பொருளாதாரத்தின் மையம் நமது குடும்பங்கள்




பொருளாதாரம் என்றாலே இரண்டே வகையான சித்தாந்தங்கள் தான்; ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று கம்யூனிசம் என்கின்ற கருத்து   மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதுவமே உலக முழுமையும் அதிகமான கேள்விகளின்றி பரவிக் கிடந்தது.  அவற்றுக்கு எதிரான சில கருத்துக்கள் சிந்தனையாளர்கள் சிலரால்  எடுத்து வைக்கப்பட்டாலும்  அவை  முழுமையானதாக அமையவில்லை.

 நமது நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, சுதந்திரத்துக்குப் பின்னர் அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகு முறைகள் குறித்து பரவலாகக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  எனவே  சுதந்திரம் பெற்ற பின்னர், நேருவின் காங்கிரஸ் அரசு பொருளாதார அணுகுமுறைகள் குறித்து எந்த விதமான பெரிய விவாதங்களுமின்றி மேற்கத்திய சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்தது. அதன் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே ஐரோப்பியாவில் தோன்றியவை. ஐரோப்பாவுக்கெனப் பெரிய வரலாறோ, அனுபவமோ கிடையாது.  பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் அங்கு நிலவிய குறுகிய அனுபவங்களை வைத்து அவர்களின் கண்ணோட்டத்தில்   அந்தச் சித்தாந்தங்கள் எழுதப்பட்டன.  அவை உலக முழுமையையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை அல்ல.

 நீண்ட நெடிய வரலாற்றையும், பல்வேறு வகையான சிறப்புகளையும் பெற்றது நமது நாடு. உயர்ந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து தனித் தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட தேசம் நம்முடையது.  பல நூற்றாண்டுகளாக உலகின் எந்த நாட்டையும் விட பொருளாதாரச் செழிப்பும் வரலாறும் இங்கு நிலவி வந்ததைக் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக உலக அளவில் நடந்து வரும் ஆய்வுகள் தெளிவாக்குகின்றன.

மேற்கத்திய சிந்தனைகளே உலக முழுவதும் மட்டுமன்றி, நமது நாட்டிலும் கோலோச்சி வந்த சமயத்தில், நமது பண்பாடு மற்றும் உயர் சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டுக்குப் பொருத்தமான ஒரு தத்துவத்தை முன் வைத்தவர் பண்டித தீன தயாள் உபாத்யாயா அவர்கள். 1965 ஆம் வருடம் முதலாளித்துவமும் கம்யூனிசமும் மிக முக்கியமான இரு பெரும் சித்தாந்தங்களாக நடைமுறைப் பட்டு வந்த காலத்தில்,  அவற்றுக்கு மாற்றாக நமது நாட்டின் மண் வாசனை சார்ந்த சிந்தனைகளை அவர் எடுத்து வைத்தார்.

மேற்கத்திய கோட்பாடுகளில் பொருள் சார்ந்த வாழ்க்கை முறைகளே மையமாக உள்ளன. அவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். அவை மனிதனின் முழுமைத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  எனவே ஒட்டு மொத்த மனிதனை மையமாக வைத்த சிந்தனா முறையை நாம் உருவாக்கிக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

அதற்காகத் தான் தனது சிந்தனைகளை ‘ஒருங்கிணைந்த மனித நேயம்’ என்கின்ற அடிப்படையில் அவர் முன் வைத்தார். அவை மிகவும் ஆழமானவை. தொன்மையான நமது தேசத்தின் உயர் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையினையும் அடிப்படையாகக் கொண்டவை. மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல; மனம், ஆன்மா, புத்தி ஆகிய அனைத்தையும் ஒரு சேரக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.

மேற்கத்திய பொருளாதாரச் சித்தாந்தங்கள் குவியல் தன்மையை ஆதராமாகக் கொண்டவை.  அதனால் மனித இனம் தனது நல்ல  குணங்களை இழந்ந்துள்ளது. எனவே மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப் பரவலான பொருளாதார முறை வேண்டும் என அவர் கூறினார். ’ கடவுளின் உயர்ந்த படைப்பான மனிதன் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டுள்ளான். அவனைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அவனுடைய பெருமையை உணர வைத்து, அவனுடைய திறமைகளை விழித்தெழுமாறு செய்து, அவனது தெய்வீக உயரங்களை அடைய முயற்சிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும். அது பரவலான பொருளாதாரம் மூலமே முடியும்.’

அவரது கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பதை மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டும் தோற்றுப் போய் விட்ட இந்தக் காலத்தில் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் அவர் எவ்வாறு காலத்தை மீறிய ஒரு தத்துவ ஞானியாக விளங்கியிருக்கிறார் என்பதுவும் தெரிய வருகிறது.  மனித இனத்துக்கு விரோதமான சித்தாந்தமான கம்யூனிசம் முழுதும் தோற்றுப் போய் விட்டது.  மக்களின் ஒட்டு மொத்த  வளர்ச்சிக்குப் பொருத்தம் இல்லாததாக மேற்கத்திய முதலாளித்துவம் உணரப்பட்டு விட்டது. 

நமது நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் மிகப் பெரும்பான்மையான காலம் அதிகார வர்க்கம் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டிய அணுகு முறைகள் மற்றும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த  முயற்சித்து வந்தது.  அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளை அது உணரவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ஆனால் நடைமுறையில் இன்று வரை நமது பாரம்பரியம் சார்ந்த குடும்ப அமைப்பு முறையே சமூக, கலாசார, பொருளாதார விசயங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் நமது பொருளாதாரம் இன்றைக்கும் பெருமளவு வலுவாக இருந்து வருகிறது. அதனால் நமது தேசத்தில் ‘ ஏட்டுச் சித்தாந்தங்களை மீறிய முன்னேற்றம்’ தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது.

பாரம்பரியம் மிக்க நமது குடும்ப அமைப்பு முறை இந்தியப் பொருளாதாரத்துக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்து வருகிறது என்பது குறித்து அறிவு ஜீவிகளோ, பல்கலைக் கழகங்களோ எடுத்துச் சொல்வதில்லை என்பது நமது பெரிய குறைபாடு. ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை என்பதை நமது கள ஆய்வுகளும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கும் உணர்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை  அதிகமான சேமிப்பு, அதிக மூலதனம், கடின உழைப்பு, தொழில் முனையும் தன்மை உள்ளிட்ட காரணிகள் தான். இவை அனைத்தும் குடும்பங்களின் மூலமாக நமது நாட்டில் இயற்கையாகவே கிடைக்கின்றன.

சேமிப்பது என்பது நமது மக்களின் வாழ்க்கை முறை. அது  சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கின்றது. அதனால் இன்று நமது நாடு உலக அளவில் அதிகமான சேமிப்புகளைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.  சுதந்திரம் வாங்கிய போது நமது நாட்டில் ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசித்து வந்தனர். ஆனால் அப்போது கூட சேமிப்பு ஒன்பது விழுக்காடு இருந்தது. இன்றைக்கு  பணக்கார நாடுகள் பலவற்றில்  ஒன்பது விழுக்காடு சேமிப்பு என்பது இயலாத காரியம்.

பின்னர் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்து கடந்த பல வருடங்களாகவே முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட அளவில் சேமிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.  அதனால் முதலீடுகளுக்கான தொகை உள் நாட்டிலேயே அதிக அளவில் கிடைக்கின்றது. எனவே வெளி நாடுகளை அதிகமாக நம்பக் கூடிய பொருளாதாரமாக நமது நாடு இருக்கவில்லை. அதிகமான சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் காரணம் தங்களை  விடத் தமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென எண்ணும் பெற்றோர்களைக் கொண்ட குடும்ப அமைப்பு முறைதான்.

குடும்பத்தின் நலனுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பது நமது கலாசாரம் சொல்லும் தர்மம். அதற்காகத் தாய்மார்களும், தந்தையர்களும், மூத்தவர்களும் அதிக அளவில் உழைப்பை மேற்கொள்கின்றனர். தங்களின் சொந்த விருப்பங்களைத் துறந்து குடும்ப நலனையே முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.  அதற்காகப் புதிய தொழில்களில் நுழைகின்றனர். பல விதமான சிரமங்களையும் துணிச்சலாக மேற்கொள்கின்றனர்.  அதன் மூலம் குடும்பத்தை முன்னேற்றுகின்றனர். அதனால் நாடும் வளர்கின்றது.

சுதந்திரம் பெறுகின்ற போது நமது நாட்டின் விவசாயம், தொழில்,வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளும் ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டிருந்தன. தொன்று தொட்டு உலகின் செழிப்பான தேசமாக விளங்கி வந்த இந்தியா அந்நியர்களால் பெருமளவு சிதைக்கப் பட்டிருந்தது.  ஆனால் சுதந்திரத்துக்கு அப்புறம்  உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவாகி வந்து கொண்டுள்ளது. அதற்குக் காரணம் குடும்பம் சார்ந்த நமது பல்துறை வளர்ச்சியாகும்.

கடந்த எழுபது வருடங்களில் தொழில், வணிகத்துறைகள் பெரிய  வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.  இந்தியப் பொருட்கள் இன்று உலகின்பல பகுதிகளிலும் விற்பனையாகி வருகின்றன. நமது தொழில் மையங்களான சூரத், லூதியானா, திருப்பூர், கரூர், ஆக்ரா உள்ளிட்டவை உலக முழுவதும் பிரபலமான பெயர்களாக உள்ளன. அதற்குக் காரணம் நமது மக்களின் தொழில் முனையும் தன்மை.

பல வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக இருந்து வந்த இடங்கள் இன்று நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. சிவகாசி, நாமக்கல், திருச்செங்கோடு, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின்  பகுதிகள்  அனைத்தும் நமது சாதாரண மக்களின் கடும் உழைப்பால் நமது நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. நமது குடும்பங்கள் மற்றும்  சமூகங்களின் குணங்களே அதற்கு அடிப்படையாகும்.

சீரழிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம், உலகமே எதிர்பார்க்கும் பெரிய பொருளாதார சக்தியாக ஓரு எழுபது வருடத்துக்குள் மாறியிருக்கின்ற அதிசயம் உலகப் பொருளாதார வரலாற்றில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. அது நமது நாட்டில் நடந்து வருகின்றதென்றால் அதற்குக் காரணம் தொன்மை வாய்ந்த நமது கலாசாரமும், குடும்ப மற்றும் சமூக நெறி முறைகளும் தான். எனவே நமது பொருளாதார அணுகுமுறை என்பது மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றானது. அதைத் தான் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் எடுத்து வைத்தார்கள். அதனை அங்கீகரித்து முழுவதும் நடைமுறைப் படுத்துவது நமது கடமை.

( ஒரே நாடு – பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா சிறப்பிதழ், சென்னை, ஏப்ரல் 2017)

No comments: