அமெரிக்காவில் தொடரும் அகிம்சைப் போராட்டம்



ஒரு வருடத்துக்கு முன்னர், 2011 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில்,     அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு புது விதமான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனுடைய நோக்கம் அமெரிக்காவிலுள்ள வால் சாலையை மையமாக வைத்து எதிர்ப்பைக் காட்டுவதாக அமைந்தது.   எனவே அது ‘வால் சாலை ஆக்கிரமிப்பு போராட்டம்’  என அழைக்கப்பட்டது.   
    
அந்தப் போராட்டம் மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்காவின் பிற  நகரங்களுக்கும் பரவி, பின்னர் உலகின் பல நாடுகளையும் சென்றடைந்தது.  அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 15 ஆம் தேதி ‘ வால் சந்தைப் பேராசையை எதிர்த்து உலக நடவடிக்கை நாள்’ என அறிவிக்கப்பட்டது. அன்று உலகிலுள்ள எண்பது நாடுகளை சேர்ந்த தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட  நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணிகளும் ஊர்வலங்களும்  நடந்தன.

அண்மைக் கால வரலாற்றில் அமெரிக்க நாட்டில் மட்டுமன்றி உலகின்  வேறு பகுதிகளிலும்  இவ்வளவு வேகமாக ஒரு போராட்டம் பரவியதாகத்  தெரியவில்லை. இத்தனைக்கும் அதை முன்னால் நின்று நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க தலைவர்களோ அல்லது அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளோ இல்லை.    சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் மட்டும் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

எனவே இந்தப் போராட்டங்கள் சம காலப் பொருளாதார வரலாற்றின் ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைகிறது. அதிலும் வன்முறையில்லாத முறையில் எதிர்ப்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் அமெரிக்க நாட்டு ஊடகங்கள் அந்தப் போராட்டத்தைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளவில்லை. அது தொடர்ந்து நடக்க ஆரம்பித்த பின்னரே மக்களின் கவனம் அங்கு திரும்பியது.

அந்தப் போராட்டங்களின் பின்னணி என்ன? முகம் தெரியாத மக்களால் அவை எதற்காக நடத்தப் படுகின்றன? ஒரு வருட காலமாக தொடர்ந்து அவை வெவ்வேறு விதமாக நடைபெற்று வரக் காரணம் என்ன? உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் மக்களையும் ஒன்றிணைக்கும் அவற்றின் பொதுவான  நோக்கம்தான் என்ன?

வால் சாலை என்பது நியூயார்க் நகரில் உள்ள பிரதானமான இடமாகும். அங்குதான் உலகின் பெரிய பங்குச் சந்தையாக விளங்கும் நியூயார்க் பங்குச் சந்தை உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வேறு சில பங்கு சந்தைகளும், பெரிய நிதி நிறுவனங்களும் உள்ளன. எனவே அந்த இடம் அமெரிக்க நாட்டின் நிதி மையமாக  கருதப்படுகிறது. மேலும் அதுவே உலக அளவில் நிதி சம்பந்தப்பட்ட  அமைப்புகளின் முக்கியமான அடையாளமாகவும்  எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

எனவே வால் சந்தை ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படுவது அமெரிக்க சந்தைப் பொருளாதார அமைப்பு முறை, அதன் செயல்பாடுகள், உலக அளவில் செயல் பட்டு வரும் பெரிய  நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியனவற்றை மையப்படுத்தி  நடத்தப்படும் போராட்டமேயாகும். அந்நாட்டில் நிலவும் பொருளாதார அமைப்பின் குளறுபடிகள், பெரும் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம், பன்னாட்டு கம்பெனிகளின் பேராசை பிடித்த செயல்பாடுகள், வேலை வாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வுகள், கம்பெனிகள் மற்றும் இடைத்தரகர்கள் அரசாங்கத்தின் மேல் செலுத்தும் ஆதிக்கம்,  மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காத அரசாங்கத்தின் செயல்பாடுகள் ஆகியன முக்கிய பிரச்னைகளாக வைக்கப்படுகின்றன.  
  
