Showing posts with label இந்தியப் பொருளாதாரம். Show all posts
Showing posts with label இந்தியப் பொருளாதாரம். Show all posts

ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான நிதி நிலை அறிக்கை


2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பல வகைககளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. வழக்கமாக பிப்ரவரி 28 ஆம் தேதி தான் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடை முறைக்கு வரும் போது போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. அதனால் திட்டப்பணிகளைச் செயல்படுத்துவதில் அரசுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த வருடம் முதல் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலந் தொடங்கி இது வரை இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வருடம் முதல் அது பொது நிதி நிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இனி மேல் இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதி நிலை அறிக்கை இல்லை.

2017-18 நிதி நிலை அறிக்கையானது  ஏழைகள்  மற்றும் சாதாரண மக்கள், விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு, சிறு தொழில்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. எனவே விவசாயம் மற்றும் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கான கடன் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில்  பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்குள்ள முக்கிய பிரச்னை நீர் மேலாண்மை இல்லாத தன்மை. எனவே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகும்.  அவை சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் நமது தேசத்திலுள்ள மொத்த வேலை வாய்ப்பில் அவை தான் 92 விழுக்காட்டுக்கு மேல் கொடுக்கின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான சிரமங்கள் இருந்து வருகின்றன.  போதிய நிதி வசதிகள் இல்லை. அதற்காகத் தான் மத்திய அரசு 2015 ஆம் வருடம் முத்ரா வங்கியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிதி நிலை அறிக்கை ரூபாய் ஐம்பது கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவற்றின் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி நபர் வரி விகிதத்தைப் பொறுத்த வரையில் ரூபாய் 2,50,000 முதல் ரூபாய் 5,00, 000 வரை வருமானம் பெருபவர்கள் இது வரை பத்து விழுக்காடு வரி செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சாதாரண மக்களுக்கான வரிச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஐம்பது இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு சுமார் 12,5000 ரூபாய் அளவு பலன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ரூபாய் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு பத்து விழுக்காடு சர்சார்ஜ் வரி போடப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு பதினைந்து விழுக்காடு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டும், அதிகமாக உள்ளவர்களுக்கு  அதிக வரி போடப்பட்டும் உள்ளது.  

கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.  2018 மே மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட உள்ளது.  
ஏழை மற்றும் சாதாரண மக்களுக்காக வீடு கட்டும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கான வட்டிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வீடுகள் கட்டுவதற்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையில் மேற்படிப்புகளுக்கான தேர்ச்சிகளை மேற்கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வெவ்வேறு அமைப்புகள் தேர்வு நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீரான முறை உண்டாகும். உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழக மானியக் குழு சீரமைக்கப்பட்டு, திறமையாக இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படும்.

அரசியல் முறையில் இருக்கும் முக்கியமான பிரச்னை கட்சிகள் பிறரிடமிருந்து நன்கொடை பெறும் முறை. அதில் நேர்மையும் நம்பகத் தன்மையும் இல்லை. இனி மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கணக்கில்லாமல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவு. இதன் மூலம்  தூய்மையான அரசியலுக்கு ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது என நம்பலாம்.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. இதன் மூலம் நமது தேசம் சரியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, உலக அரங்கில் சீக்கிரமே முதல் நிலைக்குச்  செல்லும் நிலைமை வர  வேண்டும்.   

( விஜய பாரதம், சென்னை, பிப்.2017)


இந்தியப் பொருளாதாரம் குறித்து தினமலரில் கட்டுரை

இந்தியப் பொருளாதாரம் குறித்து தினமலரில் இன்று வெளியான கட்டுரை, ஜூலை 6, 2014

படிப்பதற்கு:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1014660

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தொன்மை நிலை குறித்து தினமணியில் கட்டுரை

http://www.dinamani.com/editorial_articles/2014/06/17/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/article2284556.ece


( தினமணி, ஜூன் 17, 2014)

இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி


மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது.   மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து,  பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும்.  

இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில் பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம் மற்றும் பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ஆகியவை பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 

காலனி ஆதிக்கக் காலத்தில் தான் இந்தியா உள்ளிட்ட பல பொருளாதாரங்கள் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாயின.  எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே  இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நசிந்து போனது. அதனால் சுதந்திரம்  வாங்கும் முன்னரே  மிகவும் ஏழை நாடாக ஆகியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்கள் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். பலவிதமான சிரமங்களுக்கிடையிலும் முடிந்த வரை அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொண்டனர். வெவ்வேறு  புதிய தொழில்களில் நுழைந்தனர்.

இந்தியக் கலாசாரத்தில் நமது நாட்டுக்கெனப் பல தனித்தன்மைகள் உள்ளன. அவையே பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. நம்முடைய குடும்ப அமைப்பு, எளிய வாழ்க்கை முறை, சேமிக்கும் குணம், உறவுகள் சார்ந்த வாழ்க்கை,  தொழில் முனையும் தன்மை எனப் பாரம்பரியமான குணங்கள் பலவும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலேயே  அமைந்துள்ளன.  

இந்தத் தன்மைகளால்  மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து, தங்களின் குடும்பங்கள் முன்னேற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதனால் நாட்டின் சேமிப்புகள் மொத்த பொருளாதார உற்பத்தியில்  கடந்த சில வருடங்களாக முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கின்ற உந்துதலால், மக்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். எனவே உலகின் பணக்கார நாடுகளை விட சொந்தத் தொழில் செய்பவர்கள் நமது நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளனர். 

இந்தியாவில் எட்டரை கோடி பேர் தொழில் முனைவோராக உள்ளதாக இலண்டன் மேலாண்மை நிறுவனம்  சொல்கிறது.  இது உலக அளவில் அதிகமானதாகும்.  அப்படித்தான் நாடு முழுவதும் பல விதமான சிறு, குறு மட்டும் நடுத்தரத் தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகள் அதிகமின்றி நடத்தப்படுபவை.

அதனால் தான் அரசுகளின் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் பலவிதமான  குறைபாடுகள் இருந்த போதும், இந்தியப் பொருளாதாரம் சமூகங்களால் பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பலன்களைப் பெறும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை அரசாங்கங்கள்  வகுக்கத் தவறி வரும் போதும், நாடு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஆகையால் சுதந்திரம் பெற்று  ஒரு அறுபது வருட காலத்தில் இந்தியா உலக அளவில் ஒரு முன்னணிப் பொருளாதாரமாக மாறியது. மேலும் எதிர்காலத்தில் உலக அளவில் மிக அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் நிறைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் என நிபுணர்களால் ஒருமனதாகக் கணிக்கப்படுகிறது.   

சென்ற 2008 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் தோன்றிய நிதி நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்தது.  அதனால் உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட பல பகுதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அவற்றில் பல நாடுகள் இன்று வரைக்கும் சிரமங்களிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளையும் சிரமப்படுத்திய அந்த நெருக்கடிகளால் அதிக   பாதிப்புகள் இல்லாமல்  செயல்பட்டு வந்த  நாடுகளில் முக்கியமானதாக இந்தியா உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் இருபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப முதலே உலகின் கவனத்தை அதிகமாக ஈர்க்கத் தொடங்கின. இந்தியாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மேற்கத்திய நிபுணர்கள், உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் , சர்வதேச அளவில் புகழ் பெற்ற  பல்கலைக்கழகங்கள் எனப் பல பிரிவினரும் முயற்சிகளை  மேற்கொண்டனர். அதனால் இந்தியப் பொருளாதாரம், அதன் வலிமைகள், அவற்றால்  நாட்டுக்குள்ள வாய்ப்புக்கள் ஆகியவை பற்றி விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. எனவே சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அந்தக் கால கட்டங்களில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பங்கு பெறுவதும் அதிகரித்தது. அதிகம் படிக்காத மக்களால் நடத்தப்படும் திருப்பூர், சூரத் போன்ற பல இந்தியத் தொழில் மையங்கள் உலக அளவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி நாட்டுக்குப் பெயர் சேர்த்தன. கூடவே அமெரிக்காவின் கணினித்  துறையில் இந்திய இளைஞர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

 அப்போதிருந்த வாஜ்பாய் அரசு தங்க நாற்கரச் சாலை  போன்ற திட்டங்கள் மூலம் கட்டுமானத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆகையால் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்தன. பொருளாதாரச் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அரசுக் கணக்கில் வழக்கமாக வருடா வருடம் தொடர்ந்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குப் பதிலாக,   1970களுக்குப் பின்  முதன் முறையாக,  2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் உபரித் தொகை ஏற்பட்டது. எனவே சுதந்திரத்துக்கப்புறம் முதல் தடவையாக நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கையும் பெருமித உணர்வுகளும் ஏற்படத் தொடங்கின.

பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக எட்டு விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. வெவ்வேறு மட்டத்திலும் தொழில் செய்தவர்களுக்கு மேலும் வளர புதிய வாய்ப்புகள் தென்பட்டன. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து உலகின் பல இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த   இளைஞர்களுக்கு  வாய்ப்புகள் பெருகி எதிர்காலம் குறித்து எப்போதுமில்லாத உற்சாகம் தோன்றியது.

அதனால் இந்தியப் பொருளாதாரம் ஒட்டு மொத்த உற்பத்தியை அதிகரித்து உலக அளவில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக வருமளவு வேகமாகச் சென்றது.  தங்களின் பொருளாதார வழிமுறைகள் தான் மிகவும் உயர்வானது என மார்தட்டி வந்த பணக்கார நாடுகள் எல்லாம் இந்தியாவின் செயல்பாடுகளைப் பற்றி ஆச்சரியமாகப் பேச  ஆரம்பித்தன. எனவே சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒதுக்கி விட்டு எந்த நாடும் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேச முடியாத சூழ்நிலை  உருவானது.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக நிலைமை பெருமளவு மாறி வருகிறது. அரசு மட்டங்களில் கொள்கைகளை வகுப்பதில்  பெரும் தவறுகள் நடைபெற்று வருகின்றன. வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வருடா வருடம் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் விவசாயத் துறையை விட்டு இலட்சக் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள நமது தேசத்தில், விவசாயம் நசிந்து போனால் நாடு எப்படி சுய சார்புடன் செயல்பட முடியும் என்பது குறித்து அரசு யோசிப்பதாகக் கூடத் தெரியவில்லை.

அதிகம் பேருக்கு வாய்ப்புகளை அளிக்கக் கூடிய சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றன. இந்தியாவின் சில்லறை வணிகம் என்பது  சாதாரண மக்களால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 14 விழுக்காடு அளவு பங்களிக்கக் கூடிய  மிக முக்கியமான துறை. அதில் சுமார் நான்கு கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எந்த வித அடிப்படை நியாயமும் இல்லாமல்  பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பலன் பெறுவதற்காக அது திறந்து விடப்பட்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில்  அவை செயல்பட்டு வரும் நாடுகளில் எல்லாம் உண்டாக்கியுள்ள சீரழிவுகளைப் பார்க்கக் கூட அரசு தயாராக இல்லை.  

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மின்சாரம், சாலை வசதிகள், சமூக மேம்பாடு  உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். அதற்காக அவற்றில் மூலதனங்களும் தொடர்ந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட  வேண்டும். ஆனால் கொள்கை முடிவுகளை எடுப்பதில் பெரிய சுணக்கம் நிலவுகிறது. அதனால் இலட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிக்கப்புள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் தவறுகளும், ஊழல்களும் நிறைந்திருப்பது வெளியாகி வருகிறது. அதனால் அரசுக்கு நியாயமாக வர வேண்டிய பல இலட்சம் கோடி ரூபாய் வருமானங்கள் ஆட்சியாளார்களுக்கு வேண்டிய சில பேருக்குச் சென்று கொண்டிருப்பது  தெரிகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக நமது நாட்டில் அதிக அளவில் நிலக்கரி உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் பொருளாதாரம் வளர முடியும். ஆனால் தனது  தவறுகளால் அரசு அவற்றை முறையாகப்  பயன்படுத்தித் திட்டமிட முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சம்பந்தப்பட்ட  அரசாங்கத்தின் அத்தியாவசியமான பணியாகும்.  இங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே இருபது இலட்சம் பேர் புதியதாக உழைக்கும் வர்க்கத்தில் இணைந்து வருகின்றனர். அதில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து படித்து வருபவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் கடந்த 2004-05 ஆம் வருடம் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மிகவும் மோசமாக உள்ளது.

1999- 2004 கால கட்டத்தில்  அப்போதைய அரசு ஆறு கோடி பேருக்கு மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு  2004 முதல் 2009 வரை வெறும் இருபத்தேழு இலட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக  மத்திய அரசின் மாதிரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இரண்டாவது முறை  மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை. 

இந்தியப் பொருளாதாரத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கினை அளித்து வருவது சேவைத் துறையே ஆகும். கடந்த பல ஆண்டுகளாகவே அதுவே பிற துறைகளை விட வேகமாக வளர்ந்தும் வருகிறது. ஆயினும் அந்தத் துறையில் 2005 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் எண்பத்தாறு இலட்சம் புதிய வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மிகக் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளிலும்  கணிசமான அளவு தற்காலிகமானவையாகவே உள்ளன.

கூடவே அரசின் நிதி நிர்வாகமும் மிகவும் மோசமாகி வருகிறது. 2004 முதல் 2013 வரையான கால கட்டத்தில் இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை  ஐந்து இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று விட்டது. 

அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும்  சென்ற நிதியாண்டு முதல் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற 2012-13 ஆம்   ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக் கீழ்தான் இருக்கும் என மத்திய அரசின் புள்ளி விபர அலுவலகம் கணித்துள்ளது.

எனவே அண்மைக் காலமாக  இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தொழில் செய்பவர்கள் மூலதனங்களை  மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சொந்தத் தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதனால் பொதுவாக பல தரப்பு மக்களும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்தியா உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைப் பெற்று விளங்குகிறது. வேலை செய்வதற்குப் போதுமான மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசிடம் திட்டங்கள் இல்லை.

எனவே நமது ஆட்சியாளர்கள் ஒரு பெரும் வரலாற்றுத் தவறுக்குக் காரணமாக இருந்து வருகிறார்கள். இந்தியா என்னும் சக்தி மிகுந்த நாட்டினுடைய முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் மேலெழுந்து வந்து கொண்டிருந்த போது, வெளிநாட்டு நிபுணர்கள்  சிலர் ஒரு பேரரசு மீண்டும் எழத் தொடங்கி விட்டது என்று காலனி ஆதிக்க காலத்துக்கு முந்தைய நமது பழைய வரலாற்றைத் தொடர்பு படுத்திக் கூறினார்கள்.


துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கும் வகையில் தற்போதைய அரசின் அணுகுமுறைகள் அமைந்து விட்டன. அதனால் பொருளாதார வளர்ச்சியில்  கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. மேற்கத்திய பொருளாதாரங்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்து உலக அளவில் நமது நாட்டுக்கென வாய்ப்புகள் பெருகி வரும் இந்தச் சூழ்நிலையை நமது அரசு சரியாகப் பயன்படுத்தத்  தவறி வருகிறது.  

பொருளாதார வரலாறு குறித்த இந்தியர்களின் அறியாமை


தேர்தல் காலங்களில் பலவிதமான விசயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்படுவதும் காரசாரமாக விவாதிப்பதும் வழக்கமான நடைமுறைதான். தற்போதைய தேர்தலின் வேகம் ஆரம்பிக்கும் முன்னரே தொடங்கி  எதிர்க்கட்சிப் பிரதமர் வேட்பாளரும் மத்திய நிதியமைச்சரும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்கள் குறித்து அவ்வப்போது தங்களின் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர்.  ஒரு சமயம் சென்ற நவம்பர் மாதம், ’இந்திய வரலாற்றில் மிகப் பெரும்பாலான மக்கள்  ஏழைகளாகவே இருந்துள்ளனர் என்றும்,  சிலர் மட்டுமே அரசர்களாகவும் நிலக்கிழார்களாகவும் வசதியாக வாழ்ந்துள்ளனர்’ எனவும்  நிதியமைச்சர் .கூறினார்.

அதற்கு முன்னர், நிதியமைச்சர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கு இந்தியாவை ஐயாயிரம் வருடத்திய ஏழை நாடாகச் சித்தரித்திருந்ததாகக் குஜராத் முதல்வர் குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியபோதுதான் சிதம்பரம் மேற்கண்டவாறு சொல்லிருந்தார். கூடவே  நரேந்திர மோதி வரலாற்றைப் படிக்க வேண்டும் எனவும் அவர் கிண்டலடித்திருந்தார்.  

மேற்குறிப்பிட்ட இரு முக்கிய  தலைவர்களின் கருத்துக்கள் குறித்து கடந்த ஐந்து   மாதங்களாகப் பொது வெளியில் எந்த விதமான விவாதங்களும் தொடர்ந்து எழவில்லை. எனவே அந்தக் கருத்துப் பறிமாற்றம் அப்படியே நின்று விட்டது. அதிலுள்ள அரசியலை ஒதுக்கி விட்டு அந்தப் பொருள் குறித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் தொன்மை வாய்ந்த நமது நாட்டின் பொருளாதார வரலாறு குறித்து முற்றிலும் மாறுபட்ட இரு வேறு கருத்துகள் நிலவுவது நம்மிடமுள்ள  பெரிய குறைபாட்டையே காட்டுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு விதமான கணிப்புகள் இருக்கலாம். நிகழ்கால நடைமுறைகள் குறித்து சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் நடந்து முடிந்த வரலாறு குறித்து எப்படி முற்றிலும் வேறான கருத்துக்கள் இருக்க முடியும்? சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகளைக் கடந்து வந்த பின்னர் இன்னமும்  முந்தைய காலப் பொருளாதார நிலை பற்றிய அடிப்படை விசயங்களில் எவ்வாறு மாறுபட்ட கருத்துகள் நிலவ முடியும்? வளர்ந்த நாடுகள் ஏதாவது ஒன்றிலாவது இந்த  மாதிரி குழப்பத்தைப் பார்க்க முடியுமா?

ஐரோப்பியர்கள் தங்களது காலனியாதிக்க காலத்தில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் வரலாறுகளையும் அவர்களுக்குத் தக்கபடி எழுதினார்கள் என்பது அவர்களாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மையாகும். அந்த வரலாறு அவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவும்,  பிற நாட்டு மக்கள்  எந்த விதமான சிறப்புக்கும் சொந்தமில்லாவர்கள் என்கின்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கவும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தியாகும். அப்போது கல்வி, கலாசாரம், தொழில், பொருளாதாரம் எனப்  பல விசயங்களிலும்  ஐரோப்பிய நாடுகளே  முன்னிலைப் படுத்தப்பட்டு, மற்ற நாடுகளின் உண்மை நிலைகள் மறைக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வந்த தேசியக் கல்வி முறைய அழித்து புதிய முறையைத் திணித்தார்கள். அதன்படி கல்வியின் அடிப்படையும் நோக்கமும் மாறிப் போயின. நமது நாட்டின் செயல்பாடுகள், உண்மையான வரலாறு  என எல்லாமே கல்வித் திட்டத்திலிருந்து விலகிப் போயின. நாடு சுதந்தரம் பெற்ற பின் கல்வித் திட்டத்தை மாற்றுவதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே கல்வி குறித்த விசயங்களில் மேற்கத்திய தாக்கங்களே  இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நீண்ட பாரம்பரியமுள்ள இந்தியாவுக்கெனப் பல துறைகளிலும் ஒரு வரலாறு இருந்திருக்கென வேண்டும் என்பது பற்றிக் கல்வி நிறுவனங்கள் யோசிப்பது கூட இல்லை.

அதுவும் பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நமது நாட்டுக்கு என நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும்  முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால் அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில் நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில்  பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும் நாம் சுதந்தரம் வாங்கும் போது இந்தியா ஒரு பெரிய ஏழை நாடாகவே இருந்தது. எனவே நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே முன் காட்டப்படுகிறது.  அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை. 

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விசயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக சிலப்பதிகாரம் அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது, எப்படி  பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக அர்த்த சாஸ்திரம் கருதப்படுகிறது. அது சுமார் 2300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விசயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது. பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவங்களும் இல்லாமல் அப்படிப்பட்ட  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இந்தியாவுக்குத் தொடர்ந்து பல நாடுகளிலிருந்து வெளி நாட்டவர்கள் வந்து கொண்டு இருந்துள்ளனர்.  பிந்தைய காலங்களில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக ஐரோப்பியர்கள் பலர் நமது நாட்டுக்கு வந்து தங்கியிருந்தும்  பார்த்தும் சென்றுள்ளனர். அவர்களில் பல பேர் இந்திய வாழ்க்கை முறை, சமூகம், கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விசயங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் இந்தியா மேற்கத்திய நாடுகளை விடப் பலவகைகளிலும் சிறப்பாக இருந்ததாகவே சொல்கின்றன.

ஆயினும் அண்மைக் காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விசயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன. ஐரோப்பிய  நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான  அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து முன்னரே பல விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகியவையே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை  நிறுவுகின்றன.

அவற்றில் முக்கியமாக உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை. உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றைப் புள்ளி விபரங்களுடன் அவை முன் வைக்கின்றன. இன்று வரைக்கும் அந்த ஆய்வுகளின் முடிவுகள் யாராலும் மறுக்கப்பட இயலாதவையாக உள்ளன. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கிய காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன.  அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ( 32.9 விழுக்காடு) இந்தியாவிடம் இருந்துள்ளது. இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும்  சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.  

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது. அப்படியெனில் பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகள்  இருந்திருக்க வேண்டும்..

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சரஸ்வதி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான  அடையாளங்கள் ஆகியவை குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுயுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விபரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விபரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டு வரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா  தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது. 1600ல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700ல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை  1820 இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே கடந்த இரண்டாயிரமாண்டு காலப் பொருளாதார  வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது  என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார். அப்போது தான் முதல் தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல இலட்சக்கணக்கான பேரின் உயிர்களைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750ல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக்  கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900 ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 1800லிருந்து 1850 வரைக்குமான  ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் எனப் பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நௌரோஜி குறிப்பிட்டுள்ளார்.

சம காலத்தில் பணக்கார நாடுகளாகக் கருதப்படும் மேற்கத்திய நாடுகள் உலகப் பொருளாதார வரைபடத்தில் பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் தலையைக் காட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்  தொடங்கியே அவை குறிப்பிடத்தக்க பொருளாதார பலத்தைப் பெறும் பாதையில் பயணிக்கின்றன. மேலும் அண்மைக் காலமாக அந்த நாடுகள் வீழ்ச்சியைக் கண்டு வருவது அவர்களே ஒத்துக் கொள்ளும் விசயமாகும். அதே சமயம் சீனா மற்றும் இந்தியா, ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் உலக அளவில் மீண்டும் மேலெழுந்து வரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் என கணிக்கப்படுகிறது.  

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த சமயத்திலாவது  நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க இயலாது. அதிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கே அடிப்படையான வரலாற்று உண்மைகள் கூடத் தெரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.