உலகுக்கே வழிகாட்டும் இந்தியா


நம் நாட்டில் உள்ள தொழில் மையங்களின் வெற்றிக்கதைகளை பார்த்தோம். இந்த மையங்களின் வெற்றிக்கு தனி மனிதர்கள், அவர்களின் குடும்பம், அவர்கள் சார்ந்த சமுதாயம் போன்றவையே காரணமாக இருந்துள்ளதையும் பல ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இந்த தொழில் மையங்களின் வளர்ச்சி, பொருளாதார வீழ்ச்சியில் உலகத்தின் முன்னணி நாடுகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா ஸ்திரமான வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் நம் நாட்டில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் உயர்ந்த காலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறை தான். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்தது. எந்தவொரு செயல்பாட்டையும் தனித்துப்பார்க்க இயலாது. ஒவ்வொன்றுக்கான தாக்கம் இன்னொன்றிலிருந்து வந்திருக்கும். அதனால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுமே ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.குடும்பம், சமூகம், சுற்றுப்புறம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒட்டியே மனிதனின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைகள் அமைகின்றன. மற்ற அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மனித வாழ்க்கையும் சரியாக அமையும். அதனால் தான் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள பிற உயிர்கள், செடி கொடிகள், இயற்கை என்று எல்லாமே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை அமையப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நமது பண்டைய பொருளாதார முறைகள் அமைக்கப்பெற்றன.சோம்பலின்றி மனிதன் தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். பொருள் உற்பத்தியும் செழிப்பும் அதிக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நம் நாட்டில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அது நமது ஜீன்களில் இரண்டற கலந்து விட்டதால் மற்ற நாடுகளைக் காட்டிலும் தனி மனித தொழில் முனையும் தன்மை நம்மிடம் அதிகம் உள்ளது. இது தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணம்.இதைத்தவிர நாம் செய்யும் தொழில் நியாயமான முறையில் செய்யப்படவேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தவறான முறையில் பணம் சம்பாதிக்க முனையக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைப் பின்பற்றிய காரணத்தால் தான் சூரத் முதல் திருச்செங்கோடு வரை நம் நாட்டு தொழில் முனைவோர் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் தொழில் தர்மத்தை கைவிட்டு பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு செயல்படும் போது அந்த தொழிலே அழிந்து போயிருப்பதையும் நாம் பார்க்க முடியும். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போல கிளம்பி மேலை நாட்டு சிந்தனையோடு செயல்பட்ட நிதிநிறுவனங்களின் உதாரணங்களை கூறலாம்.நம் நாட்டில் குடும்பங்களும், சமூகங்களும் தொழிலில் ஈடுபட்ட போது அரசுகள் தேவையான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. அதே சமயம் தவறுகளை தண்டிப்பதற்கான கடுமையான வழிமுறைகளையும் அரசுகள் வைத்திருந்தன. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைக்குத் தொழில்களும், வியாபாரமும் எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்காமல் செயல்படும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்ட போது தொழில்கள் வெற்றி பெற்றன. சில பிரிவினருக்கு மட்டும் நன்மை பயப்பதாகவும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் தொழில்கள் அமையவில்லை.இந்திய நாட்டின் வரலாற்றில் தனது வளர்ச்சிக்காக எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தி வைத்திருந்ததையோ, சுரண்டியதையோ காணமுடியாது. சொந்த திறமைகளைகளால், வளங்களால் ஏற்படுத்திய அதிக உற்பத்தியை வைத்தே பொருளாதார வல்லரசாக விளங்கவந்தது. தற்போதும் வளர்ந்து வருகிறது. சமூகத்தில் சீரழிவுகள் வரும், அதனால் சமூகங்கள் அழியும். ஆனால் இந்தியா பல நூற்றாண்டுகளாக செழிப்பான நாடாகவே விளங்கி வந்துள்ளது. அதற்கு காரணம் மக்களின் கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறைதான். ஒரு பக்கம் செல்வம் இருந்த போதும், மறுபக்கம் கட்டுப்பாடும், ஒழுக்கமும், சிக்கனமும் வலியுறுத்தப்பட்டன. மிதமிஞ்சிய வாழ்க்கை முறை சமூகத்தால் வெறுக்கப்பட்டது. அதனால் தான் உலகிலேயே நீடித்த தன்மையுடன் இன்றளவும் வாழ்ந்து வரும் தன்மையை இந்தியா பெற்றுள்ளது. ஆனால் மேற்கத்திய பொருளாதார முறைகள் அப்படியல்ல. கடந்த 500 ஆண்டுகளில் நில உடமை முறை, வணிகத்துவ முறை, முதலாளித்துவ முறை, கம்யூனிச முறை, சந்தைப் பொருளதார முறை எனப் பலவித முறைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை எவற்றிலுமே பெரும்பான்மையான மக்கள் அமைதியுடனும், வளமாகவும் வாழக்கூடிய தன்மைகள் இல்லை. எனவே அவை ஒவ்வொன்றாகத் தோற்றுப்போய்க் கொண்டே வந்துள்ளன.ஒரு காலத்தில் சூரியனே மறையாத நாடுகளை வைத்திருந்த நாடு இங்கிலாந்து. ஆனால் இன்று பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. கடந்த நூற்றாண்டின் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்த நாடு அமெரிக்கா. அதனால் உலக முழுமைக்கும் தமது கொள்கைகளை சரியென்று சில மாதங்களுக்கு முன்பு வரை மார்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று மீளமுடியாத பிரச்னைகளில் மாட்டிக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியிலுள்ள நாடுகளை தமது காலனிகளாக்கிக் கொள்ளையடித்து வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சிரமங்களில் மூழ்கியுள்ளன.அவர்களின் பொருளாதார முறைகள் அஸ்திவாரமற்றவை. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைமுறையை உயர்த்தும் நோக்கம் அவற்றில் இல்லை. பிற உயிர்களை தமது போல் நேசிக்கும் பண்பு இல்லை. இயற்கையை தாயாக பாவிக்கும் தன்மை இல்லை. அதனால் தம்முடைய நுகர்வுக்கு எதையும் செய்யத்துணிகின்ற பக்குவற்ற தன்மை உள்ளது.நான் வேறு, குடும்பம் வேறு, சமூகம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தன்மையினால் பொருளாதாரம் சார்ந்த அனைத்து சிந்தனைகளும் அவர்களது தனிமனித நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பகட்டு, ஆடம்பர வாழ்க்கை நோக்கில் அமைந்துள்ள பொருளாதார முறை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. குடும்பம், சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றிற்கும் பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என்று அவர்கள் நம்பினர். தங்களின் ஆதிக்கக் கொள்கைகளால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரங்களை வளப்படுத்த முடியும் என்று எண்ணி வந்தனர். அதனால் தொடர்ந்து தோல்விகளையும் சரிவுகளையும் சந்தித்து வருகின்றனர்.மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவு சமூகங்களிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது தனிமனித சிந்தனை, குடும்ப மற்றும் சமூக உறவுகளை பெருமளவு அழித்துவிட்டது. அதனால் பொருளாதாரமும் சீரழிந்து கடும் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சாரங்கள், அதையொட்டிய சமூக அமைப்புகள், வாழ்வியல் நோக்குகள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பொருளாதாரங்களின் போக்கில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. மேற்கத்திய நாடுகள் தற்போது இந்த நோக்கில் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. நமது நாட்டை சரியாக புரிந்திருந்த சில மேற்கத்திய சிந்தனையாளர்கள், உலகுக்கே இந்திய நாடு தான் வழிகாட்ட முடியும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். அண்மைக் காலங்களில் இந்த கருத்து வலுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சமூகவியல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மேலாண்மைத்துறை நிபுணர்கள் பலரும் நமது நாட்டை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். இந்திய வழிமுறைகள் குறித்து பல வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பகவத்கீதையும், கர்மவினை குறித்த பாடங்களும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.எனவே உலகின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் நம்மை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நம் எண்ணங்களை ஆக்கிரமித்துள்ள மேற்கத்திய சிந்தனைகளை வைத்து நமது வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் எடைபோடக்கூடாது. நமக்கே உரித்தான வாழ்க்கை முறை, சிந்தனைகள் ஆகியவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசவேண்டும். மேற்கத்திய பொருளாதார சிந்தனைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக சிக்கல்களை தந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்ற போதும் அதனால் முழுமையடைவில்லை. விவசாயம் பெரிய சிரமங்களில் சிக்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன.அதற்கெல்லாம் தீர்வு, மகாத்மா காந்தியடிகள் கூறியது போல நமது நாட்டிலிருந்தே பாடம் கற்று நமக்குத் தேவையான திட்டங்களை நாமே தீட்டிக் கொள்ளும் பக்குவம் தான்.உயர்தரமான நமது கலாச்சாரம் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக அன்று முதல் இன்று வரை விளங்கி வருகிறது. அது தான் நமக்கு மிகப்பெரிய பலம். அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதார சக்தியாக வளர அதுவே அடிப்படைக் காரணம். நமது பொருளாதாரம் வெற்றிப்பாதையில் தொடர்ந்து நடைபோட நமது கலாச்சாரம், பண்பாடு, தொழில்முனையும் தன்மை, சுயசார்பு தன்மை ஆகியவற்றை காப்பாற்றப்பட வேண்டும். இது நம் நாட்டின் கடமை மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இரண்டு நாடுகளும் உலகின் முக்கிய பொருளாதார சக்திகள். இரண்டு நாடுகளிலுமே தொழில் வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் உள்ளவை. அதன்மூலம் மக்களின் கைகளில் பணமும் இருந்தது. அமெரிக்கா வங்கிகளில் போடப்பட்டிருந்த பணத்திற்கான வட்டியை குறைத்த போது மக்கள் பணத்தை எடுத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்தனர். அதையே ஜப்பான் வங்கிகள் செய்த போது ஜப்பானியர்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவில்லை. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் தற்போது வங்களில் பணம் இல்லை. ஆனால் ஜப்பானிய வங்கிகளில் உலகிலேயே அதிகமான டெபாசிட்டுகள் உள்ளன. ஒரே மாதிரியான கொள்கைகளுடைய இரு நாடுகளில் இருவிதமான அணுகுமுறைகள். இதற்கு காரணம் கலாச்சாரம். ஜப்பானில் குடும்ப கலாச்சாரம் உள்ளது. அமெரிக்காவில் தனி நபர் கலாச்சாரம் உள்ளது. எனவே ஜப்பான் தப்பித்துக் கொண்டது. அமெரிக்கா சிக்கிக் கொண்டது.

No comments: