இந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலக அளவில் பல வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதிக அளவிலான சேமிப்புகள், கடுமையான உழைப்பினை மேற்கொள்ளத் தயங்காத  மக்கள், உறவுகளுடன் நெருங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள், பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எதிர் நீச்சல் போட்டு தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோர் என வெவ்வேறு அம்சங்கள் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளன.

எனவே உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான விசயங்களே நமது நாட்டுக்கு அதிகமாக உள்ளன. பெரிய பணக்கார நாடுகளை விடவும்  நமக்கு  வலிமைகள் நிறைந்துள்ளன. வரவுக்கு அதிகமான செலவுகள், கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம், நுகர்வுக் கலாசாரம், குறைவான சேமிப்புகள், தனி நபர் வாழ்க்கை முறை எனப் பலவும் அவர்களை சீரழித்து வருகின்றன. 

மேலும் கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அணுகு முறைகள் பெருமளவு தோல்வியைத் தழுவிக் கொண்டு வருகின்றன.  அவர்களின் சந்தைப் பொருளாதார தத்துவங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தி விட்டன. நிதிச் சந்தையை மையப்படுத்தி  அமைந்துள்ள அவர்களின் செயல்பாடுகள் மக்களை மேலும் சிரமத்தில் தள்ளி விட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, அதிக கடன் சுமைகள், பெருகி வரும் வருமான வித்தியாசங்கள் என்பனவெல்லாம் நடைமுறை ஆகி விட்டன. எனவே அங்கு பல நாடுகளில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதிக்கு வந்து போராடுவது அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்துக்கு அப்புறம் துரதிர்ஷ்ட வசமாக மேற்கத்திய சித்தாந்தங்களை மையமாக வைத்தே கொள்கைகள் தீட்டப்பட்டு வருகின்றன. 1980கள் வரை சோசலிச சித்தாந்தமே நமது ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது. பின்னர் அது அப்போதைய சோவியத் ரஷ்யாவிலேயே தோல்வியைத் தழுவிய போது இங்கும் கை விடப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உலக மயமாக்கல் சித்தாந்தம்  மைய இடத்தில் உட்கார வைக்கப்பட்டது. எனவே தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய அணுகுமுறைகளை ஒட்டியே நமது நாட்டின்   கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால்  நமது வலிமைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி தேச நோக்கில் கொள்கைகளைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பல இடங்களில் வாழ்வாதரங்களைத் தேடி கிராமங்களை விட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். கைத்தொழில்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளன. அதே சமயம் இன்னொரு பக்கம்  குறிப்பிட்ட சில பிரிவினர்களின் கைகளில் சுலபமாகப்  பணம் பெருகுவதும், நுகர்வுக் கலாசாரம் உள்ளிட்ட மேற்கத்திய தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தைக் கவனமாகப் பார்க்கும் போது கடந்த அறுபதாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒரு விசயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அது என்னவெனில், இங்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அனைத்துமே கொள்கை வகுப்பவர்களின் குழப்பங்களை எல்லாம் மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு அடிப்படையாக நமது வாழ்க்கை முறையும் இந்த தேசத்தின் கலாசாரமும் ஆதார சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசுகளின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பொருத்தமாக இல்லாததால், நாட்டுக்குப் போதுமான பலன்கள் இல்லாதது மட்டுமின்றி வளர்ச்சியின் போக்கும் சரியானதாக இல்லை.

எனவே கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து வந்த போதும், வளர்ச்சி என்பது பரவலாக இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாகவுமே அமைந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு 2009 ஆம் வருடத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்  எனக் கணக்கிட்டு சொல்லியுள்ளது. 2009-10ஆம் வருடத்தில் நாட்டில் நிலவிய வேலை வாய்ப்பு நிலைமை சம்பந்தமான தேசிய உத்தேச மாதிரி கணக்கெடுப்பின் 66ஆவது சுற்று  மொத்த வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் 2009-10ல் முடிவுற்ற  ஐந்து வருட காலத்தில் அதற்கு முந்தைய ஐந்து வருடத்தை விட வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத்  தெரிவிக்கிறது.

வேலை உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அதுவும் நம்மைப் போன்ற மக்கள் தொகையை அதிகமாகப் பெற்றுள்ள நாட்டுக்கு அது மிகவும் அவசியம். அதிக மக்கள் தொகை என்பது நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல மூலதனமாகத் தற்போது கருதப்படுகிறது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் குடும்ப கலாசாரத்தைத் தொலைத்து விட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனால் அங்கெல்லாம் வேலை செய்வதற்குத் தேவையானவர்களை விட இள வயதினர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். எனவே அந்த நாடுகளில் பலவிதமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் நமது நாடு உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை  பெற்றுள்ளது. எனவே அவர்களின் திறமைகளை முழுமையாகப்  பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவது கொள்கை  வகுப்பவர்களின் தலையாய கடமையாகும். ஆனால் அண்மைக் காலமாக வேலைகளை உருவாக்குவதற்கான  செயல் திட்டங்கள் குறைந்து வருகின்றன. வேலைகளை அதிக அளவில் உருவாக்கும் தன்மையுள்ள விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு மற்றும் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. அதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவது இல்லை.

மேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 1990 களிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. 1991 முதல் 2008 வரையிலுமான  இடைப்பட்ட பதினேழு வருடங்களில்  அமைப்பு சார்ந்த துறைகள் மொத்தமாக எட்டு இலட்சம் புதிய வேலைகளையே உருவாக்கியுள்ளன என்னும் புள்ளி விபரத்தை மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  எனவே கடந்த இருபது வருட கால நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வேலை வாய்ப்பைக் குறைத்து ஏற்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.

ஆகையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பொருத்தமான வேலைகள் இல்லாமல் தவிக்கின்றன. நிரந்த வேலைகளை இழந்த பல பேர் தினக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.  அதே சமயம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கை நடத்தி வந்த சிறு விவசாயிகள் மற்றும் சிறிய தொழில்களை நடத்தி வந்தவர்கள் பலர் வேலை தேடிச் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே மக்கள் செய்வதறியாது தவிக்கின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.

ஆகையால் நமது நாட்டைப் பொறுத்த வரையில் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி அனைவருக்கும் ஏற்படாத வகையிலும் வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலும் உள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் அரசுகளின் தவறான அணுகு முறைகளும் திட்டங்களும் ஆகும். எனவே அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் காக்க முடியாத கொள்கைகள் தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான திசையில் அரசுகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போது தான் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குமான முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சி முழுமையானதாக அமையும்.

(பி.எம்.எஸ்.செய்தி, சென்னை, மார்ச் 2013)


No comments: