புதிய கல்விக் கொள்கையின் அவசியம்


மத்திய அரசு தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக ”வரைவு தேசியக் கொள்கை 2016- சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் முக்கிய விபரங்களை மக்கள் மன்றத்தின் முன் வைத்துள்ளது. அவை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாக புதிய கல்விக் கொள்கை குறித்து  நாட்டின் பல பகுதிகளிலும் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நல ஈடுபாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்  தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் மற்றும் பொது வெளியில் சூடான விவாதங்கள் நடந்தேறியுள்ளன.  

ஆனால் அவை பெரும்பாலும்  அரசியல் சார்பினை மையப்படுத்தியே அமைந்துள்ளன. மாணவர்களின் நலன்களை  முன் வைப்பதாக இல்லை.  கல்வி என்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அடிப்படையான விசயமாகும். கல்விக் கொள்கையை சொந்த  லாபங்களுக்காக அரசியலாக்குவது என்பது  நமது மாநிலத்தின் துரதிர்ஷ்டமான சூழ்நிலையாக உள்ளது.  

இதற்கு முந்தைய தேசிய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1992 ஆம் வருடம் திருத்தியமைக்கப்பட்டது. இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் உலக அளவில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன. உதாரணமாக தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல வகைகளில் நமது வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இப்போது அது கல்வித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா இன்று உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. வெவ்வேறு விதமான சவால்கள் இருந்த போதும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதனால் முந்தைய தலைமுறையினரை விட  இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் ஒரு சுதந்திர நாடாக எழுபது ஆண்டுகளையும்,   தேசிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத்   தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகளையும் கடந்து வந்துள்ளதால் நிறைய அனுவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

கல்வி என்பது காலத்துக்கேற்ப மாற்றங்களையும் புதிய சிந்தனைகளையும்  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உலக நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் அதில் இடம் பெற வேண்டும். அந்த வகையில் தற்போதைய கல்விக் கொள்கையே கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதிலுமுள்ள   மாணவர்களின் அறிவு, ஆளுமை, திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் முழுமையான மனிதராக உருவாகி,  அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பலன் பெற்று, அதன் மூலம்   நாடும்   முன்னேற்றம் அடைய வேண்டும்.

கடந்த காலங்களில் நமது கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நாம் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. உதாரணமாக அனைவருக்கும் கல்வி என்பது என்பது இன்னமும் அடைய முடியாத இலக்காகவே உள்ளன.

மேலும் கல்வி முறைகளில் பல விதமான அடிப்படைக் குறைபாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்வதற்குப் போதுமான  திறமைகள் இல்லை என்பது பல ஆய்வுகள் வெளிப்படுத்தும்  முடிவாகும்.

எனவே புதிய கல்விக் கொள்கை மேற்குறிப்பிட்ட வகையில் உள்ள குறைபாடுகள் பலவற்றையும் களைந்து, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதாக அமைய வேண்டும். அந்த வகையில் மனித வள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு, முதன் முறையாகப் பல விசயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களாக மூன்று விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முதலாவது கல்வி முறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது;  இரண்டாவது மாணவர்களின் வேலை வாய்ப்புத் தன்மையை அதிகரிப்பது; மூன்றாவது அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்குச் சம வாய்ப்பினை அளிப்பது. இவை மூன்றும் நாட்டின் கல்வி முறைக்கு அடிப்படை என்பதில் எந்த வித  சந்தேகமும் இருக்க முடியாது. 

நமது கல்வித் துறை பல வகைகளில் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டதாக உள்ளது.  தற்போதைய கல்வி முழுமையானதாக இல்லை. ஒரு மாணவனை எல்லா வகைகளிலும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் அதில் இல்லை. கல்வித் துறை நிர்வாகம் பல இடங்களில் சீரழிந்து கிடக்கிறது.

உதாரணமாக தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் திறமையின் அடிப்படையில் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான காரணிகளால் அமைந்துள்ளது நமக்கு அனைவருக்கும் தெரியும். பின்னர் அப்படிப்பட்டவர்கள் நியமனம் செய்யும் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களும் நியாயமானதாக இருப்பதில்லை.  எனவே ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்கும் தேசம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எழுபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கல்வி அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதில்லை.  பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இறுதி வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. பள்ளிக் கல்வி முடித்தவர்கள்  அனைவருக்கும் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே அனைவருக்கும் கல்வி என்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய குறிக்கோளாக முன் வைக்கிறது.

கல்வி என்பது தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அப்போது தான் அது இளைஞர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும். தற்போதைய கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியக் குறைபாடு, அது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் போதிப்பதில்லை என்பதாகும்.

இன்று நமது நாட்டில் பல துறைகளுக்குத் திறன் வாய்ந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கல்வி திறன்களைச் சொல்லிக் கொடுக்காமல் வெறும் ஏடுகளைச் சார்ந்தே உள்ளது. எனவே திறன்களை ஊக்குவிக்கின்ற முறையை இந்தக் கல்விக் கொள்கை மையப்படுத்துகிறது.

மேலும் பாடத்திட்டம் நடை முறை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.  தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் கூட நாட்டில் நிலவும் நடைமுறைகள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அனைத்துப் பாடங்களும் நமது நாட்டுக்குச் சம்பந்தமில்லாத ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கோட்பாடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் அவர்களின் நாடுகளிலேயே தோல்வி அடைந்து விட்டன; எனவே நமது நாட்டுக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்களைக் கொண்ட நாடு. இங்கு புதிய தொழில்களுக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே தொழில் முனைவோர்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தொழில் முனையும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி கொடுக்கப்படும் எனப் புதிய கல்விக் கொள்கை கூறுவது வரவேற்கத்தக்கது.

முறையான கல்வித் திட்டத்துக்குள் வர வாய்ப்பில்லாத பல கோடிப் பேர் இன்னமும் நமது நாட்டில் உள்ளனர். அவர்களும் கல்வி பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை வகுக்க இருப்பது மிகவும் ஆறுதலான விசயமாகும்.

மேலும் நமது நாட்டின் உண்மையான வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை இன்னமும் முறையாகப் போதிக்கப்படுவதில்லை. அதனால் சரியான நாட்டுப் பற்றில்லாத இளைஞர்களை நமது கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மேலும் நீதி போதனை, நற் பண்புகள், இலக்கிய மரபுகள்  ஆகியன போதுமான அளவு பாடத்திட்டங்களில் இல்லை; அதனால் அவை பற்றிய சிந்தனை இல்லாதவர்களையே நாம் தயாரித்து வருகிறோம்.

இன்று உலக முழுவதும் தொழில் நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது. அதன் தாக்கம் கல்வித் துறையில் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டே உலக நடப்புகளைச்  சில நிமிடங்களில் சேகரிக்க முடியும். எனவே தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் போது நாம் பல வழிகளில் பலன் பெற முடியும். அந்த வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியை  கல்வித் துறை அதிக அளவில் உபயோகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆசிரியர் பயிற்சி, தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யும் முறைகள், கல்வி நிர்வாகம்,  திட்டமிடல் மற்றும் நிதி திரட்டுதல்  உள்ளிட்ட பலவும் கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதிய கல்விக் கொள்கையானது பல வகைகளில் முந்தைய கொள்கைகளை விட வித்தியாசமாக உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். முதலாவதாக  இதுவரை எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்விக் கொள்கை என்பது உருவாக்கப்படவில்லை.

இரண்டாவதாக தற்போதைய அளவுக்கு இதுவரை எந்தக் கல்விக் கொள்கையை வகுக்கும் போதும் ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் பரவலாக நடை பெற்றதில்லை. இப்போது முதன் முறையாக வரைவுக் கொள்கை மக்கள் மன்றத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே  நாட்டின் பல பகுதிகளில் மனித வளத் துறை வல்லுநர்களிடம் கலந்துரையாடல்களை நடத்திக் கருத்துக்களைக் கேட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் இலட்சக் கணக்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்றாவதாக புதிய கல்விக் கொள்கையை வகுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  கல்வித் துறையின் செயல்பாட்டுக்கான ஒரு திட்டம் ஒன்று வகுக்கப்பட உள்ளது. அதற்காக மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களின் உத்திகளையும், செயல் திட்டங்களையும் வகுத்துக் கொள்வதை புதிய கொள்கை ஊக்குவிக்கிறது.

தமிழகத்தில் பொது வெளியில் பரவலாகச் சொல்லப் படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வரைவு கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்தவர்களுக்குத் தெரியும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் எனச் சொல்லப் படுவது மிகவும் அபத்தமானதாகும். வரைவுக் கொள்கையின் ஒரு முக்கிய நோக்கமே பிற்படுத்தப்பட்ட,   பட்டியலின மக்கள் மற்றும் மலை வாழ் மக்கள் ஆகியோரின் குழந்தைகளுக்குக் கல்வியை அவசியமாகக்  கொடுப்பதாகும்.

அதே போல சமஸ்கிருதத் திணிப்பு என்பது புதிய கல்விக் கொள்கையில் உள்ளது என்பது நகைப்புக்குரிய விசயமாகும். இப்படிச் சொல்லியே ஐம்பது ஆண்டு காலமாக தமிழைப் புறந்தள்ளி ஆங்கிலத்தை அரியணை ஏறச் செய்து விட்ட பெருமைக்குரியவர்கள் நமது போராளிகள். சமஸ்கிருதம் நமது நாட்டின் தொன்மையான மொழி. முந்தைய கல்விக் கொள்கைகளில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே  இடம் தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய கல்விக் கொள்கையின் விளைவாகத்  தமிழ் நாட்டுக்குப் பலன்கள் இல்லை; சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்;  சமஸ்கிருதத் திணிப்பு ஏற்பட்டுத் தமிழ் அழிந்து போகும் என்பதெல்லாம் குறுகிய அரசியல் தன்மை மட்டுமே கொண்ட பேச்சுக்கள்.

நூற்று முப்பது கோடி மக்களைப் பெற்ற பன்முகத் தன்மை கொண்ட நமது தேசத்தில் அனைவருக்கும் ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை வகுப்பது என்பது இயலாத காரியம். நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக, அதிக அளவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு அதுவும் பரவலான விவாதத்துக்குப் பல மாத காலமாக ஆட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பினருக்கும், தரமான மற்றும் முழுமையான கல்வி என்பது  மையக் கருவாக அமைந்துள்ளது.  வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் வகையிலும், தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலுமான கல்வி என்கின்ற முறையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களின் தனி மனித வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் அதிகரித்து, அதனால் ஒட்டு மொத்த தேசமும்  வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த புதிய கல்விக் கொள்கையானது அவசியமான ஒன்றாக உள்ளது.

( ஓம் சக்தி, பிப்.2017)

No comments: