பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்-வாசிப்பனுபவம்:அறிவன்

இன்றைய உலகில் நாம் எந்த நாடுகளில் வாழ விரும்புகிறோம்?

பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.

மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.

என்ன காரணம்?

மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.

இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.

இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.


அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.

இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.

ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.

முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !

ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.

இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.

அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.

ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.

என்ன காரணம்?

நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?

பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.

ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?

இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.

எனக்குத் தோன்றிய சில குறைகள்:

1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.

2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!

பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125

No comments: