டு மூலதனத்தை வைத்து ஒரு நாடு சீராக வளர்ந்ததாக உலகில் எந்த உதாரணமும் இல்லை.

No comments: