பொருளாதார வளர்ச்சிக்குத் தேசிய அணுகுமுறை


சென்ற வருடம் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு திட்டக் குழுவைக் கலைத்ததாகும். அதற்குப் பதிலாக இந்த வருட துவக்கத்தில் ‘நிதி ஆயோக்’ என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ”இந்தியாவை மாற்றும் தேசிய நிறுவனம்” என்ற பெயரில் உயர் மட்ட சிந்தனைக் குழுவாக அவ்வமைப்பு செயல்படும் என மத்திய அமைச்சரவையின் தீர்மானம் கூறுகிறது.

 திட்டக் குழு 1950 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது.  அதற்குப் பின்னர் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் உலக முழுவதும் பொருளாதாரச் சூழ்நிலைகள் வெகுவாக மாறியுள்ளன. அதன் அடிப்படையில் புதிய அமைப்பு  அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் என்றாலே வழக்கமாக்   இரண்டு வகை சித்தாந்தங்களே முன் வைக்கப்படுகின்றன. ஒன்று முதலாளித்துவம்; மற்றொன்று கம்யூனிசம். அவை இரண்டுமே பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டவை.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு முதலாளித்துவ முறை அறிமுகப்படுவதற்கு முன்னர்,  நிலப்பிரபுத்துவ முறையும் பின்னர் வணிக முறையும் ( mercantilism) நடைமுறையில் இருந்தன.  வணிக முறையின் ஒரு உத்தியாகத்தான் ஐரோப்பா உலகின் பகுதிகளைக் காலனிகளாக மாற்றியது. 

அதனால் பிற நாடுகளின் செல்வங்கள் சுரண்டப்பட்டு ஐரோப்பா வளமடைந்த பின்னரும், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை  மிகவும் மோசமாகவே இருந்தது. எனவே அதற்கு மாற்றாக முதலாளித்துவச் சித்தாந்தம் உருவானது.  ஆனால் அதற்குப் பின்னரும் பெருவாரியான மக்களின் சிரமங்கள் குறையவில்லை. மாறாக தொழிற்புரட்சி புதிய பிரச்னைகளை உருவாக்கியது. ஆகவே அதற்கு மாற்றாக  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் பகுதியில் கம்யூனிச சித்தாந்தம் முன் வைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் உலகின் பகுதிகளையும்  தங்களின் காலனிகளாக மாற்றிய பின்னர், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில் நிலவி வந்த இயற்கையான பொருளாதார முறைகள் சிதைக்கப்பட்டன. உலக அரங்கில் ஐரோப்பாவின் தாக்கம்  அதிகரிக்கத்த பின்னர், அவர்களின் வாழ்க்கை முறைகள், கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளே உயர்ந்தவையென  போதிக்கப்பட்டன.  

தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்கா உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவானது. பின்னர் அவர்களின் சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகள்  முன்னிலைப்  படுத்தப்பட்டன.

எனவே கடந்த பல தலைமுறைகளாகவே மேற்சொன்ன  இரண்டு  சித்தாந்தங்கள் மட்டுமே உலக அளவில் முன் வைக்கப்பட்டு வந்துள்ளன. இங்கிலாந்தின் ஆளுமையின் கீழ் இந்தியா போன்ற பல நாடுகளும் இருந்ததால், அவர்களின் கல்வித் திட்டத்தின் மூலம் ஐரோப்பிய சித்தாந்தங்கள் எளிதாக  முதன்மைப் படுத்தப்பட்டன.  

 1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச சித்தாந்தம் தோல்வியைச் சந்தித்தது.  இன்னொரு முக்கிய கம்யூனிச நாடான சீனா, அதற்கு முன்னரே சோசலிச பொருளாதாரக் கொள்கைகளைக்  கைவிட்டிருந்தது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமது சந்தைப் பொருளாதார முறை மட்டுமே முன்னேற்றத்துக்கு உகந்த ஒரே வழியென அமெரிக்கா மார் தட்டியது. மேலும் தமது வழி முறைகளே உலக முழுமைக்கும் பொருத்தமானதெனவும்   அறிவித்தது.   

ஆனால் அவர்களின் ஆலோசனைப்படி செயல்பட்ட நாடுகள் 1980 கள் முதலே தோல்விகளைச் சந்தித்து வந்தன. பின்னர் 2008 ஆம் வருடம் அமெரிக்காவில் தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடி மேற்கத்திய  பணக்கார நாடுகள் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளையும் பாதித்தது. அப்போது அங்கு ஏற்பட்ட பல பிரச்னைகள் இன்றளவு வரை  சில நாடுகளில் தீராமலே உள்ளது.  

எனவே தங்களின் பொருளாதார முறையில் பெருமளவு குறைகள் இருப்பதாக அமெரிக்க நிபுணர்களே தற்போது ஒப்புக் கொள்கின்றனர். ஆகையால் பொருளாதார முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம் என்பதை  சர்வதேச அமைப்புகள் கூட இப்போது ஒத்துக் கொள்கின்றன.

அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரித்து, உலக அரங்கில் மேற்கு நாடுகளின் பங்கு குறைந்து வருகின்றது. மேலும் அண்மைக் காலமாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், காலனியாதிக்க காலத்துக்கு முந்தைய நூற்றாண்டுகளில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக  எடுத்துச் சொல்கின்றன.  

பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகள்,   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது பொருளாதாரத்தில் தலையிடத் தொடங்கும் வரை, பதினாறு நூற்றாண்டு காலம் இந்தியா உலகின் முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்துள்ளதைத் தெரிவிக்கின்றன. தங்களின் நாடுகளுக்கெனப் பொருத்தமான அணுகுமுறைகள் இல்லாமல், இந்தியாவும் சீனாவும் பெரிய செல்வந்த நாடுகளாகப் பல நூறாண்டுகள் இருந்து வந்திருக்க முடியாது.

ஒவ்வொரு நாட்டுக்கென இயற்கையாக  தனித் தன்மைகள்  இருக்கும். பிற நாடுகளுக்கில்லாத தனிச் சிறப்புக்கள் இந்தியாவுக்கு நிறைய உள்ளன. நமது இயற்கை வளம், மனித வளம், குடும்ப அமைப்பு முறை, அதிகமாகச் சேமிக்கும் மனப்பாங்கு, தொழில் முனையும் தன்மை,  சமூக மூலதனம்  உள்ளிட்ட பல  அம்சங்கள் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கி  வருகின்றன. 

சுதந்திரத்துக்குப் பின் நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கத்திய சிந்தனைகளை மையமாக வைத்தே கொள்கைகளை வகுத்து வந்துள்ளனர். அதனால் ஆரம்ப காலங்களில் சோசலிச சித்தாந்தமும், பின்னர் உலக மயமாக்கல் மற்றும் சந்தைக் கோட்பாடுகளுமே வழிகாட்டு நெறிகளாக இருந்து வருகின்றன. திட்டக்குழு என்பதே  அப்போதைய சோவியத் அணுகுமுறைகளைப் பின்பற்றித் தான் உருவாக்கப்பட்டது.  

அதனால் நமது நாட்டுக்கான அடிப்படைகளை வைத்து முன்னேற்றத்துக்குத் திட்டமிடும் வாய்ப்பே   இதுவரை இல்லாமல் போய்விட்டது. அதனால் சுதந்திர இந்தியா கண்டு வரும் வளர்ச்சி அரசாங்கத்தை மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஒன்றே என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 1960களில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றியவர் பொருளாதார நிபுணர் ஜான் கென்னத் கால்பிரெய்த் என்பவர். அவர் 2001 ஆம் வருடத்தில் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இந்தியாவின் முன்னேற்றத்தைப் பார்த்து வியந்து,  இது மக்கள் சார்ந்த பொருளாதாரம் எனவும், அதற்கு தேசத்தின் கலாசார அடிப்படைகளே காரணம் எனவும் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் கள ஆய்வுகள் நமக்கெனத் தனிப்பட்ட செயல்முறைகள் இருந்து வருவதை உறுதிப்படுத்துகின்றன. அதனால் தேச நோக்கில் பொருளாதாரக் கொள்கைகள் அமைக்கப்படும் போது முழுமையான பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளன.

அந்த வகையில் சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இப்போது முதன் முறையாக நாடு சார்ந்த ஒரு புதிய பாதைக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது.  வெளி நாடுகளிலிருந்து பொருளாதார மாதிரிகளை   காப்பியடித்துக் கொண்டு வந்து, அவற்றை  நமது மண்ணில்  அப்படியே நட்டு வைக்காமல் இருப்பதை நிதி ஆயோக் உறுதி செய்யும்  எனத் தீர்மானம் தெரிவிக்கிறது.

  நமது வளர்ச்சிக்கு ஏதுவான உத்தியை நாமே கண்டறிய வேண்டும் எனவும்,  நமது நாட்டுக்குப் பொருத்தமாகவும் இங்கு செயல்படும் வகையிலும் அமையக் கூடிய  வழிமுறைகளைச் சிந்தனைக் குழு கண்டறிய வேண்டும் எனவும் அது கூறுகிறது. மேலும் இனிமேல் நாட்டு முன்னேற்றத்துக்குப் பாரதீய அணுகுமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என்றும் அது அறிவிக்கிறது.

 திட்டமிடுதலில் இதுவரை இருந்து வந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வகையில் செயல்பாடுகள் அமைக்கப்படவுள்ளன. புதிய அமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்குத் தேவையான உத்திகள் மற்றும் துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கும் வகையில்   செயல்படும். வலிமையான மாநிலங்கள் மூலமே வலுவான தேசத்தை உருவாக்க முடியும் என்னும் அடிப்படையில், மாநிலங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து அளிப்பதை  நிதி ஆயோக் உறுதிப்படுத்தும்.  

புதிய அமைப்பின் நிர்வாகக் குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர் மற்றும் யூனியன் பிரதேச துணை ஆளுநர்கள் அங்கம் வகிப்பார்கள்.  அவ்வப்போது எழும் குறிப்பிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரி செய்ய அந்தப் பகுதி சார்ந்த முதல்வர்களை உள்ளடக்கிய மண்டலக் குழுக்கள் தேவைப்படும் போது உருவாக்கப் படும்.  அதன் மூலம்  குறிப்பிட்ட பகுதிகள்  சார்ந்த பிரச்னைகள் தாமதமின்றித் தீர்க்கப்பட வாய்ப்பு கிடைக்கும்.

 திட்டமிடுதல் என்பதே இதுவரை மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு என ஒரு வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளது. இனிமேல் அது கீழிருந்து தொடங்கி நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் கிராமங்களை  இணைப்பதற்கு  நிதி ஆயோக் நடவடிக்கைகள் எடுக்கும். மேலும் நமது  நாட்டில் கிராமங்கள் வகிக்கும் முக்கிய பங்கினைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அவற்றின் உயிரோட்டம் மற்றும்  திறன்கள்  நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும்.

விவசாயத் துறையைப் பொருத்த வரையில் உணவுப் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே இதுவரை பேசி வந்துள்ளோம். இனிமேல் அதைத் தாண்டி உற்பத்தித் திறனை அதிகரித்து, விவசாயிகளுக்குத் தமது விளைச்சலுக்கான அதிக பட்ச பலன்கள் கிடைக்கும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்தியாவின் பொருளாதார  வலிமை சாதாரணக் குடும்பங்கள் ஆரம்பித்து நடத்தும் குறு, சிறு மற்றும் மத்திய தரத் தொழில்களில்தான் நிறைந்துள்ளது. அவை தான் மற்ற எல்லாத் துறைகளையும் விட பொருளாதாரத்துக்கு அதிகமாகப் பங்களிப்பதோடு, சுமார் 92 விழுக்காடு அளவு வேலை வாய்ப்புகளையும் அளித்து வருகின்றன.  

ஆனால் பல விதமான சிரமங்களுக்கிடையில் செயல்பட்டு வரும் அவை பற்றி வழக்கமாகக் கொள்கை வகுப்பவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இப்போது முதன் முறையாக அவற்றுக்குத் தேவைப்படும் நிதி உதவி, தொழில் நுட்பம், திறன் அதிகரிப்பு ஆகியனவற்றைக் கொடுக்கும்   கொடுக்கும் வகையில் புதிய அமைப்பு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது தேசத்தின் பாரம்பரிய சொத்துக்களாக குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் விளங்கி வருகின்றன. ஒருவருக்கொருவர் இயைந்து செயல்படும் சூழ்நிலை சமூக மூலதனமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அத்தகு சூழ்நிலைகள் பொதுவான அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றன.

எனவே சமூக மூலதனத்தைப் பாதுகாத்துப் பெருக்குவது  இன்று உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நமது நாட்டில் அரசு மட்டத்தில் முதன் முறையாக அதன் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டு,  புதிய  கொள்கைகளின்  மூலம் அது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நமது தேசத்தில் தொழில் முனைவு, அறிவியல் மற்றும் அறிவு சார்  மனித வளம் நிறைந்து கிடக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி  வெற்றியின் உச்சத்தை அடைய சிந்தனைக் குழு  செயல்படும்.  மேலும் தனித் தன்மைகளைக் கொண்ட நமது மத்திய தர வர்க்கத்தின் திறமைகள் முழுவதும் பயன்படுத்தப்படும்.

வெளி நாடு வாழ் இந்தியர்கள் இன்று உலகில் இருநூறு நாடுகளுக்கு மேல்   இருந்து கொண்டு தங்களின் திறமை மற்றும் உழைப்பின் மூலம் நன்கு செயல்பட்டு  வருகின்றனர். ஆனால் அவர்களை முழுவதுமாக நாம்  இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனிமேல் அவர்களின் வலிமைகள் தேவையான துறைகளில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அடையாளமே அதன் வெளிப்படைத் தன்மையாகும். அந்த வகையில் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி அரசு வெளிப்படையாகச் செயல்படும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இளைஞர்கள், பெண்கள், வாய்ப்புக் குறைந்தவர்கள் ஆகிய பிரிவினருக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

தேச அளவில் நவீன வசதிகளுடன் ஒரு ஆய்வு மையம் தொடங்கப்பட்டு, அது நாட்டின் பல பகுதிகளிலும், சர்வதேச அளவிலும் நடைமுறையில் உள்ள சிறப்பான செயல்பாடுகள் மற்றும் நல்ல நிர்வாகம் பற்றிய  விபரங்களைச் சேகரிக்கும். பின்னர் அவை பிற இடங்களிலும் செயல்படுத்தப்படும் வகையில் அனைவருக்கும்  பகிர்ந்தளிக்கப்படும்.

இது வரை உலக அரங்கில் மேற்கத்திய நாடுகளே அதிகம் தாக்கம் செலுத்தி வருகின்றன. அதை மாற்றி நமது கருத்துக்களை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் புதிய குழு நடவடிக்கைகளை எடுக்கும். நமது தேசத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்  செல்லும்  இந்த முயற்சி அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மொத்தத்தில் அந்நிய சித்தாந்தங்களைச் சாராமல், நமது வளங்களையும் திறமைகளையும் மையப்படுத்தி, அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்குத் தேவையான  செயல்பாடுகளை உருவாக்கும் வகையில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

வேறெந்த நாட்டையும் விட பெரிய பொருளாதாரப் பின்னணி மற்றும் துடிப்பினைக் கொண்ட நமது நாடு, தனது முழு வலிமையையும் பயன்படுத்தி மீண்டும் ஒரு உயர்வான  நிலையை அடைய நிதி ஆயோக் நல்ல தொடக்கமாகத் தெரிகிறது.  

( சிறு மாற்றங்களுடன் “ மக்கள் சார்ந்த பொருளாதாரம்” என்ற தலைப்பில் தினமணியில்  பிப். 7, 2015 வெளியானது) 
   



No comments: