பாரதப் பண்பாட்டை உலகமே மெச்ச வைத்த மாவீரன் ஸ்மித் மச்சார்

 

சென்ற செப்.30 தேதியன்று துபாய் விமான நிலயத்திலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்று கொண்டிருந்த விமானம் முன்னதாகவே அவசரமாக சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்க வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் 170 பேருக்கும் மேற்பட்டவர்கள்  இருந்துள்ளனர். அதில் மிகப் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதப் பயணிகள்.

அந்த விமானத்தை இயக்கிச் சென்றவர் மும்பையைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார். குஜராத் மாநிலம் பூர்விகம். அவருடன் சென்ற இணை விமானி  ஓமான் நாட்டுக் குடிமகனாகக் கருதப்படும்  ஹமாம் அல்- ஹம்மாமி. அவர்கள் இருவரும் விமானத்தின் முன்பகுதியில் இருக்கும்  விமான ஓட்டிகளுக்கான பாதுகாப்பான அறையிலிருந்து விமானத்தை இயக்கும் பொறுப்பில் இருந்தவர்கள்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, விமானம் இஸ்ரேல் எல்லைப் பகுதியை நெருங்குவதற்கு முன்னர் இந்திய விமானியிடம் சொல்லி விட்டு ஓமானிய விமானி இருக்கைகளுக்குப் பின் பகுதியில் தொழுகை செய்து கொண்டிருந்துள்ளார். பின் சில நிமிடங்களில் ஸ்மித்தின் தலைப் பகுதியை பின்னாலிருந்து கடுமையாகத் தாக்கியுள்ளார். தொடர்ந்து தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்கள் அதிகமாகிக் கீழே விழுந்துள்ளார். அதிக அளவில் ரத்தம் வெளியேறியுள்ளது.

அப்போது விமானம் வேகமாகக் கீழே இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆபத்து வரப்போவதையும், தான் கடுமையாகத் தாக்கப்படுவதையும் உணர்ந்த விமானி ஸ்மித், விமானப் போக்குவரத்து  விதி முறைகளின் படி விமான நிலையங்களுக்கு அபாய எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். பின்னர் தன்னால் தனியாக ஆபத்தைத் தடுக்க முடியாதென உணர்கிறார். எனவே மிகவும் சிரமப்பட்டு விமானியின் அறையைத் திறந்து விடுகிறார். உள்ளே நடந்து வரும் சண்டை அதிர்ஷ்டவசமாக கழிவறைக்கு வந்த ஒரு பெண்மணிக்குத் தெரிய வருகிறது. அவர் மற்றவர்களை அழைக்கிறார்.

சில பயணிகள் வேகமாக உள்ளே சென்று பார்த்த போது ஆபத்தினை உணர்கின்றனர். ஒரு பயணி விமானம் கீழே செல்வதைத் தடுத்து நிறுத்துகிறார். இணை விமானியை அப்படியே வெளியில் இழுத்து வந்து, கைகளை இறுகக் கட்டிப்போட்டு அடக்கி வைக்கின்றனர். பணியில் இல்லாத விமானத்தில் பயணிகளாகச் சென்று கொண்டிருந்த இரு விமானிகள் ஓடிப் போய் விமானத்தை இயக்குகின்றனர். அடிபட்டு ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி ஸ்மித் அவர்களுக்கு விமானத்திலிருந்த ஒரு இஸ்ரேலியப் பல் மருத்துவர் முதலுதவி அளித்துப் பாதுகாக்கிறார். பின்னர் விமானம் டெல் அவிவ் செல்வதற்கு முன்னதாகவே  சவூதி அரேபியாவின் விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது.

தற்போது கேப்டன் ஸ்மித் அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். உடல் நலம் தேறி வருவது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் முழுமையாகக் குணமடைய நாட்கள் பிடிக்கலாம் எனத் தெரிகிறது.

இணை விமானி ஐக்கிய அரபு நாட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறார். விமானத்தை ஓட்டிச் சென்று டெல் அவிவ் விமான நிலையத்திலோ அல்லது  ஜோர்டான் நாட்டிலுள்ள அமெரிக்க விமான தளத்திலோ மோத விட்டுப் பயணிகள் உள்ளிட்ட அதிகம் பேரை உயிரிழக்கச் செய்து, பெரும் சேதங்களை ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளி வருகின்றன.

எனவே கேப்டன் ஸ்மித் செய்துள்ள செயல் அசாத்தியமானது. தன்னால் முடிந்த வரை இணை விமானியின் சூழ்ச்சியைத் தடுக்க முயற்சிகளைச்  செய்திருக்கிறார். அது முடியாததால். உயிருக்குப் போராடிய நிலையிலும், விமானிகளின் அறையைத் திறந்து விட்டு, மற்றவர்கள் உள்ளே வர வழி செய்திருக்கிறார். இல்லையெனில் அத்தனை உயிர்களும் போய்ப் பெரும் சேதங்கள்  நிகழ்ந்திருக்கும்.

இணை விமானி திட்டப்படி விமானத்தை ஒரு பெரிய கட்டிடத்திலோ, அல்லது ராணுவ தளத்திலோ மோதியிருந்தால், மேலும் அதிக உயிரிழப்புகளும், சேதங்களும் நிகழ்ந்திருக்கும்.  அமெரிக்க ராணுவ தளம் சேதப்பட்டிருந்தால்,  அந்த நாடு அமைதியாக இருந்திருக்காது. எனவே சர்வதேச அளவில் நடைபெற  வாய்ப்பிருந்த பெரும் பிரச்னைகளைக் கேப்டன் ஸ்மித் தடுத்திருக்கிறார்.

அவரை இந்தியப் பிரதமர், இஸ்ரேலியப் பிரதமர், இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள், பிற நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள், பொது மக்கள்  எனப் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இஸ்ரேலியப் பிரதமர் நமது பிரதமரையும் இந்திய விமானியையும் அவரது நாட்டுக்கு வருமாறு சிறப்பான  அழைப்பினை விடுத்துள்ளார். நமது நாட்டுக் கோவில்கள் பலவற்றில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளன. இஸ்ரேலிய மக்கள்  அனைவரும் விமானியைத் தங்களின் கதாநாயகன் எனக் கூறிப் பெருமையுடன் பாராட்டுகின்றனர். முக்கியமான இடங்களில் அவரது படத்தை வைத்து நன்றி தெரிவிக்கின்றனர். 

பாரதத்துக்கும் இஸ்ரேலுக்குமான உறவு பண்பாட்டு ரீதியிலானது. நீண்ட நெடிய வரலாறுடையது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற்ப்பட்ட போது உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கெல்லாம் பெரும்பாலும் துன்புறுத்தப் பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

நமது பாரத நாடு ஒன்று தான் அவர்களுக்குப் புகலிடம் மட்டுமன்றி, அவர்களது பாரம்பரியப்படி வாழ அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. எனவே அவர்களுக்கு எப்போதும் நமது நாட்டின் மேல் தனிப் பாசமுள்ளது.  சிக்கலான நேரங்களில் நமக்கு எப்போதும் உதவி செய்யத் தயாராக உள்ள நாடு இஸ்ரேல். திரு மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் உறவு மேலும் பல மடங்கு வலுப்பட்டுள்ளது.

எனவே இந்த சமயத்தில் கேப்டன் ஸ்மித் பயணிகளைக் காப்பாற்ற எடுத்த துணிச்சலான நடவடிக்கை இஸ்ரேலிய மக்களைப் பெரும்   மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றியில்  திளைக்க வைத்துள்ளது.  இஸ்ரேல் நாட்டிலும், உலக அரங்கிலும் நமது நாட்டுக்குப் பெரிய பெருமையைத் தேடித் தந்துள்ளது.  

காணொளியில் பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித்திடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறிய போது ‘ நாம் யாரையும் கொல்லப் பிறந்தவர்கள் அல்ல; மக்களைக் காப்பாற்றப் பிறந்தவர்கள்’ என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். அது மிகவும் ஆழம் பொதிந்த கருத்து. தொன்மையான நமது பண்பாட்டின் அடிப்படைக் கூற்றினை எடுத்து வைப்பது.

உலகமே ஒரு குடும்பம் என்னும் பாரதியக் கோட்பாட்டைத் தனது செயலின் மூலம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்திய கேப்டன் ஸ்மித் ஒரு உயர்ந்த பண்பாளர் மட்டுமல்ல; மாவீரன்.  வெகு சீக்கிரமே அவர் பூரண நலம் பெற்று இயல்பு நிலைக்கு மீண்டு வர மானிட இனமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. பிரார்த்திப்போம்.

 

ஆட்சியாளராகக் கால் நூற்றாண்டு கால மக்கள் சேவையில் மோடி

 

திரு நரேந்திர மோடி அவர்கள் 2001 ஆம் வருடம் அக். 7 ஆம் தேதி  குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சுமார் பதிமூன்று வருட காலம்  பணியாற்றினார். பின்னர் 2014 மே மாதம் முதல் பாரதப் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். எனவே மாநில முதல்வராகவும், தேசத்தின் பிரதமராகவும் இருபத்தைந்து ஆண்டு காலச் சேவையைத் தற்போது  நிறைவு செய்கிறார். சுதந்திர இந்தியாவில் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும்  சிறப்பினைப் பெற்ற ஒரே இந்தியத் தலைவராக மோடி விளங்கி வருகிறார்.    

பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து,  பள்ளிப்படிப்பை முடித்ததும், குடும்பத்தைத் துறந்து முழு நேரமாகத் தேசப்பணி செய்வதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  கடந்த ஐம்பத்தைந்து வருடங்களாக நாட்டுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். அதில் முப்பத்தைந்து வருடங்கள் தேசிய இயக்கங்களிலும், பின்னர் இருபத்தைந்து வருடங்கள் அரசுப் பொறுப்புகளிலும்  இருந்து வந்துள்ளார்.

குஜராத் முதல்வராக அவர் பொறுப்பேற்ற கால கட்டத்தில் அங்கு சிரமங்களும் சவால்களும் நிறைந்திருந்தன. அதற்குச் சில மாதங்கள் முன்னர் ஒரு பெரிய பூகம்பம்  தாக்கி, இருபதாயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து, அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. பின்னர் 2002 ஆம் வருட தொடக்கத்தில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது.  மேலும் தண்ணீர் பற்றாக்குறையும்,  வறட்சியும் நிலவி வந்தன. 

அவற்றையெல்லாம் அமைதியான முறையில் உறுதியாக எதிர் கொண்டு ஆட்சியை நடத்தினார். கட்டமைப்பு மேம்பாடு, வறண்ட நிலங்களுக்குத் தண்ணீர்,  தொழில்கள் உருவாக்கம், புதிய முதலீடுகள் ஈர்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் எனப் பல முனைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதனால் விவசாயத் துறை வளர்ச்சி பத்து விழுக்காட்டைத் தாண்டியது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தி,  பல நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான கோடி  ரூபாய் முதலீடுகளை ஈர்த்தார்.  ஜல மந்திர் திட்டம் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர் நிலைகளை   மீட்டெடுத்தார். ஜோதி கிராமத் திட்டம் மூலம் இருபத்தி நேரமும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் மக்களிடையே பிளவுகளைத் தடுக்கும் வகையில் சமரச கிராமத் திட்டம் மூலம் பஞ்சாயத்துகளில் போட்டியின்றி ஒரு மனதாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் கொண்டு வந்தார்.

அதனால் மோடி ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு சுமார் ஏழு மடங்கு அளவு உயர்ந்தது. முந்தைய காலங்களில் இல்லாத அளவு வளர்ச்சி விகிதம் அதிகரித்து, தேசிய சராசரியை முந்திச் சென்றது. சமூகத்தில் அமைதி நிலவி,  பல துறைகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. எனவே அந்த மாநிலத்தின் முன்னேற்றப் பாதை ‘குஜராத் மாடல்’ எனப் பாராட்டப்பட்டது.

அதே சமயம் 2014 கால கட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டது. முந்தைய பத்தாண்டு காலத்தில்  மிகப் பெரிய ஊழல்கள் நடந்தேறி இருந்தன. எல்லைகளில்  பதற்றங்களும், நாட்டுக்குள் தீவிரவாதச் செயல்களும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தன.

மோடி பிரதமரானதும் கடினமான நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பல விதமான சீர்திருத்தங்களை மேற்கொண்டும், புதிய அணுகுமுறைகளை வகுத்தும் நாட்டை வழி நடத்தி வருகிறார். நேர்மையான அதிகாரிகளை நியமித்து, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்தார். அதற்காகத் தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார். நாட்டின் பெரிய திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன்  தொடர்பு கொள்ளவும்  ‘பிரகதி’ தளத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கருத்துக்களை அறிந்து,  மாதா மாதம் அவர்களிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.    தூய்மை இந்தியா, யோகா தினம் போன்ற திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். மக்கள் அனைவரும் தமது குடும்பங்களுடன் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எல்லைப் பகுதிகளில் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வீரர்களின் முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மின்சார வசதி, சாலைகள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுகங்கள் எனத் தேவையான அனைத்தும் பரவலாகி வருகின்றன. ஏழை மற்றும் சாதாரண மக்களின் முன்னேற்றத்துக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. பன்னிரெண்டு கோடி கழிவறைகள், ஐம்பத்தொன்பது கோடி வங்கிக் கணக்குகள், பத்து கோடிக்கு மேல் இலவச எரிவாயு இணைப்புகள், நான்கு கோடிக்கு மேல் வீடுகள், ஐம்பத்தைந்து கோடி பேர் பலன் பெறும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ உதவி ஆகியவை மூலம் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், சிறு குறு தொழில்கள் முன்னேற முத்ரா திட்டம், சாலை ஓர வியாபாரிகளுக்கு நிதி உதவி திட்டம், கிராம மக்களுக்குக் குழாய் நீர் வீட்டிலேயே கிடைக்க ‘ஜல் ஜீவன்’ திட்டம், மகளிர், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் மலை வாழ் மக்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் என வெவ்வேறு பிரிவினருக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் பத்தாண்டுகளில் இருபத்தைந்து கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்து வெளிவந்துள்ளனர். 

‘இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட திட்டங்களால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் அலைபேசி தயாரிப்புகளில் நாம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளோம்.  மோடி ஆட்சியில் பாதுகாப்புத் துறை  ஏற்றுமதி ஐம்பத்தாறு மடங்கு அதிகரித்துள்ளது. அவ்வகையில் எண்பதுக்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு ஏற்றுமதி செல்கிறது.

உலக அளவில் வளர்ந்து வரும் துறைகளாக உள்ள டிஜிட்டல் தொழில் நுட்பம், சூரிய ஒளி எரிசக்தி ஆகியவற்றில் இந்தியா வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்துக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது உலக அளவில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நமது நாட்டில் மட்டும் 49 விழுக்காடு நடைபெறுகிறது.

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு இரண்டு மடங்குக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.  அண்மைக் காலமாக உலக அளவில் வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட பலவும் பொருளாதாரச் சிரமங்களை எதிர் கொண்டு கடும் சிக்கல்களில் இருந்து வருகின்றன.  ஆனால் இந்தியா சென்ற 2025-26 நிதியாண்டில் 7.6 விழுக்காடு வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பெரிய நாடாகத் தொடர்ந்து வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.

உறுதியான முடிவெடுப்பதற்குத் துணிச்சலும் தெளிவும் இல்லாமல் பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பல அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 நீக்கம், தேசிய கல்விக் கொள்கை 2020, பொருள்கள் மற்றும் சேவை வரி, குடியுரிமை திருத்தச் சட்டம்  ஆகியன அவற்றில் முக்கியமானவை.

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை நமது தேசத்தின் நலன்களை மையப்படுத்தி அமைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நேரெதிர் கருத்துக்களைக் கொண்ட நாடுகளுடனும் கூட நாம் நட்புறவில் உள்ளோம்.  அரசின் பக்குவமான அணுகுமுறைகள் மூலம் இந்தியா தற்போது உலக அளவில் அனைவராலும் நன்கு மதிக்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் மக்களிடையே நாட்டைப் பற்றிய ஒரு அவ நம்பிக்கை நிலவி வந்தது. அரசியல் தலைவர்கள் மேல் மட்டுமன்றி, ஜனநாயகத்தின் மேலும், நாட்டின் எதிர்காலம் பற்றியும் கூட நம்பிக்கை இல்லாத சூழ்நிலை இருந்தது. தனது சுய ஒழுக்கத்தாலும், முழுமையான அர்ப்பணிப்பாலும் மோடி ஒரு மகத்தான தலைவராக விளங்கி வருகிறார். அவரது செயல்பாடுகளால் அரசியலிலும், சமூகத்திலும் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.    

 நமது நீண்ட நாளைய கனவுகள் பல இப்போது வரலாறாக மாறியுள்ளன.  அதனால் நம்மால் எதுவும் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை பிறந்து, நம் கண் முன்னாலேயே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. லட்சியங்களையும், இலக்குகளையும் முன் வைத்து நிர்வாகத்தை முடுக்கி, நாட்டை வழி நடத்திச் செல்வது என்பது மோடி அவர்களின் பாணி. அதன் மூலம் நிறைய இலக்குகளை நாடு அடைந்து வருகிறது.

நாட்டின் வெவ்வேறு துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக மங்கிக் கிடந்த பாரதக் கலாசாரம் புத்துயிர் பெற்று வருகின்றது. அந்நிய சித்தாந்தங்களுக்கு மாற்றாக இந்த மண்ணின் கூறுகள் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளன. உலக அளவில் இந்திய வழிமுறைகள் அங்கீகாரம் பெற்று வருகின்றன.

எனவே சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அவர்களின் கால் நூற்றாண்டுத்  தலைமைப் பணி ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. உள் நாட்டிலும்,  உலகின் பல பகுதிகளிலும் வாழும் நமது மக்கள்  இந்தியன் என்று சொல்வதில் இன்று பெருமை கொள்கிறார்கள்.  பல நூற்றாண்டுகளாக நம்பிக்கையிழந்து இருந்த நமது நாடு, தற்போது நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்னும் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

நரேந்திர மோடி நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். சுதந்திர இந்தியாவில் நமக்கு முந்தைய தலைமுறையினர் எல்லாம் பிரதமராகப் பார்க்கத் தவமிருந்த ஒரு பெரும் தலைவர். இந்தப் புண்ணிய பூமியில் பாரதியப் பண்பாடு மீண்டும் தழைக்கக்  கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர். சம காலத்தில் உலகமே வியந்து பார்க்கும் மாமனிதர். வணங்குவோம். நமது தேசத்தை வளர்ச்சியடைந்த பாரதமாக உருவாக்கும் அவரது இலட்சியப் பயணத்துக்குத் துணை நிற்போம்.

( தினமணி, அக். 8, 2026)


விவேகானந்த கேந்திரத் தலைவர் அமரர் பாலகிருஷ்ணன் - எளிமையும், அர்ப்பணிப்பும்

 

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் தனது 89-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.  எளிமைக்கும், அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவர் ஒரு உயர்ந்த மனிதர். எப்போதுமே தன்னைப் பற்றி  வெளியில் சொல்லாதவர். வாழ்நாளின் கடைசி வரைக்கும் நமது தேசம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்காக மட்டுமே சிந்தித்துச் செயலாற்றியவர்.

 விவேகானந்த கேந்திரம் 1972 ஆம் வருடம் கன்யாகுமரியை மையமாக வைத்து நிறுவப்பட்ட அமைப்பு.  மனிதர்கள் உருவாக்கம் மற்றும் தேசக் கட்டமைப்பு ஆகியன அதனுடைய இரண்டு குறிக்கோள்கள். கல்வி, மருத்துவம், கிராம முன்னேற்றம் மற்றும் கலாசாரம் ஆகியவை அதன் முக்கியமான செயல்பாட்டுத் தளங்கள். அதன் நிறுவனர்  திரு ஏக்நாத் ரானடே அந்த அமைப்பில் சேர்ந்து முழு நேரமாகச் சேவை புரிய ஊழியர்கள் தேவை என அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை  ஏற்று 1973 ஆம் வருடம் கேந்திரத்தில் முழு நேரப் பணியாளர்களாகச் சேர்ந்தவர்களில்   திரு பாலகிருஷ்ணன் அவர்களும் ஒருவர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியிலுள்ள கிராமத்தில் பிறந்த அவர்,  அப்போது இந்திய விமானப்படைத் துறையில் பணியாற்றி வந்தார். பதினைந்து வருடங்களுக்கு மேலான தன்னுடைய பணியை உதறி விட்டு, முழு நேர தேச சேவைக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

முதலில் வட கிழக்கு மாநிலங்களின் மண்டல அமைப்பாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் அங்குள்ள மக்களுக்குப் போதுமான கல்வி கிடைக்கவில்லை. கட்டமைப்பு வசதிகள் இல்லை.  நோய்த் தொற்று வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே அங்கு சென்று பணியாற்றுவது சிரமம். ஆனாலும் அங்கு சென்று தங்கிப் பல ஆண்டுகள் அவர் ஆற்றிய சேவைகள் மகத்தானவை.

2011 ஆம் வருடத்தில் இரண்டு வார காலம்  விவேகானந்த கேந்திரத்தின் அழைப்பின் பேரில் அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களுக்குச் சென்றிருந்தேன். அதில் அதிக நாட்கள் அருணாசலப் பிரதேசத்தில் விவேகானந்த கேந்திரா நடத்தி வந்த பள்ளிகள் மற்றும்  கேந்திரத்தின் சேவைப் பணிகள் ஆகியவற்றைப் பல இடங்களில் நேரில் சென்று பார்த்தேன். அங்கு பல கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.  

அப்போது போது பெரும்பாலான இடங்களில் வாகனங்களில் தான் சென்றோம். மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே நடந்து சென்றோம். ஆனாலும் கூட பல இடங்களைக் கடந்து செல்ல அதிகமான நேரம் பிடித்தது. மலைப் பிரதேசம் ஆனதால் நல்ல சாலைகள் இல்லை. பாறைகள், கற்கள், பள்ளங்கள், அவற்றிடையே நீரோடைகள் ஆகியவற்றைக் கடந்து பிரயாணங்கள் செல்வது  கடினமாக இருந்தது. 

ஆனால் பாலகிருஷ்ணன் அவர்கள்  ஐம்பது வருட காலத்துக்கு முன்னரே அங்கு தனது பணிகளைத் தொடங்கி நடத்தியுள்ளார். அங்குள்ள பல பகுதிகளுக்கும் கால்நடையாகவே சென்று சேவை புரிந்துள்ளார். சில பகுதிகளுக்குச் செல்ல நாள் கணக்கில் நடந்துள்ளார். நான் சென்ற  பல இடங்களில் அவரது சேவைகளை மலை வாழ் மற்றும் கிராம மக்கள் நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்தனர்.

அவர் ஒரு நாள் முழுவதும் தனக்குத் தேவையான பொருள்களைத் தலையில் சுமந்து கொண்டு மலையில் நடந்து குறிப்பிட்ட கிராமத்தினை அடைந்ததை அவர்களே தெரிவித்த போது  நான் ஆச்சரியப்பட்டேன்.  அப்படித்தான் பல கிராமங்களுக்குப் பல முறை தொடர்ந்து அவர் நடந்து போய் வந்து சேவை செய்துள்ளார். அண்மையில் டெல்லியில் நடந்த அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கேந்திரத்தின் துணைத் தலைவர் சகோதரி நிவேதிதா ஒரு விசயத்தைச் சொன்னார். அது அவரது அசாத்தியமான அர்ப்பணிப்பை நமக்கு உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வு.  

முன்னர் ஒரு சமயம் அவரிடம் ஏக்நாத் ரானடே அவர்கள் ஒரு தகவல் கொடுத்திருக்கிறார். அருணாசலப் பிரதேசத்தில் ஒரு கார்யகர்த்தர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார்; எனவே அவரைச் சென்று பார்த்து வாருங்கள் என்பது தான் அந்தச் செய்தி. அந்த நண்பர் இருந்து வந்த இடம் தூரத்திலுள்ள மலைப் பகுதி. திரு பாலகிருஷ்ணன் ஒரு வாரம் நடந்தே  சென்று அந்த இடத்தை அடைந்திருக்கிறார்.  அங்கு சென்ற போது அந்த நண்பரைச் சிகிச்சைக்காக  மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது. ஆனால் அவரால் நடக்க இயலாது. எனவே உதவிக்காக மூன்று பேரைச் சேர்த்து அந்த நண்பரைத் தூக்கிக் கொண்டு திரும்பி ஒரு வாரம் நடந்தே வந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்.

அருணாசலப் பிரதேசத்தில் விவேகானந்த கேந்திரத்தால் கல்வியும், மற்ற பலன்களும் பெற்று பல பேர்களின் வாழ்க்கை பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அந்த மக்களில் பலரும் பாலகிருஷ்ணன் அவர்களை ஒரு தந்தையாகவும், மூத்த சகோதரராகவுமே பார்க்கின்றனர். 

1980 களின் ஆரம்பத்தில் தொடங்கி இருபது வருட காலம் கேந்திரத்தின் அகில பாரத பொதுச் செயலாளராகவும், பின்னர் பத்தொன்பது வருட காலம் அதன் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பின் 2020 முதல் அதன் அகில பாரத தலைவராகப் பொறுப்பேற்று வழி நடத்தி வந்தார். ஆனாலும் எப்போதும் எளிமையாகவும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகோதரனாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளார். தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதே இல்லை.

தனது இறுதி நாட்களில் அவர் உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் கூட தேசத்தின் எதிர்காலம் பற்றியே பேசி வந்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் தேசிய சிந்தனை பரவலாக வளர வேண்டியதன் அவசியம் பற்றி நண்பர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் தனது வாழ்க்கை முழுவதையும் நமது தேச சேவைக்காக  அர்ப்பணித்துக் கொண்ட அவர் ஒரு மிகச் சிறந்த தேச பக்தர். தமக்குத் தெரிந்த அனைவரையும் குடும்பமாகப் பாவித்தவர். தம்முடன் சேவைப் பணிகளில் இருந்த அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக விளங்கியவர். தன்னைப் பற்றிப் பேசாத பெருந்தன்மை கொண்டவர். தேச நலன்களுக்காக ஆசைகளைத் துறந்து வாழ்ந்த ஒரு கர்ம யோகி.

ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்தவர்.  வணங்குதலுக்குரிய ஒரு ஆன்மா. சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.



கடினமான சூழலிலும் வேகமாக வளர்ச்சியுறும் பொருளாதாரம்

 

அண்மையில் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான  (ஏப்ரல் -ஜூன் ) பொருளாதார முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல அமைப்புகளின் கணிப்புகளையெல்லாம் மீறி, 7.8 விழுக்காடு என்ற அளவில் அதிக  வளர்ச்சியை நாடு கண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.  மேலும் சென்ற 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதமான 6.9 விழுக்காட்டை விடவும் தற்போது அதிகமாக உள்ளது.

கூடவே தற்போதைய முடிவுகள் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருவதை உறுதி செய்கின்றன. சென்ற காலாண்டில் உலகின் பிற  முக்கிய பொருளாதாரங்களான சீனா – 4.3 விழுக்காடு; அமெரிக்கா – 2.1 விழுக்காடு; ஜெர்மனி -1.1 விழுக்காடு ; ஜப்பான் – 0.5 விழுக்காடு என்ற அளவுகளில் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. அதனால் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்னும் சிறப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.   

பொருளாதாரத்துக்கு அடிப்படையான துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவை சார்ந்த துறைகள் ஆகிய மூன்றுமே வளர்ச்சிக்கு உதவியுள்ளன. சேவைத் துறையானது பத்து விழுக்காடு வளர்ச்சியுடன், ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஒரு வலிமையான தூணாக இருந்து வருகிறது.  அதில் ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம், மொத்த விற்பனை , தகவல் தொடர்பு மற்றும் கணினித் துறை சம்பந்தப்பட்ட சேவைகள் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.1 விழுக்காடாக இருந்த தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8.6 விழுக்காடாக அதிகரித்து உற்சாகமாக உள்ளது. அதில் உற்பத்தித் துறை 9.2 விழுக்காடு வளர்ந்துள்ளது. மின்சாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளும்  நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. விவசாயம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை 3.6 விழுக்காடு அளவு வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் விவசாயத் துறையின் வளர்ச்சி  மட்டும் 2.9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.

பொருளாதாரம் அதிக வளர்ச்சி பெறுவதற்கு மக்கள்  பொருட்களை வாங்க வேண்டும். அந்த வகையில் பொருட்களுக்கான தேவை நமது நாட்டுக்குள்ளேயே அதிகமாக உள்ளது. சென்ற காலாண்டில் தனி நபர் நுகர்வு என்பது 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வீடு வாங்குதல், வாகன விற்பனை, மின்சார பயன்பாடு, டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளிட்ட பலவும் அதிகரித்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.  2025-26 வருட காலாண்டில் 5.8 விழுக்காடு வளர்ச்சியுடன் இருந்த மொத்த முதலீட்டு உருவாக்கம், இந்தக் காலாண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 11.9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. மேலும் வெளிநாட்டு மூலதனம் கடந்த பதினைந்து காலாண்டுகளில் வராத அளவு அதிகரித்து 30.7 பில்லியன் டாலர் என உள்ளது.

முந்தைய வருட காலாண்டில்  6 விழுக்காடாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி தற்போது 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது.  அதில் மின்னணு சாதனங்கள் மற்றும்  பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியன அதிக வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதே சமயம் இறக்குமதி 1.1 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக மோடி அரசு பிற நாடுகளுடன்  உருவாக்கி வரும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் வளர்ச்சி பரவலாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்து வருவதாகும். சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் அரசுக்கான வருமானம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விலைவாசி 4.15 விழுக்காடு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகமில்லாமல் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

மேற்கண்ட அனைத்தும் உலக அளவில் நிகழ்ந்து வரும் பல  முக்கியமான பிரச்னைகளுக்கு இடையிலும் நடந்து வருவது தான் இங்கு கவனிக்கத் தக்கது. ஈரான் நாடு  தீவிர வெளிநாட்டுத் தடைகளையும், போரையும் சந்தித்து வருகிறது. அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. எனவே எரிபொருள் தடையின்றி கிடைப்பது பற்றி நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு தெளிவுடன் செயல்படாமல் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நபராக இருந்து வருகிறார்.  சுற்றுச் சூழல் அபாயம் உலகைப் பயம் கொள்ள வைக்கிறது. எனவே பல நாடுகளும் கடும் பொருளாதாரச் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. ஆகையால் உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் மந்தமாகவும் உள்ளது.

அதே சமயம் இந்தியப் பொருளாதாரம் அந்தச் சிரமங்களை எல்லாம் மீறி நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றது. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் பலவும் நல்ல பலன்களைக் கொடுத்து வருகின்றன.  சென்ற வருடம் பொதுத் துறை வங்கிகள் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு லாபம் ஈட்டியுள்ளன.

இந்தப் பின்னணியில் சென்ற காலாண்டு வளர்ச்சி விகிதச் சாதனையை இமாலயச் செயல்பாடு எனப் பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். அது 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவற்றுடன் அரசின் திறமையான நிர்வாகம் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாடு வேகமாக  வளர்ந்து உலக அரங்கில் முன்னேறி வரும் இந்தச் சூழலில் தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கின்றன. 

( https://spmrf.org/indian-growing-economy , விஜயபாரதம்,சென்னை,செப்.25,2026 )

அறிவுசார் நக்சல்கள் ஆபத்தானவர்கள்

 

அண்மையில் செங்கோட்டையில் நடைபெற்ற எண்பதாவது சுதந்தர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பல வருடங்களாக நாட்டில் ஆயுதமேந்திச் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழித்து விட்டோம்; ஆனால் அறிவுசார் (டிமாகி) நக்சல்கள் இன்னமும் நம்மைச் சுற்றி இருந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அத்தகு நபர்கள் தமக்குப் பொருத்தமான சூழ்நிலைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ; சூழ்நிலை உண்டாகும் போது வன்முறை மற்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்; எனவே அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்தார்.  

நக்சலைட் இயக்கம் 1967 ஆம் வருடம் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி கிராமத்தில் ஆரம்பமானது. சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங் சித்தாந்தத்தை ஒட்டி தொடர் புரட்சியின் மூலமாக  அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதே  இயக்கத்தின்  நோக்கமாகும்.

 போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகளில் அவ்வியக்கம் அதிகம் பரவியிருந்தது. அதனால் சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும்  பீகார் மாநிலங்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகின. மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலப் பகுதிகளிலும் அவை செயல்பட்டு வந்தன.

மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டி விடுவது, வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது, பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொது மக்களைக் கொல்வது, கொள்ளையடிப்பது, பொதுக் கட்டமைப்புகளைத் தகர்ப்பது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட  செயல்களில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வந்தனர். இருபது வருடங்களுக்கு முன்னர் 180 மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடு இருந்தது. 2004ல் தொடங்கிய பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சுமார் ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  

2014 ஆம் ஆண்டு மோடி அரசு வந்த பின்னர் நக்சலிசத்தைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கொள்கையை அறிவித்தது. அதன்படி உறுதியான செயல் திட்டம் வகுக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. நக்சல் பாதித்த பகுதிகளில் வளர்ச்சிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.  நக்சல் தீவிரவாதிகளுடன் பேசி அவர்களுக்குச் சரணடையும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. சரண் அடைபவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும்  திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்பட்டன. எதற்கும் உடன்படாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர்.    

கடந்த பன்னிரெண்டு வருடகால  முயற்சிகளால், இடது சாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126 என்பதிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது. கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த 35 மாவட்டங்கள் இன்று முழுதும் விடுபட்டு விட்டன. எனவே சென்ற மார்ச் மாத இறுதியில் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறி விட்டது என உள்துறை அமைச்சர் அறிவித்தார். ஆகையால் நமது நாட்டுக்கு மிகப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு சவாலாக விளங்கி வந்த  அறுபதாண்டு கால ஆயுதம் தாங்கிய  இயக்கம் இப்போது  ஒழிக்கப்பட்டு விட்டது மோடி அரசின் மகத்தான சாதனையாகும்.

அதே சமயம் ஆயுதம் ஏந்தாத இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவு சார் நக்சல்கள் இன்றும் கல்வி, எழுத்து, பத்திரிக்கை, சினிமா, நீதி, பொது வாழ்க்கை, அரசியல் எனப் பல துறைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது, நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராகச் செயல்படுவது, நமது வரலாறு, பாரம்பரியம் மற்றும் தன்மைகளை மறுப்பது, வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது, மக்களிடையே பிரிவினையை விதைப்பது, ஜனநாயகத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது உள்ளிட்டவை அவர்களின் செயல்களாக உள்ளன.

அவற்றின் மூலமாக மக்களிடையே குழப்பம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னேற்றத்தைத் தடுப்பது, கலவர சூழ்நிலையை உருவாக்குவது, அரசியல் அமைப்புகளின் மேல் அவ நம்பிக்கையை உருவாக்குவது உள்ளிட்டன அவர்களின் நோக்கங்களாகும். அதற்காக அவர்கள் தேச விரோத, தீவிரவாத, பிரிவினைவாத  மற்றும் அந்நிய சக்திகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.  அதற்கான நிதிகளைத் தவறான வழிகளில் சட்ட விரோதமாகப் பெறுகின்றனர்.

சில உதாரணங்கள் மூலம் அறிவுசார் நக்சல்களின் செயல்களைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அகழ்வாராய்ச்சி நிபுணர் கே.கே. முகமது அயோத்தி ராம ஜன்ம  பூமி ஆய்வுகளில் ஈடுபட்டவர். அப்போது பூமிக்கடியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததை நேரில் பார்த்தவர். ஆனால் பெரிய பல்கலைக் கழகங்களில் பிரபலமாக இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் அதற்கு ஆதாரமே இல்லை என வாதிட்டார்கள். அதன் மூலம் மக்களைத் திசை திருப்பினார்கள். நீதி மன்றம் அவர்களை என்ன ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தில் கூசாமல் பொய் சொன்னவர்கள் தான் அவர்கள்.

பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து பல நூறாண்டுகள் உலகின் இரு பெரும் பொருளாதாரங்களில் முதன்மையாக  விளங்கியது இந்தியா என்பது வரலாற்று உண்மை. பின்னர் காலனியாதிக்க காலத்தில் நாடு சுரண்டல்களுக்கு ஆளாகி ஏழையானது. அதனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆரம்ப காலங்களில் வளர்ச்சி விகிதம் 3.5 விழுக்காடு இருந்தது. அதை இந்து வளர்ச்சி விகிதம் என இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர். சரித்திரப் பூர்வமான காரணங்களால்  உண்டான குறைவான வளர்ச்சிக்கு இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தினார்கள். 

1990 சமயத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலிருந்து மத தீவிரவாதிகளால் சுமார் ஆறு லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். பல பேர் கொடூரமாக  கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மானத்தை இழந்தனர். அவர்களின் சொத்துக்கள் எல்லாம் மற்றவர் கைகளுக்குச் சென்றன.  சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாகத் தள்ளப்பட்டனர். இங்கிருந்து தூரத்திலுள்ள பாலஸ்தீனத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் எனப் பலரும்  அது பற்றி வாயே  திறக்கவில்லை. மோடி அரசு வந்த பின்னரே அந்த மக்களின் துயரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. 

 இந்தியர்களைப் பிரிப்பதற்காக அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆரிய திராவிட வாதம் கட்டுக்கதை என்பது ஐரோப்பியர்களாலேயே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.   ஆனாலும் தமிழகத்தில் ஒரு  கூட்டம் அதை இன்னமும் முன் வைத்து வருகிறது. அதே போல உலகின் கல்வி மையமாக விளங்கி வந்த நமது நாட்டில்,   மக்களனைவருக்கும் இலவசமாகக்  கிடைத்து வந்த கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள் என்பது அவர்களே ஒத்துக்கொண்ட உண்மை.

அதே சமயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் பிரிட்டனில் கல்வி பரவலாக இல்லை என்பதும் அவர்களே சொன்னது. ஆனாலும் ஆங்கிலேயர் இங்கு வந்த பின்னரே நமது நாட்டுக்கு கல்வி வந்தது என்று தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும்  இன்று  வரை பேசி வருகின்றனர்.  இவையெல்லாம் அறிவுசார் நக்சல்களின் தாக்கங்கள்.

தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த போது அதில் அந்நியத் தலையீடு இருக்கிறது என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார். பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று அது மூடப்பட்டது.  அதனால் பல தமிழ் குடும்பங்கள் வேலையிழந்தது மட்டுமன்றி நமது பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. 

பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழ்ந்து வரும் இந்து, சீக்கிய மற்றும்  கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது காந்திஜி, அம்பேத்கர், நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள்  பலரும் உறுதியளித்த வாழ்வாதாரப் பிரச்னை. ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் அதைச் சட்டமாக்க அரசு நடவடிக்கை எடுத்த போது அது குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்பட்டது. அதனால்  நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பல தளங்களிலும் இந்த மாதிரி வேலைகளைச் செய்து வருபவர்கள் அறிவுசார் நக்சல்கள். மோடி அரசு வந்த பின்னர் மத்திய அரசு இறையாண்மை, தேச ஒற்றுமை, கலாசாரப் பாதுகாப்பு, ஒட்டு மொத்த வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படை விசயங்களில் சமரசமில்லாமல் உறுதியாக இருந்து வழிநடத்தி வருகிறது.   அதனால் கடந்த காலங்களில் பயமில்லாமல் உள்ளடி வேலைகளைச் செய்து வந்த சக்திகள் தற்போது செய்வதறியாமல் தவிக்கின்றன.

நாடு வேகமாக முன்னேறி உலக அளவில் பலம் பொருந்தி வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பலவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதும்,  மக்களிடையே வெறுப்பை விதைப்பதும் அதிகரித்து விட்டது.  அதற்கு அந்நிய சக்திகள் ஆதரவளித்து வருவது அண்மையில் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி இயக்க ஆர்ப்பாட்டங்களில் அம்பலமானது.

எனவே நக்சல் சிந்தனையுடன் அறிவுசார் தளங்களில் செயல்பட்டு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களின் செயல்பாடுகள் நமது நாட்டையும், அதன் முன்னேற்றத்தையும் பெருமளவு பாதிக்கக் கூடிவை. ஆகையால் இந்தத் தருணத்தில் அவர்களின் சதி வலைகளில் வீழ்ந்து விடாமல் எச்சரிக்கையோடு இருந்து, அவர்களை ஒதுக்கி வைப்பது நமது முக்கிய கடமையாகும். 

வன்முறையை துாண்டி, நியாயப்படுத்துவதே அறிவுசார் நக்சலிசம்!

( சிந்தனைக் களம், தினமலர், ஆக.30,2026)


 

சுய சார்பு பொருளாதாரத்தின் அடிப்படை சுதேசித் தொழில்கள்

 

பாரத நாடு  தொன்மையான பண்பாட்டைக் கொண்டது. நமது பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வாழ்ந்து வருகிறது என்றால், அதற்கான பொருளாதாரப் பின்னணி இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கெனச் சிறப்பான பொருளாதார மற்றும் வணிக வரலாறு இருப்பதைக் குறிப்புகள் காட்டுகின்றன. பொது யுகம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கான  உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை அறிஞர் ஆங்கஸ் மாடிசன் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

அதில் பொது யுக தொடக்க காலத்தில், அதாவது இப்போதிருந்து 2025 ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை நமது நாடு வைத்துக் கொண்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் நாம் அப்போதே உலகின் பெரும் பொருளாதார சக்தியாக இருந்திருக்கிறோம். பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து திட்டமிட்டு நமது பொருளாதாரத்தைச் சிதைக்கும் வரை,  பதினெட்டு நூற்றாண்டு காலம் இந்தியாவும் சீனாவும் தான் பொருளாதார பலம் பொருந்திய இரு பெரும் நாடுகளாக விளங்கி வந்துள்ளன.

அதற்குக் காரணம் நமது உள்நாட்டுப் பொருளாதார முறைகளும், உள்ளூர்ப் பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வந்த தொழில்களும் தான். பின்னர் வந்த அந்நியர்களின் காலனி ஆட்சிக் காலத்திய பொருளாதாரத் தாக்குதல்கள் பல நூற்றாண்டுகளாக வலிமையாக விளங்கி வந்த நமது பொருளாதாரத்தையும், தொழில்களையும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கின. அதனால் தொழில்கள் சீரழிந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.

1750 ஆம் வருட காலத்தில் இந்தியா உலக உற்பத்தியில் கால் பங்கினை அளித்துக் கொண்டிருந்தது. அதுவே 1900 வருட காலத்தில் வெறும் இரண்டு விழுக்காட்டுக்குக் கீழ் சென்றது. ஒரு நூற்றைம்பது வருட காலத்தில் நமது உற்பத்தித் துறை முற்றிலும் சிதைக்கப்பட்டது. குறு, சிறு தொழில்கள் பலவும் நசுக்கப்பட்டன. மேலும் நம் நாட்டு ஏற்றுமதிகள் தடுக்கப்பட்டு, அந்நியப் பொருட்கள் இங்கு தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன.

எனவே பல நூற்றாண்டுகளாக உலகின் பெரும் ஏற்றுமதி நாடாக விளங்கி வந்த இந்தியா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து  இறக்குமதி நாடாக மாறிப் போனது. அதனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது தலைவர்கள் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் சுதேசித் தொழில்களுக்கான ஆதரவு ஆகிய இரண்டையும் முக்கியமான பணிகளாக எடுத்து வைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலந் தொடங்கி சுதேசிக்கான குரல் நாடு முழுவதும் வலுத்தது. காந்திஜி சுதேசிக்கான அவசியத்தை வலியுறுத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், நேரு சோசலிச கொள்கைகளைக் கடைப்பிடித்தார். அதனால் மக்கள் தொழில்களைத் தொடங்கப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதே கொள்கையானது தொடர்ந்து அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.  ஆனாலும் அதையெல்லாம் மீறி தொழில் முனைவோர் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் துவக்கி, முன்னேறும் முயற்சிகளில் இயங்கினர். அந்த கால கட்டங்களில் தான் கோவை, திருப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளூர் சமூகங்களின் சொந்த முயற்சியால்  சுதேசி தொழில் மையங்களுக்கான  அஸ்திவாரங்கள் போடப்பட்டன.  

அவை பெரும்பாலும் அதிகம் படிக்காத, நிதி வசதி குறைந்த உழைப்பை மட்டுமே நம்பிய சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. அரசு அமைப்புகள் தேவையான உதவிகளைச் செய்யாமல் இருந்த போதும் தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் காலடிகளை எடுத்து வைத்தனர். பின்னர் 1990-களில் அந்நியத் தொழில்களுக்கும், முதலீடுகளுக்கும் ஆதரவான கொள்கைகளை அப்போதைய அரசு கொண்டு வந்தது. அதனால் உள்நாட்டுத் தொழில்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

அந்தச் சமயத்தில் சுதேசிய சிந்தனையாளர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களின் அவசியம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் கட்டுப்பாடு இல்லாமல் அந்நிய நிறுவனங்கள் இங்கு வருவது மற்றும் அந்நிய முதலீடு அதிகரிப்பது ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தியது.  

எத்தனையோ சிரமங்கள் நிலவிய அந்தக் காலகட்டங்களிலும் கூட, நமது தொழில் முனைவோர்கள் அவற்றையெல்லாம் மீறி புதிய நிறுவனங்களைத் துவக்கியும். தொழில்களை நடத்தியும் வந்தனர். அதனால் தொழில்கள் விரும்பிய அளவு இல்லாவிட்டாலும் கூட, முடிந்த வரை வளர்ந்து கொண்டே சென்றன. அதனால் தொழில் மையங்கள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகின. அத்தகு மையங்கள் நன்கு செயல்பட்டு வந்த குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. 

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்புக்கு வந்தது முதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு துறையிலும் இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” என்பதை பிரதமர் தேசிய முழக்கமாக வைத்துள்ளார்.   

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அதிகரிப்பதற்கு அறிவிக்கப்பட்ட முத்ரா திட்டம் மூலம் இதுவரை சுமார் 39 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதி உதவி 53 கோடி கடன்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளில் 66 விழுக்காடு பேர் பெண்கள். இவ்வைகத் தொழில்களுக்குத் தொடர்ந்து சலுகைகளும் திட்டங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக சமூகங்கள் தேர்ச்சி பெற்ற குறிப்பிட்ட தொழில்களை முன்னேற்ற தனியான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ‘ இந்தியாவில் தயாரிப்போம்‘ திட்டம் மூலம் உள்நாட்டு தயாரிப்பு பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதனால் முன்னர் அலைபேசிகளை இறக்குமதி செய்து வந்த நமது நாடு, இப்போது 2,60,000 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்து உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நிபுணத்துவம் தேவைப்படும் பாதுகாப்புத் துறை தயாரிப்புகள் சென்ற வருடம் 1,78,000 கோடி ரூபாய் என அதிகரித்து,  ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் 38,400 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதனால் இந்தியா தற்போது எண்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

மேலும் மிகச்சிறு அளவில் கூரை கூட இல்லாமல் தொழில் செய்து வருபவர்களுக்கு நடைமுறை மூலதனம் உள்ளிட்ட உதவிகளை அளிக்கும் வகையில் 2020 ஆம் வருடம் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை சுமார் 76 லட்சம் பேருக்கு 18000 கோடி ரூபாய் அளவு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தேவையற்றை கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை அளிக்க, தொழில்களை எளிமையாகச் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2047 ஆம் வருடத்தில் நாடு சுய சார்பு நிலையை அடைந்து விட வேண்டும் என்னும் நோக்கில் மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏனெனில் பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு சுய சார்பு என்பது ரத்தத்துடன் ஒன்றியது. மேலும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது என்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இறைவன் கொடுத்த இயற்கை வளங்களும், அதிக அளவில் இளைஞர் பட்டாளமும் நம்மிடம் இருக்கும் போது அவற்றைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்துவது நமது கடமை.

காலனி ஆதிக்க காலத்தில் சிதைக்கப்பட்ட நமது பொருளாதாரம், சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்து வருட காலத்தில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியதே நமது சுதேசித் தன்மைகளால் தான். அதிக அளவில் வெளிநாட்டு மூலதனங்கள் இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நாடு இந்தியா. இந்தியக் குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், அதிகமான சமூக மூலதனம், மக்களின் இயற்கையான தொழில் முனையும் தன்மை ஆகியன நமது கலாசாரம் கொடுத்துள்ள சொத்துக்கள். அவற்றின் மூலமே நாடு இன்று பல சிரமங்களையும் மீறி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.

எனவே பெரிய வரலாறு மட்டுமன்றி, வலுவான அடித்தளங்களும் நம்மிடம் உள்ளன. ஆகையால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க நமது அடித்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது சுதேசித் தொழில்கள் மூலமே சாத்தியமாகும்.

நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள நமது மக்களை சொந்தத் தொழில்களில் மிகுதியாக ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். அந்தந்தப் பகுதிகளிலேயே வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். அதற்கு நாம் உள்ளூர் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.  

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கடந்த 2001 ஆம் வருடம் ஆறு நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு மாபெரும் சுதேசி தொழில் கண்காட்சியை நடத்தியது. அதனை அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் துவக்கி வைத்தார். ஆறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் இருபது கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் மூலம் தமிழகத்தில் ஒரு பெரிய நம்பிக்கை பிறந்தது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து தற்போது ஆக. 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் ரத்தினம் கல்லூரி வளாகத்தில் கோவை சுதேசி  கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

அண்மைக் காலமாக மேற்கத்திய பொருளாதாரங்கள் எல்லாம் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது தேசம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்குக் காரணமாக இருந்து வருவது நமது சுதேசி தொழில் முறைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளே ஆகும். ஆகையால் நமது தேசம் முன்னேறி சுயசார்பு நிலையை அடைய நாம் சுதேசித் தொழில்களை ஆதரித்து நமது வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

( கோவை சுதேசி கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை, ஆக்.7, 2026)

மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின்  நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அதிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.    

அண்மையில் கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் பெயரில் போராட்டங்கள் நடந்தன. அந்தக் கட்சியில் முக்கியமாக இருக்கும் மூன்று பேரில் இருவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றவர்கள். முக்கிய புள்ளியான அப்ஜித் தீப்கே ஜூலை மத்தியில்தான் அமெரிக்காவிலிருந்து வந்து நேராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

டெல்லிப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் இடதுசாரி, தீவிர இடதுசாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்பினரும் இருந்துள்ளனர்.

அவர்களுடன் இடது சாரி, ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமஜ்வாதி போன்ற  எதிர்க்கட்சிகள், மதவாத, பிரிவினைவாத அமைப்பினர் மற்றும் வெளி  நாட்டினர் எனப் பலரும் பங்கு பெற்றுள்ளனர். கலந்து கொண்டவர்களில் சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு பேருக்கு மேல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு செய்தவர்கள் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறை பட்டியலிட்டுள்ளது.  

அந்தப் போராட்டத்தை உண்மையென நம்பி அதில் கலந்து கொள்ளப் பிற மாநிலங்களிலிருந்து டெல்லி சென்ற சிலர் அங்கு நேரில் போய் பார்த்த பின்னர் ஏமாற்றமடைந்து ஊருக்கே திரும்பினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு நடப்பது மாணவர்களுக்கான போராட்டமல்ல; அரசியல் சூழ்ச்சி;  எனவே மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோளே விடுத்திருந்தார். 

டெல்லிப் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலை மாறி, பாராளுமன்றம் தொடங்கிய நாளான ஜூலை 20 முதல் வேகம் பிடித்து, ஒரு வார காலம் ஆயிரக் கணக்கான பேர் அதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உணவு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நீட் தேர்வு சம்பந்தப்பட்டவை தானா ? அப்படி அவர்கள் சொல்லியிருந்தாலும், அங்கு கலந்து கொண்ட பெரும்பான்மையினர் போட்ட கோஷங்களும், வைத்த கோரிக்கைகளும், நீட் தேர்வுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதவையாக இருந்தன. அவர்களின் கைகளில் வைத்திருந்த பதாதைகளில் ஜம்மு- காஷ்மீர் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்; இந்திய இராணுவம் ஒழிக; இந்துத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்; வங்காள தேசத்தில் நடந்தது போன்ற மாணவர் புரட்சி மூலம் இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என வெவ்வேறு விசயங்கள் இருந்தன.

2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரங்களைத் தூண்டியதற்காகச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் ஷர்ஜில் இமாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அங்கு ஒரு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேசினார். பகவான் ராமரை இகழ்ந்தும், பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் எனவும், காலம் சென்ற அவரது தாயைப் பற்றிக் கேவலமாகவும் பேசப்பட்டது. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரப்பட்டது. அநாகரிகமான ஆபாசச் செயல்கள் அனைவரின் கண்முன்னாலும் நடந்தேறின. சிலர் வாள்களை வைத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக பாதுகாப்பு மிக்க பாராளுமன்ற வளாகத்தின் எல்லைகளை மீறிக் கும்பலாக உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் தாக்கப்பட்டனர். கர்ப்பமாக இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியின் வயிற்றில் பலமான தாக்குதல் ஏற்பட்டது.. பெண் பத்திரிக்கையாளர்  அநாகரிகமாக நடத்தப்பட்டார். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. பாராளுமன்ற கூட்டத் தொடர்  ஆரம்பித்த நாள் முதல் அவற்றின் உறுப்பினர்கள் அவைக்கு முன்னர் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நீட் தேர்வுக் கசிவு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அழைத்தும், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் அவைகளை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லாமல், ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லடாக் பகுதியைச் சேர்ந்த சோனம் வாங்சுக் மாணவர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் 26 நாட்கள் கழித்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது போராட்டத்தில் வன்முறை பரவியது குறித்துக் கவலை தெரிவித்தார். அவரது மனைவி கீதாஞ்சலி ராகுல் காந்தி நேர்மையற்றவராகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 

2026 ஆம் வருடத்துக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெற்று, சில நாட்களிலேயே  வினாத்தாள் கசிந்த விசயம் தெரிய வந்தது. உடனே மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது, அதில் சம்பந்தப்பட்ட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் மேலான வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்டு, ஜூலையில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது மாணவர்கள் படிப்பில் சேர்வதற்குத் தயாராகி வருகின்றனர்.

ஜூலை 27 அன்று போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, சமூக விரோதிகள் போராட்டக் களத்தில் பரவுவதைத் தடுக்க கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகினார். தேர்வு முறைகளைகளைச் சீரமைக்க மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலங்கனி தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு தேர்வுகளின் போது உண்டாகும் கசிவுகளைத் தடுக்கவும், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வுகளை நடத்தவும் ஆலோசனைகள் வழங்கும். அதனடிப்படையில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

மேலும் மோடி அரசு எதிர்க்கட்சிகளின் பல்வேறு குழப்பங்ளையும் மீறி பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அது சட்டமானதும் தவறு செய்பவர்களுக்கு அதிக பட்சமாக பத்து வருட சிறைத் தண்டனையும், பத்து கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் மூலம் வேகமாக வழக்குகள் முடிக்கப்படும். அதனால் தவறிழைப்பது தடுக்கப்படும்.

மே மாதம் நடந்த தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் மாதமே மறு தேர்வும் நடத்தப்பட்ட பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அவர்களுக்கு ஆதரவும், பின்புலமும் யார் என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தெரிய வருகின்றன.

டெல்லியில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து வேறு மாநிலங்களிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அங்கெல்லாம் கரப்பான் பூச்சி கட்சி இல்லை. ஆனால் அவற்றை இடதுசாரிகள் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வழி நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சி என்று ஒரு பேனரை மட்டும் தொங்க விட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி பிரதிநிகள் மற்றும் வழக்கமான மோடி எதிர்ப்பு திரைத்துறை செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே இந்தப் போராட்டத்தின் நோக்கம் தான் என்ன ? இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் வேகமாக முன்னேறிச் சென்று வருகிறது. வெவ்வேறு துறைகளிலும் புதிய உச்சங்களைத் தொட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. தீவிரவாத, பிரிவினைவாத, தேச விரோத மற்றும் மதவாத சக்திகளைக் கட்டுப்படுத்தி கடிவாளம் போடும் நடவடிக்கைகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. ஆகையால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. 

எனவே அதைச் சீர்குலைக்க வேண்டும். ஆகையால் நியாயமான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு செயல்படாமல் தடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தொடரில் அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள மசோதாக்களைச் சட்டமாக்கி விடக் கூடாது. அரசு மீதுள்ள நம்பகத்தன்மையைக் குறைத்து, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்ய வேண்டும் என்பவை தான் போராட்டத்தின் நோக்கம். அதனால் தான் அமெரிக்காவும், அவர்களை எதிர்க்கும் இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அதனால்தான் போராட்டத்தின் பல இடங்களிலும் நீட் எதிர்ப்பை விட மோடி எதிர்ப்பே பிரதானமாக இருந்துள்ளது. இது ஏதோ மோடி என்கின்ற தனி நபர் மேல் இருக்கும் எதிர்ப்பல்ல. நமது தேசத்தின் ஜனநாயகத்தின் மேல் நிலவும் எதிர்ப்பு. அதனால் தான் போராட்டவாதிகளிடம் நெருக்கமாகவுள்ள யோகேந்திர யாதவ் இனிமேல் இந்தியாவின் எதிர்காலம் தெருக்களில் தான் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் ஒரு பிரச்னையை எடுத்துப் பெரிதாக்கி பின்னர் தொடரை நடத்த விடாமல் முடக்குவது என்பது நடைபெற்று வருகிறது. இந்த விசயத்தில் காங்கிரஸ், சமஜ்வாதி, திமுக  போன்ற குடும்பக் கட்சிகள், மற்றும் இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவை ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை..

எனவே புதியதாகச் சில இளைஞர்கள் உருவாக்கிய அமைப்பே இல்லாத கரப்பான் பூச்சி கட்சியின் பின்னால் தங்களின் குறுகிய காலப் பலன்களுக்காக ஒளிந்து கொண்டு எதிர்ப்பைக் காட்டுகின்றனர். அந்த இளைஞர்களை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். அது நாட்டுக்குப் பேராபத்து. பிரச்னைகளைப் பேசச் சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் உள்ளன. அவற்றின் மூலம் தீர்வு காண்பதே சரியான வழிமுறை.  அப்போதுதான் உலகின் பெரிய ஜனநாயகமாக விளங்கும் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.

 

சியாம பிரசாத் முகர்ஜி என்னும் மகத்தான தேசபக்தர்

 இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக நமது வரலாறும் நிகழ்வுகளும் மேற்கத்திய மற்றும் இடதுசாரி நோக்கிலேயே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. அதனால்   நமது தேசத்தின் அசாத்தியமான ஆளுமைகளும் அவர்களின் பெரும் சாதனைகளும் கூட நம்மிடமிருந்து மறைக்கப்பட்டு வந்துள்ளன. அப்படி மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஆளுமைதான் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள்.

1901 ஆம் வருடம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி வங்காளப் பகுதியில் பிறந்த அவர், இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பி வந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். தனது இருபத்தெட்டாவது வயதில் கல்கத்தா பட்டதாரிகள் தொகுதியில் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முப்பத்து மூன்றாவது வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இரண்டு முறை அந்தப் பொறுப்பு வகித்த அவர், உயர் கல்வித் துறையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை அழைத்து பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக தாய்மொழியான வங்க மொழியில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த வைத்தார். தேசத்தின் பண்டைய வரலாறு, பண்பாடு குறித்த பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உண்மையான வரலாற்றை மாணவர்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில் அகழ்வாராய்ச்சித் துறையைக் கொண்டு வந்தார்.  

1930 களில் ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டத்தின் விளைவாக வங்காளத்தில் முஸ்லீம் லீக் அரசு பதவிக்கு வந்தது. அப்போது தகுதி வாய்ந்தவர்களாக இருந்தும் அரசுத் துறைகளில் இந்துக்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. பல  வகைகளிலும் பெரும்பான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்போது அங்கிருந்த  முக்கியஸ்தர்கள்  டாக்டர் முகர்ஜியை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

அவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார். அதை காந்திஜி வரவேற்று, மதன்மோகன் மாளவியாவுக்கு அப்புறம் இந்துக்களுக்குத் தலைமை தாங்கி நடத்த முகர்ஜி வந்திருப்பது நல்லது எனக் கூறினார். பின்னர் அவர் அகில இந்திய இந்து மகாசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு முழுவதும் பிரயாணம் செய்தார். பின்னர் வங்காளத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டபோது நிதி அமைச்சராகப் பணியாற்றி சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

1940 களில் பல வங்காளப் பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த போது பிற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அங்கு செல்லத் தயங்கினர். முகர்ஜி அங்கெல்லாம் முதல் ஆளாகச் சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். 1946 ஆகஸ்டு மாதம் முஸ்லீம் லீக் கட்சி நேரடி நடவடிக்கை நாள் என அனுசரித்தது. அப்போது  கல்கத்தா பகுதிகளில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அங்கு முகர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

பின்னர் 1946ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1947ல் சுதந்திரத்துக்குப் பின்னர் அமைந்த மந்திரி சபையில் இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் காலத்தில் தான் 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. சித்தரஞ்சன் தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழில்களுக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் இந்திய நிதி அமைப்பு துவங்கப்பட்டது. 

அந்தக் காலகட்டங்களில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நேருவுக்கு அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். நேரு பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுடன் ஒரு ஒப்பந்தம் மட்டுமே போட்டார். அது  போதுமானதல்ல என எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.

காங்கிரஸ் கட்சியால் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என அவர் உறுதியாக நம்பினார். நேருவின் போலி மதச்சார்பின்மை, வெளியுறவுக் கொள்கைகள் மூலம் நாட்டைச் சரியாக வ்ழி நடத்த முடியாது எனக் கருதினார்.  அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, நமது நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் அமைந்த ஒரு தேசிய கட்சி தேவை எனக் கருதி, 1951 ஆம் வருடம் பாரதிய ஜன சங்க கட்சியைத் துவக்கினார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பாரதிய ஜன சங்க கட்சி சார்பில் டாக்டர் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேர் வெற்றி பெற்றனர். அப்போது பாராளுமன்றத்தில் பிற சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நேருவின் தவறான கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்தார்.  

முன்னதாக பிரதமர் நேரு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மூலம் சிறப்பு அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்த போது டாக்டர் முகர்ஜி மற்றும் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் தீவிரமாஎதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளி அவற்றைச் சட்டமாக்கினார். ஒரே நாட்டில் எப்படி இரண்டு கொடிகள், இரண்டு வித சட்டங்கள், இரண்டு பிரதமர்கள் இருக்க முடியும் என முகர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேலும் அந்த மாநிலத்துக்குள் நுழைவதற்கு மற்ற மாநில மக்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என நடைமுறை வந்தது. எனவே அவற்றுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து 1953 ஆம் ஆண்டு மே மாதம் அனுமதிச் சீட்டுப் பெறாமல் அவர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்டார். முறையான சிகிச்சைகளின்றி, சில வாரங்களில் உடல்நிலை மோசமாகி ஜூன் 23 ஆம் தேதி காலமானார்.

முகர்ஜியின் தாயார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அவரது மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் நேரு அதற்குச் செவி சாய்க்கவில்லை.

ஐம்பத்து இரண்டு வருடங்கள் கூட நிரம்பும் முன்னரே உயிரிழந்த டாக்டர் முகர்ஜியின் வாழ்க்கை பன்முகச் சாதனைகள் நிறைந்தது. சட்டம், கல்வி, பொது வாழ்க்கை, அரசியல் என வெவ்வேறு துறைகளிலும் அவர் தனது அடையாளங்களைப் பதித்துள்ளார். ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு அளப்பரிய தேசபக்தராக அவர் ஆற்றிய மூன்று முக்கிய பணிகள் என்றும் நிலைத்து நிற்பவை.

முதலாவது ஜம்மு – காஷ்மீர் மாநிலம் நமது தேசத்துடன் முழுமையாக ஒருங்கிணைய அவர் தொடங்கி வைத்த  நடவடிக்கைகள். நேரு அரசு அந்த ஒரு மாநிலத்தை மட்டும் மிக வித்தியாசமானதாகப் பாவித்து அதற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கியது. அது பிரிவினைக்கு வழி வகுக்கும் என உணர்ந்து  ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்.

அதன் விளைவாக தன்னுடைய உயிரையே காணிக்கையாக்கினார். அப்போது அவர் தொடங்கி வைத்த முயற்சி, 2019 ஆவது வருடம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரிவுகளை நீக்கியதன் மூலம் முழுமையடைந்தது. அதன் மூலம் டாக்டர் முகர்ஜி மட்டுமன்றி, சர்தார் பட்டேல், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலரின் கனவுகளும் நனவாகின. இப்போது  ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து, வளர்ச்சி அதிகரித்து மக்கள் அமைதியாக வாழத் துவங்கி விட்டனர்.

இரண்டாவதாக அவரது முக்கிய பங்களிப்பு இன்றைய மேற்கு வங்க மாநிலம் பற்றியது. 1940 களில் பிரிவினையின் போது, முஸ்லீம் லீக் கட்சி மேற்கு வங்காளப் பகுதியையும் பாகிஸ்தானுடன் ( தற்போதைய வங்காள தேசம்) இணைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் பகுதி இந்தியாவுடன் தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முகர்ஜி மக்களைத் திரட்டிப் போராடினார். ஏனெனில் தற்போதைய வங்காள தேச நாடு உள்ளிட்ட அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே இந்துக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு சிரமங்களுடன் வாழ்ந்து வந்தனர். எனவே மேற்கு வங்கப் பகுதியும் இணைக்கப்பட்டால் இந்துக்கள் அங்கு அமைதியாக வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அவர் எடுத்த நடவடிக்கைகளால் தான் கல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்காளம் இன்று நம்முடன் உள்ளது. இல்லையெனில் பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல மாமனிதர்கள் தோன்றி வளர்ந்த அந்தப் பகுதி நம்மை விட்டுப் போயிருக்கும்.

முகர்ஜியின் மூன்றாவது முக்கிய பங்களிப்பு அவர் பாரதிய ஜனசங்கத்தை நிறுவியது. நேருவின் போக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும் நாட்டுக்குப் பொருந்தாது என்பதை அப்போதே  உணர்ந்தார். அது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனத் தீர்மானித்தார். எனவே அதற்கு மாற்றாக நமது தேசியக் கூறுகளின் அடிப்படையிலமைந்த கட்சி அவசியம் எனத் தீர்மானித்து  தேசபக்தர்களுடன் ஆலோசித்து பாரதிய ஜன சங்கத்தைத் துவக்கினார்.

1952 ஆம் வருடம் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பாரதிய ஜனசங்கம் சார்பில் முகர்ஜி உட்பட மூன்று பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர். அப்போது முதல் கட்சியின் அகில பாரத பொதுச்செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாய அவர்களின் அமைப்பு பணி மற்றும் திறமை வாய்ந்த பொறுப்பாளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் 1967 ஆம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மாநிலங்களில் ஜன சங்க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 

இந்திரா காந்தியின் அடக்குமுறைகளை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கம் முக்கிய பங்கு வகித்தது. 1977ல் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் சிறப்பாக ஆட்சி நடத்தியது. பின்னர் 1980 ஆம் வருடம் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் பெற்றது. அதன்பின் கட்சி தொடர்ந்து வளர்ச்சி பெற்று பல மாநிலங்களில் தனியாக ஆட்சியைப் பிடித்தது. 1996 ஆம் வருடம் தொடங்கி 2004 வரை மத்தியில் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் மூன்று முறை பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது.

2014 ஆம் வருடம் முதன் முதலாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகி கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. நாடு பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி, உலக அளவில் தனது முத்திரைகளைப் பதித்து வருகிறது.

முகர்ஜி அவர்கள் விரும்பியபடி தேச நலன், கலாசாரம், பாதுகாப்பு, அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டு வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது. நாட்டிலுள்ள இருபத்தி இரண்டு மாநிலங்களில் தனியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி செய்து வருகின்றது. அதனால் நாடு முழுவதும் கலாசார மறுமலர்ச்சியும், அனைவரின் வாழ்விலும் முன்னேற்றமும், தேச நோக்கும் ஏற்பட்டு வருகின்றன. அதனால் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது.  

அதற்கெல்லாம் டாக்டர் முகர்ஜி போட்ட அடித்தளங்கள்  காரணமாக அமைந்துள்ளன. அவர் தன்னுடைய வாழ்க்கையையே தேசத்துக்காக ஆகுதியாக்கிக் கொண்ட ஒரு மாமனிதர். வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு மகத்தான தேச பக்தர்.

( தினமலர், ஜூலை 2026 )