பஞ்சாப் அரசின் தவறுகள்; பிரதமர் பாதுகாப்பு தேசத்தின் கடமை

 

ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர்  பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்புத் தவறுகள் மிகவும் அபாயகரமானவை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் 130 கோடி மக்களால் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளவர் திரு நரேந்திர மோடி. அன்று சாலையில் செல்லும் வழியில் சற்று தொலைவில் போராட்டக்காரர்கள் வழியை மறிக்க   ஒரு பாலத்தின் நடுவில் சுமார் இருபது நிமிடங்கள் அவர் காத்திருந்த புகைப்படங்கள் வெளிவந்த போது நாட்டு மக்கள் கடும்   அதிர்ச்சிக்குள்ளாயினர்.  

அதுவும் அந்த இடம் பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள்ளிருந்தே கூட அங்குள்ளவர்களைக் குறி வைத்துத் தாக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த பெரோஸ்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெடிகுண்டுகள் மற்றும் வெடிக்கும் கருவிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியானது பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டுகளைக் கடத்திக் கொண்டு வரப்படும் பகுதியாக இருந்து வருகிறது.

அன்று பிரதமர் டெல்லியிலிருந்து வந்து, படிண்டா விமான நிலையத்தில் இறங்கியது தொடங்கி, அத்தனை விசயங்களிலும் பஞ்சாபை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு விதிகளுக்கு முரணாக, சற்றும் பொறுப்பற்ற முறையில், நடந்து கொண்டுள்ளது. பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வரும் போது அந்த மாநில முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட முக்கிய அதிகாரிகள்  உள்ளிட்ட குழுவினர் வரவேற்பு கொடுப்பது என்பது அடிப்படையான நடைமுறையாகும்.

ஆனால் அங்கு பிரதமர் வந்த போது முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் யாரும் வரவேற்கச் செல்லவில்லை. மேலும் மாநில உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறைச் செயலரும் இல்லை,  மாநிலத்தின் இன்னொரு அமைச்சர் மட்டுமே வரவேற்றிருக்கிறார். அது நிர்வாக, அரசியல் நடைமுறைகள் மற்றும் நாகரிகத்துக்கு விரோதமான செயலாகும்.

தன்னுடன் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டதால், தான் வரவேற்கச் செல்லவில்லை என முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் அதற்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முக கவசம் எதுவுமின்றி கலந்து கொண்டு பேசியுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோர் வாகனங்கள் மட்டும் அவர்கள் வராததால் மற்ற வாகனங்களுடன் பிரதமர் வாகனத்தைத் தொடர்ந்து வரிசையில்  சென்றுள்ளன.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான தியாகிகளில் மூவர் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர். 1931 ஆம் வருடம் மார்ச் 23 ஆம் தேதி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஹூசைனிவாலா என்பது. அங்கு தேசிய தியாகிகள் நினைவிடம் உள்ளது. விமான நிலையத்திலிருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவரது முதல் நிகழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அங்கு வானிலை பொருத்தமாக இல்லாததால், காரிலேயே தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது.  அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், பெரோஸ்பூரில் சுமார் 42000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மாநிலத்துக்கு அர்ப்பணித்து பொது மக்களிடையே பிரதமர் பேசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே ஹுசைனிவாலாவை நோக்கி காரில் அவர் பயணத்தை ஆரம்பித்தார். செல்லும் வழியில் பியரியானா கிராமத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன. பாலத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஏனெனில் சில மீட்டர் தூரத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு வழியை மறித்து வாகனங்களைச் செல்ல விடாமல் தடுத்து விட்டுக் கொண்டிருந்தது.  

எனவே பிரதமர் பாலத்தின் மேலேயே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கப் போதுமான எண்ணிக்கையில் பஞ்சாப் காவல் துறையினர் அங்கில்லை. அன்று பிரதமரின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நீலப் புத்தகத்தின் விதி முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு  அதிகாரிகள் மட்டும் கீழே இறங்கி, அவரது வாகனத்தைச் சுற்றி நின்று பாதுகாப்பு கொடுத்தனர்.  விதி முறைகள் படி தேவையான பாதுகாப்பு தர வேண்டி உடனே மாநில முதலமைச்சரையும்,  காவல் துறை தலைமை அதிகாரியையும்  அவர்கள் தொடர்பு கொண்டனர். பல முறை தொடர்பு கொண்டும், அவர்கள் இருவரும் கடைசி வரை தொடர்புக்கு வரவேயில்லை.

இத்தனைக்கும் முறைப்படி பிரதமரின் பயணத் திட்டங்கள் முழுமையும் முன்னரே மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு, அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த குறிப்பிட்ட வழியில் பாலத்தின் மேல் செல்வதற்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி, அந்த வழி பாதுகாப்பானது; எந்தப் பிரச்னையும் இல்லை என உறுதி அளித்துள்ளார்.

பிரதமரின் பிரயாணத்தை முடிவு செய்யும்  முன்னரே மத்திய அரசின் அமைப்புகள் பஞ்சாபின் அந்தப் பகுதிகள் பற்றிய விபரங்களை மாநில அரசுக்கு அனுப்பி அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு  எச்சரித்துள்ளன.  மேலும் அந்தப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை, அங்கு நடைபெற வாய்ப்புள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் தீவிரவாத அமைப்புகளின் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுத்  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அப்படியிருந்தும் மாநில அரசு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டதாகத் தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் தலைமைக் காவல் அதிகாரி சித்தார்த் சட்டோபாத்யாய அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கே தகுதியவற்றவர் என மத்திய தேர்வாணையக் குழு முன்னரே அறிவித்துள்ளது. ஆயினும் அங்கு ஆளும் கட்சியில் நிலவும் உட்கட்சி போட்டியின் விளைவாக  மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் பிரநிதியாக அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.    

கடந்த நாற்பது வருடங்களில் இந்தியா தனது முன்னாள் பிரதமர்கள் இரண்டு பேரை, அதுவும் ஒருவர் பதவியில் இருக்கும் போதே, தீவிரவாதத்தால் இழந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அவர்கள்  தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை வேரறுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் நாட்டில் அமைதி நிலவி வருகிறது.

எனவே தேச விரோத சக்திகள், தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகின்றன. அவரை முக்கியமாகக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தவும்  திட்டமிட்டு வருகின்றன. அன்று பஞ்சாபில் நடந்த வழி மறிப்பு மற்றும் போராட்டத்துக்கு பாரதிய கிசான் சங்கம் - கிரந்திகா பிரிவு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. 

அது ஒரு இடதுசாரி சார்பு கொண்ட அமைப்பு. அதன் தலைவர் சுர்ஜித் பூல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி வகித்த போது 2009 ஆம் வருடம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து மாதம் சிறையில் இருந்தவர். மேலும் அதன் முக்கிய தலைவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளதாகத் தெரிகிறது.  

எனவே விவசாயிகள் என்கின்ற போர்வையில் தீவிரவாத மற்றும் தேசவிரோத சக்திகள் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றின் பின்னணியில் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அமைப்புகள் இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு மாநில அரசு மறைமுகமாக ஒத்துழைப்பு கொடுத்திருப்பது தெளிவாகி வருகிறது. பிரதமர் பிரயாணம் செய்யும் வழித்தடம் முன்னரே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக குறைந்த கால அவகாசத்திலேயே அவர்கள் அந்த இடங்களில் கூடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில காவல் துறை அத்தனை நிகழ்வுகளையும் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துள்ளது. கடமை உணர்வுள்ள அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.  காவல் துறையினர் பிரதமர் செல்லும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், போராட்டக்காரர்களுடன் சேர்ந்து எந்த வித அக்கறையுமின்றி தேநீர் குடித்துக் கொண்டிருந்த நிகழ்வு வீடியோவாக வெளி வந்ததைப் பலரும் பார்த்தோம்.

சுதந்திர இந்தியாவில் அண்மைக் காலத்தில் ஒரு பிரதமருக்கு இவ்வளவு கவனமில்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை. எனவே அங்குள்ள நிலமையை உணர்ந்து கொண்ட பிரதமர் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி விட்டு உடனே டெல்லி திரும்பினார். பிரயாணம் தொடர்ந்து நடந்திருந்தால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, உயிரழப்புகள் நிகழ்ந்திருக்கலாம். அதன் மூலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த தேச விரோத சக்திகள் முயற்சி செய்திருக்கும்.

ஆனால் அவ்வளவு நடந்த பின்னரும் மாநில முதல்வர் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து, தவறுகளைச் சரி செய்கிறோம் என்று சொல்லவில்லை. மத்திய காங்கிரஸ் தலைமையும் மௌனம்  காத்தது. நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்த  பின்னர் சில நாட்கள் கழித்தே முதல்வர் வேறு வழியின்றி வருத்தம் தெரிவித்தார்.

மாறாக அந்த நிகழ்வைக்  காங்கிரஸ் கட்சியினர் கேலி செய்தனர். பெரோஸ்பூரில் போதிய கூட்டம் இல்லாதால்தான் பிரதமர் திரும்பிச் சென்றார் எனக் கூச்சமில்லாமல் பேசினார்கள். மேலும் பிரதமருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்தது எனவும், அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் சொன்னார்கள்.

அவற்றுக்கெல்லாம் மேலே போய் சில தலைவர்கள் அதைக் கொண்டாடினார்கள். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர்ஜோஷ் எப்படி இருந்தது?’ எனப் பிரதமரைக் கேட்டார். ராஜிவ் காந்தி பலியான தமிழ் மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நிகழ்வை எள்ளி நகையாடினார்.

பிரதமரின் அந்தக் கூட்டத்துக்கு மக்கள் செல்வதைக் கூட ஆளும் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தடுத்துள்ளது. கூட்டத்தைத் தடுக்க காங்கிரஸ் எல்லா தந்திரங்களையும் மேற்கொண்டது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நட்டா குறிப்பிட்டுள்ளார். அன்று பிரதமருக்கு பாதிப்பு ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஈரானி குற்றம் சாட்டினார்.

மாநில ஆளும் கட்சியின் போக்கை பல முக்கிய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் மட்டுமன்றி, அந்த மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் போன்றவர்களும் கண்டித்துள்ளனர். அது மட்டுமின்றி இருபத்தேழு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த விசயம் குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பஞ்சாப் அரசின் வேண்டுமென்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். மேற்கண்ட சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டறிய உச்ச நீதி மன்றம் முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் மூலம் பல விசயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.

இந்த சமயத்தில் ஒரு முக்கியமான விசயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் நமது மக்களாட்சியின் தலைமைப் பிரதிநிதி. எனவே அவரைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை. அதில்  எந்தவித சமரசமும் செய்யக் கூடாது.

ஆனால் மோடி அவர்கள் பிரதமர் ஆன பின்னர், தேச விரோத, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் எதிர்கட்சிகள் சிலவும் சேர்ந்து செயல்படுவது மக்களாட்சியின் மாண்பைச் சிதைப்பதாகும். குறிப்பிட்ட அந்த நிகழ்வுக்கு அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு மனதாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் திமுக உள்ளிட்ட பல கட்சியினர் இன்னமும் அமைதி காத்து வருகின்றனர்.

பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மேல் உள்ள தனிப்பட்ட விரோதம் தேசத்துக்கு எதிராகப் போகும் போது, அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். நாட்டுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து இறையாண்மைக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் போது, அவற்றை அடக்குவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே தற்போது காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் செய்த செயல் நய வஞ்சகமானது; மக்களால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

( தமிழ் ஹிந்து.காம், ஜனவரி 2022)

No comments: