பிருஹதாரண்யக உபநிஷதம் - வாழ்த்துரை

 

வாழ்த்துரை

 

பேரா..கனகசபாபதி

செயலர் மற்றும் அறங்காவலர்

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம்

புது டெல்லி

 

பாரத தேசத்தில் இந்து ஞான மரபு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறு பெற்று நீடித்து  நிற்பது. அதன் அடிப்படையான உருவாக்கமே உபநிஷதங்கள். அவை என்றைக்கும் நிலைத்து நிற்க கூடிய வாழ்வின் அத்தியாவசியமான உண்மைகளை உணர்த்துவன. உபநிஷதங்களிலும், தமிழிலும் ஆழமான தேர்ச்சி பெற்ற பேரா. செ. ஞானபூபதி ஐயா அவர்கள் தொடர்ந்து உபநிஷதங்களை அற்புதமான முறையில் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது  பிருஹதாரண்யக உபநிஷதம் பற்றிய இந்த அருமையான நூல் வெளிவந்துள்ளது.  

பிருஹதாரண்யக உபநிஷதம் முதன்மையான உபநிஷதங்களில் ஒன்றாக உள்ளது. இந்து பண்பாட்டில் ஆரம்ப உபநிஷத நூல்களில் ஒன்று. இது இந்து தர்மத்தின் வெவ்வேறு சிந்தனை மரபுகளுக்கான ஒரு முக்கிய நூல். இது உருவானதன் கால கட்டம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொது யுக காலத்துக்கு முன்னர், அதாவது இப்போதிருந்து சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, அதன் பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிருஹதாரண்யக என்றால் வனம் என்று பொருள் கொள்ளலாம். இது ஆறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பெரிய தொகுப்பு. இந்து தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான கர்மா, ஆத்மா, பிரம்மன், மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை உள்ளிட்ட முக்கிய விசயங்கள் பற்றி இது பேசுகிறது. இதன் பல பகுதிகள் அற்புதமான உரையாடல்களாக அமைந்துள்ளன. ஞானி யாக்யவல்கர் மற்றும் ஜனகரிடையே நடக்க கூடிய உரையாடல்கள் வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை உணர்த்துகின்றன. யாக்யவல்கர் மற்றும் அவரது மனைவி மைத்ரேயி இடையே நடக்கும் உரையாடல் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் பற்றி எடுத்துரைக்கின்றது.

பிரபஞ்சம் உருவானது பற்றிய வேதக் கோட்பாடுகளில் ஒன்று குறித்துச் சொல்லி இந்த உபநிஷதம் தொடங்குகிறது. அது உருவாவதற்கு முன்னால் எதுவுமே இங்கில்லை; பின்னர் பிரஜாபதி ஒன்றுமில்லாதில் இருந்து அதை உருவாக்கினான் எனக் குறிப்பிடுகிறது.

அந்தப் பொருள் குறித்துச் சொல்லும் போது அதன் சமஸ்கிருத மூலத்தை தமிழில் கீழ்கண்ட எளிமையான பாடல் வழியாக  ஆசிரியர் கூறுகிறார்.

எதுவுமிங்கே ஆதியில் இருக்கவில்லை;

      எங்கெங்கும் இறைவன் தான் நிறைந்திருந்தான்.

இது தவத்தால் நிறைந்திருந்த தென்றும் சொல்வர்;

     ஏனென்றால் தவமே அவ்விறைவன் தான்

இவ்வாறு நூல் முழுவதும் எளிய தமிழில் பாடல்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து உரைநடை வாயிலான விளக்கங்கள் நமக்கு உபநிஷதத்தை சுலபமாக புரிந்து கொள்ள உதவுகிறது. நூலாசிரியரின் விளக்கத்துக்குப் பின்னர் ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி ஆசுதோஷானந்தர் உள்ளிட்ட மகான்களின் விளக்கங்கள் நூலுக்கு வலு சேர்க்கின்றன. மேலும் கடினமான பதங்களுக்கும் போதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாம் நடைமுறையில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய பாடல்  இந்த உபநிஷத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது. அதன் தமிழாக்கம்:

உண்மையற்றதிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்க;

 இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்க;

மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருநிலைக்கு என்னை அழைத்துச் செல்க

ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

அதே போலஅஹம் பிரமாஸ்மிஎன்ற கருத்தும் இந்த நூலிலுருந்தான் வருகிறது.

இந்த நூல் வாழ்க்கை பற்றிய சில நுட்பமான விசயங்களை எடுத்துச் சொல்கிறது. உதாரணமாக, ஆத்மா என்பது மகனை விடவும், செல்வத்தை விடவும், மற்றெல்லாவற்றையும் விடவும் முக்கியமானது எனச் சொல்கிறது. பிரம்மன் என்கின்ற கருத்தை விவரிக்கிறது. பிராணன் என்னும் செல்வத்தை அறிந்து உணர்வோருக்குப் பெரும் செல்வம் வாய்க்கும் எனக் கூறுகிறது.  இந்த உடல் கணவன்மனைவி என இருவராலும் நிரப்பப்படுவது எனச் சொல்கிறது. ஒருவன் அவன் செயல்களைப் பொருத்தே அமைகிறான்  என எடுத்துரைக்கிறது.

மேலும் இந்த நூல்  தற்போது பிரபலமாக கருதப்படும் உளவியல் கோட்பாடுகள் சம்பந்தமான விசயங்களை எடுத்துச் சொல்கிறது. அதனால் இது முந்தைய கால கட்டங்களில் நிபுணர்களால் உளவியல் கோட்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள அடிப்படையான நூலாகவும்   இது அமைந்து வந்துள்ளது.

உபநிஷதங்கள் பாரத தேசம் உலகுக்கு அளித்த நன்கொடை. அதை அனைவரும் படித்து தெரிந்து கொள்வது அவசியம். நமது கடமையும் கூட. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சமகாலத்தில் எளிய தமிழில் வரவில்லை.அந்த வகையில் ஐயாவின் பணி மகத்தானது. அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி புத்தகங்கள் வெளிவர காரணமாக இருக்கும் எக்ஸ்லான் திரு கே.ராமசாமி அண்ணா அவர்கள் நமது மனமார்ந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

இந்த நூலை தமிழ் கூறும் நல்லுலகம் அவசியம் வாங்கி படித்து பயனுறை வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏப்ரல், 2024

 

 

 

No comments: