தவறான சிந்தனைகளை மாற்றிய தரம்பால்

 

இந்திய நாடு தொன்மையானது. நீண்ட நெடிய பண்பாட்டைக் கொண்டது. பல நூறாண்டுகளாக கல்வி, தொழில், விவசாயம், மருத்துவம், தொழில் நுட்பம் என வெவ்வேறு துறைகளிலும் முன்னோடியாகவும் உலகின் பொருளாதார சக்தியாகவும் விளங்கி வந்தது. ஆனால் அந்த  உண்மைகள் எல்லாம் தொடர்ந்து மறைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

2001 ஆம் வருடம் பாரீஸ் நகரில் அமைந்துள்ள பணக்கார நாடுகளுக்கான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ஒரு   ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது பொது யுக தொடக்க காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இந்தியா இருந்து வந்ததையும்,  தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பெரும் சக்தியாக விளங்கி வந்ததையும் எடுத்துக் கூறியது. அவ்வறிக்கை வெளி வரும் வரை இந்தியா, ஏழை நாடாகவும், மேற்கத்திய நாடுகள் செழிப்புடன் இருந்து வந்தன எனவுமே சித்தரிக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் நமது தேசம் பற்றிய மறைக்கப்பட்ட அடிப்படையான பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர் காந்தியவாதி திரு. தரம்பால் அவர்கள். சிறந்த வரலாற்றாசிரியர் மற்றும் தேசிய சிந்தனையாளர். அவர் நூறாண்டுகளுக்கு முன்னால் 1922 ஆம் வருடம் இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தார். காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு  அறைகூவலை ஏற்று   கல்லூரிப் படிப்பைப் பாதியில் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.

அவரது ஆரம்ப கால செயல்பாடுகள் கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்துக்கள் பற்றியதாக இருந்தன. அந்த நோக்கில் காந்திஜியின் சீடரான மீராபென் அம்மையாருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களுடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டார். அதன் பின் அகில இந்திய பஞ்சாயத்து அமைப்பின் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகச் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர் செய்த பணிதான் நமது தேசம்  பற்றிய காலனி ஆதிக்க காலப் பொய்கள் பலவற்றைத் தகர்த்தெறிந்தது.  1966 முதல் சுமார் இருபது ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் பிரிட்டனில் எடுத்து வைத்திருந்த இந்தியா  பற்றிய  ஆவணங்களைக் கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவை ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பின்னர் இங்கு நிலவி வந்த பாரம்பரிய கல்வி முறை, கலாசாரம், சமூகங்கள், அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம், பஞ்சாயத்து அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட விசயங்களைப் பற்றியது.

தொடர்ந்து அந்தக் குறிப்புகளை வைத்துப் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். சொற்பொழிவுகளை மேற்கொண்டார். அவரது புத்தகங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்சமகால ஐரோப்பியர்களின் சில குறிப்புகள்” (1971), ”ஒத்துழையாமை இயக்கமும் இந்திய பாரம்பரியமும் - பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்ப காலத்திய சில  ஆவணங்களுடன்” (1971) மற்றும் அழகிய மரம்பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரியக் கல்வி” (1983)   உள்ளிட்ட பலவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆங்கிலேயர் இங்கு வருவதற்கு முன்பு தொட்டு இருந்து வந்த அரசியல், நிர்வாக அமைப்புகள், சமூகங்களின் சிந்தனா முறைகள் மற்றும் போக்குகள் எனப் பல விசயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். அவர் ஆய்வுகளில் தமிழ்நாடு தொடர்பான விசயங்கள் நிறைய உள்ளன. முந்தைய மெட்ராஸ் பகுதியின் பஞ்சாயத்து முறை குறித்து தனியாக புத்தகம் எழுதியுள்ளார். 2015 ஆம் வருடம் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை அவரது எழுத்துக்களைத் தொகுத்து புத்தகம் வெளியிட்டது.

அவரது எழுத்துக்கள் கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்ததை எடுத்துச் சொல்கின்றன. மேலும் இந்திய சமூகங்கள் உயிர் துடிப்போடு இருந்து வந்தது எனவும், அவை நமது மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டி சமூக, அரசியல் மற்றும் நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தன எனவும் எடுத்து வைக்கின்றன.    அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக நமது பண்பாடு  விளங்கி வந்தது  என்னும்  உண்மையையும் வெளிக் கொணர்கின்றன.   

உதாரணமாக அழகிய மரம் என்னும் புத்தகம் நமது நாட்டில் நிலவி வந்த கல்வி பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர் 1820-30 கால கட்டங்களில் நமது நாட்டில் இருந்து வந்த கல்வி பற்றிய விபரங்களைக் கணக்கெடுத்தனர். அப்போது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்த தாமஸ் முன்ரோ, அவரது பகுதியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.. அப்போதைய வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தது ஒரு பள்ளி இருந்து வந்துள்ளது. 

அந்த சமயத்தில் நமது நாடு ஆங்கிலேயர்களின் கடும் பாதிப்புகளுக்கு  உள்ளாகி இருந்தது. அதனால் பல சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் படையெடுப்புகள், கொள்ளை அடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்கள் எனப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆயினும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் மிக அதிகமாக எழுபத்தைந்து விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றிருந்தனர்.

வங்காளப் பகுதியில் மாவட்டத்துக்கு சராசரியாக நூறு என்னும் அளவில் மொத்தமாக 1800 உயர் கல்வி நிறுவனங்களானகல்லூரிகள்இருந்து வந்ததாக ஆங்கிலேய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சி பகுதியில் மாவட்ட வாரியாக அப்போது இருந்து வந்த கல்லூரிகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி-  279, கோயம்புத்தூர்- 173, குண்டூர் -171, தஞ்சாவூர் -109, நெல்லூர் -107, வட ஆற்காடு – 69, சேலம் -53, செங்கல்பட்டு – 51 என அந்தப் பட்டியல் தொடர்கிறது.

எனவே பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக இருந்து வந்துள்ளது  தெரிய வருகிறது. மேலும் கல்வி நிறுவனங்களில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல சமூகங்களையும் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்; அவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக இருந்துள்ளனர். எனவே கல்வியில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சுதந்திரத்துக்கு முன்னர் இருந்து வந்தனர் என்னும் கருத்தும் பொய்யாகிறது.

அதே சமயம் பிரிட்டனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பள்ளிக் கல்வி குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது கல்வி முறையைத் தெரிந்து கொண்ட பின்னரே அங்கு பரவலான கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலேயர்கள் தான் நமக்குக் கல்வியைக் கொடுத்தனர் என்பது முழுவதும் தவறு.

ஆனால் பல நூற்றாண்டுகளாக இங்கு வெற்றிகரமாக நிலவி வந்த கல்வி முறையை அழித்து 1835 ல் மெக்காலே கல்வி முறை திணிக்கப்பட்டது. அதனால் 1891 ஆம் வருடத்தில்  படித்தவர்கள் எண்ணிக்கை வெறும் ஆறு விழுக்காடாக குறைந்து போனது. அதனால் தான் 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மாநாட்டுக்கு காந்திஜி லண்டன் சென்ற போது அவர்களிடத்தில் அழகிய மரம் போல இருந்த எங்களின் இந்தியக் முறையை நீங்கள் அழித்து விட்டீர்கள் எனக் கூறினார்.

அதே போல பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் தொழில் நுட்பம் என்னும் அவரது புத்தகம் ஆங்கிலேயர்கள் இங்கு கண்ட அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப விசயங்களை எடுத்துக் கூறுகிறது. நிலத்தை உழுவதற்கு நமது நாட்டு விவசாயிகள் பயன்படுத்தும் கலப்பையை அவர்கள் முதன் முதலாக நமது நாட்டில் தான் காண்கின்றனர். அது விவசாயத் துறையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பெனவும், இங்கு பழங்காலந் தொட்டு இருந்து வருவதாகவும் கண்டறிகின்றனர்.

ஆனால் அது இங்கிலாந்தில் முதல் முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பல ஆண்டுகள் கழித்து உபயோகத்துக்கு வருகிறது. அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடும் முறை இந்தியக் கிராமங்களில் குடும்ப பெண்மணிகள் அளவில் பரவலாக நிலவி வருவது அவர்களுக்கு இங்குதான் தெரிய வருகிறது.  அதுவே பின்னர் அவர்களின் கண்டுபிடிப்பாக மாறுகிறது.  

அதே போல நமது நாட்டில் சமூக அளவில் நிர்வாக முறைகள்  இயற்கையாக அமைந்து, மக்களுக்கிடையே வரும் பிரச்னைகள்  சுமுகமான முறையில் சரி செய்து கொள்ளும் வழி முறைகள் இருந்தது பற்றி எழுதியுள்ளார். மேலும் ஆட்சியாளர்கள் பொருந்தாத விசயத்தை செயல்முறைப் படுத்தும் போது அமைதியான முறையில் தங்களின்  எதிர்ப்பைத் தெரிவிக்க ஒத்துழையாமை என்னும் முறை நமது தேசத்தில் உருவாக்கப்பட்டு  கடைப்பிடிக்கப்பட்டு வந்தது உள்ளிட்ட பல விசயங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.

இந்தியா கல்வி அறிவில்லாத, அறிவியல், தொழில் நுட்பம் தெரியாத ஏழை நாடு. இந்தியர்கள் கலாசாரம், பண்பாடு தெரியாதவர்கள். அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது எனப் பல பொய்களை காலனி ஆதிக்க சக்திகள் அப்போதிருந்து பரப்பி வந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னரும் அந்தக் கருத்துக்கள் இங்குள்ள பலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. அவற்றையெல்லாம் ஆங்கிலேயே ஆவணங்களை மையமாக வைத்தே தகர்த்தெரிந்தவர் தரம்பால்.

அவற்றின் மூலம் நமது தேசம் கல்வியில் உலக அளவில் உயர்ந்து விளங்கியது மட்டுமின்றி, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம் போன்ற துறைகளிலும் சிறந்து இருந்து வந்துள்ளது பற்றிய உண்மைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.  மேலும் நமது சமூகங்கள் தமக்குப் பொருத்தமான நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்டு நன்கு வாழ்ந்து வந்துள்ள விதம் மற்றும் உலக அளவில் இல்லாத பல சிறப்பான முறைகள் எல்லாம் இங்கு உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்துள்ள தன்மை ஆகியவையும் தெரிய வருகின்றன.

நமது தேசம் இயற்கையாகவே துடிப்பு மிக்கது. இந்தியச் சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் பலவும் தனித் தன்மை வாய்ந்தவை. அவை  நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், குறிப்பாக காலனி ஆட்சிக் காலத்தில், மழுங்கடிக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னரும், நாம் சுய உணர்வுகளைப் பெருக்கி, தேசிய நோக்கில் சிந்தித்து செயல்படத் தவறி வருகிறோம். அந்தக் குறைகளை நாம் சரி செய்து கொண்டால், நமது தேசம் தனது இயற்கைத் தன்மையைப் பெற்று உயர் நிலையை அடைந்து விடும் என்பதுதான்   அவரது சிந்தனைகளின் மையக் கருத்தாக இருந்தது.

அதற்காகவே 2006 ஆம் வருடம் காலமாகும் வரை அவர் செயல்பட்டு வந்தார். 1980 களில் உள்ளூர் சார்ந்து சிந்திக்க கூடிய அறிவியல் நிபுணர்கள் ஒன்றிணைந்து சென்னையைத்  தலைமையிடமாக கொண்டு தேசப்பற்றுள்ள அறிவியல் தொழில் நுட்ப அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்தனர். அதற்கு அவர் வழிகாட்டியாக இருந்து வந்தார். பின்னர் இடதுசாரிகள் மட்டுமே அதிகம் இடம் பெற்று வந்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டார். 2001 ஆம் வருடம் மத்திய அரசு அவரைத் தேசிய கால்நடை குழுத் தலைவராக நியமனம் செய்தது.

சுதந்திர இந்தியாவில் இருந்து வந்த நம்மை அடிமைப்படுத்தும் பல தவறான  சிந்தனைகளை மாற்றியதில் திரு தரம்பால் அவர்களின் பணி மகத்தானது. அவரது கருத்துக்கச்ள் அதிக அளவில் சிந்தனையாளர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சென்று சேர வேண்டும். அதன் மூலம் பாரம்பரிய மிக்க இந்த மண் சார்ந்த வகையில் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அதனால் சுய தன்மை பெற்ற பெரும் சக்தியாக நமது தேசம் மீண்டும் உருவாக வேண்டும்.  அது மட்டுமே நாம் அந்த மகத்தான சிந்தனையாளருக்குச் செய்யும் காணிக்கையாக இருக்கும்.

( தினமணி, பிப்.19, 2022. பிப்ரவரி 19 திரு தரம்பால் அவர்களின் 101 ஆவது பிறந்த நாள் )

No comments: