உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா

 

கடந்த மே மாதம் 24 ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நீதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் மையக்கருத்து வளர்ச்சியடைந்த பாரதம் – 2047’  என்பதாக இருந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் நீதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என்னும் முக்கியமான செய்தியை வெளியிட்டார். அது ஏதோ ஒரு சாதாரண விசயமல்ல. நமது நாட்டின் முன்னேற்றப் பாதையில் இன்னுமொரு பெரிய சாதனை.

கடந்த ஐயாயிரம் வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் உயர்ந்த நிலையில் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இன்றிலிருந்து 2025 வருடங்களுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கிய காலத்தில் உலகப் பொருளாதார உற்பத்தியில் இந்தியா மூன்றில் ஒரு பங்கினை அளித்து உலகின் பெரிய பொருளாதாரமாக முதலிடத்தில் இருந்து வந்ததை வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது பொருளாதாரத்தை திட்டமிட்டுச் சிதைக்கும் வரை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரையிலும், உலகின் இரு பெரும் பொருளாதாரங்களாக இந்தியாவும், சீனாவும் மட்டுமே இருந்து வந்துள்ளன என்பது வரலாறு.

பின்னர் காலனி ஆதிக்க காலகட்டத்தில் பொது யுகம் 1765 முதல் 1938 வரையான 173 வருட காலத்தில் பிரிட்டிஷார் 45 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வளங்களை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர் என்பதை பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளார். (ஒரு டிரில்லியன் டாலர் என்பது தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 85.50 லட்சம் கோடி ரூபாய்கள்). அந்தக் கால கட்டத்திய மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பில் சராசரியாக வருடா வருடம் 26 முதல் 36 விழுக்காடு வரையிலான தொகை இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக அவரது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் நாட்டு மக்கள் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டு, 1911 ஆம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் இருபத்திரெண்டு வருடங்கள் என்னும் அளவுக்குக்  குறைந்து போகும் அவல நிலை ஏற்பட்டது.   

எனவே ஆரம்ப காலந்தொட்டுப் பல நூற்றாண்டுகளாக உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி வந்த நமது நாடு, காலனியாதிக்க காலத்தில் பெரும் சிதைவுகளுக்குட்பட்டு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்த கட்டமைப்புகள் மற்றும் இந்த மண்ணுக்குப் பொருத்தமான அணுகுமுறைகள் பலவும் அழிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் விட்டன. எனவே தான் மகாத்மா காந்தி அவர்கள் நாடு சுதந்திரம் பெற்றதும் நமது தேசத்தின் அஸ்திவாரங்களை ஒட்டி கொள்கைகள் வகுக்கப்பட்டு அரசு அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென விரும்பினார். அதற்காக 1930 கள் முதற்கொண்டே சுதந்திர இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கை பற்றி நாட்டில் விரிவான விவாதம் நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையின் ஒத்துழைப்பின்மையால் அது நடைபெறவில்லை.

ஆகையால் சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார அணுகுமுறை குறித்து ஆட்சியாளர்களிடம் ஒரு தெளிவான சிந்தனை இல்லை. எனவே அவர்கள் சோசலிச சித்தாந்தந்தின் அடிப்படையிலான அணுகுமுறைகள் தான் நாட்டுக்குச் சரியாக அமையும் என முடிவெடுத்துக் கொள்கைகளை வகுத்தனர். அது போதுமான பலன்களைத் தரவில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான தன்மைகள் உண்டு. அவை அந்த நாட்டின் வரலாறு, அனுபவங்கள், வாழ்க்கை முறை, அடித்தளங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும். அதிலும் நமது நாடு மேற்கத்திய நாடுகளிலிருந்து பல விதங்களில் மாறுபட்டது.  நீண்ட வரலாற்றையும், சிறப்பான குணாதிசயங்களையும் பெற்றது.

பின்னர் 1980 களின் இறுதியில் அப்போதைய சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்றுப் பல பிரிவுகளாக உடைந்த போது, அவர்களே கம்யூனிச சித்தாந்தம் தோற்றுப்போனதாக அறிவித்தனர். நமது ஆட்சியாளர்களும் அப்போதுதான் அதை உணர்ந்தனர். எனவே அதற்கு மாற்றாக அமெரிக்க நாடு முன்னின்று எடுத்து வைத்த தாராள மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் கருத்துக்களை ஒட்டிய கொள்கைகளை இங்கு நடைமுறைப்படுத்தினர். ஆனால் கடந்த இருபதாண்டுகளில் உலக அளவில் சந்தைப் பொருளாதார வழிமுறைகளும் தோல்வியுற்று அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.

அதற்குக் காரணம் மேற்கண்ட இரண்டு சித்தாந்தங்களுமே அந்த நாடுகளில் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த சூழ்நிலைகள் மற்றும் அனுபவங்களை வைத்து அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவை இரண்டுமே அடிப்படைக் குறைபாடுகளைத் தம்மிடம்  கொண்டிருப்பவை.  ஏனெனில் அந்த நாடுகளின் பொருளாதார அனுபவங்களே மிகவும் குறைவு. ஆனால் காலனி ஆதிக்க காலத்தில் அவர்களுக்கிருந்த வலிமையைப் பயன்படுத்தி, மேற்கத்திய வழிமுறைகளே மேலானவை என்னும் கருத்தை உலக முழுவதும் திணித்து விட்டனர். 

எனவே துரதிர்ஷ்டவசமாக சுதந்தரத்துக்கு அப்புறம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நமது நாட்டில் மேற்கத்திய அணுகுமுறைகளை வைத்தே கொள்கைகள் வகுக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி அந்த கால கட்டங்களிலும் நமது நாடு மெதுவாக வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதற்கு நமது குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், சமூக மூலதனம் மற்றும் தொழில் முனையும் தன்மைகள் ஆகியவை அடிப்படைக் காரணங்கள்.   

ஆகையால் ஆட்சியாளர்கள் அந்நிய அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தி வந்த போது கூட, நமது மக்கள் தமது இயற்கையான தன்மையோடு இந்த மண்ணுக்கே உரித்தான வகையில் தொடர்ந்து செயல்பட்டுப் பொருளாதாரத்தை மெதுவாக முன்னெடுத்துச் சென்றனர். எனவே தடைகள் பலவற்றையும் மீறி போதிய அளவில் இல்லாவிட்டாலும் கூட பொருளாதாரம் முன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அது குறித்து உலகின் பெரிய பொருளாதார நிபுணர்கள் பலரும் ஆச்சரியப்பட்டுக் கூறியுள்ளனர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஜான் கென்னத் கேல்ப்ரெய்த் 1961 முதல் 1963 வரையில் அமெரிக்காவில் ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அந்த நாட்டின் தூதுவராக இந்தியாவில் இருந்தவர். அவர் பின்னர் பல வருடங்கள் கழித்து இந்தியா வந்த போது நமது பொருளாதார முன்னேற்றம் கண்டு வியந்து பேசினார். அதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்திய மக்களின் இயற்கையான தன்மைகள் எனக் கூறினார்.

திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், 2014 ஆம் வருடம் தனது முதல் சுதந்திர தின உரையில் மத்திய அரசின் திட்டக்குழு மாற்றியமைக்கப்படும் எனக் கூறினார். அதன்படி 1950 களில் அப்போதைய சோவியத் ரஷ்ய நாட்டு முறையை ஒட்டி  அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த திட்டக்குழு கலைக்கப்பட்டு நீதி ஆயோக் என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனவரி 2015 ல் நீதி ஆயோக்கை உருவாக்கி மத்திய அமைச்சரவை போட்ட தீர்மானம் நமது நாட்டின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் அடுத்து வரும் காலங்களில் இந்திய தேசத்தின் அஸ்திவாரங்களை மையமாக வைத்து அமையும் எனவும், அந்நியக் கோட்பாடுகளை ஒட்டி இருக்காதெனவும் தெளிவுபடுத்தியது.

எனவே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டின் சூழ்நிலை, அனுபவங்கள், வலிமைகள், குறைபாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து நமக்குப் பொருத்தமான அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களிலும் ஒட்டு மொத்த தேசத்தின் நலன்களை மையமாக வைத்தே செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. ’இந்தியாவில் தயாரிப்போம்’, ’சுயசார்பு பாரதம்என்பவையெல்லாம் அதன் வெளிப்பாடுகளே ஆகும். ஆகையால் நாடு அதிக வளர்ச்சியினைக் கண்டு வருகிறது.

இந்தியா 1947 ஆம் வருடத்தில் சுதந்திரம் பெற்ற போது ஒரு வளர்ச்சி குறைவான பின் தங்கிய ஏழை நாடாக இருந்தது. ஆனால் ஒரு எழுபத்தேழு வருட காலத்தில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கின்றது. இது ஒரு மகத்தான சாதனையாகும். உலக வரலாற்றில் இவ்வளவு குறைவான காலத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்ட நாடாக  இந்தியா உள்ளது. அது மட்டுமல்லாமல் வருங்காலத்திலும் மற்ற எல்லா நாடுகளையும் விட முன்னேற்றத்துக்கு மிக அதிக வாய்ப்புள்ளாக நாடாக இந்தியா கருதப்படுகிறது.

சர்வதேச நிதி ஆணையம் வெளியிட்டுள்ள தனது ஏப்ரல் 2025 உலக பொருளாதார அறிக்கைப்படி இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு 4.178 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி நமக்கு நான்காவது இடம். எனவே நமக்கு முன்னால் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் மட்டுமே இருக்கும். அதுவும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே இந்தியா மூன்றாவது இடத்தை அடைந்து விடும் எனத் தெரிய வருகிறது.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முறையே 6.2 மற்றும் 6.3 விழுக்காடு இருக்கும் எனவும், அதே சமயம் ஒட்டு மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சி முறையே 2.8 மற்றும் 3.0 விழுக்காடு அளவு மட்டுமே இருக்கும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. எனவே உலக அளவில் வரும் இரண்டு ஆண்டுகளிலும் அதிக வேகத்துடன் வளரக்கூடிய நாடாக இந்தியா விளங்குமெனவும்,  அதனால் உலகப் பொருளாதாரத்தில் தனது முக்கியத்துவத்தை  மேலும் தக்க வைத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார முன்னேற்றம் வெகுவாக அதிகரித்து வருவதை வெவ்வேறு புள்ளி விபரங்களும் உறுதி செய்கின்றன. உலக அளவில் பதினோராவது பொருளாதாரமாக  இருந்த இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களில் இருபத்தேழு கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து மேலே வந்துள்ளதாக அண்மையில் உலக வங்கி  தெரிவித்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் 27.1 விழுக்காடு என்ற அளவில் கடும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த மக்களின் விகிதாசாரம் 2022-23 ஆம் ஆண்டில் 5.3 விழுக்காடு என்ற அளவுக்கு வெகுவாக குறைந்துள்ளது.

பொருளாதாரத்தின் பல துறைகளிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 2024-25 நிதியாண்டில் இந்தியாவுக்கான வெளி நாட்டு மூலதனம் எண்பத்தி ஒரு பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது. நமது ஏற்றுமதிகளில் உற்பத்தி துறை சார்ந்த மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் பங்கு  அதிகரித்து  வருகின்றது. தற்போது வெளிநாடுகள் உடனான வர்த்தக உடன்பாடுகள் நமது நாட்டுக்குப் பலன் அளிக்கும் வகையில் தேவையான நாடுகளுடன் தனித்தனியாக போடப்பட்டு வருகின்றன.

நாம் அடைய வேண்டிய இலக்குகள் இன்னமும் நிறைய இருப்பினும், தாண்டி வந்து கொண்டிருக்கும் மைல் கல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கும் விதத்தில் உள்ளன. அந்த வகையில் தற்போது நாம் அடையக்கூடிய நான்காவது பெரிய பொருளாதாரம் என்னும் இடம் இந்திய நாட்டுக்கான ஒரு நல்ல அங்கீகாரம். சுதந்தர இந்தியாவின் இந்த சாதனை முழு வளர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் மக்கள் அனைவருக்கும் மன நிறைவினைத் தரக்கூடிய ஒரு முக்கியமான விசயமாகும்.