வெற்றிக்கதைகள்-22


குடிசைகளில் குவியும் கோடிகள்


தாராவி!
இந்தப் பெயரை நம்மில் பல பேர் சினிமாவில் குடிசைகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாக பார்த்திருக்கலாம். ஆனால் தாராவி ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் தொழில் மையம் என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.தாராவி மும்பை நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் இரண்டு முக்கிய ரயில்வே இணைப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மேற்கில் மாஹிம் மற்றும் பந்த்ரா, கிழக்கில் மாதுங்கா, வடக்கில் மிதி ஆறு, தெற்கில் சியான் ஆகியவை தாராவியின் எல்லைகள்.300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு தீவுகளைக் கொண்ட பகுதியாக இது இருந்தது. கோலி இன மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு அங்கு வாழ்ந்து வந்தனர். நீர்தேங்கியிருக்கும் ஈரமான பகுதிகள் அந்த தீவுகளைச் சுற்றியும் இருந்தன. பின்னர் அப்பகுதிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு ஒரே நிலப்பகுதியாக மாறிவிட்டது. மீன்பிடி தொழிலும் காலப்போக்கில் அழிந்தது. வெளியில் இருந்து வந்த மக்கள் குடியேறத் தொடங்கினர்.19,20 ம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து குஜராத், தமிழகம், உத்திரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மும்பைக்கு பிழைப்பு தேடி வரத்தொடங்கினர். அவர்கள் வாழ்க்கை நடத்த வாய்ப்பையும் தங்குவதற்கு இடத்தையும் தாராவி கொடுத்தது. மும்பை மக்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்ய ஆட்கள் கிடைத்தனர். நகரை விட்டு தள்ளி அவர்கள் வெளியே இருந்ததால் நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தாராவி அடித்தட்டு மக்களின் புகலிடமாக மாறியது.காலப்போக்கில் மும்பை நகரம் வளர்ந்து வடக்கு நோக்கி சென்றதால், இப்போது தாராவி மும்பையின் மையப்பகுதியில் முக்கியமான இடத்தில் உள்ளது. புதியதாக உருவாகியுள்ள நிதி மற்றும் வணிக மையமான பந்த்ராகுர்லா காம்ப்ளக்ஸ் தாராவியிலிருந்து கல்லெறி தூரத்தில் அமைந்துள்ளது. மும்பையின் பூகோள அமைப்பும், நிலப்பற்றாக்குறையும் தாராவியின் இட மதிப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேறியதன் விளைவாக வித்யாசங்கள் இல்லாத அனைத்துப் பிரிவு மக்களும் வாழும் இடமாக தாராவி மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அதிகமாக உள்ளனர். இதற்கு அடுத்ததாக உத்ரபிரதேச மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தாராவி 100 க்கும் மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த நகர் மற்றும் குடியிருப்புகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. வாழ்க்கையில் சாதாரண நிலையில் உள்ள மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அங்கு வாழ்ந்து வருகின்றனர். போதுமான ரோடு வசதி, சுகாதார வசதிகள் தாராவியில் இல்லை. தகரங்கள் சுவர்களாகவும், பிளாஷ்டிக் சீட்டுகள் ஓடுகளாகவும் கொண்ட வீடுகள் தான் அங்கு அதிகம். ஒரே அறையில் வாழக்கூடிய குடும்பங்கள் ஏராளம். கழிவறை வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் வாழ்பவர்கள் தான் தாராவி மக்கள்.ஆனால் தாராவியின் சிறப்பே அங்கு வாழும் மக்கள் பல விதமான கஷ்டமான வாழ்க்கைக்கு இடையேயும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை பெருக்கும் தன்மை தான். ஆரம்பத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து வந்த மக்கள் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு ஒரு காலனியை உருவாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற பல பேர் தோல் சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டனர். உத்ரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரெடிமேடு ஆலைத் தொழிலில் முனைந்தனர்.பின்னர் பல விதமான தொழில்கள் அங்கு பெருகின. அவற்றில் பிளாஷ்டிக், கண்ணாடி போன்றவற்றை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகத்துக் கொண்டு வரும் தொழில், ரெடிமேடு துணிகள் தயாரிப்பு, தரமான தோல் பொருட்கள் தயாரிப்பு, பானைகள் மற்றும் பிளாஷ்டிக் தொழில்கள் ஆகியவை முக்கியமானவை. கனரக உலோக வேலைகள், மரவேலைகள், நகைத்தயாரிப்புகளும் அங்கு நடக்கின்றன.நமது நாட்டில் விற்கப்படும் விலை உயர்ந்த மிக முக்கியமான வெளிநாட்டு ரக ரெடிமேடு பிராண்டுகள் கூட தாராவியில் தான் தயாரிக்கப்படுகின்றன. நகரங்களில் வாழும் நவீன பெண்கள் விரும்பும் கைப்பைகள், சூட்கேஸ்கள், காலணிகள் ஆகியவையும் தாராவியில் தயாராகின்றன. நாடு முழுவதும் விற்பனையாகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்து 902 யூனிட்டுகள் தாராவியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் ஜவுளி சம்மந்தமாக ஆயிரத்து 36 யூனிட்டுகளும், பானைத் தொழிலில் 932 யூனிட்டுகளும், தோல் தொழிலில் 567 யூனிட்டுகளும், பிளாஷ்டிக் பிராசசிங் தொழிலில் 478 யூனிட்டுகளும் இருப்பது தெரியவந்தது. பல தொழில்கள் குறுந்தொழில்களாக வீடுகளிலேயே செய்யப்படுவதால் அவை குறித்த சரியான கணக்குகள் இல்லை. ஒரே ஒரு அறையில் மட்டும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மட்டும் தாராவியில் 15 ஆயிரம் உள்ளன.தாராவியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அங்கேயே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி அங்கு வேலை செய்வதற்காக பிறப்பகுதியிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள மறுசுழற்சிக்கான தொழிலில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தாராவி மக்களின் சாராசரி மாத வருமானம் 3 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.இந்த தொழிற்சாலைகளுக்கு சைக்கிள்களில் எடுத்துச் சென்று டீ விற்பது, முறுக்கு விற்பது போன்ற தொழில்களிலும் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். தாராவியில் குடிசையில் தங்கி தொழில் செய்து சம்பாதித்து தங்கள் சொந்த ஊர்களில் பல லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள மாளிகைகளை கட்டுபவர்கள் பல ஆயிரம் பேர். இப்படி தாராவியில் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானஉற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.மிககஷ்டமான சூழ்நிலையில்வாழ்ந்த போதும் வேறு யாராவது தங்களுக்கு வாய்ப்பைத் தருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தொழில் முனையும் தன்மையுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தாராவி மக்கள் உழைப்புக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். அதனால் தாராவி பகுதியையே அமைப்பு சாராத் தொழிஞூலகளின் முக்கிய மையமாக உருவாக்கியுள்ளனர். எனவே தாராவி சாதாரண மக்கள் வாழும் நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மட்டுமல்ல. அவர்கள் குடிசையில் வாழ்ந்துவந்தாலும் அசாதாரணமான தொழில் முனையும் தன்மையை பெற்ற பலர் வெற்றிகரமாக தொழில் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புரளும் முக்கியமான இடமும் ஆகும்.*ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக உருவாகியுள்ள தாராவியின் மக்கள் தொகை குறித்த சரியான புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை. ஆனால் 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை அங்கு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தாராவியின் மத்திய பகுதியான சாம்ரா பஜாரில்தான் மக்கள் மிகவும் அதிகம். உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கமாக வாழம் இடங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 29 ஆயிரத்து 500 பேர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாராவியில் மும்பையின் சாராசரியை விட 11 மடங்கு மக்கள் நெருக்கம் உள்ளது.

No comments: