வெற்றிக் கதைகள் -16


வெற்றிக்கதைகள்-16

முட்டைத்தொழிலில் கொடி கட்டிய நாமக்கல்
குடும்பத்தலைவர்கள் லாரி தொழிலில் ஈடுபட்டு நாமக்கல்லிற்கென்று தனி முத்திரை பதித்தார்கள் என்றால், குடும்பத்தலைவிகள் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல்லிற்கு பெயர் பெற்று தந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க செய்தி.நாமக்கல் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. தமிழகத்தின் மொத்த முட்டை உற்பத்தியில் 65 சதவீதம் நாமக்கல்லில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு நாமக்கல் முட்டை உற்பத்தி 3 கோடியாகும். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் 90 சதவீதம் நாமக்கல் முட்டைகள் தான். நாளொன்றிற்கு அதிகபட்சமாக 45 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு தேவையான முட்டைகள் நாமக்கல்லிருந்தே பெரும்பாலும் சப்ளை செய்யப்படுகின்றன. முட்டை உற்பத்தியில் முன்னணி வகிப்பதால் நாமக்கல் முட்டை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முன்னணி இடத்தை பெற்றதற்கு லாரி தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி தான் காரணம். லாரி தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைவர்கள் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வெளியூர்களிலேயே இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் பெயரளவிற்கு விவசாயத்தில் ஈடுபட்டும், மாடுகளை வளர்த்தும் வந்த குடும்ப பெண்கள் சிறிய அளவில் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடும் போது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவும் முடியும் என்பதால் பெண்கள் தயக்கமின்றி இந்த தொழிலில் இறங்கினர். அதிக வெப்பம், அதிக மழை இல்லாத சூழ்நிலை நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் வளருவதற்கு உதவியாக இருந்தது. கோழிப்பண்ணைக்குத் தேவையான தீவனம், மருந்து உள்ளிட்ட பொருட்களை லாரி உரிமையாளர்கள் தங்கள் சொந்த லாரிகளிலேயே கொண்டு வர முடிந்ததால் மற்ற இடங்களைவிட குறைந்த செலவில் கோழிகளை வளர்க்க முடிந்தது. கொங்குப்பகுதி பெண்களுக்கே உரித்தான கடும் உழைப்பு பண்ணைகளின் எண்ணிக்கையையும் கோழிகளின் எண்ணிக்கையையும் விடுவிடுவென உயர்த்தியது. இதில் கிடைத்த வெற்றியை கண்டு பின்னாளில் பல ஆண்களும் கோழிப்பண்ணைத் தொழிலில் முழுநேரமாக ஈடுபட்டது தனி வரலாறு. ஆனால் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முக்கிய இடம் பிடித்ததற்கு அப்பகுதி பெண்களின் கடும் உழைப்பு தான் காரணம்.லாரி, கோழிப்பண்ணைத் தொழிலில் முத்திரைப்பதித்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களின் தொழில்முனையும் தன்மையால் விசைத்தறி தொழில், நூல்மில்கள், ஆத்தூர் பகுதியில் விளையும் மரவல்லிக்கிழங்கைப் பயன்படுத்தி சாகோ தொழிற்சாலைகள், காகித தொழிற்சாலைகள் என்று பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அண்மைக் காலமாக கல்வித்துறையிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. தரமான பள்ளிகள் இப்பகுதியில் உருவாகியதால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநிலஅளவிலான ரேங்குகளை இப்பகுதி மாணவர்கள் குவித்து வருகின்றனர். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கென்றே தனியான பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். சில பிரபல பள்ளிகள் தங்களது கிளைகளை வெளிமாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளன. கல்லூரி கல்வியிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் 25 மாணவிகள் கல்லூரி கல்வி கற்று வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து இளம்பெண்களும் கல்லூரி கல்வி முடித்த பெண்களாக இருப்பார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பிடத்தக்க வளம் ஏதுமில்லாத நாமக்கல் கடந்த 30 ஆண்டுகளில் பல தொழில்களின் மையமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிக படிப்பறிவு இல்லாவிட்டாலும், கடுமையான உழைப்பை மூலதனமாக்கி பாடுபட்ட சாதாரண விவசாயக் குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களது கடின உழைப்பு, தொழில்முனையும் தன்மை, சேமிப்பு, அர்பணிப்பு ஆகியவை நாமக்கல் என்ற பெயரை உலக அறியச் செய்திருக்கின்றது.
* நெம்பர் 1 நாமக்கல்!
நாட்டிலேயே அதிக சரக்கு வாகனங்கள் உள்ள பகுதி
நாட்டில் அதிக அளவு முட்டை ஏற்றுமதி
மாநிலத்தில் அதிக அளவு முட்டை உற்பத்தி

No comments: