Showing posts with label தினமலர்- வெற்றிக்கதைகள். Show all posts
Showing posts with label தினமலர்- வெற்றிக்கதைகள். Show all posts

வெற்றிகதைகள் -24



மேற்கத்திய பொருளாதாரக் கோட்பாடுகளை தோற்கடிக்கும் இந்தியா!


மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அமைப்பு முறைகளுக்குப் பெரிய வரலாறு என்று எதுவம் இல்லை. 14 ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியாவில் நிலவி வந்த பிரபுத்துவ முறையானது கடைசிக் கட்டத்தை அடைந்தது. அந்த முறையில் நிலங்கள் ஒரு சிலரிடத்தில் மட்டும் குவிந்து கிடந்தது. பெரும்பாலானவர்கள் கூலிகளாக வேலை செய்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். அதனால் சமூகத்தில் நிம்மதி இல்லாமல் பற்றாக்குறையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.பின்னர் 16 முதல் 18 ம் நூற்றாண்டு வரையில் வணிகத்துவ முறை நிலவி வந்தது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி கையிருப்புகளை அதிகமாக வைத்துக் கொள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன. அதற்காக கடற்கொள்ளை உட்பட பலவிதமான வழிகளையும் அவைகள் கையாண்டன. நாடுகளைப் பிடித்து அவற்றின் செல்வங்களை சுரண்டுவதற்கு முனைந்தன. அதன்மூலம்தான் காலனி ஆதிக்க முறை தோன்றியது. அந்த முறையிலும் பெரும்பான்மை மக்கள் பலன் பெறவில்லை. எனவே மக்களிடத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் ஆடம்ஸ்மித் முன்வைத்த முதலாளித்துவ பொருளாதார முறை வணிகத்துவ முறைக்கு மாற்றாக கருதப்பட்டது. அந்த முறையில் அரசாங்கத் தலையீடுகள் ஏதுமில்லாத வகையில் தொழில்கள் நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதனால் உண்டான விளைவுகளுக்கு மாற்றாக 19 ம் நூற்றாண்டின் பின் பகுதியில் கம்யூனிச பொருளாதார முறையை கார்ல் மார்க்ஸ் முன் வைத்தார்.1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யா கம்யூனிச பொருளாதார முறைகளை கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த நாடே பல பிரிவுகளாக சிதறுண்டது. அதேசமயம் முதலாளித்துவ முறையில் சந்தை மையமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்விளைவாக மிகப்பெரிய கம்பெனிகள் உருவெடுத்தன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல், ஒட்டுமொத்த மனித இனவளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு போன்ற மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எனவே கடந்த 500 ஆண்டுகளில் மேற்கத்திய பொருளாதார அணுகுமுறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்துள்ளன. அவை எதிலுமே மக்களுக்கு முழுமையான வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. மேலும் அவர்களது பொருளாதார முறை தற்போது பெரிய நெருக்கடியில் உள்ளது. மேற்கத்திய நாட்வர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டுள்ளனர்.15 ம் நூற்றாண்டில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலுள்ள நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தமது காலனிகளாக்கின. அப்படித்தான் இந்தியாவும் இங்கிலாந்தின் காலனி நாடானது. பின்னர் நமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முறைகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தனர். அவர்களது வாழ்க்கை மற்றும் சிந்தனை முறைகளை இங்கு திணித்தனர். அவர்களது பொருளாதார கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் உயர்ந்தது எனக்கூறி அவற்றை நாம் ஏற்குமாறு கல்வி முறைகளை அமைத்தனர். அதன் விளைவாக ஐரோப்பிய சிந்தனை முறைகளும்,கோட்பாடுகளும் உயர்ந்து என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. நமது நாட்டுக்கு பொருத்தமான முறைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. காலப்போக்கில் கல்விக் கூடங்கள் முழுவதும் மேற்கத்திய கோட்பாடுகளையும், அணுகுமுறைகளைப் பற்றி மட்டுமே பேசும் அளவிற்கு சூழ்நிலை உருவானது. உலக அரங்கில் ஐரோப்பா தனது செல்வாக்கை இழந்த போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்பின் அமெரிக்க கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை உயர்ந்தவை எனவும், அவற்றை பிற நாடுகள் அனைத்தும் பின்பற்றுவது தான் முன்னேறுவதற்கான ஒரே வழி எனவும் கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்விளைவாக கடந்த இரு நூற்றாண்டுகளாகவே மேற்கத்திய கோட்பாடுகளும், சிந்தனை முறைகளுமே படித்தவர்களையும், கொள்கை வகுப்பவர்களையும் ஆட்கொண்டுள்ளன. அதனால் தான் இந்தியா சுதந்திரம் பெற்ற போது மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பியவாறு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சரியான பொருளாதார அணுகுமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் முதல் 30 ஆண்டுகள் சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளின் அணுகுமுறைகளை ஒட்டிய கொள்கைகளே சரியானதாக இருக்கும் என்று நம்பினோம். பின்னர் அவை எதிர்பார்த்த பலனை தராததால் 1990 களில் அமெரிக்கா சார்ந்த சந்தை பொருளாதார முறைகளை ஒட்டிக் கொள்கைகளை அமைத்துக் கொண்டோம். இப்போது அமெரிக்க முறைகள் அவர்கள் நாட்டிலேயே பெரிய தோல்விகளை சந்தித்து வருகின்றன. மேற்கத்திய கோட்பாடுகளையும் சிந்தனை முறைகளையும் ஒட்டி நம்மைப்பற்றி நாம் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட முடிவுகள், அமைத்துக் கொண்ட வழிமுறைகள் ஆகியன நமக்குபெரும் நம்பிக்கையின்மையையும் பின்னடைவையும் கொடுத்துவந்துள்ளன. அதனால் நமது வளர்ச்சியில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மேக்ஸ் வெபர் என்ற ஜெர்மனி நிபுணரால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறவே முடியாது என்று கூறியது. இங்குள்ள மக்களின் நம்பிக்கைகள் கருத்தோட்டங்கள் மற்றும் சமூக அமைப்பு முறை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக இல்லை என்று அவர் கூறினார். மேற்கத்திய இன மக்கள் வாழும் நாடுகளில் அவர்களின் மத நம்பிக்கைகள் மூலம் தான் பொருளாதார வளர்ச்சி வேகமாக ஏற்பட முடியும் என்று கூறினார். அவருடைய கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட பொருத்தமாக இல்லை என்பது பின்னர் அங்குள்ள பிற நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டு காலம் அவரது கருத்துக்கள் இந்தியாவில் ஒரு வித தவறான தாக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் படித்தவர்களிடையே அவநம்பிக்கையை உண்டாக்கிவிட்டது. இப்படி உலகம் முழுவதும் சம்மந்தப்பட்ட பொதுவான விஷயங்களில் இருந்து குறிப்பிட்டத் துறைகளுக்குப் பொருந்தக் கூடிய விஷயங்கள் வரை மேற்கத்திய கோட்பாடுகள் மற்றும் சிந்தனை முறைகளே உலகின் பல நாடுகளிலும் பரவி பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவை நமது நாடுகளுக்கு பொருத்தமானதா என்று கூட பார்க்காமல் பிற நாடுகள் அவற்றை காப்பியடித்து செயல்படுத்தி வருகின்றன. பல சமயங்களில் அவர்களது கோட்பாடுகள் தோன்றிய இடத்திலேயே தோல்வியுறும் போது அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான மூலக்காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதிலோ அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு மாற்று வழிகளை அங்கீகரிப்பதிலோ எந்த விதமான முயற்சிகளை மேற்கொள்ளப்படுவதில்லை.1990 களில் பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு நிதித்துறை நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. 1997 ம் ஆண்டு இந்த பரிசு நிதித்துறை பேராசிரியர்களான ராபர்ட் மெர்ட்டன், மைரன் ஸ்கோல்ஸ் என்ற இருவருக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் பங்கு சந்தை சம்மந்தமான பெரயி பொருளதார நிபுணர்களாக கருதப்பட்டு வந்தனர். உலக புகழ்பெற்ற ஹார்டுவார்டு மற்றும் ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இவர்கள் பணிபுரிந்து வந்தனர். பங்குச்சந்தைகளில் வாங்கி விற்கப்படும் "ஆப்ஷன்'களின் விலைகளை நிர்ணயிக்க "பிளேக்ஸ்கோல்ஸ்' என்றும் கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர். வெளிநாட்டு நிதிச்சந்தைகளில் பல கோடிக்கணக்கான டாலர்களில் வியாபாரம் நடப்பதற்கு அந்த கோட்பாடுகள் வெற்றிகரமான முறை என்று கருதப்பட்டது. இதற்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நோபல் பரிசு பெற்றதும், தங்கள் தியரியை பயன்படுத்தி "லாங்டேம் கேபிடல் மேனேஜ்மன்ட்' என்ற நிதி முதலீடு தொடர்பான நிறுவனத்தை மேலும் சிலருடன் சேர்ந்து துவக்கினர். வெற்றிகரமான தியரியை அளித்தவர்களின் நிறுவனம் என்பதால் பலரும் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். ஆனால் ஒரே ஆண்டில் அந்நிறுவனம் பெருத்த தோல்வியை தழுவியது. அந்நிறுவனத்தின் தோல்வியை தொடர்ந்து "பிளேக்ஸ்கோல்ஸ்' தியரி மக்களின் நம்பிக்கையை இழந்தது. ஆனாலும் உலகம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களில் இந்த தியரி இன்றும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. நிதிச்சந்தை தொடர்பான பாடங்களை படிக்கின்ற ஒவ்வொரு இந்திய மாணவனும் வெற்றிகரமான தியரி என்று இந்த தியரியை படித்துதான் பட்டம் பெறுகிறார். நம் நாட்டில் ஏழை முதல் பணக்காரர் வரை சேமிப்பது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. சேமிப்பு என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை கடமை என்று காலகாலமாக செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை அந்நாட்டு நிபுணர்களும், அரசும் மக்கள் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்கினால் தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று கூறி அந்நாட்டு மக்களை கடன் வாங்கியாவது செலவு செய்யுங்கள் என்று வற்புறுத்தினர். அதற்காக சுலபமாக கடன் கிடைக்கும் வகையில் திட்டங்களை தீட்டினர். எதிர்காலம் குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சேமிக்கிறார்கள் என்று நம்மை கேலி செய்தனர். அமெரிக்காவின் இந்த கருத்தை நம் நாட்டில் உள்ள சில நிபுணர்களும் ஏற்றுக் கொண்டு சேமிப்பது தவறு என்று கூறத்தொடங்கினர். ஆனால் கடந்த ஆண்டு தொடங்கி அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் அமெரிக்கர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. எனவே சிறிது காலம் முன்புவரை நமது பழக்கவழக்கங்களை கிண்டல் செய்த அவர்கள் இன்று நம்மிடமிருந்து அரிச்சுவடி கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்றால் மிகையில்லை.மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் சார்ந்த சிந்தனை முறைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை. அவை பல சமயங்களில் அவர்களுக்கே கூட பொருத்தமாக அமைவதில்லை. அப்படியிருக்கும் போது இந்தியா போன்ற தனித்தன்மைகள் நிறைந்த நாட்டுக்கு அவை அப்படியே பொருந்தாது. நமது நாட்டின் முன்னேற்றம் நமது அடித்தளங்களை ஒட்டியே அமைய முடியும். அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய கோட்பாடுகளை மீறியதாக அமைந்துள்ளது. அதற்கு நமது கலாச்சார அமைப்பு முறை, குடும்பம், நமது நாட்டின் பெண்கள், சமூக மூலதனம் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டே நமது பொருளாதாரம் வலுவானதாக உருவாகியுள்ளது.



வெற்றிக்கதைகள் 23












பணம் கொழிக்கும் பட்டம் தொழில்
ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பலமான காற்று வீசத் தொடங்கிவிடும்.
சிறுவர்களும் வானுயர பட்டம் பறக்கவிட கிளம்பிவிடுவார்கள். பல
வண்ண காகிதங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை போட்டி
பாட்டுக்கொண்டு அதிக உயரத்தில் பறக்க விடுவது என்பது ஒரு கலை. அதைப்பார்த்து ரசிக்க ஒரு கூட்டமே இருக்கும். சிறுவர்களால் பொழுதுபோக்கிக்காக பட்டம் பறக்கவிடப்படுவதாக நமக்கு தான்றினாலும் பல கோடி ரூபாய்களை திரட்டும் ஒரு தொழிலாகவும் பட்டம் தயாரிப்பு தொழில் இருக்கிறது என்பது வியப்பான செய்தி.தமிழகத்தில் மட்டுமல்லாமல் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டம் பறக்கவிடும் பழக்கம் மிகவும் பிரபலமாக உள்ளது.



வடமாநிலங்களில் உத்ராயணம் காலத்தில் மகர சங்கராந்தியின்போது பட்டம் விடுவது ஒரு பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. உத்ராயணம் என்பது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல் லும் காலத்தை குறிக்கும். இதை மகரசங்கராந்தி தினத்திற்கு 3 தின ங்களுக்கு முன்பிருந்து பட்டம் பறக்க விடும் விழாவாக வடமா நிலங்களில் கொண்டாடுகிறார்கள். அந்த நாட்களில் ஊர் முழுவதும் பல வண்ணங்களில் பட்டங்கள் பறந்துகொண்டிருக்கும்.குஜராத் மாநிலத்தில் உத்ராயண காலத்தைத்தவிர கிருஷ்ணர் பிறந்த தினமான ஜன்மாஸ்டமி மற்றும் தசரா விழாக்காலங்களிலும் மக்கள் பட்டங்களை பறக்க விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக அகமதாபாத், சூரத், பரோடா உள்ளிட்ட பகுதிகளில் உத்ராயண காலத்திலும், ராஜ்÷ காட், ஜாம்நகர், பவநகர் போன்ற பகுதிகளில் தசரா காலத்திலும் பட்டம் விட்டு விழாவினை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. நம் நாட்டைத்தவிர சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன. இதனால் பட்டம் தயாரிப்பது ஒரு மிகப்பெரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியும், பல லட்சம் பேருக்கு வேலையும் கிடைத்துள்ளது. பட்டம் தயாரிப்பில் முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இம்மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பட்டம் தயாரிப்பதையே குடிசை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அகமதாபாத் மிகப் பெரிய உற்பத்தி மற்றும் பட்டம் விற்பனை மையமாக திகழ்கிறது. உத்ராயண காலத்தில் இங்கு மட்டும் 10 லட்சம் பட்டங்கள் விற்பனையாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சங்கராந்தி சமயத்தில் இங்கு "பட்ட நகரம்' என்ற தனியான நகரம் உருவாக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தினசரி 24 மணி நேரமும் பட்டங்கள் விற்பனை செய்ய ப்படுகின்றன. நதியாத், பரோடா, சூரத், கும்பத் போன்ற பகுதிகளில் பட்டங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்காக வீடுகள் முழுவதுமே தொழிற்கூடங்களாக மாறி பட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அகமதாபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மகூதா என்ற ஊர் பட்டம் தயாரிப்பில் மிகவும் தொடர்புடையது. மாநிலத்தின் பல மையங்களில் உருவாகும் பட்ட ங்கள் ஓரங்களில் நுõலிடப்பட்டு இங்கு தான் முழுமை பெரு கிறது.ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர் ஆகியவை மாநிலத்தின் முக்கிய வியாபார பகுதிகளாகும்.பட்டம் தயாரிப்பதில் அதிகளவு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்கள் விவசாய வேலை, சிறுவியாபாரங்கள் என வெவ்வேறு வகைகளில் வ ருமானம் சம்பாதிக்க முயலும்போது பெண்கள் வீட்டிலிருந்தபடியே பட்டம் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். அதனால் பட்டம் தயாரிப்பில் பெண்களின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது. வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மகூதாவில் பெண்கள்தான் சுமார் 90 சதவீதம் பட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான சமயங்களில் பட்டம் வேலை செய்வதற்காக உத்திரபிரதேசத்தில் இருந்து ஆட்கள் வரு கின்றனர். அந்த காலங்களில் மொத்த வேலையாட்களில் 20 சதவீதம் வரை அவர்கள் இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.பட்டம் தயாரிப்பு தொழில் மற்ற தொழில்களைவிட சற்று வித்திய õசமானது. இந்த தொழிலை பொறுத்தவரை வியாபாரம் என்பது விழாக்காலங்களில் மட்டும்தான். ஆனால் உற்பத்தி பல மாதங்கள் நடக்கும். உதாரணமாக அகமதாபாத். நதியாத் உள்ளிட்ட மைய ங்களில் மார்ச் முதல் ஜனவரி மாதம் வரை 10 மாதங்கள் உற்பத்தி இருக்கும். அதேசமயம் பரோடா, சூரத், கும்பத் போன்ற பகுதிகளில் உற்பத்தி அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் மட்டுமே.இந்த தொழிலைபொறுத்தவரை பெரிய கட்டிடங்கள், இயந்திரங்கள் ஆகியவை தேவையில்லை. எனவே மூலதனம் குறைவு. 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழே முதலீடு செய்து தொழிலை ஆரம்பித்ததாக நிறைய பேர் கூறினார்கள். எனவே சதாரண நிலையிலுள்ள மக்கள் தொழிலில் நுழைவதற்கான வாய்ப்பு இந்த தொழிலில் அதிகமாக உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையோர் தங்களின் சேமிப்புகள், உறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகியவற்றின் மூலமே ஆரம்ப கால முதலீட்டை திரட்டிக்கொண்டதாக கூறினர்.உற்பத்தியார்களை தவிர மொத்த விற்பனையாளர்களும், சில்லரை விற்பனையாளர்களும் தொழிலில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கிடையே ஒப்பந்தங்கள் ஏதுமின்றி நம்பிக்கையின் ÷ பரிலேயே தொழில் நடைபெறுகிறது. ஆனாலும் வாராக்கடன் என்பது மிகவும் சொற்பமே. அண்மைக்காலத்தில் பட்டங்கள் பல வித வடிவங்களிலும், அளவுகளிலும் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான வண்ணக் கலவைகளிலும், பிடித்தமான கடவுள்களை கொண்டும் பட்டங்கள் வெளிவருகின்றன. சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை கொண்ட பட்டங்களும் உண்டு. ஒரு ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அதற்கு மேலும் விலை பெறும் பல்வேறு விலைகளில் ஆன பட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டங்களை விட உபயோகிக்கும் கயிரானது சாயம், ரசாயனங்கள், கண்ணாடி பொடி ஆகியவற்றால் பூசப்பட்டு கத்தி போன்ற கூர்மைய õன தன்மையை பெறுகிறது. அதற்கு மாஞ்சு என்று பெயர். அந்த கயிறு மற்ற பட்டங்களை வெட்டும் விளையாட்டுக்கு பயன்படுகிறது. பட்டம் தொழிலைப்போலவே அது சம்பத்தப்பட்ட பிற தொழில்களும் முக்கியமானவை. உதாரணமாக பட்டம் விடும்போது உபயோகப் படுத்தும் தொப்பி, கையுறை, கண்ணாடி போன்ற பொருட்கள் தய õரிப்பிலும், விற்பனையிலும் பல கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது. மகாசங்கராந்தி காலத்தில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. அதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் வருடா வருடம் சர்வதேச பட்ட விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள வெளிநாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் வருகின்றன. ராஜஸ்தானில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாலைவன பட்ட விழாக்களும் நடைபெறுகின்றன. எனவே பட்டம் வெறும் காகிதமும், நுõலும் மட்டுமல்ல. அதற்கு பி ன்னால் ஒரு வரலாறே உள்ளது. அதையொட்டி ஒரு பெரிய பொரு ளாதாரமே செயல்பட்டு வருகிறது.







140க்கும் மேற்பட்ட நாடுகளில் பட்டம் விடுவது பழக்கத்தில்
உள்ளது. மேலைநாடுகளில் பட்டத்துக்கு அசோசியேசன்கள் உள்ளன.
கிழக்கு சீனாவில் உள்ள வைபாஸ் நகரம் உலகின் பட்ட தலைநகராக
உருவெடுத்துள்ளது. 2002ல் அங்கு நடைபெற்ற சர்வதேச பட்ட
விழாவில் ஒரு கோடி பட்டங்கள் விற்பனையும், 220 கோடி அளவு
வியாபாரமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ட
விழாக்களை உலகெங்குமுள்ள பட்டம் விடும் நாடுகளுடன் நல்லு
றவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளாக சீனா பய
ன்படுத்திக்கொள்கிறது.

வெற்றிக்கதைகள்-21

அகதிகளின் உழைப்பால் உயர்ந்த லூதியானா

லூதியானா பஞ்சாப் மாநிலத்தின் தொழில் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும் கூட. சட்லெஜ் நதியின் பழைய கரையில் அமைந்துள்ளது. மான்செஸ்டர் ஆப் இந்தியா என்பது அதன் இன்னுமொரு பெயர். லூதியானா மாவட்டம் தான் பஞ்சாப்பின் செல்வந்த மாவட்டமாக கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக விலையுள்ள நீர்வளம் பெற்ற நிலங்களை உடைய மாவட்டமும் இது தான்.லூதியானாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலுறைகள் தயாரிக்கும் இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டன. அந்த சமயத்தில் சில தொழில் நிறுவனங்களும் தோன்றின. 1920 களில் பவுண்டரி தொழிலும் அங்கு ஏற்பட்டது. இதைத்தவிர குறிப்பிடத்தக்க தொழில்கள் ஏதும் அப்போது அங்கில்லை. லூதியானா நகரின் பெயரை தொழில்கள் மூலம் உலகறியச் செய்தவர்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் தான் என்பது ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது. இந்தியா துண்டாடப்பட்டு 1947 ம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றது. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் வசித்து வந்த மண்ணின் மைந்தர்களின் அங்கிருந்து விரட்டப்பட்டனர். பலர் தங்கள் நிலம், வீடு, சொத்துக்களை இழந்து நிர்கதியாக இந்தியாவிற்கு வந்தனர். அப்படி தங்கள் உடமைகளை விட்டுவிட்டு வெறுங்கையுடன் லூதியானா வந்த அகதிகள் பலர் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கடினமாக உழைத்தனர். கிடைத்த தொழிலை கிணற்றில் மூழ்குபவனுக்கு கிடைத்த கயிறுபோல பயன்படுத்தி கிடுகிடுவென முன்னேறினர். அவர்களின் அந்த உழைப்பு, லூதியானாவை இன்று இந்தியாவின் முக்கிய தொழில்மையமாக உருவாக்கிக் காட்டியிருக்கிறது.1950 மற்றும் 60 களில் புதியவர்களும், இளைஞர்களும் பல தொழில்களில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டனர். சைக்கிள்களின் உதிரிபாகங்கள், இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், டீசல் இன்ஜின்கள், ஜெனரேட்டர்கள், டயர், டியூப்புகள், எஃகு தயாரிப்பு போன்ற தொழில்களில் நுழைந்தனர். அவற்றை ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினர். அதன்விளைவாக தொழில் வேகமாக வளர்ச்சிப் பெற்றது.எனவே தற்போத குறுந்தொழில்கள், சிறுதொழில்கள், நடுத்தர தொழில்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் எனப் பல்வேறு நிலைகளில் தொழில்கள் நடந்து வருகின்றன. பதிவு செய்யப்பட்ட சிறு, நடுத்தர மறறும் பெரிய தொழில்கள் மட்டும் 40 ஆயிரம் உள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவில் வுல்லன் பஞ்சாலைகள் 150 உள்ளன.பின்னலாடைத் துறையை பொருத்தவரøயில் உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதியில் லூதியானா தனி பெயர்பெற்ற நகரமாக விளங்குகிறது. இறககுமதி செய்யப்படும் வெளிநாட்டு இயந்திரங்கள் அனைத்தையும் அதேமாதிரி உருவாக்குமளவு திறமை பெற்ற ராம்கடியா இனத்தைச் சேர்ந்த மக்கள் லூதியானாவின் வெற்றிக்கு பின்னணியில் உள்ளனர். லூதியானாவைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக விலை மதிப்புள்ள வெளிநாட்டு இயந்திரத்தின் உதிரிபாகம் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதற்கு மாற்று பாகத்தை அனுப்பி வைக்குமாறு இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டு கம்பெனியை அதன் உரிமையாளர் நாடினார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த உதிரிபாகம் வந்து சேரவில்லை. உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க உள்ளூர் ராம்கடியா நண்பரை தொழிலதிபர் அணுகினார். அவர் இரண்டே நாட்களில் அந்த உதிரிபாகத்தை தரமானதாக தயாரித்து அளித்துவிட்டார். அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை மிகமிக குறைவு. அதற்கு சில தினங்களுக்கு பின்னர் இயந்திரத்தை தயாரித்த வெளிநாட்டுகம்பெனிகளின் பிரதிநிதிகள் லூதியானா வந்து ராம்கடியா நண்பர் தயாரித்த உதிரிபாகத்தைக் கண்டு பிரமித்து போனார்கள்.இதுபோன்ற தொழில்நேர்த்தியும் லூதியானாவை வெற்றியடையச் செய்திருக்கிறது.தையல் இயந்திரத் தயாரிப்பில் நாட்டின் முதலிடம் லுதியானாவிற்கு தான். விதவிதமான தையல் இயந்திரங்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் 400 க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ரெடிமேடு துணி ரகங்கள் அதிகளவில் லூதியானாவில் தயாரிக்கப்படுகின்றன. அதில் 95 சதவீதத்திற்கு மேல் சிறு தொழில்களாக நடப்பது சிறப்பு. மற்ற எல்லாத் தொழில்களையும் விட லூதியானாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருப்பது அங்கு உற்பத்தியாகும் சைக்கிள்கள் தான். பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு குடும்பம் தான் லூதியானாவின் சைக்கிள் தொழிலுக்கு வித்திட்டிருக்கிறது. மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரில் 1944 ம் ஆண்டில் முஞ்சால் குடும்பத்தினர் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினர். வியாபாரம் சற்று சூடுபிடிக்கும் சமயத்தில் பிரிவினை நடந்தது. வாழ்க்கையைத் தேடி லூதியானாவிற்கு முஞ்சால் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். அந்த குடும்பம் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள 9 ஆண்டுகள் பிடித்தது. பின்னர் 1956 ம் ஆண்டு சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிலை இங்கேயும் ஆரம்பித்தனர். நல்ல வரவேற்பு கிடைத்ததும் முழு சைக்கிள்களை உருவாக்கி விற்பனை செய்யதுவங்கினர். வெறும் 25 சைக்கிள்களில் தொடங்கிய அவர்களது தொழில் நாளடைவில் தினசரி 18 ஆயிரத்து 500 சைக்கிள்கள் தயாரித்து விற்பனை செய்யும் பிரமாண்டமான "ஹீரோ' சைக்கிள் நிறுவனமாக உயர்ந்தது. உலக அளவில் அதிக சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக 1986 ல் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இந்திய சந்தையில் ஹீரோ சைக்கிள் 48 சதவீதத்தை பிடித்துக் கொண்டுள்ளது.பின்னர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு, கம்ப்யூட்டர் தயாரிப்பு என்று தொழிலை பெருக்கி தற்போது 20 கம்பெனிகளையும், 5 ஆயிரம் விற்பனை நிலையங்களையும், 25 ஆயிரம் பணியாளர்களையும் கொண்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது முஞ்சால் குடும்பத்தின் நிறுவனம்.ஒரு நிறுவனத்தில் அதிகமாக ஒரே சமயத்தில் பொருட்களை வைத்திருக்கும் போது தேவையில்லாத பணமுடக்கம் ஏற்படும், அதை தவிர்ப்பதற்காக தேவைப்படும் நேரத்தில் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளும் "ஜிட்' என்ற முறையை நாட்டிலேயே முதன்முறையாக அமல்படுத்தியவர்களும் இவர்கள் தான். ஒரு பணியாளர் ஒரே நேரத்தில் இரண்டு இயந்திரங்களை இயக்கும் முறையை அமல்படுத்தி அதில் பெரும் வெற்றியை கண்டவர்களும் இவர்கள் தான். 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இந்நிறுவனத்தின் தலைவராக 86 வயதான பிரிஜ்மோகன் முஞ்சால் உள்ளார். ஹீரோ நிறுவனம் குறித்த பாடங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டவரும் இவர்களது தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் நல்ல உறவு பேணப்படுவதால் தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. ஹீரோ நிறுவனத்தைப் போலவே ஆவன் நிறுவனம் நவீன தொழிற்சாலையை நிறுவி சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.சிறிய அளவிவில் லூதியானாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் இன்று உலக அளவில் பெரிய தொழில் குழுமங்களாக மாறி நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்காற்றி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்த தொழில்நிறுவனங்களில் 21 சதவீதம் லூதியானாவில் உள்ளதாகவும், அவை மாநிலத்தின் உற்பத்தியில் 28 சதவீதம் அளிப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.எல்லாவற்றையும் இழந்து ஊர்பெயர்ந்து வந்தமக்களின் உழைப்பால் லூதியானா இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் லூதியானா. வந்தவர்களால் வாழவைக்கப்பட்ட ஊர் லூதியானா.


*சைக்கிள் நகரம்
இந்தியாவின் சைக்கிள் நகரமாக லூதியானா விளங்குகிறது. ஹீரா, ஆவன், அட்லாஸ், நீலம் உட்பட பல சைக்கிள்கள் இங்கு தயாராகின்றன. இந்த தொழிலில் ஆயிரத்து 800 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புபெற்றுள்ளனர்.
*ஆசியாவின் பெரிய விவசாயப்பல்கலைக்கழகம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகமாகும். ஆயிரத்து 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

வெற்றிக்கதைகள்-20









அமராவதிக்கரையிலிருந்து அமெரிக்கா வரை

நாட்டின் மற்ற தொழில் நகரங்களுக்கு இல்லாத பல பெருமைகள் கரூருக்கு உண்டு. இந்நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையும், சங்கப்புலவர்களால் பாடப்பட்ட சிறப்பையும் உடையது. சங்க காலத்திலேயே கரூர் முக்கியமான வணிக மையமாக திகழ்ந்து வந்துள்ளது.அக்காலத்தில் கரூவூர், வஞ்சி என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கரூர், சேரன் செங்குட்டவன் ஆட்சி காலத்தில் சேரநாட்டின் தலைநகராக இருந்துள்ளதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு அரசர்களின் ஆட்சி காலத்தின் போதும் தலைநகராக விளங்கி வந்தது. 1850 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது பொதுயுகம் 150 ல், கரூர் நம் நாட்டின் முக்கியமான சர்வதேச வணிக மையமாக இருந்து வந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியரான தாலமி குறிப்பிட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் கரூர் பகுதியில் பல இடங்களில் ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. அந்த காலக்கட்டங்களிலேயே முக்கியமான நகை தயாரிக்கும் மையமாக கரூர் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூர் நகரின் மக்கள் தொகை 2001 ம் ஆண்டு கணக்குப்படி 1.5 லட்சம். மாவட்டத்தின் மக்கள் தொகை 10 லட்சம். தமிழகத்தில் அதிகமான பெண்கள் உள்ள மாவட்டங்களில் கரூரும் ஒன்று. பெரும்பான்மையான மக்களின் தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. நெல், வாழை, கரும்பு< வெற்றிலை, பயிறு வகைகள், மரவள்ளி, நிலக்கடை உள்ளிட்ட பொருள்கள் விளைகின்றன.கடந்த பல ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நிதி சம்மந்தமான தொழில்கள், பஸ் பாடி பில்டிங், கொசுவலை உற்பத்தி என்று பல தொழில்கள் மக்கள் ஈடுபட்டு அவற்றில் முன்னேற்றமும் கண்டு வருகின்றனர். இதில் கைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்ற ஊராக கரூர் விளங்குகிறது. அந்த துறையில் கரூருக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நெசவுத்தொழிலின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் நெசவுத்தொழிலில் நுழைந்து அதை பெரிய அளவில் எடுத்துச் சென்றுள்ளனர். அதன்விளைவாக இன்று நாட்டின் முக்கிய ஜவுளி ஏற்றுமதி மையமாக கரூர் விளங்குகிறது.1975 ம் ஆண்டு கரூரில் 15 ஏற்றுமதியாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 500 பேருக்கு மேல் ஏற்றுமதித்தொழிலில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான வால்மார்ட், டார்ஜெட் ஆகியவற்றிற்கு இங்கிருந்து பொருட்கள் செல்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஆப்பிரிக்க உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கரூர் தொழிலதிபர்கள் துணியை உற்பத்தி செய்து அதை அப்படியே விற்க நினைக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யத்துவங்கியதால் தான் சர்வதேச அளவில் தனியான இடத்தை தனக்கென பிடித்துள்ளது. துணிகளில் விதவிதமான பொருட்கள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அவற்றில் குளியலறை, சமையலறை, படுக்கையறை சம்மந்தப்பட்ட துணி வகைகள் முக்கியமானவை. படுக்கை விரிப்புகள், துண்டுகள், தரையில் விரிக்கப்படும் துணிகள், சிற்றுண்டி துண்டுகள், நாப்கின்கள், ஏப்ரன்கள், திரைச்சீலைகள், தலையணை உறைகள் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.அண்மை காலங்களில் ஜவுளித்துறையில் விசைத்தறிகள் அதிகமாகி கைத்தறிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றதால் அதையொட்டி அரவை மற்றும் நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், டெய்லரிங், பேக்கிங் தொழில்களும் வளர்ந்து அவை 3 லட்சம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதிகளின் மூலம் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை கரூர் ஈட்டித்தருகின்றது.கரூர் தொழிலதிபர்களின் வெற்றிக்கு பின்னால் அவர்களது கடும் உழைப்பு உள்ளது.விவசாயத்தில் வருமானம் குறைந்ததால் வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடன் அதிகமான விவசாயிகள் கைத்தறித் தொழிலில் நுழைந்தனர். அவர்களில் 50 சதவீதம் பேர் வேலையாட்களாகவே நுழைந்து பின்னர் தொழிலில் பங்குதாரர்களாக சேர்ந்து தங்களது கடின உழைப்பு காரணமாக முன்னேறியுள்ளனர். அதன்பின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதி செய்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தொழிலாளிகளாக இருந்து முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உறவுகளும் அவற்றின் அடிப்படையில் அமைந்த பங்குதாரர்கள் சார்ந்த அமைப்பு முறையும் முக்கிய காரணமாக உள்ளது.கரூரின் தொழில்வளர்ச்சிக்கு அங்கு உள்ள நிதி அமைப்பு முறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆரம்ப காலங்களில் தொழில்களுக்குத் தேவையான நிதியை அப்போதிருந்த வட்டிக்கடைகள், மற்றும் உறவுகள் மூலமே தொழில் முனைவோர் பெற்று வந்துள்ளனர். தொழில் வளர்ந்த போது அங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே கூட்டாக சேர்ந்து நிதி அமைப்புகளை உருவாக்கினர். அதன்மூலம் நூற்றுக்கணக்கான சிறியதும், பெரியதுமான நிதிஅமைப்புகள் பங்குதாரர்களை வைத்து துவக்கப்பட்டன. 1980 களில் அவற்றின் வளர்ச்சிஅதிகரித்தது. சராசரியாக ஆறு முதல் 10 பேர் வரை சேர்ந்தும் சில சமயங்களில் 20 பேர்கள் வரை சேர்ந்தும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். உறவுகள் மற்றும் நட்புகள் மூலம் கிராமங்களின் சேமிப்புகள் மூலதனங்களாகவும், வைப்புகளாகவும் வந்தன. அதனால் வைப்புகள் அதிகரித்து தொழில்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டன. லாபங்கள் மேலும் முதலீடாக போடப்பட்டதால் நிதி அமைப்புகள் வேகமாக வளர்ந்தன.கடன்களும் உறவுகள், நட்புகள் மற்றும் தொடர்புகளை மையமாக வைத்தே கொடுக்கப்பட்டதால் பெரும்பாலும் முறையாக திருப்பி செலுத்தப்பட்டன. பெரும்பாலான கடன்கள் நம்பிக்கை, நாணயம் மற்றும் பங்குதாரர்களின் உத்தரவாதம் ஆகியவற்றை வைத்து கொடுக்கப்பட்டன. ஒரு வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல் போய்விட்டால் பல சமயங்களில் சம்மந்தப்பட்ட பங்குதாரரே அந்த தொகையை செலுத்தி நிறுவனத்திற்கு வராகடன் இல்லாமல் செய்து விடுவார். வங்கிகளை விட அங்கு நடத்தப்பட்ட நிதி அமைப்புகளில் வைப்புகளுக்கும், கடன்களுக்கும் வட்டி அதிகம். கடன்களுக்கு வட்டி அதிகமாக இருந்த போதும் தொழில் முனைவோர் பெரும்பாலும் நிதி அமைப்புகளையே அதிகம் நாடுகின்றனர். இதற்கு காரணம் கடன்பெறுவதற்கு உள்ள எளிதான வழிமுறைகள் மற்றும் நிறைய சமயங்களில் சொத்துக்களை அடமானமாக வைத்து உத்தரவாதம் கொடுக்கத் தேவையில்லாத, சூழ்நிலை ஆகியவை ஆகும். மேலும் கடன் வாங்கியவருக்கு தொழில் சிரமங்கள் ஏற்படும் போது நிதி அமைப்புகள் தங்கள் நடைமுறைகளை தளர்த்தி உதவுகின்றன. அதுமட்டுமன்றி அவசர தேவைகளுக்கு உடனே உதவி கிடைக்கிறது. எனவே வங்கிகளை விட மக்கள் நிதி அமைப்புகளை அதிகம் நாடுகின்றனர்.கரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாமக்கல், சங்ககிரி பகுதிகளை பின்பற்றி கரூரிலும் மோட்டார் வாகனத்தொழில் ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்தியாவில் பஸ் பாடி பில்டிங் என்றாலே கரூர் என்ற பெயர் பெற்றுள்ளது. துவக்கத்தில் சிறிய அளவில் துவக்கப்பட்ட பஸ் பாடி பில்டிங் தொழில் தற்போது தென்னிந்தியாவில் உள்ள 90 சதவீத தனியார் பஸ்களுக்கு பாடி கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சாதாரண பஸ் முதல் நவீன பஸ்கள், சொகுசு பஸ்கள், நவீன ஸ்கேனிங் வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகள் என்று பஸ்கள் கரூரில் உருவாகின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு 350 கோடி ரூபாய் வருமானம் கரூருக்கு கிடைக்கிறது.விவசாயத்திலிருந்து ஜவுளி, நிதி, மோட்டார் வாகனத்தொழில் போன்றவற்றில் இறங்கி அதில் பெரும் வெற்றியை பெற்றுள்ள கரூர் தொழில்முனைவோர் நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். வங்கித் தொழிலில் முன்னோடி நகரம் இரண்டு வரையறுக்கப்பட்ட வங்கிகள் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே கரூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரூர் வைஸ்யா வங்கி 1916 ம் ஆண்டு வெங்கட்ராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார் ஆகியேரால் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 285 கிளைகளுடன் 13 மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. லட்சும விலாஸ் வங்கி 1926 ம் ஆண்டு ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி 246 கிளைகளுடன் 14 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிகள் கரூர் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன. * கரூரில் 2002 ம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்றில் கரூரில் தொழில்துறையின் மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த காலக்கட்டத்தில் கரூரில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வந்தன. தொழில்துறைக்குத் தேவையான நிதியில் பெரும்பங்கை தனியார் நிதி அமைப்புகளால் கொடுக்கப்படுகிறது. இங்கு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்கள் தொழில் ரீதியாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டு வளர்ந்தாலும் பல விதங்களில் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. ஒரு நிறுவனத்தில் கடன் வாங்கியவரின் நம்பகத்தன்மை சரியில்லை என்றால் மற்ற நிறுவனங்கள் அவரைப் பற்றிக் கேட்கும் போது அது குறித்து ரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதன்மூலம் பிற நிதி நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. *கரூரில் அரசு நிறுவனமான தமிழ்நாடு பேப்பர் மில்ஸ் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காகித உற்பத்தி ஆலையாக விளங்குகிறது.