மாணவர்கள் கேட்கும் கல்வி

கல்வியின் நோக்கமே மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதுதான். உடல், அறிவு, மனம் என எல்லா நிலைகளிலும் மாணவர்களை உயர்த்தி குடும்பமும், சமூகமும் உயர் நிலையை அடையச் செய்ய வழி வகுப்பதுதான் கல்வியாகும்.


நமது நாடு கல்வியில் உலகுக்கே முன்னோடியாக இருந்ததை வரலாறு சொல்கிறது. மிக உயர்ந்த இலக்கியப் படைப்புகளும், அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளும், கணித, வானியல் கோட்பாடுகளும் பல நூறாண்டுகளுக்கு முன்பே நம்மிடம் உருவானதற்கு நாம் அன்று பெற்றிருந்த தரமான கல்வி முறைதான் அடிப்படையாக இருந்திருக்க முடியும். அதனால்தான் தான் மகாத்மா காந்தி அவர்கள் 1931-ல் லண்டனுக்குச் சென்றிருந்த சமயம், நமது தேசத்திலிருந்த பண்டைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல இருந்ததாகவும், அது பின்னர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

சுதந்திரத்துக்குப் பின் வந்த நமது அரசுகள் கல்வித் திட்டத்தை சீரமைக்க நிறைய குழுக்களை அமைத்தன. ஆனால் அந்தக் குழுக்களின் அடிப்படையான பரிந்துரைகள் கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன.மாணவனுக்கு சரியான கல்வியை கொடுக்க வேண்டும் என அவ்வப்போது பேசினாலும் கூட, அது குறித்து உரிய மாற்றங்களை செய்ய நாம் தவறி விட்டோம். அதிலும் இது நாள் வரை மாணவனுக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கூட முழுமையாக சிந்திக்காமல், காலனி கல்வித் திட்டத்தையே தொடர்ந்து பெரிதும் நடைமுறை படுத்தி வந்து விட்டோம். நமது தேசத்துக்கு பொருத்தமான கல்வித்திட்டம் எதுவென்பது குறித்து விவாதம் கூட பெரிய அளவில் எதுவும் நடத்தத் தவறி விட்டோம். அதனால் குழந்தைகளின் ஒட்டு மொத்த வாழ்வை மேம்படுத்தும் கல்வி குறித்து நாம் திட்டங்களை தீட்டவில்லை. படிக்கின்ற மாணவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ, அவர்களின் கருத்துகளை அறிய இதுவரை எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை.

ஆனால் இப்போது முதன்முறையாக மத்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு மூலம் மாணவர்களிடம் ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வை நடத்தியுள்ளது. நமது நாட்டில் 21 மாநிலங்களிலுள்ள 278 பள்ளிகளில் 11000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 8 வெவ்வேறு மொழிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிராமங்களிலும், நகரங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்கள். இந்த ஆய்வின் மூலம் தற்போதைய கல்வி முறையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக நமக்கு எடுத்து வைக்கின்றனர்.

91 விழுக்காடு மாணவர்கள் கலாசாரக் கல்வி படிப்பது தங்களுக்குப் பயனளிக்கும் எனச் சொல்கின்றனர். 60 விழுக்காடு மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இக்கல்வி அமைய வேண்டுமென விரும்புகின்றனர். இது பற்றி ஒரு மாணவர் குறிப்பிடும்போது தற்போதைய கல்வி முறை மூளைக்கு மட்டுமே வேலை தருவதாகவும், தாங்கள் வேண்டுவது மூளை - உடல் – மனம் ஆகிய அனைத்தையும் வளர்த்தும் கல்வி முறையே என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். தற்போதைய கல்விமுறை ஒரு மனிதனை இயந்திரமாக மட்டுமே இயங்கச் செய்கிறது என இன்னொரு மாணவர் கூறியுள்ளார். 1996-ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சவான் பாராளுமன்றக்குழு கூட மேற்கத்திய கலசாரத்தின் பாதிப்புகள் நம் மாணவர்களை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாணவர்களுக்கு நமது கலாசார பாரம்பரியம் குறித்து கல்வி போதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் உச்சநீதி மன்றமும் 2002-ம் வருடம் இதன் அவசியம் குறித்து வலியுறித்தியுள்ளது.

நமது தேசத்தின் பாரம்பரிய கலைகளின் வகைகள் பற்றி மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான மாணவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால் பரதநாட்டியம், இசை, ஓவியம், தியானம், யோகாசனங்கள், கபடி போன்ற விளையாட்டுகள் மாணவர்களை ஈர்க்கின்றன. அவற்றை தெரிந்து கொள்ள மாணவர்கள் விரும்புகின்றனர். 37 விழுக்காடு மாணவர்கள் தங்களது பாடத்திட்டம் மூலமே பரதநாட்டியம் மற்றும் இசை உள்ளிட்ட கலைகளைக் கற்பதாகக் கூறியுள்ளனர். 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் யோகாசனம், பிராணயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் தங்களுக்கு உதவியாக உள்ளதாக கூறுகின்றனர். 52 விழுக்காடு மாணவர்கள் இவற்றை பள்ளியிலும், ஏறத்தாழ 30 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கு வெளியிலும் கற்று வருவதாகச் சொல்கின்றனர். ஆனால் நிறைய பள்ளிகளில் உள்ள மற்ற மாணவர்களுக்கு இவற்றைக் கற்க வாய்ப்பில்லை. எனவே, யோகா, தியானம் ஆகிய பயிற்சிகளை பாடத்திட்டத்தின் அங்கமாகவும், இசை, நடனம், ஓவியம் போன்றவற்றை விருப்பப் பாடங்களாகவும் பாடத்திட்டத்தில் வைப்பது அவசியம் எனத் தெரிகிறது.

இராமாயணம், மகாபாரதம் பற்றி முக்கால் பங்கு மாணவர்களும், புத்தரின் போதனைகள் குறித்து மூன்றில் ஒரு பங்கு மாணவர்களும்,பிற னியர் அறிவுரைகள் குறித்து 30 விழுக்காடு மாணவர்களும்,
அறிந்துள்ளனர். ஆனால் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே தங்களின் பகுதி சார்ந்த கலாசாரத்திலிருந்து கதைகள் மற்றும் போதனைகளை கற்றதாகக் கூறுகின்றனர்.

51 விழுக்காடு மாணவர்கள் நமது தேசத்தின் பிற மொழிகள் தங்களுக்குப் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். இதில் பாதிப்பேர் கலாசாரக் காரணங்களுக்காகவும், மீதிப் பேர் தேச ஒருமைப் பாட்டுக்காகவும் இதை வேண்டுகின்றனர். மொத்தத்தில் கால் பகுதி மாணவர்கள்களுக்குக்கூட பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய விசயமாகும்.

38 விழுக்காடு மாணவர்களே சில நற்குணங்கள் மற்றும் ஒழுக்கங்கள் பற்றி பள்ளிகளில் கற்பதாகச் சொல்கின்றனர். 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்களால் நேர்மை, உண்மை, சகோதரத்துவம், தர்மம், கடமை, என்னும் இக்குணங்களில் ஒன்றைக் கூட குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. மாணவர்கள் கற்று நடைமுறைப்படுத்த விரும்பும் நற்குணங்களை இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம் போன்ற இலக்கியங்களிலுள்ள கதைகள் மூலம் தாங்கள் பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களைவிட மாணவிகள் கலாசாரக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களாகவும், அது பற்றி தெரிந்தவர்களாகவும் உள்ளனர். இந்திய மொழிகளில்
பயிலும் மாணவர்கள் ஆங்கில மொழிவழி மாணவர்களைவிட நமது கலாசாரத்தை அதிகம் மதிக்கின்றனர். மேலும் அவர்கள் கலாசாரம் பற்றி படிக்க மிக ஆர்வமாகவும் உள்ளனர். நாட்டிலேயே தமிழக மாணவர்கள் தான் இந்தியக் கலாசாரத்துக்கு பாடத்திட்டத்தில் கொடுக்கும் கவனம் குறித்து மிக அதிருப்தி அடைந்துள்ளனர். அதே சமயம் அவர்களுக்கு பிற மொழி இலக்கியங்கள் பற்றித் தெரிந்திருப்பதும் மிகக் குறைவாக உள்ளது.

தனியார் பள்ளிகளில் இந்தியக் கலசாரம் சம்பந்தப்பட்ட கல்வி, அரசுப் பள்ளிகளைவிட அதிகம் உள்ளது. எனவே கிராமப்புற மாணவர்களிடையே கலாசாரம் குறித்த கல்விக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. 9 ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு செல்ல செல்ல, பாடமுறையிலுள்ள கலாசாரம் சார்ந்த கல்வி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இந்தக் கல்வி குறித்த மாணவர்களின் விருப்பம் அதிகரித்துக் கொண்டே வருவது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது.

கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக பாதியளவு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் முதலாவதாக கலாச்சாரக் கல்வி இல்லாததையும், இரண்டாவதாக வாழ்க்கைக்குப் பயன்படாத நேரடியாக பரிசோதிக்கப்படும் தன்மை இல்லாத பாடங்கள் உள்ளதையும் குறிப்பிடுகின்றனர். மூன்றாவதாக உயர்குணங்கள் மற்றும் தார்மீக நெறி முறைகள் போதிக்கப்படாத கல்வியை முக்கிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

போதிக்கும் மொழியைப் பொறுத்தவரையில், ஏறத்தாழ இரண்டு மடங்கு மாணவர்கள் தாய் மொழிக்கல்விதான் விசயங்களைப் புரிந்து கொள்ள நல்ல முறையில் உதவும் என எண்ணுகின்றனர். ஆங்கில மொழியில் கற்பவர்களில் கூட 40 விழுக்காடு மாணவர்கள் தாய் மொழிக்கல்விதான் சரியானதாக இருக்கும் என கருதுகின்றனர். இந்த ஆய்வின் இன்னொரு வெளிப்பாடு 13 விழுக்காடு மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க இயலாத நிலையில் உள்ளனர் என்பதாகும்.

62 விழுக்காடு மாணவர்கள் தாங்கள் பள்ளிக்குச் சுமந்து செல்லும் பாடப்புத்தகங்கள் தேவையற்றது எனவும் மிக அதிகம் எனவும் நினைக்கின்றனர். 35 விழுக்காடு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி பெற்றோர்கள் தம்மை நிர்ப்பந்திப்பதாக கூறுகின்றனர். 70 விழுக்காடு மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பு நேரங்கள் தங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் மாற்றமாக இருப்பதாகச் சொல்கின்றனர். 31 விழுக்காடு மாணவர்கள் உடற்பயிற்சி நேரம் போதவில்லை எனக் குறைப்படுகின்றனர். 67 விழுக்காடு மாணவர்கள் பள்ளியைச் சுற்றி செடி கொடிகள் நிறைந்த பசுமையானப் பகுதிகள் இருத்தல் நல்லது என விரும்புகின்றனர்.

80 விழுக்காடு மாணவர்கள் பாடங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்றனர். 65 விழுக்காடு மாணவர்கள் நடைமுறை நிலையைச் சம்பந்தப்படுத்தி பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை அமைய வேண்டும் என வேண்டுகின்றனர். சொல்லிக் கொடுக்கும் முறையில் புதுமை, நிறைய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான செயல்பாடுகள், புதிய இடங்களைப் போய் நேரில் பார்ப்பது ஆகியவை வேண்டுமென மாணவர்கள் கேட்கின்றனர். ஆசிரியர்கள் நடைமுறை உதாரணங்களுடன் பாடம் சொல்லித் தருபவராகவும், மனிதப் பண்புகள் உள்ளவராகவும் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர் பார்க்கின்றனர். பாடங்கள் வாழ்க்கைக்கு சம்பந்தமானவையாக இருக்க வேண்டுமென மாணவர்கள் விரும்புகின்றனர். மேலும் தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் நற்குணங்களையும், பண்புகளையும் வளர்த்துக் கொள்ளும் முறை இல்லை எனக் கூறுகின்றனர். தற்போதைய முறை சுய நலம் உள்ளிட்ட தன்மைகளையே தூண்டுவதாகவும், அவற்றையே உயர்வாக கருதப்படும் நிலையை வளர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஒட்டு மொத்த அறிக்கையிலும் நாடு முழுதும் உள்ள மாணவச் செல்வங்கள் தங்கள் உள்ளக் கிடைக்கையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கூறப்பட்டுள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் நமக்குத் தெரிந்ததுதான். நம்முடைய கல்விக்கான குழுக்கள் பலவும் சுட்டிக் காட்டியவைதான். மகாத்மா உள்ளிட்ட தேசத் தலைவர்கள் வலியுறித்தவைதான். ஆனால் இதன் முக்கியத்துவம் என்னவெனில், பயனாளிகளான மாணவர்களே இந்த விசயங்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளதுதான்.

அடிப்படை நெறிகளற்ற மனிதர்களைக் கொண்ட சமுதாயம், எவ்வளவுதான் திறமையானவர்களைப் பெற்றிருந்தாலும், எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சியை அடைந்தாலும், அழிவை நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாது என்பது உண்மை. அடிப்படை நெறிகள் சேரும்போதுதான் எந்தவிதவளர்ச்சியும் முற்றுப் பெறும். எந்தவித மனிதனும் முழுமையடைவான். அப்படி இருக்கும் போது நாம் ஏன் மாணவர்களுக்கு அவர்களை மேன்மையடையச் செய்யும் கல்வியைக் கொடுப்பதில்லை?

நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் கேட்பதெல்லாம் அவர்களை நல்ல குணமிக்க, தேசப்பற்று நிறைந்த மக்களாக மாற்றி, அவர்தம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணை புரியும் கல்வியை போதிக்கும் திட்டம் வேண்டும் என்பதுதான்.

இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொருவராலும் மாணவர்களின் கருத்துக்கள் அனைத்திலும் நியாயம் இருப்பதை உணர முடிகிறது, இப்போது நம் முன் உள்ள ஒரே கேள்வி இதுதான்........

மாணவர்கள் கேட்கும் கல்வியைத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்?

-தினமணி

No comments: