இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டிச 26, 1925 தேதியை தனது நிறுவன நாளாக கடைப்பிடிக்கிறது. அன்றுதான் நமது நாட்டின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் கான்பூர் நகரில் ஒன்று கூடி தேசிய அளவில் இயக்கத்தை அமைக்கும் நடவடிக்கைகளைத் துவங்கின. எனவே 2025 ஆம் வருடம் அதே நாளில் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் டி ராஜா டெல்லியிலுள்ள தலைமையகத்தில் கொடியேற்றி நூறாண்டு நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பின்னர் “ கம்யூனிசத்தின் நூறு வருடம் – பாரம்பரியம் மற்றும் எதிர்காலம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1964 ஆம் வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. எனவே இந்த சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான வரலாறு பற்றிச் சில விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
உலகில் முதல் முறையாக 1917 ஆம் வருடம் ரஷ்யாவில் லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி தொடங்கியது. அது முழுமையாக 1989 வரை அங்கு நீடித்தது. சீனாவில் 1949 ஆம் வருடம் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி தொடங்கியது. இன்று வரை அது நீடிக்கிறது. இப்போது வியட்நாம், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளில் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கெல்லாம் எந்த
இடத்திலும் மக்களாட்சி இல்லை.
ஜனநாயக முறையில் முதல் முதலாக நமது நாட்டில் கேரள மாநிலத்தில் 1957 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று, இப்போது இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கூட்டணி ஆளும் ஒரே மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 1977 தொடங்கி தொடர்ந்து முப்பத்தி நான்கு வருடங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தனர். இப்போது அங்கு அவர்களுக்கு சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லை. திரிபுரா மாநிலத்தில் அதே மாதிரி முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியிலிருந்து, கடந்த இரு தேர்தல்களிலும் பாஜகவிடம் தோற்றுப் போயினர்.
2024 தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற இடங்கள் ஆறு மட்டுமே. அதில் தமிழகத்திலிருந்து மட்டும் கூட்டணி தயவால் நான்கு இடங்கள். மொத்தமாக நாடு முழுவதும் சேர்ந்து அக்கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் 2.25 விழுக்காடு. அந்த கட்சிகளின் உறுப்பினர்கள் 16.5 லட்சம்.
கடந்த நூறாண்டுகளில் உலக முழுவதும் மக்கள் கம்யூனிஸ்டுகளை நிராகரிக்க காரணம் அவர்களின் சித்தாந்தம் மற்றும் அணுகுமுறைகள். அவர்களின் அடிப்படையே ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்டது. ஆனாலும் அப்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியில் உள்ள மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அழித்து
விடுகிறார்கள்.
ரஷ்யாவின் இரு பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்த டிராட்ஸ்கி லெனின் மறைவுக்குப் பின்
ஆட்சிக்கு வந்த ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது கருத்துக்கு மாறுபட்ட கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் பத்து லட்சம் பேர்களை ” பெரும் களையெடுப்பு” மூலம் இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின் கொன்றொழித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் கருத்துக்கு மாறுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் வாடிக்கை. ரஷ்யாவில் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனிட்சன் தனது கருத்துக்களைக் கடிதங்கள் மூலம் எழுதியதற்காக அடிமை முகாமுக்கு அனுப்பப்பட்டு கொடுமைகளை அனுபவித்தார். சீனாவில் மாவோ ஆட்சியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் சொத்துகளை இழந்து கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் 1853ல் கார்ல் மார்க்ஸ் இந்தியா நிலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டுமென எழுதினார்.
அதற்காக கம்யூனிஸ்ட் கட்சி எடுத்து வரும் மிகப்பெரிய ஆயுதம் அடக்குமுறை, கொலைகள். எனவே அடுத்தவர்களை அழிப்பதை அவர்கள் இருபது நூற்றாண்டு தொடங்கி இன்று வரை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்றைக்கும் சீனாவிலும், வட கொரியாவிலும் மக்களுக்கு கருத்து சுதந்திரம் அறவே கிடையாது. உரிமைகளுக்காகப் போராட்டம் செய்தால் வன்முறையை அரசு கட்டவிழ்த்து விடும். 1989ல் தியானென்மன் சதுக்கத்தில் பல்லாயிரம் மாணவர்கள் சேர்ந்து உரிமைகள் கேட்ட போது கிடைத்த பதில் வன்முறைத் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தான்.
உலக முழுவதும் கம்யூனிஸ்ட் அரசுகள் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த விபரங்கள் பற்றிப் பல ஆய்வுகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. அவற்றில் கொல்லப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதும், சுமார் பத்துக் கோடி அளவு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது பதினைந்து கோடி வரை இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
அது பற்றி அயோவா பல்கலைக் கழகப் பேராசிரியர் ருடால்ப் ரம்மெல் விரிவாக ஆய்வுகளை செய்து” அரசாங்கங்கள் செய்த உயிரிழப்புகள்”, சீனாவின் ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு” உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். தனது ஆய்வுகளின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் அரசாங்கங்களால் கொல்லப்பட்டவர்கள் 21.2 கோடி பேர் எனக் குறிப்பிடுகிறார். அதில் 1917 முதல் 1987 வரை கம்யூனிச அரசுகளால் 14.8 கோடி மக்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கிறார்.அதே சமயம் உலகம் முழுவதும் நிகழ்ந்த உள்நாட்டு மற்றும் பிற நாடுகளுக்கிடையேயான போர்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள் 4.1 கோடி பேர். எனவே போர்களில் கொல்லப்பட்டவர்களை விட கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சொந்த மக்கள் பல மடங்கு பேரைக் கொண்றுள்ளது தெரிய வருகிறது.
உலக அளவில் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொலைகள் நடைபெற்ற நாடுகள் எனப் பட்டியலிடும் போது சோவியத் ரஷ்யாவில் 6.1 கோடி பேர், சீனாவில் 3.5 கோடி பேர் என இரண்டு நாடுகளைக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் இரண்டு கோடி பேர்களைக் கொன்றவர்கள் என நாஜிகளைக் குறிப்பிடுகிறார். பின்னர் தொடர்ந்து அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கண்ட எண்ணிக்கைகள் அதிகப்படுத்தியுள்ளார். சீனாவில் மட்டும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 7.67 கோடி பேர் என்றும், அதில் 1958-62 ஆண்டு காலத்தில் நான்கு ஆண்டுகளில் மாவோ ஏற்படுத்திய செயற்கையான பெரும் பஞ்சத்தால் உயிரிழந்தவர்கள் 3.8 கோடி பேர் எனவும் கணக்கிட்டுள்ளார்.
சோவியத், சீனா மட்டுமன்றி உலகில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த பல நாடுகளிலும் அரசாங்கங்கள் பெரும் கொலைகளை செய்துள்ளன. கம்போடியாவில் போல் பாட் அரசின் கம்யூனிச ஆட்சியில் 1975 தொடங்கி நான்கு வருடங்களில் மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். அதே போல
வியட்நாம், வட கொரியா, எதியோப்பியா எனப் பல நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் “கம்யூனிசத்தின் கறுப்பு புத்தகம்” உள்ளிட்ட நூல்கள் மூலம் வெவ்வேறு ஆய்வாளர்களால் வெளிவந்துள்ளன.
அவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் உலக முழுமைக்கும் தங்களின் கருத்துகள் மட்டுமே சரி என்னும் நிலைப்பாடும், தலைமையில் இருப்பவருக்கு
உள்ள எல்லையில்லாத அதிகாரமும் ஆகும். இப்போது கூட சீனாவில் சுமார் பத்து லட்சம் இஸ்லாமியர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் இதுவரை ஆட்சி செய்ய வாய்ப்புக் கிடைத்த மாநிலங்கள் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா. திரிபுரா மிகச் சிறிய மாநிலம். எனவே அதை விடுத்து மீதி இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் வலுப்பெற்ற பின்னரும்,
ஆட்சியின் போதும்
நடந்த சில கொலைகளைப் பார்க்கலாம்.
1969
ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் அங்கம் வகித்த கூட்டணி
ஆட்சி தோல்வியில் முடிந்தது. அங்கு பர்தமன் மாவட்ட கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கிய சைனி குடும்பம் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து கம்யூனிஸ்டுகளை ஏற்க மறுத்து வந்தது. 1970 வருடம் கம்யூனிஸ்டுகள் அவர்களின்
வீட்டுக்குச் சென்று மூத்த சகோதரரின் கண்களைத் தோண்டி எடுத்து விட்டு, இளைய சகோதர்கள் இருவரையும் வீட்டினர் முன்னர் அடித்துக் கொன்றனர். பிணமாகிய அவர்களின் ரத்தத்தை எடுத்து அரிசியில் சேர்த்து அவர்களின் வயதான தாயாரின் வாயில் திணித்தனர். அவர் மயங்கி விழுந்து மனநலம் குன்றியவராக மாறி இறந்து போனார். அப்போது வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருந்த ஆசிரியரையும் அடித்துக் கொன்றனர். சில மாதங்களில் மூத்த சகோதரும் கொல்லப்பட்டார். அந்தக் கொடூர சம்பவத்தின் பின்னர் துக்கம் விசாரிக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே அந்த வீட்டுக்குச் சென்றார். ஆனால் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மாநில அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.
1979 ஆம் வருடம் ஜோதிபாசுவின் ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் சுந்தர்பன் பகுதியின் மரிச்சபி தீவில் வசதிகளற்ற சூழ்நிலையில் பட்டியலின மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வங்காள தேசத்திலிருந்து உயிர்களைக் காக்க ஓடி வந்து ஒரிசா, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் பகுதிகளில் குடியேறி, பின்னர் கம்யூனிஸ்டுகளை நம்பி அங்கு சென்று வாழத் துவங்கியவர்கள். அந்த வருட இறுதியில் அவர்களை வெளியேறச் சொல்லி அரசு உத்தரவிடுகிறது. மக்கள் மறுக்கிறார்கள். எனவே தீவுக்குச் சென்று கொண்டிருந்த குடி தண்ணீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. தடை உத்தரவு போடப்படுகிறது. அதனால் பசி, பட்டினி, நோய்கள்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் வீடு புகுந்து காவல் துறையும், கும்பல்களும் தாக்குதல்களை
நடத்திக் கொலை செய்கிறார்கள். தப்பியோடி தண்ணீருக்குள் குதித்தவர்கள் காவல்துறைக்கு பலியாகியும், முதலைகளுக்கு இரையாகவும் போகிறார்கள். தண்ணீரே சிவப்பாக மாறி, ரத்த பூமியாக மாறிப் போனது. விசாரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. செய்திகள் தடை செய்யப்பட்டன. பலர் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் பின்னர் முப்பத்தி இரண்டு வருடம் ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகள் எந்த
விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அப்போது உயிரழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் வரை இருக்கலாம் எனப் பின்னர் அது பற்றி ஆய்வு செய்த ”ரத்த தீவு” புத்தகத்தின் ஆசிரியர் தீபக ஹல்தர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் நடந்த பட்டியலின மக்களுக்கெதிரான அரசு நடத்திய மிகப்பெரிய இன ஒழிப்பு நடவடிக்கை அதுவாகத்தான் இருக்கும்.
1990 ஆம் வருடம் தெற்கு பர்கான மாவட்டத்திலிருந்து ஐ.நா. அமைப்பின் நிதிமுறை கேடு சம்பந்தமாக விசாரணையை முடித்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு
மாநில அரசின் இரு பெண் அதிகாரிகள் மற்றும் டெல்லியிலிருந்த வந்திருந்த ஐ.நா பெண் அதிகாரி ஆகியோர் காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். வாகனத்தை இடைமறித்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் காரைத் தீவைத்துக் கொளுத்தி விட்டு, அதிகாரிகளைக் கொடுமையாகத் தாக்கி வன்புணர்வு செய்தனர். ஒரு அதிகாரி உயிரழந்தார். ஆடையிழைந்த மற்றவர்கள் மருத்துவ மனையில் உயிர் பிழைத்தனர். அது பற்றி முதலமைச்சரிடம் கேட்ட போது அவர் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதுதானே எனப் பதிலளித்தார்.
2000 ஆம் வருடம் முதல் அங்கு முதலமைச்சராக இருந்த இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா முன்பு
அமைச்சராக இருந்த போது மாநிலத்தில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார்.
2007 ஆம் வருடம் நந்தி கிராமத்தில் அரசு ஏழை விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக எடுத்தபோது 14 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
கேரளாவில் 1960 களில் தொடங்கி கம்யூனிஸ்டுகள் கொலைகளை நிகழ்த்தி வந்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்,, பாஜக முன்னாள் கட்சியினர் எனப் பல பிரிவினரும் அடக்கம். அதிலும் கம்யூனிஸ்டு கட்சியை விட்டு விலகினால் அவ்வளவு தான். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சதானந்த மாஸ்டர் பள்ளி ஆசிரியராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி ஏபிவிபி மாணவரைமைப்பில் இணைந்தார். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1994ஆம் வருடம் இரண்டு கால்களையும் முழங்காலுக்கு கீழே உடைத்து அவற்றை மீண்டும் சேர்க்க முடியாத படி சிதைத்தனர்.
கே.டி.ஜெயகிருஷ்ணன் பள்ளி ஆசிரியர். மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர். 1999 ஆம் வருடம் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்புக்குள் நுழைந்த கம்யூனிஸ்டுகள் மாணவர்கள் முன் ஆயுதங்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர். வகுப்பின் கரும்பலகையில் யாராவது சாட்சி சொன்னால் அவர்களுக்கும் அதே கதிதான் என எழுதி வைத்து விட்டுச் சென்றனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பதினேழு மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை தேவைப்பட்டது. இறந்து போனவருக்கு அஞ்சலி செலுத்த பள்ளியின் இடதுசாரி ஆசிரியர்கள் யாரும் செல்லவில்லை. பின்னர் அந்தக் கொலையின் முதல் குற்றவாளி அதே பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
டி.பி. சந்திரசேகர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தார். அதனால் 2012 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மேலும் அவரது நினைவிடம் ஐந்து முறை கம்யூனிஸ்டுகளால் தகர்க்கப்பட்டுள்ளது. வழக்கில்
உயர்நீதி மன்றம் கம்யூனிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட பத்து குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை கொடுத்தது.
2016 வரை முந்தைய ஐம்பது வருடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய 232 பேர் கம்யூனிஸ்டுகளால்
கொலை செய்யப்பட்டுள்ளனர் என அதன் நிர்வாகி அறிவித்துள்ளார். கண்ணூர்
மாவட்டம் கம்யூனிஸ்டுகளின் கோட்டை. பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களின்
சொந்த மாவட்டம். அங்கு மட்டும் 1996-2001 கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் 180 கொலைகள் நடைபெற்றதாக
முதல்வர் நாயனார் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.
மேற்கண்ட விபரங்கள் உலக முழுவதும் மட்டுமன்றி இந்தியாவிலும் கம்யூனிச ஆட்சியாளர்களின் அணுகுமுறையைக் காட்டுகின்றன. தற்போது நூறாண்டு கொண்டாடும் கம்யூனிஸ்டுகள் இந்த உண்மைகளை இனியும் மறைக்க முடியாது.
No comments:
Post a Comment