மக்கள் பற்றாக்குறையில் மேலைநாடுகள்

-மக்கள் பற்றாக்குறையில் மேலைநாடுகள்
ப.கனகசபாபதி -
ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால், ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்த நாடுகளில் என்ன பிரச்சினை? உணவுப் பற்றாக்குறையா, பஞ்சமா அல்லது தீராத வியாதி தொல்லையா? இவை எதுவுமில்லை. அந்த நாடுகளெல்லாம் தொழில்வளர்ச்சி பெற்ற செல்வந்த நாடுகள், இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கெல்லாம் ஏன் இந்தப் பிரச்சினை? அவைதான் பொருளாதார வளர்ச்சி பெற்று, செல்வச் செழிப்பில் உள்ளவையாயிற்றே? அப்படிப்பட்ட நிலையில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? பிரச்சினை இதுதான். குடும்பங்களின் சிதைவு. வளர்ந்த நாடுகளில் குடும்பங்கள் ஏன் சிதைந்து வருகின்றன? செல்வம் பெருகப் பெருக, மனித வளம் உயர உயர குடும்பங்கள் அதிக மகிழ்ச்சியுடன்தானே இருக்க வேண்டும்? எப்படி குடும்பங்கள் சிதைய முடியும்? அதற்கு என்னென்ன காரணங்கள்? முக்கியக் காரணம் கலாசாரச் சீரழிவு. கலாசாரச் சீரழிவுகள் குடும்ப அமைப்பை பல வழிகளில் பாதிக்கின்றன. முதலாவது, மண முறிவுகள். கடந்த ஆண்டுகளில் மணமுறிவுகளின் எண்ணிக்கை அங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அந்த நாடுகளில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே என்ற நிலைமை நிறைய குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் என்றாலே அம்மாவும் அப்பாவும் சேர்ந்துதான். ஆனால், தனியான அம்மா, தனியான அப்பா என குறைந்தபட்ச குடும்ப உறவே சுருங்கிவிட்ட நிலை அங்கு அதிகரித்து வருகிறது. அதிலும், பள்ளி செல்லும் வயதிலேயே தாயாகித் தனித்து விடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியது. இரண்டாவது பாதிப்பு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத தன்மை. எனவே, அங்கு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி ஏறத்தாழ 14 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் குழந்தைகள் இல்லை. அமெரிக்காவில் இது 16 விழுக்காடாக உள்ளது. எதிர்காலம் குறித்த பயம், நிரந்தர வாழ்க்கைத்துணையின்மை, வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை ஆகிய காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதாக மேலை நாட்டு மக்கள் கூறுகின்றனர். இத்தகைய எண்ணங்களால் 49 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் இப்போது குழந்தைகள் இல்லை. மக்கள்தொகைப் பற்றாக்குறையால் புதிய பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டு அரசுகள் இது குறித்து கவலை அடைந்துள்ளன. இதனால் குடும்ப அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அந்நாட்டு அரசுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கி வருகின்றன. குழந்தை போனஸ், குடும்ப அலவன்ஸ், பிரசவகால விடுப்பு, வரிச்சலுகைகள், அலுவலக வேலை நேர கட்டுப்பாடுகளில் தளர்வு, வீட்டு வசதி சலுகைகள் என பலவிதமான உதவிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒன்பது குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிரெஞ்சு நாட்டுப் பெண்ணை அந்நாட்டின் அதிபர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் குறைந்தபட்ச மக்கள்தொகையாவது அவசியம் இருக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு விகிதம் ஸ்பெயின் நாட்டில் 1.32, இத்தாலியில் 1.33, ஜெர்மனியில் 1.37 என்ற அளவில் உள்ளது. இதனால், தற்போதைய மக்கள்தொகையைக் கூட அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை குறித்து ஏன் இவ்வளவு கவலை? மக்கள்தொகை குறைவாக இருந்தால் நல்லதுதானே என்ற எண்ணம் நமக்கு எழலாம். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கூடுதலான மக்கள்தொகையைவிட, மக்கள்தொகை பற்றாக்குறை ஆபத்தானதாகும். ஏனெனில், போதுமான மக்கள்தொகை இல்லையெனில், ஒரு நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் ஒரு குழந்தை திட்டத்தை முன்னர் கடுமையாக அமுல்படுத்திய சீன நாடுகூட, தனது கொள்கையின் இறுக்கத்தை இன்று புரிந்து கொண்டுள்ளது. மேலை நாட்டு சமூகங்கள் அரசு சார்ந்தவை. அங்கு குடும்ப அமைப்பு சிதைந்துபோவதால், அரசுகள் தான் மக்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இதற்காக அந்த அரசுகள் நிறைய தொகைககளை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் வேலையில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும், இன்ன பிற வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் நிலை உள்ளது. இந்தத் தொகைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் வருவாயிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால், இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியாதாரமும் வெகுவாகக் குறைகிறது. எனவே, இத்திட்டங்களை தொடர்ந்து அரசுகளால் நடத்த முடியுமா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், இத்திட்டங்களை அரசுகள் கைவிடுமேயானால் அங்கு பெரும் பிரச்சினைகள் வெடிக்கும். ஏனெனில், சம்பாதிக்கும் நிலையில் இல்லாத மக்களின் வாழ்க்கைக்கு யாரும் பொறுப்பேற்காத சூழ்நிலை உருவாகும். இதனால், மேலை நாடுகள் பலவற்றுக்கு இப்போதே மிகுந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து விட்டார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதும் அதிகமாகிவருகிறது. வயதானவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதற்காக அவர்களின் உடல்நிலையை நல்லமுறையில் பராமரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்யத் தொடங்கியுள்ளன. ஆனால், இவையெல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்தான் என்று அவர்களுக்குத் தெரியும். எனினும், இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, நிலையான குடும்ப அமைப்பும் அதன் மூலம் தேவையான எண்ணிக்கையில் உருவாகும் நல்ல குழந்தைகளும்தான். ஆனால், நிலையான குடும்பங்களை அமைக்கும் முயற்சி உயர்வான உறவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைய முடியும். அந்த உறவுகள் மேலை நாடுகளில் பெருமளவில் கலாசாரச் சீரழிவுகளால் சிதைக்கப்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும். இந்தவகையில் வளர்ந்த நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எந்தவித பொருளாதார வளர்ச்சியும் குடும்பக் கலாசாரத்தின் அடிப்படையை பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. (கட்டுரையாளர்: பேராசிரியர் பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனம், கோவை) - தினமணி -

No comments: