பிரச்சன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்கள் – தமிழாக்கம்


வாழ்த்துரை

பேரா..கனகசபாபதி

உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி

உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு, பாரதியார் பல்கலைக் கழகம், கோவை



உபநிடதங்களை  ’உலகத்தின் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் பாடல்கள்’ என சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். அவை தொன்மையான நமது கலாசார வரலாற்றுக்கு   ஆதாரமான இலக்கியங்கள். பண்டைய காலந்தொட்டு இந்து சமயத்தின் மையக் கருத்துக்களையும் எண்ணங்களையும் தாங்கி நிற்பவை. மேலும் பன்னெடுங்காலமாக நமது  தேசத்தின்  ஆன்மிக எண்ணங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருபவை.

பாரத நாடு உலகின் மிக உயர்ந்த பண்பாடு; பல்லாயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையெனத் தொடர்ந்து நடை போட்டு வரும் பெருமைக்குரியது. பொருளாதாரம், அறிவியல், வாழ்க்கை முறை எனப் பலவற்றிலும் உயர்ந்து நின்று தனித்தன்மை வாய்ந்த சிறப்பான முறைகளை அமைத்துக் கொண்டது. மனித வாழ்வின் இறுதி நோக்கம் எதுவாக இருக்க முடியும் என்று தீர்க்கமாகக் கண்டறிந்தது.  அதன் வெளிப்பாடுகள் தான் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள். உபநிடதங்களைப் பொருத்த வரையில் பிரம்மா மற்றும் ஆத்மா ஆகிய இரண்டும் தான் கருப்பொருட்கள். ’உனது ஆன்மாவை அறிந்து கொள்’ என்பது அவற்றின் மையக் கருத்து.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் போதுதான் ஒவ்வொருவரின் வாழ்வும்  அர்த்தமுள்ளதாகிறது. அந்த வகையில் வேதங்களும் உபநிடதங்களும்  வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித இனத்துக்குப் போதிக்கின்றன. அந்த உண்மைகள் பாரதப் பாரம்பரியம் உலகுக்கு அளித்த வரப்பிரசாதங்கள்.  அவற்றின் சிறப்புகளை அறிந்த வெளி நாட்டு அறிஞர்கள், பதினாறாம் நூற்றாண்டு முதலே அவற்றை மொழி பெயர்க்கத் தொடங்கினர். அதனால் உபநிடதங்கள்  பெர்சியன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், உருது மற்றும் ஜப்பானிய மொழி உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளிலும்  தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன.

அவற்றைப்  படித்த உலகின் முக்கியமான சிந்தனையாளர்கள்  மற்றும் தத்துவ ஞானிகள் பலரும் அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.  ஆங்கிலக் கவிஞர் மில்டன், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்,  அமெரிக்க சிந்தனையாளர்கள் எமர்சன் மற்றும் ஹென்றி டேவிட் தோரோ,  கவிஞர்  வால்ட் விட்மன் மற்றும் ஆங்கிலேய மொழியியல் ஆய்வாளர்  வில்லியம் ஜோன்ஸ் மற்றும்  மேக்ஸ் முல்லர் உள்ளிட்டவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்.  அதனால் அவர்கள் வேத உபநிடதங்களை வெகுவாகப் பாராட்டினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஆர்தர் ஸ்கோபென்ஹௌர் உபநிடதங்களை மனித இனத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு’ எனப் புகழ்ந்து கூறினார்.  அவை அசாத்தியமான  திறமை கொண்டவர்களால் படைக்கப்பட்ட  உச்சபட்சமான முயற்சி எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.  உபநிடதங்களின்  தாக்கத்தை அவர்களின் சிந்தனைகளும்  எழுத்துக்களும்  மேற்கத்திய நாடுகளில் பிரதிபலித்தன. அதனால் அங்கு சிந்தனை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் வருடத்தில் அமெரிக்கா சென்ற போது,  அங்கு  உபநிடதங்கள் பற்றி மக்களிடையே பேசினார். அப்போதே அவர்களுக்கு உபநிடதங்கள் குறித்துக் கேட்பதற்கான ஒரு அடித்தளம் போடபட்டிருந்தது. அதற்குக் காரணம் எமர்சன், தோரோ மற்றும்  விட்மன் போன்ற  அமெரிக்க சிந்தனையாளர்கள் உபநிடதக்  கருத்துக்களையொட்டிய சிந்தனைகளை அதற்கு முன்னரே மக்களிடையே விதைத்திருந்தனர்.  

நமது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகள் நமது பாரம்பரியக் கல்வி முறையை வெகுவாகப் பாதித்தன. பின்னர் சுதந்திரம்   பெற்ற பின்னரும் போதுமான அளவு தேசிய நோக்கில் மாற்றங்கள் நிகழவில்லை. அதனால் நமது பெரும் பொக்கிஷங்களான உபநிடதங்கள் குறித்துப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படுவதில்லை. எனவே அந்த ஞானச் செல்வங்களின் பலன்  கிடைக்காமல் நாம் இருந்து வருகிறோம்.

அந்த வகையில் பேரா.செ.ஞானபூபதி ஐயா அவர்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் போற்றுதலுக்குரியவை. முக்கியமான தேர்ந்தெடுத்த உபநிடதங்களை அழகிய முறையில் தமிழாக்கம் செய்து நமக்கு அளித்து வருகிறார். இந்தப் புத்தகத்தில் பிரச்ன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்களை நமக்கு அளித்துள்ளார். 

உபநிடதங்களை எடுத்துச் சொல்ல அவர் கையாண்டு வரும் விதம் அற்புதமாக உள்ளது. முதலில் சமஸ்கிதத்தில் உள்ளவாறு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவற்றை அப்படியே தமிழ் உச்சரிப்புடன் கொடுத்துள்ளார். தொடர்ந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உரைநடையில்  விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாடல்களில் உள்ள விசயங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள் வருகின்றன. மேலும்   தேவைப்படும் இடங்களில் சுவாமி  ஆசுதோஷானந்தர் அவர்களின் மொழி பெயர்ப்புகள், தமிழ் இலக்கியங்களிலிருந்து மிகப் பொருத்தமான வரிகள், , பகவத் கீதை, பிற உபநிடதங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்கள் எனக் கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான முறையில் நூல் எழுதப்பட்டுள்ளது.

உபநிடதங்களின் மொழி பெயர்ப்பாகத் தமிழில் கொடுத்துள்ள பாடல்கள் மிகவும் கவித்தன்மை உடையதாகவும் அதே சமயம் எளிமையாகவும் அமைந்துள்ளன. அதனால் அந்த மொழிபெயர்ப்புகள்,  புத்தகத்தை மேலும்  படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  உதாரணமாக மழையாகப் பிராணன் பொழிந்து,  அதனால் உணவு வகைகள் அனைவருக்கும் கிடைத்து உயிரனங்கள் மகிழ்ச்சியுடன் வாழும் என உபநிடத வரிகள் வருகின்றன. அதற்கான மொழி பெயர்ப்பு இப்படி வருகிறது.

மழையாகப் பிராணன் நீ பொழியும் போது

மகிழ்வுடனே உயிரினங்கள் நிலைத்திருக்கும்

பிழையாமல் உணவு வகை அனைவருக்கும்

பெருமளவில் மனமாரக் கிடைக்கும் அன்றே!

மிகவும் அருமை. எவ்வளவு எளிமையான தமிழில்  உபநிடதங்கள்!

இந்தப் புத்தகத்தின் மூலம் ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் இரண்டு முக்கிய வகைகளில் பங்களித்துள்ளார்கள்.  முதலாவதாக உலகின் மிக உயர்ந்த உபநிடதக் கருத்துகளை தமிழ் மக்களிடையே கொண்டும் செல்லும் அரிய பணி. இது மகத்தானது; மிகவும் அவசியமானது. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐயாவின் இந்தப் பணி தொடர வேண்டும். அதன் மூலம் அதிகம் புலமையில்லாத மக்களுக்கும் உபநிடதக் கருத்துக்கள் சென்றடைய வேண்டும்.

இரண்டாவதாக தமது புத்தகங்கள் மூலம் மொழி பெயர்ப்புத் துறையில் ஒரு தனிப் பாதையை ஐயா உருவாக்கி வருகிறார்கள். பிற மொழியில் உள்ள விசயங்களை  புத்தகம்  படிப்பவர்களுக்கு எந்த வித சிரமமும், சந்தேகமும் இல்லாமல் எளிய முறையில் தெளிவாகப் படைக்க முடியும் என்பதை   எடுத்துக் காட்டி வருகிறார்கள்.

ஐயாவின் ஆழ்ந்த புலமையும்,  தெளிந்த அறிவும், உயர்ந்த நோக்கும்,  அர்ப்பணிப்பு மனப்பான்மையும் புத்தகம் படிக்கும் போது தெரிய வருகிறது.  எல்லாம் வல்ல முருகப் பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளையும், வேண்டிய அனைத்து செல்வங்களையும் அளிக்க வேண்டும்.  உபநிடதம் குறித்த புத்தகங்கள் வெளி வருவதற்கு பக்தர் பேரவையின் மாநிலச் செயலாளர் எக்ஸ்லான் திரு. கே.இராமசாமி அண்ணா அவர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் சமுதாய மற்றும் கல்விப்பணிகள்  மென்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.

இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தர் உபநிடதங்களின் முக்கியத்துவம் குறித்துச் சொன்ன கருத்துக்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  உபநிடதங்கள் வலிமையளிக்கும்  மிகப் பெரிய ஊற்று. மொத்த உலகத்துக்கும் புத்துயிர் அளிக்கக் கூடிய வலிமை அவற்றில் உள்ளது; அவற்றின் மூலம் உலக முழுவதையும் வலிமையாக்க முடியும்.  நலிவடைந்த நிலையிலும், கீழான நிலையிலும் இருக்கக் கூடிய எல்லா வித மக்களும் அவற்றின் வார்த்தைகளால் சொந்தக் கால்களில் நின்று சுதந்திரமாக உலவ முடியும். உடல், மனம் மற்றும் ஆன்மிக விடுதலைதான் உபநிடதங்களின் நோக்கம்.

இந்தப் புத்தகம் இரண்டு உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள நுட்பமான விசயங்களைத் தெளிவாக விளக்குகிறது. இதை அனைவரும் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

உபநிடதங்களைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் புனிதமான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

( புத்தக வெளியீடு -  திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர், விளம்பி வருடம், சித்திரை 1, 2018)


No comments: