பாரத நாடு தொன்மையான வரலாறும் நீண்ட நெடிய பாரம்பரியமும் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து நிலைத்து வரக்கூடிய பண்பாட்டை வைத்திருப்பது. அந்தப் பண்பாட்டின் அடித்தளங்கள் தான்
பண்டைய காலந்தொட்டு நமது தேசத்தை மனித வாழ்வின் வெவ்வேறு துறைகளிலும் உலகின் முன்னோடியாக விளங்க வைத்த பெருமைக்குரியவை. அதனால் ஆரம்ப காலந்தொட்டே பொருளாதாரத்தில் உலகின் முதல் நிலையில் இருந்து பெரும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கி வந்துள்ளது.
பாரதப் பண்பாட்டின் அடிப்படைத் தன்மையே குடும்ப அமைப்பு முறையாகும். குடும்பம் என்பது தேசத்தின் சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு ஆதாரமானதாக இருந்து வருவது மட்டுமன்றி, பொருளாதாரத்துக்கும் அஸ்திவாரமாக அமைந்துள்ளது. எனவே வலுவான குடும்ப அமைப்பு முறையே ஒரு நாட்டின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு அடிப்படையாகும். அதனால் தான் நமது வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு தொன்று தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்கள் குடும்பங்களின் மையப்புள்ளியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கத்திய நாடுகள் பலவற்றில் தனிநபர்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகளே குடும்ப நலனை விட முக்கியம் என்கின்ற வக்கிரமான சிந்தனை பெருகியது. அதனால் அங்கு குடும்ப அமைப்பு முறை சிதையத் தொடங்கியது.
குடும்பங்கள் சீரழியும் போது உறவுகள் வலுவிழக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக் கூடிய தன்மை மறையும்.
அதனால் அங்கு இயற்கையாக நிலவி வந்த சமூக கட்டமைப்புகள் வேகமாக உடைந்து வருகின்றன. அவை நடக்கும் போது பொருளாதாரமும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகும். உதாரணமாக குடும்ப அமைப்பு முறையில், தாய் – தந்தை மற்றும் பெரியவர்கள் அடுத்த தலைமுறைக்காகச் சேமிக்கும் தன்மை அடிப்படையானதாக இருக்கும்.
ஆனால் குடும்பங்கள் சிதையும் போது அடுத்தவர்களுக்காகச் சேமிக்கும் தன்மை
குறையும். அந்த வகையில் மேற்கு நாடுகள் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் கடந்த முப்பதாண்டுகளில் சேமிப்புகள் மிகவும் குறைந்து விட்டன.
தேசிய அளவில் போதுமான சேமிப்புகள் இல்லாமல், குடும்ப அமைப்புகளும் சிதைவடைந்து வருவதால், அங்கு அரசாங்கங்கள் குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்து அதற்காக ஆகும் செலவுகள் அந்த நாடுகளின் பொருளாதார உற்பத்தியில்
வருடா வருடம் இருபதிலிருந்து முப்பத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் ஆகி வருகிறது.
எனவே அதற்குப் போதுமான நிதியாதாரம் இல்லாமல், அண்மைக்காலமாக
அந்த நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
நமது தேசத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு இடையிலும், குடும்ப அமைப்பு முறையானது இன்றும் பெருமளவு
நீடித்து வருகிறது. அதனால் குடும்பங்கள் அதிக அளவில் சேமிப்புகளை
மேற்கொள்கின்றன. எனவே கடந்த பல ஆண்டுகளாகவே சேமிப்புகள் நாட்டின்
பொருளாதார உற்பத்தியில் வருடா வருடம் முப்பது விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து இருந்து
வருகின்றன. அந்த சேமிப்புகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல
கல்வி மற்றும் எதிர்காலம் கிடைக்கின்றன. தொழில்கள் பெருகுகின்றன.
இந்தியர்கள் இங்கு மட்டுமல்ல; உலகின்
எந்தப் பகுதிக்குச் சென்றாலும், சேமிப்புகளை இன்னமும் வாழ்க்கை
முறையாகக் கொண்டுள்ளனர். அதனால் வெளிநாடுகளில் வாழ்ந்து தொழில்
மற்றும் பணிகள் செய்து தாய் நாடுகளுக்குப் பணம் அனுப்புவோர் மத்தியில் இந்தியர்களே
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளனர். சென்ற
2024 வருடத்தில் மட்டும் உலகிலேயே அதிக அளவில் 129 பில்லியன் டாலர்களை நமது நாட்டுக்கு
அனுப்பியுள்ளனர். மேலும் அப்படி அனுப்பும் தொகைகள் சென்ற மூன்று
வருட காலமாகவே நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்து வருகிறது.
சேமிப்புகள் மட்டுமன்றி, உறவுகளைப்
பேணுதல், கலாசாரத்தைப் பாதுகாத்தல், தொழில்
முனைதல் எனப் பலவிதமான வாழ்க்கையின் அடிப்படை
அம்சங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் குடும்பங்களின் பங்கு அடிப்படையாக அமைகிறது.
சுமுகமான வாழ்விற்கு அமைதியான சமூகங்கள் அவசியமாகிறது. சமூகங்களில் நிலவும் இணக்கமான சூழ்நிலையே
பொது அமைதிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஏதுவாக அமைகிறது.
ஏனெனில் இணக்கமில்லாத ஊர்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.
இந்திய சமூகங்கள் பாரம்பரியமாக உறவுகளையும், நட்புகளையும்
அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குடும்பங்களின் நீட்சியாகவே சமூகங்கள்
அமைந்துள்ளன.
நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில்
ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள்,
எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும்
எடுக்கின்றன. தற்போதைக்குச் சிரமங்கள் இருந்தாலும் எதிர்காலத்தில்
குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமையும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன.
அதனால் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.
கடந்த முப்பது வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் மற்றும் வியாபார மையங்களில்
நடத்தப்பட்ட ஆய்வுகள் நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் குடும்ப
அமைப்பு முறையே முக்கியப் பங்கினை வகித்து வருவதை எடுத்துச் சொல்கின்றன. குடும்பங்களின் நிதி ஆதாரமும் ஊக்கமுமே
புதிய தொழில் முனைவுகளுக்கு காரணமாக அமைகின்றன; அவற்றின் பங்களிப்பின்
மூலமே வருடா வருடம் இலட்சக் கணக்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துவங்கப்படுகின்றன. பின்னர் அவையே
விரிவடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களாக உருவெடுக்கின்றன. இன்று இந்தியப் பொருளாதாரத்துக்கு
ஆதாரமாக விளங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வியாபார மையங்கள் குடும்பங்களாலும்,
உள்ளூர் சமூகங்களாலும் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருபவையே ஆகும்.
உதாரணமாக நமது தேசத்தில் பட்டாசுத் தொழிலில் முதன்மையான இடம் வகித்து வருவது சிவகாசி. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு
முழுவதும் சென்று மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றன. அங்கு ஆரம்பத்தில்
தீப்பெட்டி தயாரிப்பதில் தொடங்கிய தொழில், பின்னர் பட்டாசு மற்றும்
பிரிண்டிங் தொழில்கள் என விரிவடைந்தது.
இப்போது அந்தப்பகுதி பல கோடிக்கணக்கான ரூபாய்கள் வியாபாரத்தையும்
பல லட்சக் கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தந்து வருகிறது. வறண்ட பூமியாக இருந்த அந்தப் பகுதியை இன்று நாட்டின் முக்கியமான தொழில் மையமாக
உருவாக்கியது யார்? அந்த ஊரைச் சேர்ந்த சாதாரணக் குடும்பங்கள்.
நூறு வருடங்களுக்கு முன்னால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுக்கிடையில்
கல்கத்தா சென்று தொழிலைக் கற்றுக் கொண்டு வந்து, பின்னர் அந்தத்
தொழிலுக்கு அஸ்திவாரம் போட்ட இரண்டு குடும்பத்தினர்.
அதே போலத்தான் திருப்பூர், கோவை,
விருதுநகர் உள்ளிட்ட பல தமிழகத் தொழில் மையங்களும் அந்தப் பகுதிகளில்
வாழும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளன.
இந்திய நாடு முழுவதுமே அதே போலத் தொழில் மையங்கள் வளர்ச்சி கண்டுள்ளதைக்
காண முடியும். சூரத், லூதியானா,
ராஜ்கோட், பெல்கவி, கான்பூர்
எனப் பல நூற்றுக்கணக்கான தொழில் மையங்களை குடும்பங்களே உருவாக்கி நடத்தி வருகின்றன.
நாட்டிலுள்ள வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஆதரமாக விளங்குவது அங்கெல்லாம் திறமையாக
செயல்பட்டு வரும் தொழில் மையங்களாகவே உள்ளன.
குஜராத், தமிழ் நாடு, மகாராஷ்டிரம்,
பஞ்சாப் என எங்கு பார்த்தாலும் தொழில் மையங்களில் குடும்பங்களின் தாக்கமே
பிரதானமாக உள்ளது. குஜராத்தின் முக்கிய தொழில் மையமான சூரத் நகரில்
வருட விற்று முதல் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு. அங்கு
இரண்டு முக்கிய தொழில்கள் உள்ளன. ஒன்று வைரக் கற்கள் வெட்டுதல்.
இன்னொன்று மொத்த ஜவுளி வியாபாரம்.
அவற்றை நடத்துவது அனைத்தும் குடும்பங்களே.
வைரத் தொழிலில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் பட்டேல்கள் விவசாயப்
பின்னணி கொண்ட சாதாரண மக்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாதமையால்,
வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களிலுமிருந்து வேலைக்காக வந்து
இன்று வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் உலகின் வைர வியாபர
மையமாக பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரம் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் வியாபரம் செய்பவர்கள் பட்டேல்களும்,
ஜெயின்களும் தான்.
அதனால் தான் சுதந்திரம் பெற்ற போது வளர்ச்சி குறைந்து பின் தங்கிய நிலையில் இருந்த
நமது தேசம், வெறும் எழுபத்தெட்டு
வருடங்களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மேலும் எதிர் காலத்தில் உலகிலேயே அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடாக அனைவராலும்
கணிக்கப்படுகிறது. இந்தக் குடும்பம் சார்ந்த பொருளாதார அமைப்பு
முறையே நம்மைக் காலங் காலமாக காப்பாற்றி வருகிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடி,
2020 கொரோனா ஆகியவற்றில் உலக நாடுகள் பெரும் சிரமங்களைச் சந்தித்த போது,
கவசம் போல இருந்து நம்மைக் காப்பாற்றியது நமது குடும்ப அமைப்பு முறையே.
எனவே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரமாக விளங்கி பொருளாதாரத்தைத் தாங்கி
நிற்கும் குடும்ப அமைப்பு முறையைக் கட்டிக் காப்பது நமது தலையாய கடமையாகும்.
(விஜயபாரதம்
தீபாவளி மலர், அக்.2025 )
No comments:
Post a Comment