போராட்டங்களின் சிறப்பம்சம் அவற்றில் பல்வேறு  பின்னணிகளைக் கொண்ட மக்களும் ஈடுபட்டு வருவதாகும்.  ஆரம்பத்தில் வால் சாலைக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவிலேயே போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கி அதை நடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் எதிர்ப்புப் பேரணிகள், ஊர்வலங்கள், முற்றுகைகள் போன்ற வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் ஆரம்பித்த சமயத்தில் நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள  பெரிய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் முன்னால் எதிர்ப்புகளும்,  முக்கிய  இடங்களில் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. பின்னர் அது  விரிவடைந்த போது  வெவ்வேறு பங்குச் சந்தைகள்,  பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள் எனப் பல இடங்களையும் சென்றடைந்தது. 

தங்களின் போராட்டத்துக்கு அடிப்படையாக “நாங்கள் தான் 99 விழுக்காடு” என்கின்ற சுலோகத்தை  போராட்டக் குழுவினர் முன் வைக்கின்றனர். அதாவது, மொத்தமுள்ள அமெரிக்க மக்களில் மிகப் பெரும்பான்மையாக உள்ள 99 விழுக்காடு மக்களின் எண்ணங்களை  தாங்கள் பிரதிபலிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால், மீதமுள்ள அந்த ஒரு விழுக்காடு பேர் என யாரைச் சுட்டிக் காட்டுகின்றனர்? அவர்கள் தான் அந்த நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதி  அமைப்பு முறைகளால் பெரும் பலனை அடைந்து, அதன் மூலம் மிக அதிக அளவில் தங்களது வருமானத்தைப்  பெருக்கிக் கொண்டு வருபவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் உலக அளவில் பெரிய  நிதித் துறை சார்ந்த  அமைப்புகள், பெரும் வங்கிகள் மற்றும்  பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தியும் அவற்றின் மூலம் பயன் பெற்றும் வருபவர்கள்.

அமெரிக்கா கடைப்பிடித்து வரும் சந்தைப் பொருளாதார சித்தாந்தமும், அதற்காக அவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள பொருளாதார, நிதி மற்றும் அரசியல் வழி முறைகளும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து வருவதாக அவர்கள் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக கீழ் நிலைகளிலுள்ள மக்களுக்கு வருமானக் குறைவு, வேலை இழப்பு, மற்றும் கடன் சுமைகள் அதிகரிப்பு எனப் பல்வேறு சிரமங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். அந்நாட்டிலிருந்து வரும் புள்ளி விபரங்களும் அவர்களின் கூற்றுகளை உறுதி செய்கின்றன.

நியூயார்க்கிலுள்ள லெவி பொருளாதார நிறுவனப் பேராசிரியர் எட்வர்டு வுல்ப் அவர்களின்  ஆய்வுகள் அமெரிக்க மக்களின் சொத்துக்கள் மற்றும் வருமானம் குறிப்பிட்ட மிகச் சிலரிடத்தில் மட்டும் குவிந்து கிடப்பதைக் காட்டுகின்றன. 2007 ஆம் வருட கணக்குப்படி  மேல் நிலையிலுள்ள ஒரு விழுக்காடு மக்களிடம் மட்டுமே சுமார் 35 விழுக்காடு சொத்துக்கள் உள்ளன.  கீழே உள்ள  40 விழுக்காடு பேர் வெறும் 0.2 விழுக்காடு மதிப்புள்ள சொத்துகளை  மட்டுமே பெற்றுள்ளனர்.   அது மட்டுமின்றி குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சொத்துகள் குவிவதும் கீழே உள்ளவர்களிடம் சொத்துக்கள் குறைவதும் கடந்த முப்பது ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. உதாரணமாக 1983 ஆம் வருடம்  கீழ் மட்டத்தில் உள்ள எண்பது விழுக்காடு மக்களிடம் 19 விழுக்காடு  சொத்துக்கள் இருந்தன. அதுவே 2007 ஆம் வருடம் 15 விழுக்காடு ஆகக் குறைந்து விட்டது. 

மக்களின் வருமானத்திலும் பெருமளவு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே செல்கிறது. 2006 ஆம் வருடத்தில் மேலே உள்ள ஒரு விழுக்காடு பேர் மட்டும் மொத்த வருமானத்தில் 21 விழுக்காட்டுக்கு மேல் பெற்றுள்ளனர். மிக அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசு தரும் சலுகைகளும், பெரும்பான்மை மக்களின் மேல் ஏறும் கடன் சுமைகளும் வித்தியாசங்களை மேலும் அதிகப்படுத்துகின்றன. மக்களின் வருமானத்தோடு ஒப்பிடும்போது மக்களின் கடன் விகிதம் கடந்த இருபத்தைந்து வருடங்களில் உச்சத்தை அடைந்துள்ளது. எனவே சராசரியாக மக்களின் கடன்கள் வருமானத்தை விடவும் அதிகமாக உள்ளன.

பெரிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்புகளில் இருந்து வரக்கூடிய நிர்வாகிகள் மிக அதிக அளவில் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருவது கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. முந்தைய  வருடத்துடன் ஒப்பிடும்போது 2012ம் வருடம் அமெரிக்காவின் ஐநூறு பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் பெற்ற சன்மானம்  16 விழுக்காடு,  அதாவது ஒவ்வொருவருக்கும் சராசரியாக சுமார் 58 கோடி ரூபாய்கள், அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் தொழிலாளிகளுக்கான அதிகரிப்பு வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே. அங்குள்ள மெக்கெசான் கம்பெனியின் தலைமை நிர்வாகி 131 மில்லியன் டாலர்களை ( ரூபாய் மதிப்பில் சுமார் 720 கோடி)  பெற்று உலகிலேயே அதிக சன்மானம் வாங்குபவராக விளங்குகிறார்.

தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும்  தொழிலாளிகள்  ஆகியோருக்கிடையே உள்ள சம்பள வித்தியாசம் மிக அதிகமாக 344:1 என்ற அளவில் உள்ளதாக வுல்ப் தெரிவிக்கிறார்.  1990க்கும் 2005க்கும் இடையே தலைமை நிர்வாகிகளின் சம்பளம் கிட்டத்தட்ட 300 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது. அதே சமயம் உற்பத்தி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வெறும் 4.3 விழுக்காடு மட்டுமே. அதிலும் விலைவாசியைக் கணக்கிட்டால் அவர்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. டௌ ஜோன்ஸ் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சராசரி ஊழியர்களின் சம்பளத்தை விட 550 மடங்கு அதிகம் பெறுகின்றனர்.

கடந்த நான்கு  வருடங்களுக்கு முன் அங்கு பொருளாதார  நெருக்கடி ஏற்பட்ட  போது பல பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டன. அரசாங்கத்தின் உதவிகள் மூலமாக தேவையான பணத்தைப் பெற்ற பின்னர் தான் அவையெல்லாம் தொடர்ந்து செயல்பட முடிந்தது. அந்த சமயத்தில் வீடு மற்றும் வேலை இழப்புகள் ஏற்பட்டு போதிய நிதி வசதி இல்லாமல் மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாயினர்.   அதனுடைய தாக்கம் இன்னமும் சரியாகவில்லை. அதே சமயம் அரசாங்கத்திடம் இருந்து பெரும் தொகைகளை உதவியாகப் பெற்ற கம்பெனிகள் தலைமை அதிகாரிகளின் சம்பளங்களை அதிகப்படுத்தியுள்ளன.

அமெரிக்க பொருளாதாரத்தில் நிதித் துறை மற்றும் பங்குச் சந்தைகள் ஆகியன முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதனால் அவர்களின் பொருளாதார கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் பெருமளவு நிதித் துறை சார்ந்தாகவே உள்ளது. ஆனால் பங்குகள் மற்றும் நிதித் துறை சார்ந்த சொத்துகள் குறிப்பிட்ட சிலரிடையே மட்டும் குவிந்து கிடக்கிறது. உயர் மட்டத்தில் உள்ள ஒரு விழுக்காடு பேர் சுமார் 43 விழுக்காடு நிதி சார்ந்த சொத்துகளை வைத்துள்ளனர். ஆனால் கீழே உள்ள எண்பது விழுக்காடு பேரிடம் வெறும் ஏழு விழுக்காடு சொத்துகள் மட்டுமே உள்ளன.

எனவே பெரும்பாலான மக்கள் நிதித் துறை மற்றும் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமான அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். 2008ம் வருடம் ஏற்பட்ட நெருக்கடிக்குக் காரணமானவர்களின்  மேல் போதிய அளவு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி உள்ளிட்ட சலுகைகள்  நீடித்து வருகின்றன. பெரிய நிறுவனங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி தமக்கு வேண்டியவற்றை அரசிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.

 மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, மருத்துவ உதவி மற்றும் கல்வி ஆகியவற்றைப் பெறுவதில் மக்களுக்குப் பெருத்த சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ஆரம்பமே வீட்டுக் கடன் நிறுவனங்களிலிருந்து தான் தொடங்கியது. அதனால் இலட்சக்கணக்கான பேர் வீடுகளை இழந்தனர். மருத்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. அதனால் பெரும்பான்மை மக்களுக்கு மருத்துவ வசதிகள் எட்டாக் கனியாகி வருகின்றன.  கல்வி நிறுவனங்களில்  கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் மாணவர்களின் கல்விக் கடன்கள் 1999 ஆம் வருடத்திலிருந்து ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.  எனவே பல மாணவர்கள் பட்டம் வாங்கும் போதே கடனாளிகளாகவும் மாறி விடுகின்றனர்.   

ஆகையால் அமெரிக்கவின்  பல தரப்பட்ட மக்களும் நாட்டினை  வழி நடத்தும் அமைப்புகள் மற்றும் வழி முறைகளின் மேல்  நம்பிக்கை இழந்து வருகின்றனர். மேற்கண்ட நிலைக்குப் பெரும் நிறுவங்களின் சுய நலப் போக்கே அடிப்படையான காரணமென நம்புகின்றனர்.  எனவே தான் வால் சாலை ஆக்கிரமிப்பில் ஆரம்பித்த அவர்களின் போராட்டம் பின்னர் வீடுகள் ஆக்கிரமிப்பு, வங்கிகள் ஆக்கிரமிப்பு, பட்டமளிப்பு விழா ஆக்கிரமிப்பு என நீண்டு சென்று ஒரு பெரிய இயக்கமாகவே மாறி விட்டது. 

போராட்டங்களின் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் மக்கள்  பல விதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். உதாரணமாக அங்கு செயல்பட்டு வரும் மிகப் பெரிய பன்னாட்டு வங்கிகளில் உள்ள கணக்கை முடித்துக் கொண்டு அவற்றில் உள்ள பணத்தை எடுத்துத் தங்களின் பகுதிகளில் உள்ள சிறு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் கணக்கைத் தொடங்க வேண்டும் என மக்களிடத்தில் கேட்டுக் கொண்டனர். அதன் விளைவாக  சிறு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் கணக்குகள் 50 விழுக்காடு  அதிகரித்தன. சுமார் 25000 கோடி தொகை பெரிய வங்கிகளிடமிருந்து மாற்றப்பட்டது. தற்போது அமெரிக்காவின் பிரபலமான வங்கியான அமெரிக்க வங்கியைச் சிறியவைகளாகப் பிரிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

  2008 ஆம் வருடத்திய உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக உலகின் பல நாடுகளும் பாதிப்புக்கு ஆளாயின. சில ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதன் விளைவாக அந்த அரசுகள் அவர்களின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் காப்பாற்றப் பெரும் தொகைகளை செலவிட்டன. அதனால் அந்த அரசுகளின் சிரமங்கள் மேலும் அதிகரித்தன.  எனவே கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையான சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. ஆகையால் அந்த நாடுகளில் உள்ள மக்கள் பலவிதமான சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் நவீன பொருளாதார அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல நாட்டு மக்களும் அவற்றை எதிர்த்துக் குரல் எழுப்புகின்றனர்.

எனவே வால் சாலைப் போராட்டம் நவீன பொருளாதார சிந்தனைகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே தொடங்கி சந்தைப் பொருளாதாரம், நிதித் துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஆகியவை குறித்தும், அதனால் ஏற்பட்டு வரும் சிரமங்கள் குறித்தும் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான் பொருளாதார செயல்பாடுகளை மட்டுமே மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்தப் போராட்டம் ஒரு இயக்கமாகவே மாறி தொடர்ந்து ஒரு வருட காலமாக அங்குள்ள மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே அதன் தாக்கம் உலகின் பிற பகுதிகளிலும் அலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் கண்ணை மூடிக் கொண்டு சந்தைப் பொருளாதார வழிமுறைகளை ஆதரித்தும் செயல்படுத்தியும் வரும் நமது நாட்டு நிபுணர்களும் ஆட்சியாளர்களும் இப்போதாவது விழித்துக் கொள்வார்களா என்பதே நம் மனதில் எழும் கேள்வியாகும்.

( ஓம் சக்தி மாத இதழ், அக்டோபர் 2012)
  

No comments: