மனித இனம் தனது வாழ்க்கையை கணவன் – மனைவி- குழந்தைகள் – பெற்றோர் எனக் கூடி வாழ்ந்து சந்ததிகளை உருவாக்கி வாழ்வதற்குச் சமைக்கப்பட்ட முறைதான் குடும்ப அமைப்பு. அதில் பாரத நாட்டுக் குடும்ப அமைப்பு முறையானது தனிச் சிறப்புக்களைப் பெற்றது. நமது தொன்று தொட்ட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்களை வைத்து சிறந்த தலைமுறைகளை உருவாக்கி விட்டுச் செல்லும் ஒரு உயர்ந்த முறையானது இங்கு உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகத்தான் பண்டைய காலந்தொட்டு பண்பட்ட வாழ்க்கை முறை, பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்ட சாதனைகள், மனித இனத்துக்கே முன்னோடியாக வாழ்ந்த தன்மை என ஒரு உயர்ந்த நோக்குடன் வாழும் பெருமைக்குரிய சமுதாயமாக பாரத தேசம் விளங்கி வந்தது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது தேசம் பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தது. இங்கு ஆட்சியைக் கைப்பற்றிய அந்நிய சக்திகள் நம்மைப் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கிப் பெரும் சிதைவுகளை உண்டாக்கின. அதனால் நமது பாரம்பரிய அமைப்பு முறைகள் பலவும் கடும் சவால்களை எதிர்கொண்டன. அதனால் அவை பல சிரமங்களுக்கு ஆளாகின. ஆயினும் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது குடும்ப அமைப்பு முறையானது இன்னமும் உறுதியான அடிப்படைகளைக் கொண்டு சிறந்து விளங்கி வருகிறது.
குடும்பமே மனித வாழ்க்கையின் ஆதாரம். குடும்பம் நிறைவானதாக அமைந்தால் மனித வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். அதே சமயம் குடும்பம் சச்சரவுகள் நிறைந்ததாக இருந்தால் வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்து அர்த்தமில்லாததாக அமைந்து விடும். நிறைவான குடும்பங்கள் அமைதியான சமுதாயம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய தேசத்துக்கு ஆதாரமாக இருக்கும். உடைந்து போன குடும்பங்கள் சிதைவுகள் நிறைந்த சமுதாயம் மற்றும் பிரச்னைகள் நிறைந்த பொருளாதாரங்களுக்கு வழி வகுக்கும். பல மேற்கத்திய நாடுகள் இப்போது பெரும் சமுதாயப் பிரச்னைகள் மற்றும் மோசமான பொருளாதார நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்குக் காரணம் அங்கு வேகமாக அதிகரித்து விட்ட சிதைவுற்ற குடும்பங்களே காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாரத தேசத்தைப் பொறுத்த வரையில் பண்டைய காலந்தொட்டு இன்று வரை வலுவான குடும்பங்களே நமக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து பதினெட்டு –பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காலூன்றி நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளைத் திட்டமிட்டுச் சிதைக்கும் வரை, ஆரம்ப காலந்தொட்டுப் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக உலக அரங்கில் முதல்நிலை நாடாகப் பாரதம் விளங்கி வந்ததை வரலாறு தெளிவாக்குகிறது. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாகிப் பல்வேறு துறைகளிலும் நாடு வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சுதந்திரம் பெற்று வெறும் எழுபத்தெட்டு ஆண்டுகளில் இன்றைக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் பீடு நடை போட்டு முன்னேறி உலகின் பிற நாடுகளுக்கு முன்னுதாரனமாக விளங்கிக் கொண்டு வருகிறது. அவை அனைத்துக்கும் அடிப்படையான காரணம் பாரதீயக் குடும்பங்கள்.
பாரதக் குடும்பங்களின் சிறப்புகளாக ஐந்து அம்சங்களைச் சொல்லலாம். பாரதக் குடும்பங்கள் குடும்பங்கள் மன நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமாக
விளங்கி வருகின்றன. வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே நிறைவான வாழ்க்கை தான். பாரதக் குடும்ப முறை அதனைத் தருகிறது. எத்தனையோ சிரமங்களைச் சந்தித்த போதும் ஏழை மக்கள் கூட மன நிறைவுடன் இருப்பதற்குக் காரணம் குடும்பம்தான். அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கம் கொடுக்கும் பெரியவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்து கணவன் மனைவியாக வாழ்ந்து குழந்தைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் தம்பதியர், கள்ளம் கபடம் இல்லாமல் விளையாடி வாழும் குழந்தைகள் எனக் குடும்பம் என்பதே ஒரு தனி உலகம். அதற்காக இணைந்து பெரியவர் முதல் சிறியவர் வரை வாழும் வாழ்க்கை மிகச் சிறப்பானது. பாரதக் குடும்ப முறை பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளைப் போல உரிமைகளை மையமாக கொண்டதல்ல. ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து அந்த அந்தக் கால கட்டங்களில் தனது பொறுப்புகளைச் செய்து முடிக்கும் போது வாழ்க்கை நிறைவானதாக அமைகிறது.
இரண்டாவது சிறப்பம்சம் பாரதக் குடும்ப முறையில் தனி மனித முன்னேற்றம் எளிமையாகின்றது. இங்கு குடும்பத் தலைவர் மற்றும் தலைவியின் தலையாய கடமையே அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதாகும். அதற்காகவே பாரதீயக் குடும்பங்கள் அதிகம் சேமிக்கின்றன; குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கின்றன; அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துப் பொருத்தமான முறையில் திருமணம் செய்து வைக்கின்றன; பின்னர் தமது பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கின்றன. அதனால் குடும்பத்திலுள்ள மகனும், மகளும் வெற்றிகரமான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எளிதாகிறது. நமது நாட்டில் வருடந்தோறும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் தமது சேமிப்புகள் மற்றும் உழைப்பினை மூலதனமாக வைத்துச் சிறிய அளவில் தொழில்களை ஆரம்பிக்கின்றன. அவை பின்னர் நிறுவனங்களாக நன்கு வளர்ந்து அடுத்த தலைமுறையினருக்கு நல்ல பலன்களைத் தருகின்றன.
பாரதக் குடும்பங்களின் மூன்றாவது சிறப்பம்சம் அவை நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் பாதுகாவலர்களாக விளங்கி அவற்றைத் தலை முறை – தலை முறைகளாகப் பாதுகாத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கும் உயர்ந்த பண்பு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது பண்பாடு நீடித்து நிலைத்து வர அடிப்படைக் காரணம் குடும்பங்கள். ஆரம்ப காலந்தொட்டு நமது வாழ்க்கை முறைகள், வழிபாட்டு முறை, உறவு முறை எனப் பலவும் மாறாமல் இருந்து வருகின்றன. அவற்றையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டு வருவது குடும்பங்கள் தான். மேலும் அவற்றை நமது தேசத்தில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்குச் சென்று வாழும் போது கூட கடைப்பிடித்து வருவது தான் மிகவும் சிறப்பான விசயம்.
சில வருடங்களுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு செய்தி சமூகவியலாளர்களை ஆச்சரியப்படுத்தியது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதிதாகத் திருமணமான இளம்
பெண் தனது கணவனுடன் அமெரிக்கா சென்று வாழ்க்கையை நடத்துவதற்குத் தயாரானார். அப்போது
அவரது தாயார் எத்தனை சிரமங்கள் வந்தாலும் நமது குடும்பங்கள் பாரம்பரியமாக குடும்ப நலனுக்காக
கடைப்பிடிக்கும் விரதம் மற்றும் ஆற்று நீரில் வழிபாடு ஆகியவற்றை மட்டும் தொடர வேண்டும்
என மகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட மகள் ஆரம்ப காலத்தில் அவர்கள் வாழ்ந்து
வந்த பெரு நகரில் விரதம் இருந்தும் ஆற்றுப்பகுதி இல்லாதால் தூரத்திலிருக்கும் ஒரு சிறு
நீர் நிலையைக் கண்டுபிடித்து கணவனுடன் சென்று தனிக் குடும்பமாக வழிபாடு நடத்தினார். வருடங்கள் அதிகரிக்க அவர்கள் வழிபாடு நடத்துவதை அமெரிக்காவின் அண்டை நகரங்களில் வாழ்ந்த அறிந்த பல வட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியர்கள் ஒன்றிணைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்து தூரத்தில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று நமது நாட்டில் உள்ளது போலவே வழிபாடு நடத்தி வருகின்றனர். எனவே ஒரு குடும்ப பெண் வைராக்கியத்துடன் கடைப்பிடித்த உறுதி இன்று அமெரிக்காவில் தாய் நாட்டில் இருப்பது போலவே வழிபாட்டை நடத்த வழி வகுத்திருக்கிறது. அதே போல வெளி நாடு வாழ் தமிழ் குடும்பங்கள் நமது பண்டிகைகளை உலகின் பல நாடுகளிலும் கொண்டாடி வருவது நமக்குத் தெரியும். எனவே குடும்பங்கள் நமது கலாசாரம் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதற்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.
நமது குடும்பங்களின் நான்காவது சிறப்பம்சம் சமூக அமைதியைக் காப்பதாகும். ஒரு ஊரோ, மாவட்டமோ, மாநிலமோ, தேசமோ நிம்மதியாக வாழ்ந்து வளர்ச்சியைக் காண்பதற்கு அந்த அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சமூகங்கள் அமைதியாக இருப்பது அவசியமாகிறது. சமூக அமைதி அதிகமாக நிலவும் தேசங்களில் தான் நிறைவான வாழ்க்கையும் பொருளாதார முன்னேற்றமும் ஏதுவாகிறது. இன்றைக்குப் பல மேற்கத்திய நாடுகளில் மக்கள் தனி நபர்களாக வாழ்ந்து வருவதால் சமூக அமைப்புகள் செயலிழந்து விட்டன. உறைவு முறைகள் சிதைந்து சமூக பாதுகாப்பு பெரும் கேள்விக் குறியாகி விட்டது.
எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குடும்பங்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகி விட்டது. பெற்றோர்களும், குழந்தைகளுமே தங்களின் சொந்த குடும்பங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத போது அரசாங்க நிர்வாகம் நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாப்பது என்பது இயலாத ஒன்று. மேலும் அதற்கு அந்த நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் இருபது முதல் நாற்பது விழுக்காடு வரை செலவிடப்படுகிறது. அவ்வளவு பெரிய தொகைகளைச் செலவு செய்ய முடியாமல் அந்த அரசாங்கங்கள் திணறி வருகின்றன.
அதே சமயம் நமது தேசத்தில் எவ்வளவோ சிரமங்கள் இருப்பினும், குடும்ப அமைப்பு முறை பெருமளவு வலுவாக இருந்து வருவதால், கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை அமைதி காக்கப்பட்டு வருகின்றது. குடும்பங்கள் உறவுகளாக, நட்பு வட்டங்களாக விரிந்து விழாக்கள், பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் இணைந்து ஆண்டாண்டு காலமாக நடத்தி வருகின்றன. அதனால் சமூகங்களில் அமைதி நிலவி தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமாகிறது.
பாரதக் குடும்பங்களில் ஐந்தாவது முக்கிய அம்சம் அவை பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கி வருகின்றன என்பதாகும். அந்நியர்களால் நமது செல்வங்கள் ஒவ்வொரு முறையும் சூறையாடப்பட்டு, பின்னர் காலனி ஆதிக்க சக்திகளால் பொருளாராதாரம் பெருமளவு சீரழிக்கப்பட்ட போதும் அவை மீண்டெழுந்து வருவதற்கு அடிப்படைக் காரணம் உறுதி வாய்ந்த நமது குடும்ப அமைப்பு முறை.
சுதந்திர காலத்தில் மிகவும் வளர்ச்சி குறைந்த நாடாக இருந்த நமது தேசம் இப்போது உலகிலேயே மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. மேலும் தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பதினைந்து விழுக்காட்டு மேல் பாரதம் பங்களித்துக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ள நாடாக பாரதம் விளங்குகிறது என அனைத்து சர்வதேச கணிப்புகளும் ஒத்துக் கொள்கின்றன.
கடந்த இரண்டாயிரம் கால உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் மிக ஏழை நாடாக இருந்து உலகின் அதிக வாய்ப்புள்ள நாடாக மாறவில்லை. அதற்கு ஒரே விதி விலக்கு பாரத நாடு மட்டுமே. அதற்கான முதன்மையான காரணங்களாக இங்கு உண்டாகும் அதிக சேமிப்புகள், மக்களின் அதீத தொழில் முனையும் தன்மை, அடுத்த சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் உருவாக்கப்படும் தொழில்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். அவையெல்லாவற்றுக்கும் காரணம் நமது பாரதீயக் குடும்ப அமைப்பு முறை மற்றும் அதை வழி நடத்தும் சனாதனக் கலாசார அடிப்படைகள் என்பதைக் கள ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே இந்துக் குடும்ப முறை என்பது நமது பாரம்பரியம் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஒரு அரிய நன்கொடை. ஆகையால் அதைக் காப்பாற்றி அடுத்த
தலைமுறைகளுக்கு கொடுப்பது நமது தலையாய கடமை.
அதே சமயம் அண்மைக் காலங்களில் நமது சமூகங்களில் உண்டான தாக்கங்களால் பாரதீயக் குடும்ப அமைப்பு முறை சில சவால்களைச் சந்தித்து வருகிறது. எனவே அதில் ஏற்பட்டுள்ள குறைகளைக் களைந்து மக்கள் அனைவரும் இலட்சியமான குடும்பங்களாக வாழ்க்கை நடத்த எல்லா முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.
(கலைமகள்
தீபாவளி மலர், அக்.2025)