திரு நரேந்திர மோடி அவர்கள் 2001
ஆம் வருடம் அக். 7 ஆம் தேதி குஜராத்
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சுமார் பதிமூன்று வருட காலம் பணியாற்றினார். பின்னர் 2014 மே மாதம் முதல்
பாரதப் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். எனவே மாநில முதல்வராகவும், தேசத்தின்
பிரதமராகவும் இருபத்தைந்து ஆண்டு காலச் சேவையைத் தற்போது நிறைவு செய்கிறார். சுதந்திர இந்தியாவில் கால்
நூற்றாண்டு காலம் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்று
ஆட்சி நடத்தி வரும் சிறப்பினைப் பெற்ற ஒரே
இந்தியத் தலைவராக மோடி விளங்கி வருகிறார்.
பிற்பட்ட வகுப்பினைச்
சேர்ந்த மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து,
பள்ளிப்படிப்பை முடித்ததும், குடும்பத்தைத் துறந்து முழு நேரமாகத் தேசப்பணி
செய்வதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
கடந்த ஐம்பத்தைந்து வருடங்களாக நாட்டுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். அதில்
முப்பத்தைந்து வருடங்கள் தேசிய இயக்கங்களிலும், பின்னர் இருபத்தைந்து வருடங்கள்
அரசுப் பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளார்.
குஜராத் முதல்வராக அவர்
பொறுப்பேற்ற கால கட்டத்தில் அங்கு சிரமங்களும் சவால்களும் நிறைந்திருந்தன. அதற்குச்
சில மாதங்கள் முன்னர் ஒரு பெரிய பூகம்பம் தாக்கி,
இருபதாயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து, அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. பின்னர்
2002 ஆம் வருட தொடக்கத்தில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும் நிலவி வந்தன.
அவற்றையெல்லாம் அமைதியான
முறையில் உறுதியாக எதிர் கொண்டு ஆட்சியை நடத்தினார். கட்டமைப்பு மேம்பாடு, வறண்ட
நிலங்களுக்குத் தண்ணீர், தொழில்கள்
உருவாக்கம், புதிய முதலீடுகள் ஈர்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் எனப் பல முனைகளிலும்
மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதனால் விவசாயத் துறை வளர்ச்சி பத்து விழுக்காட்டைத்
தாண்டியது.
உலக முதலீட்டாளர்கள்
மாநாடுகள் நடத்தி, பல நாடுகளிலிருந்தும்
பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்
முதலீடுகளை ஈர்த்தார். ஜல மந்திர் திட்டம்
மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர் நிலைகளை மீட்டெடுத்தார். ஜோதி கிராமத் திட்டம் மூலம்
இருபத்தி நேரமும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் மக்களிடையே பிளவுகளைத்
தடுக்கும் வகையில் சமரச கிராமத் திட்டம் மூலம் பஞ்சாயத்துகளில் போட்டியின்றி ஒரு
மனதாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் கொண்டு வந்தார்.
அதனால் மோடி ஆட்சிக்
காலத்தில் மாநிலத்தின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு சுமார் ஏழு மடங்கு அளவு உயர்ந்தது.
முந்தைய காலங்களில் இல்லாத அளவு வளர்ச்சி விகிதம் அதிகரித்து, தேசிய சராசரியை முந்திச்
சென்றது. சமூகத்தில் அமைதி நிலவி, பல
துறைகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. எனவே அந்த மாநிலத்தின் முன்னேற்றப் பாதை ‘குஜராத்
மாடல்’ எனப் பாராட்டப்பட்டது.
அதே சமயம் 2014 கால
கட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் அதிக பாதிப்புக்குள்ளாகும்
வாய்ப்புள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டது. முந்தைய பத்தாண்டு காலத்தில்
மிகப் பெரிய ஊழல்கள் நடந்தேறி இருந்தன. எல்லைகளில்
பதற்றங்களும், நாட்டுக்குள் தீவிரவாதச்
செயல்களும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தன.
மோடி பிரதமரானதும் கடினமான
நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பல விதமான
சீர்திருத்தங்களை மேற்கொண்டும், புதிய அணுகுமுறைகளை வகுத்தும் நாட்டை வழி நடத்தி
வருகிறார். நேர்மையான அதிகாரிகளை நியமித்து, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக்
கொண்டு வந்தார். அதற்காகத் தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார். நாட்டின் பெரிய
திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளவும் ‘பிரகதி’ தளத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின்
மூலம் மக்களின் கருத்துக்களை அறிந்து,
மாதா மாதம் அவர்களிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். தூய்மை இந்தியா, யோகா தினம் போன்ற திட்டங்களை
மக்கள் இயக்கமாக மாற்றினார். மக்கள் அனைவரும் தமது குடும்பங்களுடன் தீபாவளி
கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எல்லைப் பகுதிகளில் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்
வீரர்களின் முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொள்கிறார்.
கட்டமைப்புகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மின்சார வசதி, சாலைகள், போக்குவரத்து, பாலங்கள்,
துறைமுகங்கள் எனத் தேவையான அனைத்தும் பரவலாகி வருகின்றன. ஏழை மற்றும் சாதாரண மக்களின்
முன்னேற்றத்துக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. பன்னிரெண்டு கோடி கழிவறைகள்,
ஐம்பத்தொன்பது கோடி வங்கிக் கணக்குகள், பத்து கோடிக்கு மேல் இலவச எரிவாயு
இணைப்புகள், நான்கு கோடிக்கு மேல் வீடுகள், ஐம்பத்தைந்து கோடி பேர் பலன் பெறும் ஆயுஷ்மான்
பாரத் மருத்துவ உதவி ஆகியவை மூலம் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு ஓய்வூதியத்
திட்டம், சிறு குறு தொழில்கள் முன்னேற முத்ரா திட்டம், சாலை ஓர வியாபாரிகளுக்கு
நிதி உதவி திட்டம், கிராம மக்களுக்குக் குழாய் நீர் வீட்டிலேயே கிடைக்க ‘ஜல்
ஜீவன்’ திட்டம், மகளிர், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் மலை வாழ்
மக்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் என வெவ்வேறு பிரிவினருக்கும் திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் பத்தாண்டுகளில் இருபத்தைந்து கோடி பேர்
வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்து வெளிவந்துள்ளனர்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’
உள்ளிட்ட திட்டங்களால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில்
அலைபேசி தயாரிப்புகளில் நாம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். மோடி ஆட்சியில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ஐம்பத்தாறு மடங்கு அதிகரித்துள்ளது. அவ்வகையில்
எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு
ஏற்றுமதி செல்கிறது.
உலக அளவில் வளர்ந்து வரும்
துறைகளாக உள்ள டிஜிட்டல் தொழில் நுட்பம், சூரிய ஒளி எரிசக்தி ஆகியவற்றில் இந்தியா
வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்துக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது
உலக அளவில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நமது நாட்டில் மட்டும் 49
விழுக்காடு நடைபெறுகிறது.
கடந்த பன்னிரெண்டு
ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு இரண்டு மடங்குக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக உலக அளவில் வளர்ந்த நாடுகள்
உள்ளிட்ட பலவும் பொருளாதாரச் சிரமங்களை எதிர் கொண்டு கடும் சிக்கல்களில் இருந்து
வருகின்றன. ஆனால் இந்தியா சென்ற 2025-26
நிதியாண்டில் 7.6 விழுக்காடு வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பெரிய நாடாகத்
தொடர்ந்து வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.
உறுதியான முடிவெடுப்பதற்குத்
துணிச்சலும் தெளிவும் இல்லாமல் பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பல அடிப்படைப்
பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 நீக்கம், தேசிய கல்விக் கொள்கை
2020, பொருள்கள் மற்றும் சேவை வரி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியன அவற்றில் முக்கியமானவை.
மோடி அரசின் வெளியுறவுக்
கொள்கை நமது தேசத்தின் நலன்களை மையப்படுத்தி அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத
வகையில் நேரெதிர் கருத்துக்களைக் கொண்ட நாடுகளுடனும் கூட நாம் நட்புறவில்
உள்ளோம். அரசின் பக்குவமான அணுகுமுறைகள்
மூலம் இந்தியா தற்போது உலக அளவில் அனைவராலும் நன்கு மதிக்கப்படுகிறது.
முந்தைய காலங்களில்
மக்களிடையே நாட்டைப் பற்றிய ஒரு அவ நம்பிக்கை நிலவி வந்தது. அரசியல் தலைவர்கள்
மேல் மட்டுமன்றி, ஜனநாயகத்தின் மேலும், நாட்டின் எதிர்காலம் பற்றியும் கூட
நம்பிக்கை இல்லாத சூழ்நிலை இருந்தது. தனது சுய ஒழுக்கத்தாலும், முழுமையான
அர்ப்பணிப்பாலும் மோடி ஒரு மகத்தான தலைவராக விளங்கி வருகிறார். அவரது செயல்பாடுகளால்
அரசியலிலும், சமூகத்திலும் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நமது நீண்ட நாளைய கனவுகள் பல இப்போது வரலாறாக
மாறியுள்ளன. அதனால் நம்மால் எதுவும்
சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை பிறந்து, நம் கண் முன்னாலேயே பெரிய மாற்றங்கள்
நிகழ்ந்து வருகின்றன. லட்சியங்களையும், இலக்குகளையும் முன் வைத்து நிர்வாகத்தை
முடுக்கி, நாட்டை வழி நடத்திச் செல்வது என்பது மோடி அவர்களின் பாணி. அதன் மூலம் நிறைய
இலக்குகளை நாடு அடைந்து வருகிறது.
நாட்டின் வெவ்வேறு
துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக மங்கிக்
கிடந்த பாரதக் கலாசாரம் புத்துயிர் பெற்று வருகின்றது. அந்நிய சித்தாந்தங்களுக்கு
மாற்றாக இந்த மண்ணின் கூறுகள் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளன. உலக அளவில் இந்திய வழிமுறைகள்
அங்கீகாரம் பெற்று வருகின்றன.
எனவே சுதந்திர இந்திய
வரலாற்றில் மோடி அவர்களின் கால் நூற்றாண்டுத் தலைமைப் பணி ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
உள் நாட்டிலும், உலகின் பல பகுதிகளிலும் வாழும்
நமது மக்கள் இந்தியன் என்று சொல்வதில்
இன்று பெருமை கொள்கிறார்கள். பல
நூற்றாண்டுகளாக நம்பிக்கையிழந்து இருந்த நமது நாடு, தற்போது நம்மால் எதையும்
சாதிக்க முடியும் என்னும் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
நரேந்திர மோடி நமக்குக்
கிடைத்த வரப்பிரசாதம். சுதந்திர இந்தியாவில் நமக்கு முந்தைய தலைமுறையினர் எல்லாம்
பிரதமராகப் பார்க்கத் தவமிருந்த ஒரு பெரும் தலைவர். இந்தப் புண்ணிய பூமியில் பாரதியப்
பண்பாடு மீண்டும் தழைக்கக் கடவுளால்
அனுப்பி வைக்கப்பட்ட தூதர். சம காலத்தில் உலகமே வியந்து பார்க்கும் மாமனிதர்.
வணங்குவோம். நமது தேசத்தை வளர்ச்சியடைந்த பாரதமாக உருவாக்கும் அவரது இலட்சியப்
பயணத்துக்குத் துணை நிற்போம்.
No comments:
Post a Comment