தமிழகத்துக்கு நீட் தேர்வு அவசியம்; ஆளுநர் நடவடிக்கை சரியானது

 


2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்   செப்டம்பர் 13 ஆம் தேதியன்று நீட் தேர்விலிருந்து மாநிலத்துக்கு விலக்களிக்க வேண்டும் எனக் கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மசோதாவை 2022 பிப்ரவரி 1 ஆம் தேதி ஆளுநர்  தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி உள்ளார்.

அந்த சமயத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால், சட்டப்பேரவை மறு ஆய்வு செய்திடும் வகையில் திருப்பி அனுப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. அந்த முடிவை எடுக்கு முன் மாநில அரசு அமைத்த ராஜன் கமிட்டி அறிக்கை மற்றும் நீட் தேர்வு வருவதற்கு முன்னால் மருத்துவர் சேர்க்கையில் மாணவர்களின் சமூக நீதி ஆகிய விசயங்கள் பரிசீலிக்கப்பட்டதாக மேற்காணும் குறிப்பு தெரிவிக்கிறது.

உடனே நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டியது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுக தவிர பிற கட்சிகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. அதில் நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவினை மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அப்போது 2006 முதல் 2016 வருடம் வரை  மாநில முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 213 பேர் மட்டுமே. அதாவது ஒரு வருடத்துக்கு சராசரியாக பத்தொன்பது பேர். மாநில மருத்துவ மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 0.7 விழுக்காடு.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய போது நமது மாநில மாணவர்களின் தேர்ச்சி அளவு குறைவாக இருந்தது. அதற்குக் காரணம் தமிழகத்தில் நீட் தேர்வு வராது என்று மாணவர்களிடத்தில் அரசியல் கட்சிகள் உருவாக்கிய தவறான கருத்து மற்றும் பள்ளிக் கல்வித் துறையின்  குறைபாடுகள் ஆகியன. சுமார் பன்னிரெண்டு வருடங்களாக மாநிலத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தன. அதனால் பிற மாநிலங்களுடன்  நமது மாணவர்களால் போட்டியிட முடியவில்லை.

2018 ஆம் வருடம் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அரசு கொடுக்கத் துவங்கிய பின்னர்  மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு என வந்ததும் ஏழை மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகினர். அதனால் சென்ற வருடம் தமிழக மாணவர்களின்  தேர்ச்சி விகிதம் தேசிய அளவை விட அதிகமாக இருந்தது.  

2019 ஆம் வருடம் நடைபெற்ற தேர்வுகளுடன் ஒப்பிடும் போது 2020 ல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 9 விழுக்காடு அதிகமானது. மேலும் முதல் முறையாக அதிக அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் இந்திய அளவில் பிரபலமான மருத்துவக் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், டெல்லி  மற்றும் ஜிப்மர் உள்ளிட்டவற்றில் சேர்ந்தனர்.

மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கானநீட் என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை 2016 ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது,  மத்திய அரசு அந்த வருடம் முதலே நாடு முழுவதிலும் நடத்துவதற்கு அனுமதி அளித்தது. பின்னர்  2017 ஆம் வருடம் முதல் அது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் வருடா வருடம் மாணவர்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பலவும் ஆரம்ப முதலே நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்து விட்டு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

அதிமுக அரசு எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியது.  அதன் தலைவர்களும் அந்த வாக்குறுதியை தொடர்ந்து மக்களிடத்தில் தேர்தலின் போது பரப்புரை ஆற்றி வந்தார்கள்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஜூன் ஐந்தாம் தேதி நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே ராஜன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்துள்ளது. அந்தக் குழு தேர்வின் தாக்கம் குறித்து மக்களிடத்தில் கருத்துகளைப் பெற்று ஒரு மாத காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்குமெனச் சொல்லப்பட்டுள்ளது.

அதற்காக வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பு திமுகவின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் சமூக நீதியைப் பாதுகாப்பது எனவும், முந்தைய திமுக ஆட்சியில்  கொண்டு வந்த முறையான பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முயற்சிக்கும் திமுக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விசயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள  இடங்கள், இடப்பகிர்வு பற்றிய அடிப்படை விபரங்கள் மற்றும் நீட் தேர்வு மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகிய   விசயங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றின் மூலம் நீட் தேர்வு உண்டாக்கியுள்ள கள மாற்றங்களை நம்மால் அறிய முடியும். அதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறித்த ஆதாரங்கள் மூலம் தொகுக்கப்பட்ட விபரங்கள் கட்டுரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விபரங்கள் முழுமையாக இல்லாததால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ்    சேர்க்கை மட்டுமே இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் முதல் கலந்தாய்வை ஒட்டிய சேர்க்கைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுகின்றன. இந்த விபரங்கள் தனிப்பட்ட முயற்சியில் பொது வெளியில் கிடைத்த ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்யப்படுவதால், சுமார் 1-2% அளவு தவறுகள் நேர வாய்ப்புள்ளது.  

அட்டவணை 1 தமிழகத்தில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் மற்றும் பகிர்வு முறை பற்றிய அடிப்படை விபரங்களைக் கொடுக்கிறது. 

அட்டவணை  1 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் பகிர்வு  -2020

மாநிலத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்கள்  

3650

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) மற்றும் ஐஆர்டிடி (IRTT) வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 

  619

தமிழக மாணவர்களுக்கான பிரத்யேக இடங்கள்  

3031

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு – 7.5%

  227

பொது ஒதுக்கீட்டுக்கான இடங்கள்  

2804

 

அட்டவணை 2 தமிழக அரசு 2020 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக வருடா வருடம் 7.5% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் பலன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்படுகிறது.

அட்டவணை  2 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு -227

சமூகப் பிரிவுகள்

அரசு இட  ஒதுக்கீடு  (%)

ஒதுக்கீட்டின் படி கிடைக்க வேண்டிய இடங்கள் (Round off)

கிடைத்த இடங்கள்  

கிடைத்த இடங்களின் விகிதாசாரம்  

பொதுப் பிரிவு  (OC)

31

70

0

0

பிற்பட்ட வகுப்பு ( BC)

27

61

78

34.4

பிற்பட்ட வகுப்பு-முஸ்லிம்கள்  

3

7

12

5.3

மிகவும் பிற்பட்ட வகுப்பு ( MBC)

20

45

80

35.2

பட்டியலின வகுப்பு  (SC)

17

34

47

20.7

பட்டியலின வகுப்பு -  அருந்ததியர்

3

7

8

3.5

மலைவாழ் மக்கள்  (ST)

1

2

2

1

 

மேற்கண்ட அட்டவணை மாநில அரசின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் சமூகத்தின் பின் தங்கிய மற்றும் பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முழு பலன்களையும் பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. பொதுப் பிரிவு மாணவர்கள் யாருக்கும் இடங்கள் செல்லவில்லை.

அட்டவணை 3 7.5% ஒதுக்கீடு போக மீதி இடங்களுக்கான ஒதுக்கீடு

 

சமூகப்

பிரிவுகள்

அரசு ஒதுக்கீடு  (%)

ஒதுக்கீட்டின் படி கிடைக்க வேண்டிய இடங்கள்

கிடைத்துள்ள இடங்கள்

கிடைத்துள்ள இடங்களின்  விழுக்காடு

( Rounded off)

பொதுப்பிரிவு

31

869

107

3.8*

பிற்பட்ட வகுப்பு  

27

757

1340

47.8

பிற்பட்ட வகுப்பு- முஸ்லிம்

3

84

119

4.2

மிகவும் பிற்பட்ட வகுப்பு  

20

560

694

24.8

பட்டியலின வகுப்பு  

15

421

431

15.4

பட்டியலின வகுப்பு- அருந்ததியர்

3

84

85

3.0

மலைவாழ் மக்கள்  

1

29

29

1.0

 

*முன்னேறிய வகுப்பு மாணவர்கள் மட்டும்

மேற்கண்ட அட்டவணை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவப் பட்டப் படிப்பில் அதிகமான பேர் சேர்ந்துள்ளதைக் காட்டுகிறது. மலை வாழ் மக்களின் குழந்தைகள் மட்டும் ஒதுக்கீட்டு அளவே பலன் பெற்றுள்ளனர். அதற்குக் காரணம் போட்டியிடும் மாணவர்கள் எண்ணிக்கையே குறைவாக உள்ளதாக இருக்கலாம். .  

மேற்குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிக பலன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதியின் அடிப்படை. எனவே நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் முற்றிலும் தவறாகிறது.  உண்மையில் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த அதிகம் பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். எனவே சமூக நீதி தற்போது மிக அதிகமாகியுள்ளது.

முன்னர் 2006ஆம் வருடம் திமுக ஆட்சியின் போது  பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்களை வைத்து மருத்துவ சேர்க்கை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு வரை அந்த முறையானது தொடர்ந்து வந்தது. அதில் மொத்தமாக அந்தக் கால கட்டம் முழுவதும் மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெறும் 213 பேர் மட்டுமே. அதாவது மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் வருட சராசரி வெறும் 19 பேர். அது மருத்துவப் படிப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 0,7 விழுக்காடு மட்டுமே வருகிறது.

அப்போதெல்லாம் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் போதிக்கப்படவே இல்லை. பதினொன்றாம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் புரிந்து கொள்வது மாணவர்களுக்குக் கடினம். மேலும் தமிழக அரசின்ப்ளூ பிரிண்ட்என்னும் முறை மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற்று வந்தனர். மேலும் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றப்படவேயில்லை.

தமிழக அரசு 2017 ஆம் வருடத்தில்  பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது, பதினொன்றாம் வகுப்பு பாடங்களை வகுப்புகளில் போதிக்கத் துவங்கியது, மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசே பயிற்சி அளித்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம் தமிழக மாணவர்கள் இயற்கையாகவே நீட் தேர்வில் அதிக அளவில் வெற்றி பெற ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் நுழைவுத் தேர்வை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் சேர்த்தப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமின்றி புரிந்து படிக்க முடிகிறது. . 

எனவே மருத்துவப் படிப்பு சம்பந்தமாக முன்னர் நிலவி வந்த சிரமங்களுக்குக் காரணம் மாணவர்கள் அல்ல; நமது மாநில  கல்வித் துறையில் நிலவிய குறைபாடுகள் தான். தமிழக மாணவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். முறையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் போது, அவர்கள் நன்கு வெற்றி பெறுவார்கள். அதைத் தான்  இப்போது அவர்கள் சாதித்துக் காட்டி வருகிறார்கள்.

நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்கள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெறுவதும், தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகிறது. சென்ற 2020 ஆம் வருடம் நடந்த தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சராசரி – 56.44%. ஆனால் தமிழ்நாடு விகிதம் - 57.44%. 2019 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது ஒரே வருடத்தில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 9% அதிகரித்து தேசிய அளவில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. தமிழக மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் முதல் முறையாக எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

மேலும் நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் உள்ள உயர்தர மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய அளவிலான எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட நிறுவங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்ற வருடம் முதன் முறையாக முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அது மட்டுமன்றி, அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நமது மாணவர்கள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள பெரிய மருத்துவ கல்வி நிறுவங்களில் சேர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மோடி அரசு கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் பதினோரு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற எந்தவொரு  மாநிலத்துக்கும் கிடக்காத பேருதவி. அதன் மூலம் அடுத்து வரும் சில மாதங்களில் சுமார் 1750 மருத்துவ இடங்கள் நமக்குக் கிடைக்க உள்ளன. அவை தொடர்ந்து வரும் நான்கு ஆண்டுகளில் மேலும் உயரும்.

எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் சமூக நீதி அதிகரித்து, வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆகவே தமிழக அரசு கள உண்மைகளை ஆய்வு செய்து, நீட் மூலம் மேலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

மாநில பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு  24,000 கோடி ரூபாய் அளவு உள்ளது. தேவையான சிறு பயிற்சிகளை ஆசிரியர்களுக்குக் கொடுத்து, கட்டமைப்புகளை வலுப்படுத்தும் போது நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்கு சுலபமாகத் தயார் செய்ய முடியும். அதன் மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அவர்களால் போட்டியிட முடியும். ஏனெனில் உலகின் பல பகுதிகளிலும் உயர் படிப்புகளுக்குப் போட்டித் தேர்வுகள் உள்ளன.

இந்த சமயத்தில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையை மாநில அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இப்போதுள்ள முறையில் முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் குறைவான மருத்துவ படிப்பு இடங்களே கிடைத்து வருவதாகத்  தெரிகிறது. அவர்களின் மக்கள் தொகை தமிழகத்தில்  தோரயமாக பத்து விழுக்காடு அளவு இருக்கலாம். ஆனால் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெற்றுள்ள மருத்துவ இடங்கள் சுமார் 3.8%  மட்டுமே.

எனவே முன்னேறிய பிரிவினரில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பது அரசுகளின் கடமை. அதற்காகத் தான் மோடி அரசு 2019 ஆம் வருடம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவனருக்காக பத்து விழுக்காடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சட்ட ரீதியாக் கிடைக்க வேண்டிய பலன்களை உறுதிப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஒட்டு மொத்த சமூக நீதியுடன் கூடிய புதிய தமிழகம் உருவாகும்.

சென்ற வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு போக மீதமுள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே இடம் பெற்றனர். அவர்கள் பெற்ற இடங்கள்  தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை விட அதிகம். .  .

2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில்  தற்போது கல்லூரி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் முடிந்து விட்டன. மருத்துவக் கல்லூரிகளில் 435 இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்கள் என மொத்தம் 535 இடங்களுக்கு ஒதுக்கீடுகள் நடைபெற்று விட்டன.

இந்த வருடமும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு நிர்ணயித்த ஒதுக்கீட்டு இடங்களை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளனர்.  மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் 43 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு 31 விழுக்காடு, பட்டியலினப் பிரிவு  19 விழுக்காடு எனப்  பெற்றுள்ளனர். சென்ற வருடத்தை விடவும் இந்த வருடத்தில் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளன.  

அதனால் மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, கிராமப்புற மற்றும் வசதி குறைவான மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் தமிழ் வழியில் படித்த குழந்தைகள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனுஷா. பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்தார். பயிற்சி மையம் எங்கும் செல்லாமல், வீட்டிலிருந்து தேர்வுக்குத் தயார் செய்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்யா. மாற்றுத் திறனாளி. பெற்றோர் இருவரும் குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சூரப்பள்ளி சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கலையரசன். பெற்றோர்கள் தறித் தொழில் செய்பவர்கள். ஆலமத்தூர் அரசு பள்ளியில் படித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள அய்யங்கொல்லி பரிவாரம் பகுதியைச் சேர்ந்த மாணவி அனகா. தந்தை சிறு விவசாயி. தாய் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்பவர். அனகா பல் மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மலைவாழ் மக்கள் பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சினேகா. தந்தை சாலை ஓரத்தில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மழைக் காலங்களில் பாத்திர வியாபாரம் செய்வார். அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். சினேகா மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை கூலித் தொழிலாளி மகன் பிரகாஷ் ராஜ். மாநில தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்து சென்னை மருத்துவக் கல்லூரியைத் தெர்வு செய்துள்ளார்.

மேற்சொன்னவை  உதாரணங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பல பேர் நீட் தேர்வு மூலம் பலன் பெற்று வருகின்றனர்.  மேலும் பொருளாதார வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான  மாணவர்கள் இந்த வருடம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தருமபுரி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை  மாவட்டங்களிலிருந்து முறையே 33, 31, 26, 24 மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான  எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி பெற்ற பல  மாவட்டங்களை விட  மேற்காணும் எண்ணிக்கைகள் அதிகம்.

தற்போது தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் மிகச் சாதாரண மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்தம் குடும்பங்களில் பள்ளிப் படிப்பு கூட முடிக்காதவர்களே அதிகம்  இருக்கும்.  பொருளாதாரப் பின்னணி இல்லை. அவர்களில் பலர் முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்கள். பலர் பயிற்சி வகுப்புகளுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து படித்தவர்கள். முழுக்க தமிழ் வழியிலேயே கல்வி கற்றவர்களும் உள்ளனர்.

அவர்கள் எல்லாம் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரிய மருத்துவக் கல்லூரிகளில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆகப் போகிறார்கள். இது தற்போதைய தேர்வு முறையால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து தேர்வு நடந்த காலங்களில் இவையெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காரியம்.

எனவே சென்ற வருடத்துக்கான  மொத்த சேர்க்கை விபரங்களையும் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு விபரங்களையும் பார்க்கும் போது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வருவது உறுதியாகிறது. ஆகையால் தற்போதைய நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது என்றால் வேறு எது சமூக நீதி என்கின்ற எண்ணம் எழுகின்றது.   

சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு அப்புறம் நீட் தேர்வு முறை வசதி வாய்ப்புகள் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்களாட்சியின் நோக்கமே ஏழை மக்களை முன்னேற்றுவது தான். அந்தப் பணியை தற்போது நீட் தேர்வு முறை செய்து வருகிறது.

கல்வித் துறையில் அரசியல் தலையீடு ஆபத்தானது. துரதிர்ஷ்டவசமாக தமிழக கல்வித் துறையில்  அரசியலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்களின் நலனை விட சொந்த விருப்பு வெறுப்புகளே அரசின் முடிவுகளுக்குக் காரணமாக உள்ளன. இந்தப் போக்கு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

நீட் தேர்வு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. நாட்டின்  மாநிலங்கள் பலவற்றிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தனியாகவும், கூட்டணி அமைத்தும் ஆட்சி செய்து வருகின்றது. அவற்றைத் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் திமுக, பிஜூ ஜனதா தளம், சிவ சேனா-  தேசிய காங்கிரஸ் கட்சி  உள்ளிட்ட கூட்டணி என வெவ்வேறு கட்சிகள் தனியாகவும் கூட்டணியாகவும் ஆட்சி நடத்திக் கொண்டு  வருகின்றன.

அந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பின்னணிகளையும், கொள்கைகளையும் கொண்டவை. ஆனால் அவை எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு தமது மாநிலங்களில் நடைமுறைப் படுத்தி வருகின்றன.  அப்படி இருக்கும் போது இங்குள்ள திராவிட கட்சிகள் மட்டும், குறிப்பாக திமுக, தமது கூட்டணிக் கட்சிகளோடு அதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அதே சமயம் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கல்வித் துறையில் முன்னேறிய தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இது வரை பெருமளவு மறுக்கப்பட்டு வந்துள்ளது. அந்த நிலை தற்போது மாறி வருகிறது. எனவே தமிழகத்திலும் நீட் தேர்வு தொடர வேண்டும். அதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும். அதற்காக மாநில ஆளுநர் மசோதாவைத் திருப்பி  அனுப்பிய நடவடிக்கையை நாம் அனைவரும் வரவேற்போம்.  

 

 ( தினமலர், பிப்.2022 )

 

 

No comments: