வெற்றிகதைகள் -24மேற்கத்திய பொருளாதாரக் கோட்பாடுகளை தோற்கடிக்கும் இந்தியா!


மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அமைப்பு முறைகளுக்குப் பெரிய வரலாறு என்று எதுவம் இல்லை. 14 ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியாவில் நிலவி வந்த பிரபுத்துவ முறையானது கடைசிக் கட்டத்தை அடைந்தது. அந்த முறையில் நிலங்கள் ஒரு சிலரிடத்தில் மட்டும் குவிந்து கிடந்தது. பெரும்பாலானவர்கள் கூலிகளாக வேலை செய்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். அதனால் சமூகத்தில் நிம்மதி இல்லாமல் பற்றாக்குறையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.பின்னர் 16 முதல் 18 ம் நூற்றாண்டு வரையில் வணிகத்துவ முறை நிலவி வந்தது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி கையிருப்புகளை அதிகமாக வைத்துக் கொள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன. அதற்காக கடற்கொள்ளை உட்பட பலவிதமான வழிகளையும் அவைகள் கையாண்டன. நாடுகளைப் பிடித்து அவற்றின் செல்வங்களை சுரண்டுவதற்கு முனைந்தன. அதன்மூலம்தான் காலனி ஆதிக்க முறை தோன்றியது. அந்த முறையிலும் பெரும்பான்மை மக்கள் பலன் பெறவில்லை. எனவே மக்களிடத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் ஆடம்ஸ்மித் முன்வைத்த முதலாளித்துவ பொருளாதார முறை வணிகத்துவ முறைக்கு மாற்றாக கருதப்பட்டது. அந்த முறையில் அரசாங்கத் தலையீடுகள் ஏதுமில்லாத வகையில் தொழில்கள் நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதனால் உண்டான விளைவுகளுக்கு மாற்றாக 19 ம் நூற்றாண்டின் பின் பகுதியில் கம்யூனிச பொருளாதார முறையை கார்ல் மார்க்ஸ் முன் வைத்தார்.1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யா கம்யூனிச பொருளாதார முறைகளை கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த நாடே பல பிரிவுகளாக சிதறுண்டது. அதேசமயம் முதலாளித்துவ முறையில் சந்தை மையமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்விளைவாக மிகப்பெரிய கம்பெனிகள் உருவெடுத்தன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல், ஒட்டுமொத்த மனித இனவளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு போன்ற மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எனவே கடந்த 500 ஆண்டுகளில் மேற்கத்திய பொருளாதார அணுகுமுறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்துள்ளன. அவை எதிலுமே மக்களுக்கு முழுமையான வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. மேலும் அவர்களது பொருளாதார முறை தற்போது பெரிய நெருக்கடியில் உள்ளது. மேற்கத்திய நாட்வர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டுள்ளனர்.15 ம் நூற்றாண்டில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலுள்ள நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தமது காலனிகளாக்கின. அப்படித்தான் இந்தியாவும் இங்கிலாந்தின் காலனி நாடானது. பின்னர் நமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முறைகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தனர். அவர்களது வாழ்க்கை மற்றும் சிந்தனை முறைகளை இங்கு திணித்தனர். அவர்களது பொருளாதார கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் உயர்ந்தது எனக்கூறி அவற்றை நாம் ஏற்குமாறு கல்வி முறைகளை அமைத்தனர். அதன் விளைவாக ஐரோப்பிய சிந்தனை முறைகளும்,கோட்பாடுகளும் உயர்ந்து என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. நமது நாட்டுக்கு பொருத்தமான முறைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. காலப்போக்கில் கல்விக் கூடங்கள் முழுவதும் மேற்கத்திய கோட்பாடுகளையும், அணுகுமுறைகளைப் பற்றி மட்டுமே பேசும் அளவிற்கு சூழ்நிலை உருவானது. உலக அரங்கில் ஐரோப்பா தனது செல்வாக்கை இழந்த போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்பின் அமெரிக்க கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை உயர்ந்தவை எனவும், அவற்றை பிற நாடுகள் அனைத்தும் பின்பற்றுவது தான் முன்னேறுவதற்கான ஒரே வழி எனவும் கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்விளைவாக கடந்த இரு நூற்றாண்டுகளாகவே மேற்கத்திய கோட்பாடுகளும், சிந்தனை முறைகளுமே படித்தவர்களையும், கொள்கை வகுப்பவர்களையும் ஆட்கொண்டுள்ளன. அதனால் தான் இந்தியா சுதந்திரம் பெற்ற போது மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பியவாறு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சரியான பொருளாதார அணுகுமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் முதல் 30 ஆண்டுகள் சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளின் அணுகுமுறைகளை ஒட்டிய கொள்கைகளே சரியானதாக இருக்கும் என்று நம்பினோம். பின்னர் அவை எதிர்பார்த்த பலனை தராததால் 1990 களில் அமெரிக்கா சார்ந்த சந்தை பொருளாதார முறைகளை ஒட்டிக் கொள்கைகளை அமைத்துக் கொண்டோம். இப்போது அமெரிக்க முறைகள் அவர்கள் நாட்டிலேயே பெரிய தோல்விகளை சந்தித்து வருகின்றன. மேற்கத்திய கோட்பாடுகளையும் சிந்தனை முறைகளையும் ஒட்டி நம்மைப்பற்றி நாம் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட முடிவுகள், அமைத்துக் கொண்ட வழிமுறைகள் ஆகியன நமக்குபெரும் நம்பிக்கையின்மையையும் பின்னடைவையும் கொடுத்துவந்துள்ளன. அதனால் நமது வளர்ச்சியில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மேக்ஸ் வெபர் என்ற ஜெர்மனி நிபுணரால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறவே முடியாது என்று கூறியது. இங்குள்ள மக்களின் நம்பிக்கைகள் கருத்தோட்டங்கள் மற்றும் சமூக அமைப்பு முறை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக இல்லை என்று அவர் கூறினார். மேற்கத்திய இன மக்கள் வாழும் நாடுகளில் அவர்களின் மத நம்பிக்கைகள் மூலம் தான் பொருளாதார வளர்ச்சி வேகமாக ஏற்பட முடியும் என்று கூறினார். அவருடைய கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட பொருத்தமாக இல்லை என்பது பின்னர் அங்குள்ள பிற நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டு காலம் அவரது கருத்துக்கள் இந்தியாவில் ஒரு வித தவறான தாக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் படித்தவர்களிடையே அவநம்பிக்கையை உண்டாக்கிவிட்டது. இப்படி உலகம் முழுவதும் சம்மந்தப்பட்ட பொதுவான விஷயங்களில் இருந்து குறிப்பிட்டத் துறைகளுக்குப் பொருந்தக் கூடிய விஷயங்கள் வரை மேற்கத்திய கோட்பாடுகள் மற்றும் சிந்தனை முறைகளே உலகின் பல நாடுகளிலும் பரவி பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவை நமது நாடுகளுக்கு பொருத்தமானதா என்று கூட பார்க்காமல் பிற நாடுகள் அவற்றை காப்பியடித்து செயல்படுத்தி வருகின்றன. பல சமயங்களில் அவர்களது கோட்பாடுகள் தோன்றிய இடத்திலேயே தோல்வியுறும் போது அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான மூலக்காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதிலோ அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு மாற்று வழிகளை அங்கீகரிப்பதிலோ எந்த விதமான முயற்சிகளை மேற்கொள்ளப்படுவதில்லை.1990 களில் பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு நிதித்துறை நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. 1997 ம் ஆண்டு இந்த பரிசு நிதித்துறை பேராசிரியர்களான ராபர்ட் மெர்ட்டன், மைரன் ஸ்கோல்ஸ் என்ற இருவருக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் பங்கு சந்தை சம்மந்தமான பெரயி பொருளதார நிபுணர்களாக கருதப்பட்டு வந்தனர். உலக புகழ்பெற்ற ஹார்டுவார்டு மற்றும் ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இவர்கள் பணிபுரிந்து வந்தனர். பங்குச்சந்தைகளில் வாங்கி விற்கப்படும் "ஆப்ஷன்'களின் விலைகளை நிர்ணயிக்க "பிளேக்ஸ்கோல்ஸ்' என்றும் கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர். வெளிநாட்டு நிதிச்சந்தைகளில் பல கோடிக்கணக்கான டாலர்களில் வியாபாரம் நடப்பதற்கு அந்த கோட்பாடுகள் வெற்றிகரமான முறை என்று கருதப்பட்டது. இதற்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நோபல் பரிசு பெற்றதும், தங்கள் தியரியை பயன்படுத்தி "லாங்டேம் கேபிடல் மேனேஜ்மன்ட்' என்ற நிதி முதலீடு தொடர்பான நிறுவனத்தை மேலும் சிலருடன் சேர்ந்து துவக்கினர். வெற்றிகரமான தியரியை அளித்தவர்களின் நிறுவனம் என்பதால் பலரும் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். ஆனால் ஒரே ஆண்டில் அந்நிறுவனம் பெருத்த தோல்வியை தழுவியது. அந்நிறுவனத்தின் தோல்வியை தொடர்ந்து "பிளேக்ஸ்கோல்ஸ்' தியரி மக்களின் நம்பிக்கையை இழந்தது. ஆனாலும் உலகம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களில் இந்த தியரி இன்றும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. நிதிச்சந்தை தொடர்பான பாடங்களை படிக்கின்ற ஒவ்வொரு இந்திய மாணவனும் வெற்றிகரமான தியரி என்று இந்த தியரியை படித்துதான் பட்டம் பெறுகிறார். நம் நாட்டில் ஏழை முதல் பணக்காரர் வரை சேமிப்பது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. சேமிப்பு என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை கடமை என்று காலகாலமாக செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை அந்நாட்டு நிபுணர்களும், அரசும் மக்கள் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்கினால் தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று கூறி அந்நாட்டு மக்களை கடன் வாங்கியாவது செலவு செய்யுங்கள் என்று வற்புறுத்தினர். அதற்காக சுலபமாக கடன் கிடைக்கும் வகையில் திட்டங்களை தீட்டினர். எதிர்காலம் குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சேமிக்கிறார்கள் என்று நம்மை கேலி செய்தனர். அமெரிக்காவின் இந்த கருத்தை நம் நாட்டில் உள்ள சில நிபுணர்களும் ஏற்றுக் கொண்டு சேமிப்பது தவறு என்று கூறத்தொடங்கினர். ஆனால் கடந்த ஆண்டு தொடங்கி அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் அமெரிக்கர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. எனவே சிறிது காலம் முன்புவரை நமது பழக்கவழக்கங்களை கிண்டல் செய்த அவர்கள் இன்று நம்மிடமிருந்து அரிச்சுவடி கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்றால் மிகையில்லை.மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் சார்ந்த சிந்தனை முறைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை. அவை பல சமயங்களில் அவர்களுக்கே கூட பொருத்தமாக அமைவதில்லை. அப்படியிருக்கும் போது இந்தியா போன்ற தனித்தன்மைகள் நிறைந்த நாட்டுக்கு அவை அப்படியே பொருந்தாது. நமது நாட்டின் முன்னேற்றம் நமது அடித்தளங்களை ஒட்டியே அமைய முடியும். அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய கோட்பாடுகளை மீறியதாக அமைந்துள்ளது. அதற்கு நமது கலாச்சார அமைப்பு முறை, குடும்பம், நமது நாட்டின் பெண்கள், சமூக மூலதனம் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டே நமது பொருளாதாரம் வலுவானதாக உருவாகியுள்ளது.No comments: