இந்தியக் கலாசாரமே பொருளாதாரத்தின் அடிப்படை


”பாரத நாடு பழம் பெரும் நாடு” என்று மார் தட்டினான் மகாகவி பாரதி. இந்தியா உலகின் தொன்மையான நாடுகளில் மிகவும் முக்கியமானது; அதிக சிறப்புகளைப் பெற்றதும் கூட. ஒரு நாடு தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாக நடை போட்டு வர வேண்டுமெனில், அதற்குப் பொருளாதார சக்தியும் சரியான அடித்தளங்களும் அவசியமாகும். அவை இல்லையெனில் பெரிய நாகரிகங்களும்  கூட சீக்கிரமே அழிந்து போகும் என வரலாறு சொல்கிறது.

மகாத்மா காந்தியின் பிரதான சீடராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜே.சி.குமரப்பா. காந்தியின் பொருளாதார சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த பெரிய நிபுணர். அவர் தனது ‘நிரந்தரப் பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில், முந்தைய காலங்களில் செல்வாக்கோடு விளங்கிய எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, ரோமன் நாகரிகங்கள் எல்லாம் ஏன் தற்போது அவற்றின் கதைகளைச் சொல்வதற்கு இல்லை?;  அவை ஏன் சில நூற்றாண்டுகள் மட்டுமே கவர்ச்சிகரமான ஒளியோடு விளங்கி விட்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டன? என்ற கேள்வியை  எழுப்புகிறார்.

அதற்குக் காரணம் அந்த நாகரிகங்களின் அடிப்படைகள் சுய நலம் மட்டுமே சார்ந்து நிலையற்ற தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருந்தன என அவரே பதிலும் சொல்லுகிறார். அவற்றுக்கு மாற்றாக இந்திய மற்றும் சீன நாகரிகங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அவை மட்டும் உயிர்ப்போடு எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பதற்கு அவை உயர்ந்த மதிப்பீடுகளின் மேல் சமைக்கப்பட்டு, நீடித்த தன்மைக்கான பண்புகளை இன்னமும் தம்மகத்தே கொண்டு விளங்கி வருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்.  

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு சிந்து- சரஸ்வதி நாகரிக காலத்திலேயே நமது நாடு பொருளாதார மற்றும் வணிக தளங்களில் மிகவும் முன்னணியில் இருந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முதல் அரசியல் பொருளாதார புத்தகமே இங்குதான் எழுதப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால் அதை எழுதிய கௌடில்யர் தனக்கு முன்பு இருந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தனது அர்த்த சாஸ்திரத்தில் மேற்கோள் காட்டுகிறார். எனவே பொருளாதாரம் என்பது ஒரு பாடமாக ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னமே இங்கு தொடங்கியிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

தமிழில் திருவள்ளுவர் காலம் கடந்து நிற்கும் பொருளாதாரக் கருத்துகளை இரண்டாயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னரே அற்புதமாகச் சொல்லியுள்ளார். பொருளை ஈட்டுவதில்  நேர்மையும் நாணயமும் இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தும் வகையில் ‘பொருள் செயல் வகை’ என ஒரு தனி அதிகாரமே படைத்துள்ளார்.

பொருளாதாரம் என்றாலே அது மேற்கு நாடுகளுடன் அதிகம் சம்பந்தப்பட்டது என்பது போலவும் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்பதெல்லாம் அவர்களுக்கே உரித்தானது எனவும் ஒரு எண்ணம் பரவலாகப் பலரது மனங்களிலும் நிலவி வருகிறது. அதற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளைக் காலனிகளாக்கி உலக அரங்கில் தலையெடுக்க ஆரம்பித்த பின்னர், உலகப் பொருளாதார வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு எழுதின. பிற நாடுகளின் உண்மையான வரலாறுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளின. தொடர்ந்து வந்த காலங்களில் அவர்களின் கருத்துகளே பிற நாடுகளிலும் திணிக்கப்பட்டன.

பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உலக அரங்கில் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்தது. அதன் விளைவாக பல்கலைக் கழகங்களிலும் கல்விக் கூடங்களிலும் அவர்களின் கருத்துகளும் வழிமுறைகளும் முன்னிலைப் படுத்தப்பட்டன.  எனவே பொருளாதாரம் குறித்த இந்திய சிந்தனைகள் மேற்கத்திய கருத்துருவாக்கங்களை ஒட்டியே சுதந்திரக்குப் பின்னரும் அமைந்தன. 

ஆனால் கடந்த முப்பது வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் சில நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதார வரலாறு குறித்த சிந்தனைகளை முற்றிலும் மாற்றியுள்ளன. அவை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலக அளவில் முதல் இடங்களில் இருந்து வந்ததையும், மேற்கத்திய நாடுகள் பொருளாதார அளவில் முன்னணியில் வருவதற்கு காலனி ஆதிக்கம் மூலம் கிடைத்த செல்வங்களும் வாய்ப்புகளுமே காரணம் என்பதையும் எடுத்து வைத்தன. அவற்றின் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு என சிறப்பான ஒரு பெரிய வரலாறு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பணக்கார நாடுகளின் அமைப்பாக ’பொருளாதார முன்னேற்றம் மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பு’ பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து இயங்கி வருகிறது. அதன் மூலம் வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் தலைமையில் நடத்திய ஆய்வுகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பெரும்பான்மையான காலம் இந்தியா உலக அளவில் மிகவும் செல்வந்த நாடாக இருந்து வந்ததை எடுத்து வைக்கிறது. மேலும் 2013 ஆண்டுகளுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கும் காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் வசம் வைத்திருந்த நாடாக இந்தியா இருந்துள்ளது. இந்தியப்  பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஆங்கிலேயர்களின் ஆளுமையால் ஏற்பட்ட சிதைவுகளின் காரணமாகவே நடந்துள்ளது.

எனவே உலக வரலாற்றில் அதிக பட்சமாக தொடர்ந்து பல நூறாண்டுகளாக பொருளாதாரச் செழிப்புடன் விளங்கி வந்த தேசமாக இந்தியா இருந்துள்ளது. மேலும் உயர் தரமான கண்டுபிடிப்புகள், அதிகபட்ச சாதனைகள், பல்வேறு துறைகளில் வளர்ச்சி, நெறி முறைகள் சார்ந்த வாழ்க்கை முறை என தனித்தன்மைகளுடன் உலகமே போற்றக் கூடிய வகையிலும் விளங்கி வந்துள்ளது.  

ஆனால் ஐரோப்பியர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியா சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆட்பட்டது. இந்தியாவின் வளங்கள் சூறையாடப்பட்டன; தொழில்கள் நசுக்கப்பட்டன; பாரம்பரியமான கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக சுதந்திரம் பெற்ற போது இந்தியா மிகவும் ஏழை நாடாக, தொழில் வளம் இல்லாத நாடாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் அதிகம் பேரைக் கொண்ட நாடாக இருந்தது.  அதனால் உலக அரங்கில் நமது நாட்டுக்கு எந்த வித மரியாதையும் இல்லை.

சுதந்திர இந்தியாவுக்கான பொருளாதாரக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விசயத்தில் மகாத்மா காந்தி தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். எனவே ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போதே நாடு சுதந்திரம் பெற்ற பின்னால் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டுமென  மகாத்மா காந்தி முயற்சி எடுத்தார். அது குறித்து நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதற்கு மறுத்து விட்டார். எனவே அந்த முயற்சி தோல்வியுற்றது.

எனவே நாடு சுதந்திரம் பெற்ற போது நம்முடைய தலைமையிடம் பொருளாதாரம் குறித்த சரியான சிந்தனைகள் எதுவுமில்லை. ஆகையால் 1950 களில் நாட்டுக்குக் கொள்கை வகுக்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது மேற்கத்திய சோசலிச சித்தாந்தம் சார்ந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் விளைவாக முதல் முப்பது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி ஏற்படவில்லை. அதனால் 1990களின் ஆரம்பத்தில் பொருளாதாரம் நாட்டின் தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அப்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் முந்தைய காலத்திய பொருளாதாரக் கொள்கைகளே எனவும், அதற்கு மாற்றாக உலக மயமாக்கல் சார்ந்த கொள்கைகளை  நடைமுறைக்குக் கொண்டு  வருவதாகவும் ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதன் விளைவாக தொடர்ந்து வந்த காலங்களில் அமெரிக்க சிந்தனைகள் சார்ந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சுதந்திரம் பெற்ற பின்னர் தொடர்ந்து மேற்கத்திய சித்தாந்தங்களே நமது பொருளாதரக் கொள்கைகளை வழி நடத்தி வருகின்றன.

முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும் சமயங்களில் மக்களிடையே கொள்கைகள் குறித்து ஆட்சியாளர்கள் பரவலான விவாதங்களை மேற்கொள்வதில்லை. மேல் நாட்டுக் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் மையமாக வைத்தே கொள்கை வகுப்பவர்கள் செயலாற்றி வருகின்றனர். அதனால் நாட்டின் வளங்களும் திறமைகளும் இன்று வரைக்கும் முழுமையான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. மேலும் நாட்டுக்குப் பொருந்தாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தியதன் காரணமாகப்  பல துறைகளில் சீரழிவுகளும் அதனால் மக்களுக்கு சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அறுபத்தி ஏழு ஆண்டுகள் கழித்து இன்னமும் வறுமை, வேலையின்மை, விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நசிவு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

அதே சமயம் மேல் மட்டத்தில் நிலவும் பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் தவறுகள் ஆகியவற்றுக்கிடையிலும், நாடு வெகுவாக முன்னேறி வருகிறது. அதனால் இந்தியாவின் பொருளாதார பலம் உயர்ந்து வருகிறது. அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகி விட்டதாகப் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்து பத்து வருடங்களுக்கு மேலாகவே உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் சீனாவுக்கு அப்புறம்  இந்தியா  இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் மேலாண்மை நிறுவனம் இந்தியாவில் எட்டரை கோடி தொழில் முனைவோர்கள் வெவ்வேறு நிலைகளில் தொழில்களை செய்து வருவதாக தெரிவித்தது. உலக அளவில் இது மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்தியத் தொழில்கள் இன்று உலக முழுவதும் விரிவடைந்துள்ளன. பெரிய கம்பெனிகள் மட்டுமன்றி உள்ளூர் நிறுவனங்களும் கூட இன்று பல நாடுகளில் கால் பதித்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 2500 தொழில் மையங்கள் இருப்பதாக அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அவையெல்லாம பெரும்பாலும் அதிகம் படிக்காத சாதாரண மக்களால் நடத்தப்படும் தொழில்களைக் கொண்டவை.

இன்று நாட்டின் பொருளாதரத்துக்கு அவை ஆற்றும் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. சூரத், ஆக்ரா, திருப்பூர், கரூர் என அவற்றில் பல உலக அளவில் வியாபாரம் செய்து நாட்டுக்குப் பெயர் கொடுத்து வருகின்றன. வைர வியாபாரம் போன்ற தொழில்களில் இன்று சர்வதேச சந்தையில் இந்தியர்கள் தான் முக்கியமாக உள்ளனர். மேலும் கல்வி, மருத்துவம், பொறியியல், கணினி, நிர்வாகம் எனப் பல துறைகளிலும் இந்தியர்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட உலகின் பல பகுதிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அதனால் பணக்கார மேற்கத்திய நாடுகளில்  இந்தியர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது.

மனிதனின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் அவசியமானது நிதியாகும். தனி மனித, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதியே ஆதாரம். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய நாடு ஒரு குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியக் காரணம் மக்களின் அதிகப் படியான சேமிப்புகளும், அவர்களின் அபரிமிதமான தொழில் முனையும் தன்மைகளுமாகும். சுதந்திரம் பெற்ற பின்னர் மத்திய அரசு முதன் முறையாக 1950-51 ஆவது வருடம் தொடங்கி புள்ளி விபரங்களை வெளியிடத் தொடங்கியது. அப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏறத்தாழ 45 விழுக்காடு பேர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அந்த சமயத்திலேயே சேமிப்பு 8.6 விழுக்காடு இருந்தது. இன்றைக்கு உலகின் பல பணக்கார நாடுகள் கூட அந்த அளவு சேமிப்பை எட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் சாதாரண மக்களில் தொடங்கி எல்லா நிலைகளிலும் சேமிப்புகள் உள்ளதைத் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்துள்ளன. சென்ற வருடம் அதிகார பூர்வ சேமிப்பு மொத்த பொருளாதார உற்பத்தியில் 31 விழுக்காடு அளவாக இருந்தது. அதைத் தவிர மக்கள் தங்களுக்குள்ளேயும் உள்ளூர் முறைகளின் படியும் தங்கம் உள்ளிட்ட முதலீடுகளில் சேமிப்பதும் அதிகமாக உள்ளது. உலக அளவில் தங்க உற்பத்தியில் சுமார் இருபத்தி ஐந்து முதல் முப்பத்தி மூன்று விழுக்காடு வரையிலும் இந்தியர்களே வாங்குகின்றனர். எனவே அவற்றையெல்லாம் கூட்டிப்பார்த்தால் மொத்த சேமிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

நாட்டின் மொத்த சேமிப்புகளில் சராசரியாக மூன்றில் இரண்டு பாகத்துக்கு மேல் குடும்பம் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் மூலமே ஏற்படுகின்றன. நம் மக்களின் சேமிக்கும் பழக்கம் வெளி நாடு சென்றாலும் அவர்கள் கூடவே செல்கிறது. எனவே தம்மைச் சுற்றியுள்ளவர்கள் அதிகமாகச் செலவு செய்யும் போதும் அவர்கள் தங்களின் குடும்பங்களுக்காகச் சேமிக்கிறார்கள். அதனால் அங்கு முதலீடுகளை மேற்கொள்கின்றனர். தாய் நாட்டில் உள்ள தங்களின் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் வெளி நாடு வாழ் இந்தியர்களே தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர். சென்ற வருடம் மட்டும் அவ்வாறு நமது நாட்டுக்கு வந்துள்ள பணம் 71 பில்லியன் டாலர்கள்.

மக்களின் அதிகப்படியான சேமிப்புகள் மூலமே வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் தொகைகள் பெருகுகின்றன. அதன் மூலமே தனியார் துறை சார்ந்த தொழில்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மூலதனம் ஏற்படுகிறது. மேலும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஆரம்பித்து நடத்துபவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தில் பெரும்பகுதி நிதியை தாங்களே திரட்டிக் கொள்கின்றனர். மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு 2005 அமைப்பு சாராத துறையில் நாட்டில் சுமார் 4.2 கோடி தொழில்கள் உள்ளதாகக் கூறுகிறது. அவற்றுக்குத் தேவையான முதலீடுகளில் 95 விழுக்காட்டுக்கு மேல் அதை நடத்துபவர்கள் தங்களின் சொந்த முயற்சிகளாலும், தொடர்புகளாலுமே திரட்டிக் கொள்கின்றனர். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றுக்குக் கொடுக்கும் உதவிகள் நான்கு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது.

எனவே நமது மக்களின் மூலதனம் திரட்டும் தன்மை அசாத்தியமானதாக உள்ளது. சொந்த சேமிப்புகள், உறவுகள் மற்றும் நட்புகளின் உதவி எனத் தொடர்பு வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான மூலதனங்கள்  திரட்டப் படுகின்றன. அதற்குக் காரணம் இந்திய மக்களிடையே உள்ள வலுவான சமூக உறவுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அளவில் தொழிலில் வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் அங்கு நிலவும் சமூக முறைகளே என உலக வங்கியின் 2001 ஆம் வருடத்துக்கான வளர்ச்சி அறிக்கை கூறுகிறது. தென் தமிழகத்தில் அதிகமாக வாழும் நாடார் சமூகம் தங்களின்  தொழில்களுக்குத் தேவைப்படும் மூலதனங்களைத் தங்கள் மக்களின் மூலமே திரட்டிக் கொள்ள தாங்களே உருவாக்கிய முறைதான் மகமை என்பதாகும். அதனால் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியால் இன்று சில்லறை வணிகம், தீப்பெட்டி, பட்டாசு, வங்கி எனப் பல துறைகளில் அவர்கள் தேசிய அளவில் முன்னோடியாக உள்ளனர்.

தன்னை விடத் தனது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என ஒவ்வோரு இந்தியத் தாயும் தந்தையும் கனவு காண்கின்றனர். அதற்காக அவர்களை நல்ல கல்விக் கூடங்களில் சேர்க்கின்றனர். மிகச் சிறிய அளவிலாவது தொழில்களை ஆரம்பிக்கின்றனர். அப்படி சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட தொழில்கள் தான் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன. நமது நாட்டில் இன்னமும் ஏறத்தாழ  பாதியளவு மக்கள் சுய தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். அதுவே அமெரிக்காவில் வெறும் 7.5 விழுக்காடு தான். அங்கெல்லாம் சம்பளத்துக்கு செல்பவர்களே மிகவும் அதிகம்.

எனவே கடந்த அறுபத்தைந்து ஆண்டு கால வளர்ச்சி நமது மக்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்டு வந்துள்ளது. அவர்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்னும் எண்ணம் தான் நமது நாட்டை சுய சார்புத் தன்மை கொண்டதாக வைத்துள்ளது. அதனால் வெளி நாட்டினைச் சாராமல் சுயமாக செயல்படக் கூடிய தன்மை கொண்ட பொருளாதாரமாக இருப்பதாக நம்மைப் பலரும் பாராட்டுகின்றனர்.  அரசுகள் தொடர்ந்து தவறான கொள்கைகளை வகுத்துக் கொண்டு வந்த போதும், நாடு முன்னேறி வருவதற்குக்.காரணம் நமது மக்களின் அடிப்படையான குணங்களாகும்.

குடும்பங்களே நமது மக்களின் ஆதாரம். அவை வெறும் சமூக, கலாசார மையங்கள் மட்டுமல்ல. பொருளாதாரத்துக்கும் அவையேதான் அடிப்படையாக உள்ளன. சமூகங்கள் குடும்பங்களின் நீட்சியே ஆகும். குடும்ப மற்றும் சமூக உறவுகள் ஒரு நாட்டின் அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும் நமது நாடு பெருமளவு பொது அமைதியினைக் காத்து வருவதற்கும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருவதற்கும் நமது குடும்பங்களும் சமூகங்களுமே காரணம்.

நமது குடும்பங்களும் சமூகங்களும் தனித் தன்மையுடன் விளங்கி உலகிலேயே ஒரு முன் மாதிரியாக இன்னமும் விளங்கி வருவதற்குக் காரணம், நமது தேசத்தின் உயர்ந்த கலாசார பண்பாட்டு நெறிகளாகும். அந்த நெறிகள் தான் ஐரோப்பியர்கள் இங்கு வரும் வரை நமது நாட்டை ஒரு பொருளாதார வல்லரசாகவும், பல துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு உயர்ந்த நாடாகவும்  வைத்திருந்தன. அதே மதிப்பீடுகள் தான் பல நூறாண்டுகள் அடிமைப்பட்டு இன்று சுதந்திரக்குப் பின்னர் தடுமாறும் கொள்கைகளை அரசுகள் கடைப்பிடிக்கும் போதும், தேசத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய கோட்பாடுகள் தோற்றுப் போய் அந்த நாடுகள் பொருளாதாரச் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கும் போது, இன்றைக்கு உலக முழுமைக்கும் ஒரு மாற்றாக இந்திய வழிமுறைகள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ சிரமங்களையும் தாண்டி, உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்குச் சிக்காமல் எப்படி இந்த தேசம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று பலரும் வியக்கின்றனர். அதனால் அண்மைக் காலமாக மேற்கத்திய பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டுள்ளன. அவை அனைத்துமே இந்தியப் பொருளாதார மற்றும் வியாபார முறைகளில் தனித்தன்மைகள் உள்ளதாகவும் அவற்றுக் காரணமாக நமது நாட்டின் சமூக மற்றும் கலாசார முறைகள் எனவும் அறுதியிட்டுக் கூறுகின்றன.

பொருளாதார நிபுணர் குமரப்பா கூறிய வார்த்தைகளின் உண்மையை நாம் மீண்டும் ஒரு முறை உணர வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு அவர்களின் வலுவற்ற அடிப்படையே காரணம் என்பது உறுதியாகிறது. தனி நபர் கலாசாரம் என்ற பெயரில் அவர்கள் குடும்பம், சமூகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை அழிக்கத் துணிந்து விட்டது பெரும் சிக்கல்களை உண்டாக்கி உள்ளது.  அதனால் உறவுகள் சிதைந்து சமூகத்தில் நுகர்வுக் கலாசாரம் பெருகி சேமிப்புகள் குறைந்து பொருளாதாரனகளே  தள்ளாடிக் கொண்டுள்ளன.

இந்தியா குடும்பங்களையும் சமூகங்களையும் இன்றளவும் பெரிதும் மையப்படுத்தி வாழ்ந்து வருகிறது. அதனால் பல்வேறு தாக்கங்களையும் தாண்டி பெரியவர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையும், சமூகங்களில் பொது நியதிகளும் இருந்து வருகின்றன. எனவே குடும்ப அளவில் உறவுகள் நிலவி முன்னேற்றங்கள் ஏற்பட்டு, அவை தேச அளவில் வளர்ச்சியாக உருவெடுத்து வருகின்றன. அதனால் நமது பொருளாதாரமும் உலக அளவில் முன்னேறி வருகின்றது. எனவே  நமது பொருளாதாரத்தின் அடிப்படையாக  இந்தியாவின் உயர்தரக் கலாசார நெறிகளே இன்றளவும் இருந்து வருகின்றன. அதை உணர்ந்து காப்பாற்றிச் சிறப்பிக்க வேண்டியது நமது அவசியமான பணியாகும். 

( ஓம் சக்தி தீபாவளி சிறப்பிதழ், நவ.2013 )


No comments: