புளியன்குடி: தமிழகத்தின் எலுமிச்சை நகரம்


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டத்தைச் சேர்ந்தது புளியன்குடி நகரம். பிரசித்தி பெற்ற சிவன், சங்கர நாராயணன் மற்றும் கோமதி தேவியார் கோவில்களைக் கொண்ட சங்கரன் கோவில் நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்னொரு விதமாகச் சொல்வதானால் இராஜபாளையம் நகரிலிருந்து வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவு.  

2001 ஆம் வருட கணக்குப்படி புளியன் குடி நகராட்சியில் வசிக்கும் மக்களின் அதிகார பூர்வ எண்ணிக்கை 60,124 பேர். தற்போது சுமார் 70,000 அளவு இருக்கும் எனச் சொல்கிறார்கள். நகராட்சி பகுதிக்குள் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி. பருவ மழைக் காலங்களைத் தவிர பொதுவாக வறட்சியான கால நிலையைக் கொண்டது. எலுமிச்சைச் செடி வளர ஏற்ற மண் மற்றும் சூழ்நிலையை உடைய பகுதி. 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இடம். அதையொட்டி வியாபாரம், இதர தொழில்கள் மற்றும் கல்வி  ஆகியன பெருகியுள்ளன. விவசாயத்தை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் கருதி 1970 களிலேயே சில உள்ளூர் முன்னோடிகள் சேர்ந்து சிறு விவசாயிகள் சேவா சங்கம், புளியன் குடி  என்கின்ற அமைப்பை ஆரம்பித்ததாக அதன் செயலாளர் திரு. கோமதி நாயகம் ஐயா அவர்கள் பெருமையுடன் கூறுகிறார்.

எழுபத்தி ஒன்பது வயதாகும் ஐயா அவர்கள் அக்காலத்திய காந்திய நடைமுறைக் கல்வியைக் கற்று பின்னர் புளியன்குடி அரசுப் பள்ளியிலேயே சுமார் முப்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரும் ஒரு விவசாயி. மேலும் அந்தப் பகுதியின் கல்வி மற்றும் விவசாயத்துறைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுபவர்.

புளியன்குடி விவசாயிகள் சேவா சங்கம் ஆரம்பம் முதலே மாவட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அரசின்  திட்டங்கள் மூலம் அந்தப் பகுதிக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும். மேலும் சேவா சங்கத்தின் உறுப்பினர்களான  திரு. அந்தோணிசாமி மற்றும் அமரர் திரு. வேலு முதலியார் ஆகிய இருவர் விவசாயத் துறையில் தங்களின் முன்னோடியான முயற்சிகளுக்குத் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று விருது பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தியாகும்.

திரு.அந்தோணிசாமி அவர்கள் அந்தப் பகுதியின் முன்னோடியான விவசாயி. இயற்கை விவசாயத்தில் உள்ளார்ந்த நாட்டமும் அனுபவமும் உடையவர். எலுமிச்சை, கரும்பு, காய்கறிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். வறட்சிக்கும் நோய்களுக்கும் எலுமிச்சை விவசாயம் ஆட்பட்டு வருவது கண்டு அதற்கு முடிவு காண ஒரு புதிய ரகத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்.




படம்: நடுவில் உள்ள திரு.அந்தோணிசாமி அவர்களின் புதிய ரக எலுமிச்சை தோட்டத்தில் திரு. கோமதி நாயகம் மற்றும் கனகசபாபதி.

தண்ணீர்ப் பாசனமும் பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு, அதனுடன் நாட்டு எலுமிச்சையை ஒட்டுக் கட்டி, பின்னர் நாட்டுச் செடியை முறையாக வளர வைத்து தனது புதிய ரகத்தை உருவாக்கியுள்ளார்.  மேலும் நாற்று நடுவதற்கு ஆறு மாதத்துக்கு முன் தொடங்கி நிலத்தை முறையாகத் தயார் படுத்தி, சரியான நாற்றுகளை நட்டு வளர்க்கும் போது தொடர்ந்து அதிகமான விளைச்சல் எடுக்க முடியும் எனக் காட்டி வருகிறார்.  

அதற்காக 2005 ஆம் வருடத்தில் குடியரசுத் தலைவரின் கண்டுபிடிப்புக்கான விருதினைப் பெற்றுள்ளார். சொட்டு நீர்ப் பாசனம் மூலமே விவசாயம் செய்கிறார். அவரது விவசாயம் பத்து மாதத்துக்குப் பலன் கொடுப்பதாகச் சொல்கிறார்.  மற்ற முறைகளில் எட்டு மாத விளைச்சலே சாத்தியம் என்கிறார். கொத்துக் கொத்தான காய்கள், தொடர்ச்சியான காய்ப்பு ஆகியனவற்றை இயற்கை முறைகள் மூலம் பெற முடியும் எனக் காட்டி வருகிறார்.

புளியன்குடி மட்டுமின்றி சிவகிரி வட்டம், சங்கரன் கோவில் வட்டம் மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் எலுமிச்சை உற்பத்தி அனைத்தும் சேர்ந்துதான் புளியன்குடியை எலுமிச்சை நகரமாக உருவாக்கி உள்ளன. ஏனெனில் எலுமிச்சைக்கான முதன்மையான சந்தை அங்குதான் உள்ளது.



1981 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட அந்த சந்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமன்றி கேரள மாநிலம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் செல்கிறது. கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தங்களது சந்தை மூலம் 15000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகிறார்கள் என புளியன்குடி எலுமிச்சை கமிசன் மண்டி தலைவர் திரு.செ.குழந்தைவேலு தெரிவிக்கிறார்.



படம்: கமிசன் மண்டி தலைவர் திரு.குழந்தைவேலு அவர்களுடன்

கமிசன் மண்டி மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 50000 ஆயிரம் பேருக்கு மேலாகவும் வேலை கிடைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மண்டியை ஒட்டி லாரித் தொழில்   மற்றும் சாக்கு வியாபாரம்,  பனை ஓலை பின்னுதல் ஆகிய தொழில்கள் நடைபெறுகின்றன. அதனால் பத்து சாக்குக் கடைகளும், பட்டமடை சமூகத்தினரின் பனை ஓலை பின்னும் வேலைகளும் சுறுசுறுப்பாக நடை பெற்று வருகின்றன.

நாட்டின் பிற தொழில் மையங்களைப் போலவே இங்கும் வியாபாரம்  நம்பிக்கை அடிப்படையிலேயே நடைபெறுகிறது. வாரம் ஒருமுறை கணக்குகள் முடித்துக் கொள்ளப்படுகின்றன. எலுமிச்சை விவசாயம் மேலும் வளருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். அதனால் விவசாயிகள் தென்னையிலிருந்து எலுமிச்சைக்கு மாறி வருகின்றனர்.

எலுமிச்சை விவசாயம் மேலும் வளர அரசு முழு மானியம் கொடுக்க வேண்டுமென அவர்கள் வேண்டுகின்றனர். தற்போது அது குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் இல்லை. மேலும் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்குகளை அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும். அதன் மூலம் இயற்கை விவசாயாத்தின் பலன்கள் அனைவருக்கும் சென்றடைய முடியும் என கோமதி நாயகம் தெரிவிக்கிறார்.

நாட்டின் பல பகுதிகளில்  விவசாயிகள் நம்பிக்கை இழந்து காணப்படும் போது, விவசாயத்தை ஆர்வத்துடன் செய்பவர்களை புளியன்குடியில் பார்க்க முடிந்தது. மேலும் இயற்கை விவசாயம் மூலம் நன்கு விவசாயம் செய்ய முடியும் என்பதையும் அவர்களில் சிலர் எடுத்துக் காட்டி வருகின்றனர். அதற்காக சேவா சங்கமும் சில முன்னோடி விவசாயிகளும் எடுத்து வந்துள்ள முயற்சி பாராட்டத் தக்கது.


நாடு முழுவதும் பெரும்பாலும் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த மையங்களே பெரிய அளவில் செயல் பட்டு வருகின்றன. அந்த வகையில் முழுவதும் விவசாயம் சார்ந்த ஒரு வியாபார மையம் நல்ல முறையில் இயங்கி வருவது நமது சாதாரண மக்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. இந்த பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்து எனக்கு உதவி புரிந்த சென்னையைச் சேர்ந்த எனது  நண்பரும் இயற்கை வேளாண்மை ஆர்வலுருமான கம்பெனி ஆலோசகர் திரு.நந்தகுமார்  அவர்களுக்கும் எனக்கும் இந்த அனுபவம் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. 

No comments: