அண்மையில் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பல தவறான கருத்துக்களைச் சொல்லி மொழியை வைத்துப் பிரிவினை அரசியல் செய்து வருகின்றனர். அவர் சொன்னது குறிப்பிட்ட அந்த திட்டத்துக்கு நிதியளிக்க மாநில அரசு முன்னர் ஒப்புக்கொண்டபடி செயல்பட்டு மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் இந்தி திணிப்பு எங்கே வந்தது?
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆரம்பம் முதலே தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. 1947ல் நாடு சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின்னரும், தேசிய நோக்கில் கல்வித் திட்டம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்றைக்கும் தமிழகத்தில் படிக்கின்ற மாணவனுக்கு மாமன்னன் ராஜேந்திர சோழனின் பேரரசு மற்றும் கடல் வணிகம் குறித்தோ, பேரரசி வேலு நாச்சியார் குறித்தோ அண்மைக் காலத் தமிழக ஆளுமைகள் குறித்தோ எதுவும் தெரியாது.
பாடத்திட்டங்களில் சரியான வரலாறு மட்டுமல்லாமல், நடைமுறை மற்றும் செயல்முறை அறிவு எதுவும் போதிக்கப்படுவதில்லை. உதாரணமாக பொறியியலில் எலக்டிரிக்கல் பட்டப்படிப்பை கல்லூரியில் முடித்து வந்த மாணவனுக்கு, வீட்டில் மின் இணைப்பு போய்விட்டால் சுலபமாகப் போடத் தெரியாது. எனவே படிப்பு வாழ்க்கைக்கு முழுவதும் உதவும் வகையில், அது ஒவ்வொரு மாணவனையும் அவர்கள் விரும்பும் துறையில் சிறந்து விளங்கி, நமது பண்பாடு பற்றிய அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
இயற்கையாகவே குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் நான்கு அல்லது ஐந்து மொழிகளைக் கூடக் கற்றுக் கொள்ள முடியும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் மூன்று மொழிகளைக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கின்றது. அதில் தாய் மொழி கட்டாயமாக்கப்பட்டு ஆரம்ப நிலைகளில் அனைவருக்கும் தாய் மொழிக் கல்வியைப் பரிந்துரைத்துள்ளது. மாணவர்கள் விரும்பினால் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை தாய் மொழி வழிக் கல்வி உறுதி செய்யப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் தாய்மொழியைக் கட்டாயமாக்க்கிய ஒரு கொள்கையை மோடி அரசு கொண்டு வந்துள்ளது ஒரு பெரிய மாற்றமாகும். இது மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட ஆளுமைகள் வலியுறுத்தி வந்த ஒன்று. தமிழ் மொழியைக் காப்பாற்றுவது நாங்கள் தான் என்று சொல்லும் திமுகவினர் ஏன் அதை வரவேற்கவும், நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர்? இன்று வரை அதில் இந்தி திணிப்பு உள்ளது எனப் பொய்யாகத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஆனால் எந்த மொழியும் திணிப்பு இல்லை என்பது தெளிவாக ஆவணங்களில் உள்ளது. தற்போதும் மத்திய அரசு அதை உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது மொழி என்னவென்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.
எனவே திமுகவின் உண்மையான நோக்கம் இந்தி எதிர்ப்பு என்பதாகத் தெரியவில்லை. தேர்தலின் போது திமுக வட மாநில மக்கள் வாழும் பகுதிகளில் இந்தியில் பிரசுரங்களை விநியோகம் செய்கிறது. வட மாநில தொழிலாளர்கள் வாழும் பகுதியில் டாஸ்மாக் கடையை அடையாளம் குறிப்பிட இந்தியில் விளம்பரப்பலகை உள்ளது. திமுக 1960 களில் செய்து போல இப்போதும் மொழி அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அது தோற்றுப் போகும். ஏனெனில் காலம் வெகுவாக மாறி விட்டது. தற்போது இந்தி உள்ளிட்ட மும்மொழிகள் சொல்லிக் கொடுக்க கூடிய பல பள்ளிகளை திமுக கட்சித் தலைவர்களே நடத்தி வருகிறார்கள்.
ஆனால் திமுகவின் போலி இந்தி எதிர்ப்புக் கொள்கையால் பாதிக்கப்படுவது ஏழை குழந்தைகள் தான். அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தினர் அனைவரும் தங்களின் குழந்தைகளை மும்மொழிக் கல்வி கற்றுக் கொடுக்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்கின்றனர். நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த பெற்றோர்களும் மூன்று மொழிகளைத் தம் குழந்தைகள் படிப்பதையே விரும்புகின்றனர். ஆனால் சாதாரண மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியினைக் கற்றுத்தர திமுக அரசு 1967ல் ஆட்சிக்கு வந்தது முதல் மறுத்து வருகிறது. இது அநியாயம்.
கல்வி என்பது அடிப்படை உரிமை என்னும் போது, விரும்பிய மொழியைக் கற்பதும் அடிப்படை உரிமை தானே? அதை எப்படி ஒரு மாநில அரசு மறுக்க முடியும்? அதுவும் அமைச்சர்களின் குழந்தைகள் விரும்பிய மொழிகளைக் கற்கும் போது மற்றவர்களுக்கு மறுக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? வருங்காலத்தில் மற்ற மாநில மாணவர்களோடு போட்டி போடும் போது தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் இரண்டு மொழிகளோடு நிற்க வேண்டும்?
இந்தி கற்றுக் கொள்வதைக் கூட மாணவர்கள் விரும்பினால் தடுப்பதற்கு ஆளும் கட்சிக்கு உரிமை கிடையாது. அது மக்களின் உரிமை. நமது நாட்டின் பெரும்பான்மையோர் பேசக்கூடிய மொழி இந்தி. அந்த மொழி தெரிந்தால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, பழகவோ, வேலை பார்க்கவோ, தொழில் செய்யவோ சுலபமாக இருக்கும். எனவே அதை ஏன் மாணவர்கள் படிக்க கூடாது? அதே சமயம் உருது மொழியை மட்டும் எப்படி மாநில அரசு ஆதரிக்கிறது? அது வாக்கு வங்கி அரசியல் தானே? எங்கே போகிறது அரசின் மொழிக் கொள்கை?
இரு மொழிக் கொள்கை என்பது மாநில அரசின் கொள்கை என்பது உங்களின் போலி வாதம். அதை தமிழகத்தில் எப்போதோ திமுக தோற்கடித்து விட்டது. இரு மொழிக் கொள்கை பேசும் அரசால் மூன்று மொழிப் பள்ளிகளை மூட முடியுமா? அவை வருடா வருடம் அதிகமாகி வருகின்றனவே? அரசுப் பள்ளிகளை முறையாக அரசு நடத்த இயலாத காரணத்தினால் தனியார் பள்ளிகள் பெருகி வருகின்றன. கல்வியில் முன்னோடி என மார் தட்டிக் கொள்ளும் திமுக ஆட்சியில் மரத்துக்கு அடியில் இன்னும் ஏன் வகுப்புகள் நடக்கின்றன? திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிகளை நடத்த ஏன் தனியார் உதவியை நாடுகிறீர்கள்?
தமிழ் எங்களின் உயிர் மூச்சு எனச் சொல்லும் திமுகவினர் ஆட்சியில் இன்றைக்குத் தமிழின் நிலைமை என்ன? தமிழ் மொழி பள்ளிகளில் கட்டாயமில்லை. உலகின் தொன்மையான மொழியைப் படிக்காமலேயே ஒருவர் பட்டம் பெற முடியும் என்கின்ற அவலம் இன்றும் தமிழகத்தில் நிலவுகிறது. தமிழ் தெய்வீக மொழி. பக்தியோடு இணைந்தது. தெய்வீகம் இல்லாத தமிழ் இல்லை. உங்களுக்குத் தெய்வீகம் பிடிக்காது என்பதற்காக தமிழைப் புறக்கணித்தீர்கள்? காவியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், அறநெறி எனப் பலவற்றையும் பாடத்திட்டங்களிலிருந்து எடுத்தீர்கள்? அதன் விளைவாக இன்று தமிழில் சரியாகப் பேசவும் எழுதவும் தெரியாத தலைமுறைகளை உருவாக்கி விட்டீர்கள்.
இந்தி தான் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இங்கே நுழைய நீங்கள் அனுமதி கொடுக்கவில்லையே? இந்தியைச் சொல்லித்தானே ஏழை கிராம மாணவர்களுக்கு மாவட்டத்துக்கு ஒன்று வீதம் மத்திய அரசால் முழுவதும் இலவசமாக தரமான கல்வியை கொடுக்கும் நவோதயா பள்ளிகளை கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக மறுத்து வருகிறீர்கள்? உங்களின் தோழமைக் கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவை செயல்பட்டு வரும்போது, பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் வாய்ப்புகளைப் பறித்த பின்னரும் எப்படித் தமிழ் அழிந்தது?
பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாட்டின் பிற மொழிகளிலும் உலக அளவிலும் தமிழ் படைப்புகளை கொண்டு சேர்த்தி வருகிறார். அதனால் இன்று ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் தமிழ் கற்று வருகிறார்கள். கடந்த அறுபது வருடங்களாக தமிழைப் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல என்னவென்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?
தேசிய கல்விக் கொள்கை வந்த பின்னால் இன்று பல மாநிலங்களில் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பாடப்புத்தகங்கள் இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வந்து அவை அங்கு போதிக்கப்படுகின்றன? தமிழகத்தில் ஏன் இன்னமும் பல் துறைப் புத்தகங்கள் முழுமையாகத் தமிழில் கொண்டு வரப்படவில்லை? வட மாநிலங்களில் இந்தி மொழியில் எல்லாத் துறைகளிலும் உயர்கல்வி கற்றுத்தரப்படும் போது, இங்கு தமிழ் மொழிக் கல்வியை ஏன் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்த முடியவில்லை?
நமது மாணவர்கள் நாட்டில் அதிக மக்கள் பேசும் இந்தி உள்ளிட்ட மொழிகளைக் கற்பதன் மூலம் தமிழ் படைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும். மாநில அரசின் இருமொழிக் கொள்கை தமிழ் நாடு முழுவதும் வேகமாகப் பரவுவதைத் தடுக்கிறது.
எனவே மொழியைத் தமது சுய நலத்துக்காக அரசியலாக்கி மக்களிடையே உள்ள எதிர்ப்புகளை மடை மாற்றுவதற்காக திமுக இப்போது மும்மொழிக் கொள்கையைக் கையில் எடுத்துள்ளது. அறிவார்ந்த தமிழ் மக்கள் அவர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு, தமிழுக்கு முதலிடம் கொடுத்து மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வர மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
( www.spmrf.org)
No comments:
Post a Comment