இந்தியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு


இந்திய தேசம் நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள தொன்மையான பண்பாடு.  இன்றைக்கும் வாழ்ந்து வரும் பெருமையுடையது. பொருளாதாரப் பின்னணி இல்லாமல் எந்த ஒரு நாடோ அல்லது பண்பாடோ நீடித்து இருக்க முடியாது. அந்த வகையில் நம்முடைய பண்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றதென்றால், அதற்கெனத் தனித்துவம் வாய்ந்த பொருளாதார வரலாறு  அடிப்படையாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டாயிர வருடத்துக்கான உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை நவீன அளவு கோல்களின் அடிப்படையில் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் வெளியிட்டுள்ளார். அதன்படி பொது யுகம் தொடக்க காலத்தில், அதாவது இன்றைக்கு 2018 வருடங்களுக்கு முன்பே, இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் நிலையில் இருந்து உலகப்  பொருளாதரத்துக்கு  முப்பத்து மூன்று விழுக்காடு பங்களித்துக் கொண்டிருந்தது.  மேலும் கடந்த இரண்டாயிர வருட காலத்தில் பெரும்பான்மையான காலம் நமது தேசம் தான் உலகின் பெரிய செல்வந்த நாடாக விளங்கி வந்தது.  ஆங்கிலேயர்களின் சுயநலமும் சூழ்ச்சிகளுமே நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.

அதனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் ஒரு ஏழை நாடாக, வளர்ச்சி இல்லாத நாடாக ஆக்கப்பட்டோம்.  எனவே சுதந்திரம் வாங்கிய போது சுமார் 45 விழுக்காடு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தனர். பாரம்பரியமான தொழில்கள் எல்லாம் நசுக்கப்பட்டு,  80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை  நம்பி மட்டுமே உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அதனால் நமது நாட்டுக்கு உலக அரங்கில் ஒரு மரியாதை இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது.

ஆனால் இப்போது எழுபது வருடம் கழித்து, நமது நாடுதான் உலக அளவில் முதல் நிலையில் வருவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கிறதெனப் பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துமே ஒரு மனதாகக் கணிக்கின்றன.  மேலும் கடந்த சில வருடங்களாக உலகின் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் நமது தொழில்களும், வியாபாரங்களும் பரவியுள்ளன. மேலும் சர்வதேச அளவில்  வெவ்வேறு துறைகளிலும் இந்தியர்கள் மிக முக்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.

அதனால் நமது நாட்டுக்கான செல்வாக்கு இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1947 ல் இந்தியா ஒரு வறுமையான, வளர்ச்சி குறைந்த, பின் தங்கிய நாடு. ஆனால் இன்று உலகமே அதிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் ஒரு பெரிய சக்தி. உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால்  எந்த ஒரு நாடும் ஒரு எழுபது வருட காலத்தில் தனது நிலைமையை இவ்வளவு தலைகீழாக மாற்றியதாக சரித்திரம் இல்லை. இத்தனைக்கும் சுதந்திரத்துக்குப் பின்னர் நம்மை ஆட்சி செய்தவர்கள் நமக்குப் பொருத்தமில்லாத மேற்கத்திய சித்தாந்தகளை ஒட்டியே பெரும்பான்மையான காலம் கொள்கைகளை வகுத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் நமது நாடு சீக்கிரமாக மேலெழுந்து வர என்ன காரணம்?

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் கள ஆய்வுகள் நமது வளர்ச்சிக்கு அடிப்படையே தொன்மையான நமது கலாசாரமும்  பாரம்பரிய விழுமியங்களும் தான் என அறுதியிட்டுக் கூறுகின்றன.   அண்மைக் காலமாக மேற்கத்திய நிபுணர்கள் கூட கலாசாரம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஒத்துக் கொள்கின்றனர். இந்திய வாழ்க்கை முறையே கலாசாரத்தை மையமாகக் கொண்டது எனவும், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை எனவும்  ‘ ஒருங்கிணைந்த மனித நேயம்’ தத்துவத்தை முன் வைத்த சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்துச் சொன்னார்.

நமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வருவது குடும்பங்களும் அவற்றை ஒட்டிய  சமூகங்களும் ஆகும்.  அதனால் தான்  நமது நாட்டில் அதிகப்படியான  சேமிப்புகள், தொழில் முனையும் தன்மை, அதிக அளவில் குறு/ சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், சமூக மூலதனம், சமூகங்களால் உந்தப்படும் வளர்ச்சி ஆகியன இருந்து வருகின்றன.  நமது பொருளாதாரத்தின் சிறப்பே அதன்  குடும்பம் சார்ந்த தன்மையாகும்.  அதுதான் நமக்கு முக்கியமான வலுவாகும். அதன் மூலம் பொருளாதாரம் பெருமளவு சுயசார்பு பெற்றதாகவும், அரசாங்கங்களைச் சார்ந்து நிற்காமலும் இருந்து வருகிறது.

நமது பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு அளவு அல்லது அதற்கு மேலாக சேமிப்புகளைக் கொடுத்துக் கொண்டு  வருவது குடும்பங்களும் அவை சார்ந்த அமைப்புகளும் தான். குடும்பம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தான்  நாட்டின் வருமானத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கு மேல் பங்களித்து வருகின்றன. மேலும் நமது தேசத்தில் அதிகப் படியான பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்ஹ்டு வருவதும்  குடும்பம் சார்ந்த தொழில்கள் தான்.  

குடும்பங்கள் நிலைத்திருப்பதால் தான் நமது பொருளாதாரமும் நிலைத்த தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் நாட்டுக்குப் பொருளாதார சிரமங்கள் வரும்போது  குடும்பங்கள் அதைப் போக்க உதவி வருகின்றன. மக்களின் சேமிப்புகள் அதிகமாக இருப்பதால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் வெளியார் உதவி அதிகமின்றி  நம்மாலேயே மிகப் பெருமளவு திரட்டப்படுகிறது. அதனால் வெளி நாட்டு மூலதனத்தை நம்பி வாழாத நாடாக நாம் இருந்து வருகிறோம்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் கூட தங்கள் குடும்பங்கள் மூலம் நாட்டுக்கு  முக்கியமான அந்நியச் செலவாணியைப் பிரச்னையைத் தீர்க்க பல சமயங்களில் உதவியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் வெவ்வேறு  நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர். அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் தாய் நாடுகளில் உள்ள தங்களின் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவார்கள். அவ்வாறு அனுப்புவதில் கடந்த பல வருடங்களாகவே உலகிலேயே அதிகமான அளவு தொகையைத் தாய் நாட்டுக்கு  அனுப்புவர்கள் நமது இந்தியர்கள் தான்.  அப்படி அவர்கள் தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பிய வெளி நாட்டுத் தொகைகள் தான் நமது பொருளாதார பிரச்னையைத் தீர்க்க உதவியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்கள் தான். பாரதக் கலாசாரத்தில் பெண்மை என்றாலே தாய்மை;  தாய்மை என்றாலே தெய்வீகம். பெண்மை என்பது அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய நற்பண்புகள் அனைத்துக்கும் அடையாளமாக விளங்கி வருகிறது.  அந்த வகையில் பெண்கள் தமது குணங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகின்றனர்.

உதாரணமாக நமது சேமிப்புகளில் பெண்களின் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.  அதிலும் சேமித்த பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்வது என்பதில் அவர்களின் பங்கு மிகவும் அதிகம். கடந்த இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலகத்தின் தங்க உற்பத்தியில் சுமார் இருபது விழுக்காடு அல்லது அதற்கு மேல் நமது நாட்டினரால் தான் வாங்கப்பட்டது. அவை மிகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சராசரியாக வருடம் சுமார் ஆயிரம் டன்கள் அல்லது மேலும் கூட வாங்கப்பட்டு வந்தன. அதனால் நமது நாட்டில் தங்க இருப்பு அதிகமாக உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னால் நாட்டில் சுமார் 25000 டன் அளவு தங்கம் இருக்கலாம் எனத் தோரயமாக ஒரு மதிப்புப் போடப்பட்டது. உலக அளவில் மக்கள் அதிக அளவில் தங்கம் வைத்திருப்பது நமது நாட்டில் தான். அதற்குக் காரணம் பெண்கள். தங்கத்தை அவர்கள் வெறும் முதலீடாக மட்டும் பார்க்காமல், ஒரு எதிர்காலத்துக்கான காப்பீடாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிறார்கள். அதனால் தங்களின் தங்கக் கையிருப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது பொருளாதர வளர்ச்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணம் கடந்த எழுபது வருடங்களாக ஏற்படுத்தப்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள். அவையே பின்னர் பெரு நிறுவனங்களாக மாறுகின்றன. நமது நாட்டில் சுமார் எட்டரைக் கோடி பேர் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் மேலாண்மை நிறுவன ஆய்வு தெரிவித்தது.  அநேகமாக உலகிலேயே அதிகமான பேர் தொழில் முனைவோராக இருப்பது நமது நாட்டில் தானாக இருக்கும். சிறு தொழில்களில் மட்டும் ஆறு கோடி பேருக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பதாக அரசு விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொழில் முனைவோர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக பெண்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய குணங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொழிலில் ஈடுபடுத்த பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.  அந்த உதவி பெரும்பாலான  சமயங்களில் பெண்களுக்கே உரிய நற்குணங்கள் மூலமாக ஊக்கம், ஆதரவு என்கின்ற வகைகளிலும், சில சமயங்களில் நிதி உதவியாகவும் அமைகின்றன. அதனால் குழந்தைகளும், கணவன்மார்களும், சகோதரர்களும், பேரன்மார்களும்  தொழில் செய்ய உந்தப்படுகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் முனைவோர்களைப் பேட்டி கண்டபோது அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்னவென்று கேட்டோம்.  அப்போது அவர்களின் பதில்களில் அடிப்படையாகத் தெரிந்தது  குடும்பம் மற்றும்  பெண்கள் தான். பெண்கள் தாயாக மற்றும்  மனைவியாக என வெவ்வேறு நிலைகளிலும் குடும்ப  உறுப்பினர்களின் தொழில்களுக்கு அச்சாரமாக இருந்து  பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றனர்.  பாட்டிகளும், திருமணமான சகோதரிகளும் கூட தொழில் முனைவோர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கமாக இருந்ததை எங்களின் ஆய்வுகளின் போது நேரில் பார்த்தோம்.

தமிழகத்தில் அதிக அளவில் உணவு விடுதிகள் வைத்திருக்கும் தொழில் முனைவோர்களைச் சந்தித்து ஆய்வு செய்த போது, அவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தங்களின் சகோதரிகள் அவர்களின் திருமணத்துக்குப் பின்னால் கணவன்மார்களின் மூலம் சகோதரர்களின் ஆரம்ப கால முதலீட்டுக்கு நிதி உதவி அளித்தது தெரிய வந்தது. திருப்பூரில் இன்று ஒரு பெரிய தொழிலதிபர், ஆரம்ப காலங்களில் பல முறை தோல்விகளை மட்டுமே சந்தித்து,  அவரது பாட்டியின் அன்பாலும், பாசத்தாலுமே வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறினார்.

அண்மைக் காலம் வரை பெரும்பாலும் பெண்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் எனக் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நேரடியாக ஈடுபட்டு வந்தனர்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு தொழில்களில் நேரடியாகவும் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் புள்ளி விபரப்படி மொத்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பத்து விழுக்காட்டுக்கு மேல் அவர்களே நடத்தி வருகிறார்கள்.  கடந்த 2015 ஆம் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை பத்து கோடி பேருக்கு மேல் பலன் பெற்றுள்ளனர். அதில் நான்கில் மூன்று பங்கு பேர் பெண்களாக உள்ளனர்.

 மேற்கத்திய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, நமது பொருளாதாரம் மிகுந்த  கவனம் கொண்டதாகவும், சேமிப்பு சார்ந்ததாகவும், ஒருவித  மென்மையானதாகவும் கூட இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.  அவை பெரும்பாலும் பெண்மைக்கான குணங்கள். அதனால் இந்தியப் பொருளாதாரம் என்பதே பெண்மை சார்ந்தது எனச்  சிந்தனையாளர் குருமூர்த்தி  குறிப்பிடுகின்றார். இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்த வரையில்  பெண்கள் ஒரு முக்கியமான  பங்கினை வகித்து, அதன் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருந்து  வருகின்றனர்.

( ஒரே நாடு புத்தாண்டு சிறப்பு மலர், சென்னை, ஏப். 2018)
No comments: