காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களும் மோடி அரசில் நம்பிக்கையும்

நமது நாடு தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் நிறையப் பெற்றது. பாரம்பரிய மிக்க நீண்ட வரலாறு, இயற்கை வளங்கள்,  கலாசாரம் சார்ந்த வாழ்க்கை முறை, வெவ்வேறு வகையான திறமைகளைக் கொண்ட மக்கள் எனப் பல  சாதகமான அம்சங்கள் நமக்குண்டு.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக உலக அளவில் வெளி வரும் வரும் ஆய்வுகள் நமது நாட்டின் பண்டைய பொருளாதாரச் செழிப்பை எடுத்துக் காட்டுகின்றன.  பணக்கார நாடுகள் சேர்ந்து உருவாக்கியுள்ள  பொருளாதார முன்னேற்றம் மற்றும் கூட்டுறவு அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) பாரீஸ் நகரில் இருந்து செயல்பட்டு வருகிறது. அவ்வமைப்பின் ஆய்வுகள்  பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் தலைமையில் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் உலக நாடுகளின்  பொருளாதாரங்கள் எவ்வாறு இருந்து வந்தன என்பது பற்றிப் புள்ளி விபரங்களுடன் எடுத்து வைக்கின்றன.

இந்தியா இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே  உலகின் பொருளாதாரச் செழிப்பில் 33 விழுக்காடு அளவைப் பெற்று முதல் நிலையில் இருந்ததையும், தொடர்ந்து ஆங்கிலேயர் இங்கு வந்து நமது முறைகளைச் சிதைக்கும் வரை நாடு சிறப்போடு விளங்கி வந்ததையும் அந்த ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் இப்போதும் நம்மிடையே வலுவாக உள்ள அடித்தளங்கள் பலவும் வெவ்வேறு ஆய்வுகள் மூலமாக வெளிக் காட்டப்பட்டு வருகின்றன.    

பண்டைய காலம் முதல்  தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பல துறைகளிலும் உலகுக்கே முன் மாதிரியாக நமது தேசம் விளங்கி வந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சியில் நமது பொருளாதாரம் மட்டுமன்றி, சமூக, கலாசார அடித்தளங்களும் கடும் சிதைவுகளுக்கு உள்ளாகின.

அதன் விளைவாக நமது நாடு வறுமையும் பட்டினியும் நிறைந்த, கல்வி அறிவு குறைந்த, தொழில் வளர்ச்சி இல்லாத, நம்பிக்கையற்ற மக்களைக் கொண்ட நாடாக மாறிப் போகிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்  பற்றிச் சொல்லும் போது உலகிலேயே ஒரு நாடு இன்னொரு நாட்டைக் கிரிமினல் தனமான முறையில் சுரண்டியது இந்தியாவில் தான் என வரலாற்றாசிரியர் வில் துரந்த் வர்ணிக்கிறார்.

எனவே நமக்குச் சுதந்திரம் கிடைத்தது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் ஆங்கிலேயர் இங்கு வருவதற்கு முன்னரே சுமார் எண்ணூறு வருட காலம் நாம் தொடர்ந்து படையெடுப்புகளுக்கும், அந்நியர்களின் ஆதிக்கத்துக்கும், அதனால் உண்டான சிரமங்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்தோம். எனவே ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கப்புறம் நமக்குப் பொருத்தமான வகையில் நாமே நமது எதிர்காலம் குறித்துப் பொருத்தமான வழிமுறைகளை வகுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சுதந்திரத்துக்கு முன்னரே மகாத்மா காந்தி அவர்கள் நாம் சுதந்திரம் பெற்ற பின் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார முறைகள் உள்ளிட்ட விசயங்கள் குறித்துப் பரவலான விவாதம் நடத்தி முடிவு செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதற்குச் சம்மதிக்கவில்லை.

சுதந்திரம் வந்த பின்னர் நமது நாட்டுக்குப் பொருத்தமான முறைகள் குறித்து  சிந்தனைப் பரிமாற்றங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய சோசலிச அணுகுமுறையைக் காங்கிரஸ் நடைமுறைப் படுத்தியது. தனித்துவம் மிக்க வழிமுறைகளை அமைத்துக் கொண்டு அதன் மூலம் உலக அளவில் மிகச்  சிறப்பாக செயல்பட்டு வந்த நமது தேசத்தின் அனுபவங்கள் எல்லாம் முற்றிலும் நிராகரிக்கப் பட்டன. அதனால் அரசியல் அளவில் சுதந்திரம் கிடைத்த பின்னரும், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் அளவில் நாட்டை அடிமைகளாகவே வைக்க நமது ஆட்சியாளர்கள் கொள்கைகளை வகுத்தனர்.

இந்தியப் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைகள் என எதுவும் முன் வைக்கப் படவில்லை. மேலும்  தொன்மை வாய்ந்த நமது தேசத்தின் அனுபவங்கள் பயனற்றவை என ஒதுக்கப்பட்டன. அதனால் நமது தேசத்தைத் தாங்கிப் பிடித்து வரும் அஸ்திவாரங்கள் கூட நமக்கு எவையெனத் தெரியாத நிலைமை ஏற்பட்டது.

எனவே நாட்டின் முன்னேற்றம் போதிய அளவு ஏற்படவில்லை.  நமது வளங்களும் மக்களின் திறமைகளும் சரியான முறையில் பயன்படுத்தப் படவில்லை. 1989-90 கால கட்டத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. அந்த சமயத்தில் உலக அளவில் கம்யூனிசமும் பெரும் தோல்விகளைச்  சந்தித்துக் கொண்டிருந்தது.

எனவே நமக்குப் பொருத்தமான வகையில் நாட்டுக்குப் புதிய உத்திகளை வகுக்க இன்னொரு வாய்ப்பினை வரலாறு கொடுத்தது. ஆனால் அப்போதும் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அரசு, எந்த விதமான பரவலான விவாதங்களுமின்றி மற்றுமொரு மேற்கத்திய சித்தாந்தமான உலக மயமாக்கலை நடை முறைப் படுத்தியது.

தொடர்ந்து நமது பொருளாதாரத் துறைகள் சரியான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்பினை இழந்தன. ஆனால் அதையெல்லாம் மீறி நமது மக்கள்  நாட்டை முன்னெடுத்துச் சென்று வருகிறார்கள் என்பது பெருமைக்குரிய விசயமாகும். நமது குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், சமூக மூலதனம், மக்களின் கடின உழைப்பு, தொழில் முனையும் தாகம் ஆகிய தன்மைகள் அரசுகளின் குளறுபடிகளையும் மீறி நம்மை மேலெடுத்துச் சென்று கொண்டுள்ளன. ஆயினும் அரசுகள் நமக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை நடைமுறைப் படுத்தத்  தவறி விட்டன என்பதும், அதனால் மக்கள் பலவிதமான இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் என்பதுவும் நிதர்சனமான உண்மையாகும்.

காங்கிரஸ் கட்சி வறுமை ஒழிப்பு, மதச் சார்பின்மை என வெற்று முழக்கங்கங்களை வைத்துக் கொண்டே  அறுபது வருடங்களுக்கு மேலாக மக்களை முட்டாள்களாக்கி ஒரே  குடும்பத்தின் பிடியில் அதிகாரத்தை வைத்துக் கொண்டுள்ளது. அதன் உச்ச கட்டமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டு ( 2004-2014) ஆட்சிக் காலம் அமைந்தது.

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் ஊழல்கள் ஒவ்வொன்றாக அந்தக் கால கட்டத்தில் நிறைவேறி வந்தன. எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்பதை வைத்து அமைச்சர் பொறுப்புகள் பேரம் பேசப்பட்டன. தேசத்தின் இயற்கை வளங்கள் பல இலட்சக் கணக்கான கோடிகளில் அரசியல் வாதிகளின் கைகளுக்குள் சென்றன.

1998-2004 கால கட்டத்தில் வாஜ்பாயி ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் தடைபட்டுப் போயின. அவரது ஆட்சிக் காலத்தில் உண்டான அந்நியச் செலாவணி கையிருப்பு, காங்கிரஸ் ஆட்சியில் அளவுக்கதிகமான பற்றாக்குறையாக மாறிப் போனது. இறக்குமதிகள் தாறுமாறாக அனுமதிக்கப்பட்டன. அதனால் தொழில்கள் நசிந்தன. வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பது மிகவும்  சொற்பமாக  ஆகிப்போனது.

வாக்குகளை மட்டுமே மனதில் வைத்து  ஊரக வேலை வாய்ப்பு போன்ற திட்டங்கள் பல்லாயிரம் கோடி செலவில் அறிவிக்கப்பட்டன.  அவை பலவற்றிலும் ஒவ்வொறு மட்டத்திலும் ஊழல் தலை விரித்தாடியது. அன்றைய சோவியத் முறையில் நேருவால் அமைக்கப்பட்ட திட்டக் குழு, முதலமைச்சர்களைக் கூட மதிக்காமல் பன்னாட்டு நிதி அமைப்புகளில் ஓய்வூதியம் வாங்குபவர்களால் வழி நடத்தப்பட்டது.

பிரதமர் தலைமையேற்று நடத்தும் அமைச்சரவை மதிப்பிழந்து, கட்சித் தலைவரே நாட்டை வழி நடத்தும் அவல நிலை மக்களாட்சிக்கு ஏற்பட்டது. மேலும் அமைச்சரவைக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இடதுசாரி சித்தாந்தவாதிகளைக் கொண்டு காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்பட்ட  தேசிய ஆலோசனைக் குழு நாட்டின் கொள்கைகளை  வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

அதனால் காங்கிரஸ் கூட்டணியின் இறுதி ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம்  படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருந்தது. விலைவாசி பல மடங்கு அதிகரித்தது.  அதற்கு முந்தைய பதினைந்து ஆண்டுகளாக உலக அளவில் நாட்டுக்கு உருவாகிக் கொண்டிருந்த  மரியாதை வேகமாக சரியத் தொடங்கியது. இந்தியா என்றாலே ஊழல் என்கின்ற அவப் பெயர் நமக்கு ஒட்டத் தொடங்கியது.  தேச விரோத சக்திகள் மிகவும் தைரியத்துடன் செயல்பட்டு வந்தன. மிகச் சிறிய பக்கத்து நாடுகள் கூட நம் மீது நம்பிக்கையை இழந்தன.

அந்த சமயத்தில் தான் திரு. நரேந்திர மோடி அவர்களை மக்கள் ஏகோபித்த ஆதரவில் பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். கடந்த முப்பது ஆண்டுகளில் முதன் முறையாகப் பெரும்பான்மை ஆதரவுடன் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அண்மைக் கால வரலாற்றில் நாட்டு மக்களிடையே பெரிதும் பரவலாக மதிக்கப்படும் தலைவராக மோடி உருவானார்.  

அவர் பிரதமராகப் பொறுப்பேற்றது முதலே புதிய அணுகு முறைகளைக் கையாண்டார். பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லா பக்கத்து நாடுகளின் தலைவர்களையும் வரவழைத்தார். பாராளுமன்றத்துக்குள் முதல் நாள் நுழையும் போது, வாயிலின் படிக்கட்டில் தலையை வைத்து வணங்கினார். அதன் மூலம்  நாடாளுமன்றம் கோவிலைப் போலப் புனிதமானது என்பதை உணர்த்தினார்.

அவரது தொகுதியான வாரணாசியில் ஒரு சாதாரண மனிதனைப் போல நெற்றியில் சந்தனம் குங்கும் பூசி  கங்கா ஆர்த்தி எடுத்து இறைவனை வழி பட்டார்.  சுதந்திரம் பெற்றது முதலே நேருவிய அணுகு முறைகள் நமது நாட்டின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் ஆகிய எல்லாமே தவறு என்னும் ஒரு போலி பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தன. ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய தேசப்பற்று, அர்ப்பணிப்பு மற்றும் நிர்வாகத் திறமை ஆகிய உயர் குணங்களால் பிரதமராக உயர்ந்த  மோடி அவர்கள், தன்னுடைய அந்த ஒரு செயல் மூலம்  நவீன இந்தியத் தேசத்தைத் தொன்மையான நமது கலாசாரத்துடன்  தொடர்பு படுத்தினார்.

கடந்த பத்தொன்பது மாதங்களாக மோடி அவர்களின் தலைமையில் செயல் பட்டு வரும் மத்திய அரசு நமது தேசத்தை மேலெடுத்துச் செல்லும் வகையில் பல புதிய  அணுகுமுறைகளை நடை முறைப்படுத்தி வருகிறது. பொருளாதாரத் துறைகளைப் பொறுத்த வரையில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நேரு உருவாக்கிய காலாவதி ஆகிப்போன திட்டக்குழுவுக்குப் பதிலாக , நிதி ஆயோக் என்னும் புதிய அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேல் நாட்டு சித்தாந்தங்களே நமது கொள்கை வகுப்பதில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதனால் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டு வந்தது. இனிமேல் பாரதீய அணுகுமுறைகளை வைத்தே கொள்கைகள் வகுக்கப்படும் என்பது முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கும் போது கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் நிதி ஆயோக் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சியில் இது வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத சமூக மூலதனம் போன்ற முக்கியமான காரணிகள் திட்டம் தீட்டுதலில் இடம் பெற்றுள்ளன. திட்ட அமைப்பு முறையே கீழிலிருந்து மேலே கிராமங்கள் தொடங்கிச் செல்லும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. நிதி ஆயோக் இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாகும்.

நமது பொருளாதாரமே குடும்பம் சார்ந்தது. விவசாயமும், சாதாரண மக்களால் நடத்தப் படும் சிறு, குறு மற்றும் மத்திய வகைத் தொழில்களுமே அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  நமது நாட்டின் பெரும்பகுதி வருமானம் அவற்றின் மூலமே கிடைக்கின்றது. கம்பெனிகள் மூலம் உண்டாகும் வருமானம் பதினைந்து விழுக்காடு மட்டுமே. மேலும்  நமது நாட்டின் 93 விழுக்காடு மக்கள் அமைப்பு சாரா தொழில் துறைகளில் மூலமே வேலை பெறுகின்றனர்.  

இந்தியாவில் சிறிய தொழில்கள் மட்டும் சுமார் ஆறு கோடி எண்ணிக்கை அளவில் உள்ளன. அவற்றைச் சார்ந்து பன்னிரெண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் சிறிய தொழில்களின் நிதித் தேவையில் சுமார் நான்கு விழுக்காடு அளவு மட்டுமே வங்கி மூலமாகக் கிடைக்கிறது. எனவே அவர்கள் அதிக அளவில் வட்டி கொடுத்து வெளியாரிடம் கடன் வாங்கி சிரமப் படுகின்றனர். அதனால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.

ஆனால் அந்தத் தொழில்களுக்கு உதவி செய்வதற்காக இது வரை எந்த வித சிறப்பு அமைப்புகளும் இல்லை. இதை உணர்ந்த மத்திய அரசு முதன் முறையாக ஏப்ரல் 2015 ல் முத்ரா வங்கி என்று ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் சாதாரண நிலையில் உள்ள மிகச் சிறிய தொழில் செய்பவர்களும் எளிதாகக் கடன் பெற்று வருகின்றனர். கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 50,000 கோடி ரூபாய் அளவு நிதி உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள்  தெரிவிக்கின்றன.  

நமது நாட்டில் இன்று வரை பெரும்பான்மை மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை. வங்கிக் கணக்கின் மூலமே சாதாரண மக்கள் அரசின் உதவிகளை ஊழல் இல்லாமல் பெற முடியும். எனவே அரசு ஜன தன் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து அதன் மூலம் பதினான்கு கோடிக்கு மேற்பட்ட மக்களின் கணக்குகளைப் புதியதாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு உலக சாதனையாகும். மேலும் வங்கிக் கணக்குகள் மூலம் மக்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய்கள் பெறுமான எரி பொருள் மானியம், ஏழை மக்களுக்கான ஊரக வேலை வாய்ப்பு ஊதியம் ஆகியவை எந்த விதமான இடைத்தரகரும் இல்லாமல் நேராக அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டுள்ளன.

சாதாரண மக்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மிகக் குறைந்த தொகையில் காப்பீடு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் பல இலட்சக்கணக்கான பேர் அந்தத் திட்டங்களில் இணைந்து வருகின்றனர். பெண் குழந்தைகளுக்காக புதியதாக அதிக வட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’செல்வ மகள்’ திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயற்கை வளங்களை ஏலம் விடுவது சம்பந்தமாக வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்பட்டு, ஊழல் அகற்றப் பட்டு விட்டது. கட்டமைப்புத் துறைகள் மூலமே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். அந்த வகையில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் மூலம்  நாடு சுதந்தரம் அடைந்த பின் முதன் முறையாக பல கிராமங்கள் மின்சாரத்தைப் பார்த்து வருகின்றன.

விவசாயத்துக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்துள்ளன. தொழில் துறைக்குத் திறமையான ஆட்களைத் தயார் செய்யும் வகையில் முதன் முறையாக திறன் மேம்பாட்டுக்கெனத் தனியாக அமைச்சரகம் ஏற்படுத்தப்பட்டு, பல இலட்சம் பேருக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வெளிப்படையான திறமையான நிர்வாகம் அவசியம். அந்த வகையில் அரசு நிர்வாகம் வெளிப்படையானதாக ஆக்கப்பட்டு வருகிறது. அதற்காக நவீன தொழில் நுட்பம் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் நியமனங்களில் திறமைக்கும் நேர்மைக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அரசு அலுவகங்களில் முதன் முறையாக நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைச்சர்கள் முதல் அனைவரும் கடுமையாகப் பணியாற்றுகிறார்கள். மின்னஞ்சல் போன்ற எளிமையான வழிகள் மூலமே மக்களின் பல முக்கியமான சிரமங்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அரசு பல தரப்பட்ட மக்களுடனும் இணைந்து செயலாற்றத் தொடங்கியுள்ளது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. முதன் முறையாக இந்தியா ஐக்கிய நாடுகள் குழுவில் நிரந்த உறுப்பினராகப் பல நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.  ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோக தினமாகக் கொண்டாட வேண்டுமெனப் பிரதமர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முறையாக மிகப் பெரும்பான்மையான நாடுகள் ஒரு மனதாகத் தீர்மானம் கொண்டு வந்தது ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். இந்தியர்கள் வெளி நாடுகளில் சிரமத்துக்கு உள்ளாகும் போது அரசு விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு உதவிகள் செய்கிறது.

நமது நாடு மிகப் பெரியது. இதன் அமைப்பும் செயல்பாடுகளும் பன்முகத் தன்மை கொண்டவை. கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்து வந்த நேருவிய சோசலிச சித்தாந்தங்கள் நமது முன்னேற்றத்துக்கும் எழுச்சிக்கும் பெரும் தடையாக இருந்து விட்டன.   எனவே நாட்டைச் சீரமைப்பதற்குக் கடுமையான முயற்சிகள் தேவை. அந்த முயற்சிகளில் மோடி அரசு தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

எல்லாத் துறைகளிலும் பலன்களைப் பெற கால தாமதமாகலாம்.  நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி தற்போதே உலக அளவில் முதல் நிலைக்குச் சென்று விட்டது. அண்மையில் வெளி வந்துள்ள ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வு 2024 வரை இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் மிக வேகமாக வளரும் என எடுத்துச் சொல்கிறது.

எனவே ஒரு நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறிகள் வலுவாகத் தெரிகின்றன. பிரதமர் மோடி ஒரு அசாத்தியமான தலைவர். நமது தேசத்துக்கென ஒரு உயர்ந்த கனவுடன் அவர் செயல்பட்டு வருவது தெரிகிறது. அதனால் இந்த அரசின் மீது நம்பிக்கை வைக்கலாம்.


( பி.எம்.எஸ். நியூஸ், ஜன.2016)

No comments: