Showing posts with label ஒரே நாடு. Show all posts
Showing posts with label ஒரே நாடு. Show all posts

மாமனிதர் அம்பேத்கர் வழியில் மோடி

 

மரியாதை நிமித்தமாகபாபாசாஹிப்என்னும் அடைமொழியுடன்  அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் ஒரு மாமனிதர். அந்தக் காலத்திலேயே அமெரிக்கவின் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் இரண்டு பெரிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர். வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.  .

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி மகத்தானது.  எளிமையான  பட்டியலினக் குடும்பத்தில் பிறந்து, சொல்ல முடியாத அவமானங்களை எதிர்கொண்டு, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தவர்.  நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர் என்பதால் அவரது உண்மையான வரலாறு மற்றும் சிந்தனைகள் பொது வெளியில் மறைக்கப்பட்டன. அவர் இருபதாம் நூற்றாண்டின் காலத்தை மீறிய சிந்தனையாளர். ஆனால் அரசியல் தலைவர்கள் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள்ளே அடைத்து வைத்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம்.

ஆரம்ப முதலே  காங்கிரஸ் கட்சி அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரது அறிவை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 1952 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவரைக் கேவலப்படுத்தும் வகையில் அவரின் கீழ் உதவியாளராக வேலை பார்த்த கஜ்ரோல்கர் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. நேரு நேரடியாக களத்தில் இறங்கி பல கூட்டங்களில் பேசினார்.

அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாங்கே வாக்கினை அம்பேத்கருக்கு அளிப்பதற்குப் பதிலாக வீண் செய்யுங்கள் என்று வெளிப்படையாகப் பிரசாரம் செய்தார். அதனால் அம்பேத்கர் தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர் 1954ல் நடந்த பந்தரா தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட போதும், மீண்டும் காங்கிரஸ் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்.

கம்யூனிஸ்டுகளுடன் நான் இணைந்து செயல்பட மாட்டேன்; ஏனெனில் நான் கம்யூனிசத்தை நம்பவில்லை எனத் தெளிவாக அறிவித்தார் அம்பேத்கர். மேலும் கம்யூனிசமும் ஜனநாயகமும் இணைந்து பணியாற்றும் என்பது முழுக்க பொருத்தமில்லாதது எனக் கூறினார். எனவே கம்யூனிஸ்டுகள் அவரை பூர்ஷ்வா, பிரிவினை அரசியல் செய்பவர். தலித் மக்களைத் தவறாக வழி நடத்துவபர், சந்தர்ப்பவாதி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எனப் பலவகைகளில் மோசமாக வர்ணித்தார்கள்.

தேச நலனும் ஒருமைப்பாடுமே மூச்சாக கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் அம்பேத்கர். பிரதமர் நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும்  தனி உரிமைகள் கொண்ட சட்டப்பிரிவு 370ஐ க் கொண்டு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது தேசத்துக்குத் துரோகமான செயல்; எனவே தான் சட்ட அமைச்சராக இருக்கும் வரை அதைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் எனச் சூளுரைத்தார். பின்னர் அதைத் தந்திரமான  வகையில் நேரு சட்டமாக்கினார்.

அதன் விளைவாக அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதை தேசம் கண்டது. நாட்டு மக்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமென அவர் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் அதை அனுமதிக்கவில்லை.

இந்தியக் கலாசார மற்றும் ஆன்மிகத்தின் மேல் ஆழமான பற்றுக் கொண்டவர் அம்பேத்கர். இந்தியாவின் பூகோள ஒற்றுமையை விடவும், கலாசார ஒற்றுமை நாடு முழுவதையும் ஆழமாகப் பிணைக்கிறது எனக் கூறினார். இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை இங்கு திரும்பி வருமாறு அறைகூவல் விடுத்தார். அவர்களைக் கொண்டு வர முயற்சியும் எடுத்தார். இன்று இந்துக்கள் அங்கு படும் கொடுமைகளைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு தீர்க்கதரிசி என்பது புரியும்.  

1927 ல் பட்டியலின மக்கள் கோவில் நுழைவு பற்றி எழுதும் போது, மற்ற இந்துக்களுக்கு இந்துத்வா எப்படி சொந்தமோ, அதே போல பட்டியலின மக்களுக்கும் சொந்தம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்துத்வாவின் வளர்ச்சியும் பெருமையும் வசிஷ்டர் போன்ற பிராமணர்கள், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்கள், ஹர்ஷா போன்ற வைசியர்கள் மற்றும் துக்கா ராம் போன்ற சூத்திரகள் என அனைவரது ஒட்டு மொத்த பங்களிப்பாலும் தான் நிகழ்ந்துள்ளது என எடுத்துக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு நேர ஊழியரான அமரர் தத்தோபந்த் தெங்கடி அண்ணல் அம்பேத்கருக்கு மிகவும் நெருக்கமானவர். அம்பேத்கர் ஆரம்பித்து தலைவராக இருந்து நடத்திய பட்டியலின மக்கள் கூட்டமைப்புக்கு, அவரையே பொதுச் செயலாளராக்கினார். 1954 பந்தரா தேர்தலில் தனது தேர்தல் முகவராக தெங்கடியை நியமித்தார். 1930 களில் ஆர். எஸ்.எஸ். தினசரிக் கூடுதலை புனேவில் நேரடியாகச் சென்று பார்த்து பின்னர் அதன் தலைவர் டாக்டர் ஹெட்கேவர் அவர்களைச் சந்தித்தார். 

ஆரம்ப முதலே நேருவுடன் கொண்டிருந்த வேறுபாடுகள் அதிகரிக்கவே 1951ல் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது விலகல் கடிதத்தில் நேரு எவ்வாறு தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான அரசு கமிசன் அமைக்காமலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றியும் வருகிறார் என்னும் விசயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் அம்பேத்கர் வாழ்ந்த போது மட்டும் அவரை உதாசீனப்படுத்தவில்லை. அவர் மறைந்த பின்னரும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத் தவறியது.நேருவுக்கு அவர் பிரதமராக இருந்த போது 1955 ஆம் வருடமே பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தியும் தான் பிரதமராக இருந்த போது 1971ல் பாரத் ரத்னாவைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாரத் ரத்னா கொடுக்கப்படவேயில்லை. அவரது மறைவுக்குப் பின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி 1990ல் பாரதிய ஜனதா ஆதரவளித்த வி.பி.சிங் ஆட்சியில் தான்  அந்த விருது கொடுக்கப்பட்டது. அதே போல பாராளுமன்றத்தின் மத்திய அவையிலும் அவரது படம் 1990ல் தான் வைக்கப்பட்டது.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரை நமது தேசத்தின் மாபெரும் தலைவராகப் போற்றுகிறது. எனவே மோடி அரசு அமைந்த பின்னர் அவரது வாழ்க்கையோடு நெருங்கிய சம்பந்தமுடைய ஐந்து இடங்களில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம்பஞ்ச தீர்த்தங்கள்அமைக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பிரதேசத்தில் அவரது பிறந்த இடம், லண்டனில் தங்கிப் படித்த இடம், நாக்பூரில் தீட்சை பெற்ற இடம், டெல்லியில் வாழ்ந்து மறைந்த இடம்  மற்றும் மும்பையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவையாகும். இப்போது அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருவதால் அவை புண்ணிய தலங்களாக மாறியிருக்கின்றன.

ஆரம்ப காலந்தொட்டே மோடி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மேல் அளப்பரிய மரியாதை இருந்து வந்துள்ளது. 1987ல் அவர் குஜராத் மாநில பொதுச் செயலாளராக இருந்த போதே பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை கட்சி சார்பாக நிறுவினார். பின்னர் 2007ல் முதலமைச்சராக இருந்த போது பல இடங்களில் அம்பேத்கர் பவன்களை கட்டினார்.

அவரது முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்ள ஒரு யானை மேல் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும், அம்பேத்கர் படத்தையும் வைத்துக் கொண்டு குஜராத் வீதிகளில் மற்ற தலைவர்களுடன் நடந்து சென்றார். பின்னர் பிரதமரான பின் 2015 ஆண்டு அண்ணலைக் கௌரவிக்கும் விதமாக நவ 26 ஆம் நாளை அரசியலமைப்புச் சட்ட நாளாக அறிவித்தார். அது இப்போது வருடா வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்களில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வெவ்வேறு பொறுப்புகளில் அதிகமான பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மோடி அரசு அமர்த்தி வருகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பட்டியலின, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 131 தொகுதிகளில் 97 பேர் பாரதிய ;ஜனதாவைச் சேர்ந்தவர்கள். 113 உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். தேசத்தின் முதல் குடிமகள் மலைவாழ் புதல்வி. மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கமிசனுக்கு 2019ல் மோடி அரசு சட்ட பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.

கடைநிலை மக்கள் முன்னேற்றத்துக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுமார் 12 கோடி கழிவறைகள், சுமார் பத்து கோடி இலவச எரிவாயு இணைப்புகள், 48 கோடிக்கு மேற்பட்ட புதிய வங்கி கணக்குகள், முத்ரா கடனுதவித் திட்டம் எனப் பல திட்டங்களும் பெரிய பலன்களைத் தந்து வருகின்றன.

ஜனதன திட்டத்தின் மூலம் இன்று ஏழைக் குடும்பங்கள் தங்கள் கணக்குகளில் 1,99,000 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொண்டுள்ளனர்.   ஜன திட்ட  பயனாளிகளில் அதிகபட்சமாக 27 கோடிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். முத்ரா திட்டத்தைப் பொறுத்தவரையில் 2021-22 ல் முடிந்த ஏழு ஆண்டுகளில்  18.91 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமார் 35 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடன் பெற்ற அமைப்புகளில் 68 விழுக்காடு பெண்களால் நடத்தப்படுபவை. 51 விழுக்காடு பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களால் நடத்தப்படுபவை.

பட்டியலின சமூக குழந்தைகள் பள்ளிக் கல்வி மட்டுமன்றி, நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள  உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலின இளைஞர்கள் அரசுப் பணிகளில் எளிதாகப் போட்டியிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆதர்ஷ் கிராம திட்டம் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளின் ஒட்டு மொத்த கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. பெண்கள்,   பட்டியலின மற்றும் மலை வாழ் மக்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில்ஸ்டேண்ட் அப் இந்தியாசிறப்புத் திட்டம் கடந்த ஏழு வருடமாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் இது வரை 40,700 கோடி ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நமது நாடு முன்னேறுவதற்கு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் முன்னேறுவது அவசியம் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதற்காக மோடி அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதமரின் சுய சார்பு திட்டம் என்பது இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும்.

எனவே மோடி அரசு அம்பேத்கரின் கனவான சமூக ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில் முழு மூச்சாகப் பணியாற்றி வருகிறது. அவர்களுக்குத் தரமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பு அளிப்பது, அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது, மற்றும் அதிகாரத்தில் அமர்த்துவது எனப் பல தளங்களிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

எனவே அரசியலுக்காக அல்லாமல் உண்மையான சமூக நீதிக் காவலான மோடி விளங்கி வருகிறார். அதனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மோடி அரசு அம்பேத்கர் என்னும் மகத்தான ஆளுமையைக் கொண்டாடியும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டும் வருகிறது.

( ஒரே நாடு, சென்னை, ஏப். 2023)

அமிர்த கால நிதி நிலை அறிக்கை 2023-24

 

2023-24 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை அமிர்த கால தொடக்கத்தின் முதலாவதானதாகும். 2014 ஆம் ஆண்டு தொடங்கி பிரதமர் மோடி அரசின் கடந்த எட்டு வருட கால ஆட்சியில் நாட்டின் வெவ்வேறு துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் பல அசாத்தியமானவை. மேலும் தேச மக்கள் அனைவரும் பலன் பெறும் வகையில் வலுவான அடித்தளங்கள் போடப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

உலக முழுவதையும் கொரோனா பெருந்தொற்று வெகுவாகப் பாதித்து பொருளாதாரங்களைச் சீரழித்தது. அதன் பாதிப்புகளிலிருந்து உலகின் பணக்கார நாடுகளே கூட மீண்டு வர முடியாமல் தடுமாறிக் கொண்டுள்ளன. தொடர்ந்து ரஷ்யா- உக்ரெய்ன் போரின் காரணமாக சர்வதேச அளவில் பல பிரச்னைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மீறி இந்த நிதியாண்டில்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடு அளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் உலகின் பெரிய நாடுகளில் அதிக வளர்ச்சியைக் கொண்ட நாடாக நமது தேசம் இருந்து வருகிறது. மேலும் நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் 2014 ஆம் வருடத்தோடு ஒப்பிடும்போது, இரண்டு மடங்கு அளவுக்கு மேல் அதிகரித்து 1.97 லட்சம் ரூபாய் அளவாக  உயர்ந்துள்ளது.  ஆகையால் சர்வதேச நிதி ஆணையம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இருளடைந்து கிடக்கும் தற்போதைய உலகச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் ஒளி வீசும் பகுதியாக இருந்து வருகிறது எனத் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த நிதி நிலை அறிக்கை மூன்று முக்கிய நோக்கங்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன: 1) நாட்டு மக்களுக்குகுறிப்பாக இளைஞர்களுக்கு- முன்னேற்றத்துக்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுப்பது 2) வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் 3) வலுவான மற்றும் நிலையான பொருளாதார சூழ்நிலையை ஏற்படுத்துவது

ஏழு முன்னுரிமைகள் இந்த அறிக்கையின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. அவை: 1) அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி 2) திட்டங்களின் பலன்கள் கடைசி மனிதனைச் சென்றடையுமாறு செயல்படுதல் 3) கட்டமைப்பு வசதிகளை பெருக்குதல் மற்றும் மூலதனங்களை ஊக்குவித்தல் 4) மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணர நடவடிக்கைகளை எடுத்தல் 5) சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வளர்ச்சியை அமைத்துக் கொள்தல் 6) இளைஞர் சக்தியை அதிகரித்தல் 7) நிதித் துறை சார்ந்த செயல்பாடுகள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமானவை. மோடி அரசு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக கட்டமைப்புத் துறைகளில் பெரும் கவனத்தைச் செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த நிதி நிலை அறிக்கை கட்டமைப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை 33 விழுக்காடு அதிகரித்து, வரலாறு காணாத வகையில் பத்து லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் நாடு பெரிய வளர்ச்சியைக் காணும்.

பிரயாணம் மற்றும் சரக்குகள் நடமாட்டத்துக்கு அடிப்படையாக விளங்கும் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2014 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் ஒன்பது மடங்கு அதிகமானதாகும். அதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக பலன் கிடைக்கவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் வெளிவரும் வேகமானவந்தே பாரத்ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஆதரமான விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் உலக அளவில் சிறு தானிய வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் நமது நாடு அதிகமாக சிறு தானியங்களை உற்பத்தி செய்து வருகிறது. எனவே உலக அளவில் இந்தியாவை சிறு தானிய மையமாக உருவாக்கஷ்ரீ அன்னாதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உற்பத்தி அதிகரித்து சாதாரண விவசாயிகள் அதிக அளவில் பலனடைவது மட்டுமன்றி, மாறி வரும் சூழ்நிலையில் மக்களின் உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

விவசாயத்துறைக்கு இருபது லட்சம் கோடி ரூபாய் அளவு கடனுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது கால்நடைகள், பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முக்கிய கவனம் கொடுப்பதாக இருக்கும். ஏனெனில் இந்த துறைகள் விவசாயம் சார்ந்து அவற்றுடன் இணைந்து இருப்பவை. விவசாயத் துறைக்கான டிஜிட்டல் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது.

தற்போது பல மாநிலங்களில் கிராமப்புறங்கள் வேலை வாய்ப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. அதே சமயம் அங்கு தொழில் முனையும் திறமை பெற்றவர்கள் நிறைய இருந்து வருகின்றனர். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புக்களைக் கொடுத்து கிராமப்புறங்களில் புதுமை வாய்ந்த புதிய நிறுவங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிராமப் பகுதிகளில் அதிக எண்ணிக்கைளிலான புதியஸ்டார்ட் அப்நிறுவனங்கள் பல உருவாகும்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் முக்கிய பங்கு வகிப்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்ந்த துறையாகும். அதன் வளர்ச்சிக்காக வரும் ஏப்ரல் 1, 2023- ல் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் தொகையுடன் சீரமைக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் மூலதனத்துக்கான செலவு ஒரு விழுக்காடு அளவு குறைக்கப்பட உள்ளது. வங்கிகளின் நிர்வாக முறைகளை முன்னேற்றுவதற்காக நடைமுறையிலுள்ள வங்கிகள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பல பகுதிகளிலும் பாரம்பரியமான கைவினைப் பொருட்கள், உடைகள் என வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த உற்பத்திகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவை மிகவும் சிறப்பானவை; நமது பன்முக கலாசாரத்தை பிரதிபலிப்பவை. ஆனால் அவற்றுக்குப் போதுமான ஊக்கம், அங்கீகாரம் ஆகியவை இல்லாத காரணத்தால் நலிந்தும், வெளியே தெரியாமல் இருந்தும் வருகின்றன. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் நமது பாரம்பரியம் காக்கப்படுவது மட்டுமன்றி, கைவினைஞர்கள் உள்ளிட்ட திறமைசாலிகள் வாழ்க்கை மேம்படும்.

மோடி அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த அறிக்கை  பிரதமர் திறமைசாலி முன்னேற்ற திட்டம் 4.0’ என்னும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நாட்டின் பல மாநிலங்களிலும் முப்பதுஇந்தியா திறன் மேம்பாட்டு சர்வதேச மையங்கள்துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு இடையிலும் நமது நிலைமை ஸ்திரமாக இருந்து வருவது பாராட்டுதலுக்குரிய விசயமாகும். திறமையான நிர்வாகம் காரணமாக நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறைந்து வருகிறது. வரி வருவாய் 20.9 லட்சம் கோடி ரூபாய் அளவு உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தொடர்ந்து பல மாதங்களாக 1.40 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருந்து வருகிறது. வெளி நாடு வாழ் இந்தியர்கள் சென்ற வருடம் அதிக அளவாக 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொகைகளை நமது நாட்டுக்கு அனுப்பியுள்ளர்.

இந்த அறிக்கையின் இன்னொரு சிறப்பம்சம் வருமான வரிக்கான வரிகள் பல மட்டங்களிலும் குறைக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் கைகளில் அதிக தொகைகள் இருக்குமாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகும். இனி மேல் ஏழு லட்சம் ரூபாய் வரை வருட வருமானம் பெறுபவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரு வருடத்துக்கு ரூபாய் ஐம்பதாயிரம் அளவு வருமானத்திலிருந்து குறைத்துக் கொள்ளக் கூடியஸ்டேண்டேர்டு டிடக்சன்நடைமுறைக்கு வருகிறது.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்  வயது முதிர்ந்தவர்கள் திட்டம்  மூலமாக முதலீடு செய்யும் திட்டத்தின் அளவு  பதினைந்து லட்சம் ரூபாயிலிருந்து முப்பது லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேமிப்புகளை மேற்கொண்டு வருவாய் பெறக் கூடிய வகையில் வயது  மூத்தவர்கள்  பலன் பெறுவார்கள். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரி 37 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்துக்காக மோடி அரசு தொடர்ந்து பல திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்  அதிக அளவிலான 7.5 விழுக்காடு வட்டியுடன் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெண்கள் இரண்டு வருட காலத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பலன் பெற முடியும்.

மோடி அரசின் கனவான சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை உலகை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், இந்த அறிக்கை பசுமை எரிசக்திஎன்னும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி எரிசக்தி உபயோகம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமைய, 35000 கோடி ரூபாய் அளவு மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களின் உபயோகத்தைக் குறைத்து, உலக அளவில் மாற்று எரிசக்திகளுக்கான முக்கிய நாடாக இந்தியா மாறும் வகையில்தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்ரூபாய் 19,700 கோடி ஒதுக்கீட்டுடன் அமைக்கப்பட உள்ளது. பேட்டரி சேமிப்பு முறைகளை உருவாக்கி செயல்படுத்த நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 5.25 லட்சம் கோடி அளவிலிருந்து, ரூபாய் 5.94 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டு வர டிஜிட்டல் முறைக்குக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் பஞ்சாயத்துகள் மற்றும் வார்டுகளின் அளவில் நூலகங்கள் அமைக்க மத்திய அரசு உதவி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெரிய நகரங்களுக்கு அடுத்தபடியாக உள்ள, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் முன்னேற்றத்துக்கு ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிநகர்புற கட்டமைப்பு முன்னேற்ற நிதிபத்தாயிரம் கோடி ரூபாய் அளவு ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட உள்ளது. அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் வசதிகள் கிடைக்கும்.

வரும் நிதியாண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 66 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 79,000 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வகையில் விமானம் தரையிரங்கும் பகுதிகள் மேலும் ஐம்பதாக அதிகரிக்கப்பட உள்ளது.

எனவே இந்த நிதி நிலை அறிக்கை நமது  நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, உலகின் முதல் நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படுள்ளது.

( ஒரே நாடு, பிப் 2023, சென்னை)