அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் – அஞ்சலி


தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும் காந்தியவாதியுமான திரு. மகாலிங்கம் ஐயா அவர்கள் அக்டோபர் 2 ஆம் நாளன்று தனது 92 ஆவது வயதில் காலமானார். தொழிலதிபர் என்று பரவலாக அறியப்பட்டாலும், அவர் பல்வேறு துறைகளில் மிகுந்த ஈடுபாடும் நெருக்கமான தொடர்பும் கொண்டவர்.  

அதனால் அரசியல், கல்வி, ஆன்மிகம், இலக்கியம், வேளாண்மை, பொதுப்பணிகள் உள்ளிட்ட வெவ்வேறு தளங்களில் தனது முத்திரையைப் பதித்தவர். மேலும் நாடு சம்பந்தப்பட்ட பல விசயங்களில் தனக்கே உரித்தான தனித்தன்மைகள் நிறைந்த  சிந்தனைகளைக் கொண்டவர்.

தமிழத்தின் பல்வேறு  துறைகளைச்  சார்ந்த மக்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.  அதனால் பட்டி தொட்டிகள் தொடங்கி சென்னை வரை மாநிலம் முழுதும் பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு  நேரடியாக அறிமுகமானவராக இருந்தார். அவ்வித தொடர்புகள் உலக அளவிலும் அவருக்கு இருந்தன.

அவரது நட்பு வட்டம் சாதாரண மனிதர்கள் முதல் நாட்டின் செல்வாக்குள்ளவர்கள் வரை இருந்தது. அவரே பெரிய தொழிலதிபராக விளங்கிய போதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள்  மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது.

அவரது ஒரு சிறந்த குணம் சாதாரண மனிதர்களின் அழைப்பினை ஏற்று அவர்களின் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வது.  மேலும் மக்கள் விரும்பி அழைக்கும் போது, அவர்களின் இல்லத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைப்பார்.

தேவையான சமயத்தில் பிறருக்கு உதவுவதைக் கடைசி வரைக்கும் தன்னுடைய கடமையாகவே கொண்டிருந்தார். அந்த உதவிகளை எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் பலருக்கும் செய்து வந்தார். அதுவும் பல சமயங்களில்   சம்பந்தப்பட்டவர்கள் கேட்காமலேயே செய்வார்.

காந்திய வாதிகள், வயதில் மூத்தவர்கள் ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் பணிகளைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்வுக்கு ஒரு நிறைவை அளித்து வந்தார்.  பல சமயங்களில் அவரது அறை முன்னால் அவரைப் பார்ப்பதற்கு ஒரு பெரியவர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

ஆரம்ப முதலே அவரது வாழ்க்கை செயல்பாடுகள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. 1952ல் தனது இருபத்தொன்பதாவது வயதில் பொள்ளாச்சி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பதினைந்து வருடங்கள் 1967ல் காங்கிரஸ் ஆட்சி மாறும் வரை  அந்தப் பொறுப்பில் இருந்துள்ளார். அதன் பின்னர்  அவர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.

மாறி விட்ட தமிழக அரசியல் களம் அவருக்குப் பொருத்தமானதாகப் படவில்லை. பின்னர் அவரைத்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக்கச் சில முக்கிய தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அவரது தந்தையார் நாச்சிமுத்துக் கவுண்டர் தனது  சொந்த உழைப்பினால் ஒரு பெரிய தொழில் குழுமத்துக்கு வித்திட்டவர். கொங்கு நாட்டுப் பகுதியில் சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக இருந்தவர். அவர் உருவாக்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946ம் வருடத்திலேயே நூறு பேருந்துகளைக் கொண்டதாக  இருந்தது.

தனது தந்தையின் மரணத்துக்கு அப்புறம் தொழில் நிர்வாகத்தை  எடுத்துக் கொண்டு, புதிய தொழில்களில்  கால் பதித்தார். அதன் மூலம் சக்தி குழுமத்தைத் தமிழ் நாட்டின் ஒரு முக்கியமான தொழில் குழுமமாக உருவாக்கினார்.  மாநிலத்திலுள்ள தொழில் துறையினருக்குப் பல விதங்களில்   ஒரு முன் மாதிரியாக விளங்கினார்.

அதே சமயம் தொழில்களில் தனக்கென உறுதியான  கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரி சாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய இலாபமிருந்தும்,  கடைசி வரை தவிர்த்து  விட்டார்.

கல்வித் துறையில் முன்னோடியான முயற்சிகளை மேற்கொண்டார். தொழில் கல்வியிலும் தாய் மொழிக் கல்வியிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவம் முதல் மாணவர்கள் தொழில் கல்வி பயில்வது அவசியம் எனக் கருதினார். அதற்காக பொள்ளாச்சியில்  அவர் ஆரம்பித்த பழனிக் கவுண்டர் பள்ளியில் தொழில் கல்வியோடு சேர்ந்த கல்வி முறை கொடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயத் துறை குறித்தும் நிறைய சிந்தித்து வித்தியாசமான  கருத்துகளை வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, மேற்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்த  விவசாயிகள் அதிக அளவில் ஓரிசா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். அதற்கு என்ன காரணம் எனக் கேட்ட போது, இங்குள்ள  விவசாயிகள்  கடுமையான உழைப்பாளிகள்; ஆனால் விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதிகள் இங்கில்லை; ஆனால் அங்கெல்லாம் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன; எனவே இங்குள்ள விவசாயிகள் அங்கு செல்வது அவர்களுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் நல்லது எனப் பதிலளித்தார்.

அவரது ஆரம்ப முதலே ஆன்மிகத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தொடங்கி, சென்னை கபாலீஸ்வரர் கோவில் வரையில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களின் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.  மேலும் நமது தேசத்தின் புனித நகரமான வாரணாசியில், தென்னிந்தியப் பாணியில் கோவில் கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.  பல விதமான அவரது ஆன்மிகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக ‘ அருட் செல்வர்’ என அழைக்கப்பட்டார்.

புத்தகங்களில் அவருக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு. அவரைச் சந்திக்கும் பல சமயங்களில் ஒவ்வொருவருக்கும் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவார்.  மேலும் எழுத்தாளர்களை நன்கு ஊக்கப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் என்னுடைய புத்தகங்களின் பிரதியை அவருக்குக் கொடுத்துப் பேசி விட்டு வந்த சில மணி நேரங்களிலேயே,  குறிப்பிட்ட அளவு பிரதிகளைப் புத்தகக் கடையில் இருந்து வாங்கி விடுவார். பின்னர் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பார். 

தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்து பாகங்களாக வெளியிட்டார்.  மகாத்மா காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத் தனது செலவில் மறுபதிப்புச் செய்தார்.  மேலும் ஆன்மிக நூல்கள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உதவிகளைச் செய்து வந்தார்.

தனது கருத்துக்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து பல வருடங்களாகக்  கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் வெளியிட்டு வந்தார். அவற்றின் மூலம் அவரது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.   தமிழில் ‘ஓம் சக்தி’ மாத இதழ், ஆங்கிலத்தில்  ’கிசான் வொர்ல்டு’  என்னும் வேளாண்மை மாத இதழ் ஆகியவற்றைத் தொடங்கிப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். அவற்றில் அவர் கூறியுள்ள பல கருத்துக்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.

அவரைச் சந்தித்து  ஒவ்வொரு முறை விரிவாகப் பேசும் போதும், அவர் ஒரு அறிவுப் பெட்டகமாகவே தோன்றியிருக்கிறார். அரசியல், வேளாண்மை, தொழில், கல்வி, ஆன்மிகம் எனப் பல விசயங்களிலும் அவருக்கு அதிக அளவில்  வரலாற்று அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை இருந்தது. சம கால அரசியலைப் பற்றிக் கேட்டால் சுதந்திரம் பெற்ற காலத்தில் தொடங்கி, விசயங்களைப் பிறழாமல் சொல்லும் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கும்.

அவரது இன்னுமொரு உயர்ந்த குணம் என்னவெனில்  கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக் கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும் போது  எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார். இது சம்பந்தமாக எனக்குக் கடைசியாகக்  கூட ஒரு அனுபவம் ஏற்பட்டது.

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை அழைத்தார். அந்த சமயத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய யோசனையைத் தெரிவித்தார். மாதா மாதம் கோவை புரந்திர தாசர் வளாகத்தில் பொருளாதாரம் குறித்து அதில் ஆர்வம் கொண்டவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமா என்றும், அதில் கலந்து கொண்டு என்னால் பேச முடியுமா எனவும் கேட்டார். எனக்கும் அது நல்ல கருத்தாகவே  பட்டது. ஆனால் அதைச் செயல்படுத்துவது பற்றி மேலும் யோசித்து இறுதி முடிவு செய்யலாம் எனத் திட்டமிட்டோம்.   

அது சம்பந்தமாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில்   மீண்டும் அவரே அழைத்துப் பேசினார். அப்போது பொருளாதாரக் கோட்பாடுகள்   மற்றும் உலக நடை முறைகள் பற்றித் தொடர்ந்து பேசும் போது, அது  கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் சலிப்பைக் கொடுத்து விடலாம் என்றும், எனவே   நடை முறையில் நிலவும் இந்திய முறைகள் குறித்து எங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் சமூக மற்றும் கலாசாரத் தன்மைகளோடு இணைத்துச் சொன்னால் அதை ஆர்வத்துடன் கேட்க வாய்ப்பு அதிகம் என்றும் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

அவர் உடனே தானும் அதைத் தான் விரும்புவதாகவும், காந்திய மற்றும் இந்திய சிந்தனைகளின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் எனவும் கூறினார். எனவே கலந்துரையாடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதல் கூட்டத்துக்கான தேதியை முடிவு செய்யும் சமயத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியைத் தொடங்கவே முடியவில்லை. 

அவரைப் பற்றி நிறைய விசயங்களைச் சொல்லிக் கொண்டே போக முடியும். இந்தியப் பாரம்பரியம்  குறித்த அவரது ஆய்வுகள், கூட்டுறவுத் துறையில் அவரது பங்களிப்பு, சதுரங்க விளையாட்டுக்கு அவர் அளித்த ஆதரவு என முற்றிலும் வேறுபட்ட கோணங்கலில் தனது முயற்சிகளைச் செலுத்தியிருக்கிறார்.

பன்முகத் தன்மை கொண்ட அவரது வாழ்க்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. பொள்ளாச்சியைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கொங்கு நாடு முழுவதும் அவரைத் தலைமகனாகவே கருதி வந்தது.  இங்கு அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

பெரிய வசதிகள் இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து வந்தார். சாதாரண கதர் உடைகளையே எப்போதும் அணிவார்.  உயர்ந்த மனித நேயத்தின் பல பண்புகளைக் கொண்டிருந்தார்.  வாழ்வின் இறுதி வரைக்கும் செயல்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். எனவே அவரைப் பொறுத்தவரையில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கிறார்.

வள்ளலார் கொள்கைகளிலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலும் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.  அவர்களின் பெயரில் சென்னையில் தொடர்ந்து நாற்பத்தொன்பது ஆண்டுகளாக நான்கைந்து நாட்கள் விழா எடுத்து வந்தார். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனையாளர்களை அழைத்து உரையாற்ற வைத்தார். ஒவ்வொருவரின் பேச்சுகளையும் உட்கார்ந்து கேட்பார்.

அவ்வாறு இந்த வருடமும் விழா நடந்து வரும் போது,   அவரது நாயகனான காந்தியின் பிறந்த நாளில் விழா மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தார். மாலை நிகழ்ச்சி தொடங்குவதற்காக இறை வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது. திருவாசகத்திலுள்ள கோயில் திருப்பதிகத்தின்  ஐந்தாவது பாடலான ‘ குறைவிலா நிறைவே கோதிலா அமுதே …… ’ என்னும் பாடல். இறை வணக்கம் முடிந்து கவனித்த போது  அவரது வாழ்வு நிறைவுற்றிருந்தது தெரிய வந்திருக்கிறது.

( தமிழ் ஹிந்து.காம், நவ.7, 2014)


No comments: