சுதேசி மூலம் சுயசார்பு – இந்த நூற்றாண்டை நமதாக்குவோம்




கொரோனா நோயின் தாக்கம் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. அதில் அடிபட்டுப் போனது உயிர்களும் பொருளாதாரங்களும் மட்டுமல்ல. மேற்கத்திய கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் தான். உலகமயமாக்கலை உருவாக்கி வளர்த்த நாடுகள், இப்போது தேசியம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை வலியுறுத்துகின்றன


பாரதப் பொருளாதாரம் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. பொது யுக காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்,  2020 வருடங்களுக்கு முன்னர் உலகப்   பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கினை வைத்து முதல் நாடாக விளங்கியது. மேலும் ஐரோப்பியர்கள் நமது பொருளாதாரத்தைச் சீரழிக்கும் வரை செல்வச் செழிப்புடன் நீடித்த தன்மை கொண்டதாக இருந்து வந்தது


அதற்குக் காரணம் நமது முன்னோர்களின் சுதேசியும் சுயசார்பும் சேர்ந்த அணுகுமுறைகள் மற்றும்  தேசத்தின் பண்பாட்டின் மேல் கட்டமைக்கப்பட்ட அடிப்படை ஆதாரங்கள். ஆனால் அந்நியர்களின் ஆயிரம் வருட கால ஊடுருவல்கள் மற்றும் ஆட்சிகளால் நமது பாரம்பரிய அணுகுமுறைகள் சிதைக்கப்பட்டன.


சுதந்திரத்துக்குப் பின் நமக்கான கொள்கைகளை நாமே வகுக்க வாய்ப்புக் கிடைத்த போது நேருவின் அரசு சோசலிச அணுகுமுறையைத் திணித்தது. பின்னர் மற்றொரு அந்நிய கோட்பாடான உலகமயமாக்கல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதனால் ஆரம்பம் முதல் பெரும்பாலான காலம் கொள்கை வகுப்பதில் வெளிநாட்டு தாக்கங்களே அதிகம்.  


ஆனால் அவற்றையெல்லாம் மீறி நமது சமூகங்கள் இந்த மண்ணுக்கே உரித்தான வகையில் செயல்பட்டு வந்தன. 1950-51 ஆம் வருடம் நாற்பத்தைந்து விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த போதும் 9.5 விழுக்காடு சேமித்தனர். சுதந்திரம் பெற்றதும் மக்கள் வெவ்வேறு துறைகளில் தமது உழைப்பைச் செலுத்தி தொழில்களில்  ஈடுபட்டனர். நமது குடும்ப அமைப்பு, உறவுகள் சார்ந்த வாழ்க்கை முறை, தொழில் முனையும் தன்மை ஆகியன அதற்கு ஊக்கம் கொடுத்தன


தமது முன்னேற்றத்துக்குத் தேவையானவற்றை மக்கள் தாமே உருவாக்கினர். அதற்கு நமது பாரம்பரியமும் கலாசாரமும் அடிப்படையாக அமைந்தன. உதாரணமாக தமிழகத்தின் தென் பகுதிகளில் தொழில் துவங்க தம்மிடம் தேவையான நிதி வசதி இல்லாததால், உறவை மையமாக வைத்து மகமை முறையை உருவாக்கினர்


நாடு முழுவதும் உள்ளூர் சமூகங்கள் அங்குள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டனர்.  அதனால் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மட்டும் சுமார் ஆறு கோடியே நாற்பது லட்சம் உள்ளன. அவற்றை உருவாக்கியவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பெரிய பின்னணி இல்லாத முதல் தலைமுறையினர். அவர்களால் நாடு முழுவதும் இப்போது ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தொழில் மற்றும் வியாபார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன


இவையெல்லாம் அமைதியான முறையில் கடந்து எழுபது வருடங்களாக நடந்து வருவதால், நாடு இன்று உலகில் மிக வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றுக்கெல்லாம் போதிய அங்கீகாரமும் அரவணைப்பும் இல்லை. அதனால் அவை அதிக அளவில் வளர முடியவில்லை. வளங்களும், வாய்ப்புகளும் இருந்த போதும் சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே பொம்மைகள் விற்பனையில் கூட சீனாவின் ஆதிக்கம்


எனவே எல்லா மட்டங்களிலும் தேசம் சார்ந்த அணுகு முறைகளை நாம் முன் வைக்க வேண்டும். அதற்காகத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் திரு மோகன் பகவத் அவர்கள் சுதேசி அணுகுமுறையின் அவசியம் குறித்து பேசியுள்ளார். பிரதமர் அவர்களும் சுதேசி மற்றும் சுயசார்புத் தன்மை பற்றி வலியுறுத்தியுள்ளார்


இந்தக் கருத்துக்களை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளில் உள்ளவர்களையும் இணைத்து ஒரு பெரிய இயக்கமாக செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு பொருள்களை வாங்குவதிலிருந்து தேசம் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துவது வரை மாற்றங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் நமது தேசத்தை மீண்டும் முதன்மை நிலைக்குச் சீக்கிரமே கொண்டு செல்ல வேண்டும்


( விஜய பாரதம், ஜுன் 12,2020 )

No comments: