Showing posts with label சுதேசி செய்தி. Show all posts
Showing posts with label சுதேசி செய்தி. Show all posts

இரண்டாண்டுகளில் இமாலய முயற்சி- புதிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்


கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின்  பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவர் பொறுப்பேற்று இப்போது  இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தச் சமயத்தில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.  ஏனெனில் இந்த இரண்டாண்டுகளில் சுதந்திர இந்திய வரலாற்றின் பல அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

 நமது நாடு பல்வேறு  தனிச் சிறப்புகளைப் பெற்றது.  நீண்ட நெடிய வரலாறு, உயர்ந்த பாரம்பரியம், உலகளாவிய சிந்தனைகள், வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகள் எனப்  பல விதங்களிலும் உலகின் முன்னோடியாக விளங்கி வந்தது. பொருளாதாரத் துறையில் உலகின் செல்வந்த நாடாகப் பல நூறாண்டுகள் தொடர்ந்து இருந்து வந்தது.

நமது நாட்டின் செல்வச் செழிப்பும், குணாதிசயங்களுமே அந்நியர்களை நமது நாட்டின் பக்கம் இழுத்தன. பின்னர்  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இழந்து, பெரும் சேதங்கள், சீரழிவு, அவமானம் மற்றும் அச்சுறுத்தல்களையெல்லாம்  எதிர் கொண்டு கடைசியாக சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காகப் பல்வேறு கால கட்டங்களில்  நாட்டின் பல பகுதிகளிலும் பல  இலட்சக் கணக்கான பேர் எதிரிகளை எதிர்த்துப் போராடியும், வீர மரணம் தழுவியும், வெவ்வேறு வகைகளில் பங்களித்துத் தமது வாழ்வை அர்ப்பணித்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது சுயநலமிக்க  கொள்கைகளால் நமது பொருளாதாரம் சீரழிந்து, நாடு வறுமையும் பஞ்சமும் மிகுந்ததாக மாறிப் போனது. விவசாயம், தொழில், கல்வி எனப் பல துறைகளிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. வலுவான நமது கட்டமைப்புகள் எல்லாம் செயலிழந்து போயின. 

எனவே சுதந்திரம் பெற்ற உடனே நமது நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை வகுக்க வேண்டும்; அதன் மூலமே நாடு ஒட்டு மொத்தமான முன்னேற்றத்தைக் காண முடியும் என மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பினர். ஆகையால் சுதந்திரத்துக்கு முன்னரேயே, நாடு சுதந்திரம் அடைந்ததும்  கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகுமுறைகள் குறித்துப் பலரும்  விவாதம் செய்து சரியான அணுகுமுறைகளை முடிவு செய்ய வேண்டுமென அவர் முயற்சி எடுத்தார். அதற்காக அவர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு அதை நிராகரித்து விட்டார்.  

சுதந்திரம் பெற்ற பின்னர்  நாட்டுக்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஜவகர்லால் நேரு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி அந்நிய சித்தாந்தமான சோசலிச  முறையையே மையமாக வைத்தது.   அதன் மூலம்  பொருளாதாரத்துக்கெனத் தனக்கே உரித்தான வெற்றிகரமான வழிமுறைகளைக்   கொண்டிருந்த நமது நாட்டில், அந்நிய சித்தாந்தம் திணிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பொருளாதாரம் தவறான திசைக்குத் தள்ளப்பட்டது.

தொடர்ந்து வந்த இந்திரா காந்தி அரசு, சோசலிசத்தை  வலுவாகப் பிடித்துக் கொண்டது. ’வறுமையை ஒழிப்போம்’ என்பது வெற்றுக் கோஷமாக்கப்பட்டது. கூடவே மதச் சார்பின்மை என்பது அரசியலாக்கப் பட்டது. பின் வந்த காலகட்டத்தில் நாட்டுப் பொருளாதாரம் மோசமான விளைவுகளை எதிர் கொண்டது. எனவே அப்போதிருந்த காங்கிரஸ் அரசு  மற்றொரு  அந்நிய சித்தாந்தமான உலக மயமாக்கலை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. ஆக நமது நாட்டைப் பெரும்பான்மை காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தமது பொருளதாரக் கொள்கைகளை வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் அந்நிய வழி முறைகளையே முன் வைத்து வந்தன. அதனால் நாடு நமது வளங்களையும், மக்களின் திறமைகளையும் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை.   

 பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி, இன்ன பல துறைகளிலும், தேசியத் தன்மைகள் அற்ற அந்நியச் சிந்தனைகளேயே ஆட்சியாளர்கள்   ஆராதித்து வந்தனர். கல்விக் கூடங்கள் சொந்தச் சிந்தனைகள் எதையும் வளர்க்காத  மேற்கத்திய கோட்பாடுகளை மட்டுமே போதிக்கும் பணி மனைகள் ஆகிப் போயின. அயல் நாட்டுக் கொள்கைகளிலும், உள்நாட்டு பாதுகாப்பு விசயங்களிலும் கூட தேசத்தின் நலன் முதன்மைப் படுத்தப்படவில்லை.

2004 ஆம் வருடம் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டது. இலட்சக் கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விசயங்களில் கூட காங்கிரஸ் கட்சியின் சுய நலமும், குறுகிய எண்ணங்களுமே மையமாக இருந்தன. அவர்களின் பின்பகுதி ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. பெரு வாரியான  மக்கள் நம்பிக்கை இழந்து நின்றார்கள்.

அந்தச் சமயத்தில் தான் குஜராத் முதல்வராக இருந்த  மோடி தலைமையில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியலில் முப்பது வருடங்களுக்கப்புறம் ஒரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப்  பெற்றது அப்போது தான்.
அப்போது தொடங்கி கடந்த இரண்டு வருடங்களாகப் பல புதிய அணுகுமுறைகள் மூலம் வெவ்வேறு  முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதம மந்திரியாகத் தன்னைக் கருதாமல், தான் நாட்டின் பிரதான  சேவகனாகவே  இருக்க விரும்புவதாக அவர் அறிவித்தார். பாராளுமன்றத்துக்கு முதல் முறையாகச்  சென்ற போது அதன் படிக்கட்டில் தனது தலையை வைத்து வணங்கினார்; அதன் மூலம் பாராளுமன்றம் புனிதமானது என உணர்த்தினார்.

1950 களில் நாட்டுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு அப்போதைய பிரதமர் நேரு திட்டக் குழுவை அமைத்தார். அது ரஷ்யக் கம்யூனிஸ்ட்  தலைவர் ஸ்டாலினின் திட்டமிடுதலுக்கான அமைப்பு முறையை வைத்து ஏற்படுத்தப்பட்டது.  அந்த முறையில் திட்டமிடுதலை மெத்தப் படித்த சில பேர் டெல்லியில் உட்கார்ந்து மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் திட்டக் குழுவானது உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றில் பணியாற்றி, மேற்கத்திய பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிர நடைமுறைப் படுத்தும் நிபுணர்களின் கூடாரமாக மாறிப் போனது.

தனது முதல் சுதந்திர தின விழா உரையில், திட்டக் குழுவுக்கு மாற்றாக  ஒரு அமைப்பு உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 2015ஆம் வருடம்  ஜனவரியில் நிதி ஆயோக் என்னும் புதிய அமைப்பு அறிவிக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சம்  வருங்காலங்களில் பாரதிய சிந்தனைகளின் அடிப்படையிலேயே நாட்டுக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்படும் என்பதாகும்.

மேலும் இனி மேல் கொள்கைகள் வகுக்கும்போது பிற நாட்டு அணுகுமுறைகள் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே பின்பற்றப்படாது என்பதும் தெளிவாக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சுதந்திரத்துக்கு அப்புறம் முதல் முறையாக கொள்கை வகுப்பது என்பது நமது தேசத்தின் நடை முறைகளை மையமாக வைத்து மட்டுமே இருக்கும் என்று ஒரு அரசு தெளிவாக்கியுள்ளது.

திட்டக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசப் பிரதிநிதிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தும், கூட்டாட்சித் தத்துவத்தை மையமாக வைத்தும்  செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் திட்டமிடுதல் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதாக இருக்கும் எனவும், தேசத்தின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆட்சிக்குப் பெரும் இடையூறாக இருப்பதே ஊழல் தான். அதனால் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பலன்கள் முழுமையாக அவர்களைப் போய்ச் சேருவதில்லை. எனவே நிர்வாகத்தில் ஊழலை அகற்றுவதற்காகப் பிரதமர் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயரதிகாரிகள் மட்டத்தில் திறமையும் நேர்மையும் மிக்கவர்களுக்கே முக்கியமான  பொறுப்புகள்  கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலில் ஈடுபடுவோர், செயல்பாடு இல்லாதவர்கள் ஆகியோர் பணியிலிருந்து  நீக்கப்பட்டும், தண்டனைகளுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

கோப்புகள் ஒரே இடத்தில் தேங்காமல் இருக்க வழி முறைகள் வகுக்கப்பட்டு அவற்றைக் கடைப்பிடிப்பது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் ஊழலற்ற நிர்வாகம் உறுதியாக்கப்பட்டுள்ளது.இடைத் தரகர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.    

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த தொழில் நுட்பம் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது. அரசு சொத்துக்களை ஏலம் விடும் முறைகள் முற்றிலும் வெளிப்படையாக்கப் பட்டுள்ளன. அதனால் நிலக்கரி, அலைக்கற்றை உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் இதுவரை ஏலம் விடப்பட்டதில் மட்டும், பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்குச் சேர்ந்துள்ளது.

சாதாரண மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அரசின் உதவித் தொகைகள், மானியம் மற்றும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும், அவர்களை நேரடியாகச் சேரும் வண்ணம் இப்போது புதிய முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் படி அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அவர்கள் யாருடைய தயவுமின்றி அதை முழுமையாக அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்பட்டதால் இதுவரை 31 கோடி பயனாளிகளுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட முறை மூலம் போலி நபர்களும்  களையப் பட்டுள்ளனர். உதாரணமாக ஒரே நபர் போலியான பெயர்களில்  பல சமையல் எரிவாயு கனெக்சன்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் மானியங்களையும் பெற்று வந்தனர். அவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், ஏழை மக்களை வங்கிகள் சென்றடையவே இல்லை. அந்தக் குறையைக் களைய பணம் எதுவும் செலுத்தாமலேயே வங்கிக் கணக்குத் துவங்கும் ஜன தன திட்டத்தை மோடி துவக்கினார். அதன் மூலம் இதுவரை சுமார் 22 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.  அவற்றின் மூலமே அரசின் பணப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் சாதாரண மக்கள் அவர்களின் கணக்குகளில் போட்ட முதலீடு மட்டுமே நாடு முழுவதும் சேர்ந்து 37 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வரும்  மற்றொரு அம்சம் நாட்டின் அடிப்படைத் துறைகளான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் குறித்த சரியான பார்வை இல்லாத தன்மையாகும். மிக அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பளித்து, அதிகம் பேரை சொந்தக் காலிலேயே நிற்க வைத்து வருபவை குறு, சிறு தொழில்கள் தான். ஆனால் அவற்றில்  புதியதாக ஈடுபட விரும்புவர்களுக்கும், ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நிதி எளிதாகக் கிடைப்பதில்லை. வங்கிகள் மூலம் அவர்களுக்கு வெறும் நான்கு விழுக்காடு உதவியே கிடைக்கிறது. எனவே அவர்கள் தனியார்களிடம் மிக அதிகமான வட்டியைக் கொடுத்து கடன் வாங்கி சிரமப்படும் நிலையில் உள்ளனர்.

அவர்களின் குறையைப் போக்கும் வகையில் மோடி அரசு முத்ரா வங்கி என்கின்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் சாதாரண மக்கள் தொழில் நடத்த எளிதாகக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் மட்டும் இதுவரை மூன்றரை கோடி தொழில் முனைவோர்களுக்கு ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படிக் கடன் பெற்றவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்.

விவசாயத் துறையைப் பொருத்த வரையில் முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை நடைமுறைக்கு வந்துள்ளன. நமது விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக ஆக்குவோம் என்கின்ற இலக்கினைப் பிரதமர் அறிவித்துள்ளார். அதற்காக புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா உற்பத்தி அதிகரிப்பு, மண் பரிசோதனை முறைகள், சிறு தடுப்பணைகள் அதிகம் கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.   
கிராமங்களை முன்னேற்றுவதன் மூலமே நாட்டை முன்னேற்றமடையச் செய்ய முடியும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயத்துக்காக முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு  வேகமாக  வளர்ச்சியடைய வேண்டுமென்றால் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது. அதில் முக்கியமாக சாலைகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை முதன்மையானது. புதிய சாலைகளை உருவாக்கவும், சாலை வசதிகளைப்  பெருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலைகள் போடப்பட்டு வந்தன. அது இப்போது இருபது கிலோ மீட்டர்களாக அதிகரித்துள்ளது.

மோடி அரசு எடுத்து வரும் வேகமான நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரம் பற்றாக்குறை நிலையிலிருந்து உபரி நிலைக்கு மாறி வருகிறது.  மின்சார சேமிப்பை அதிகப்படுத்த நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட  எல்.ஈ.டி பல்புகள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்களை அரசு  கணக்கெடுத்த போது, அவை பதினெட்டாயிரத்துக்கு மேல் இருந்தன. ஆயிரம் நாட்களுக்குள் அவை அனைத்தையும் ஒளி பெறச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் அறிவித்தார். அதன்படி இதுவரை 7781 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

நாடு முன்னேற்றம் பெற இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும்; புதிய துறைகளிலும் தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வசதிகள் இருக்க வேண்டும். அதற்காக மத்திய அரசு வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் திறன்களை அதிகரிக்க முதன் முறையாக திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொழில்கள் பெருக அரசு நடவடிக்கைகள் எளிமையாக்கப் பட்டு வருகின்றன. அதனால் முதலீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.   எந்த முன்னேற்றமும் ஏழை மக்களைச் சென்றடையவில்லையானால், அது முழுமையடையாது. அந்த வகையில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் எரிவாயு  இணைப்புகள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வீடில்லாத நகர்ப்புற ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளும், கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகளும் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுத்தமான இந்தியா, மேக் இன் இந்தியா ( இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), டிஜிட்டல் இந்தியா எனப்  பல புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில்,  கழிவறைகள் கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, இதுவரை சுமார் 1.92 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

பொதுவாக இந்தியா என்றாலே வெளி நாடுகளில் நாம் ஒரு சாதாரண வளரும் நாடாகத் தான் பார்க்கப்பட்டு வரும் நிலை பரவலாக இருந்து வந்தது.  அந்த நிலையை மாற்றுவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் பிரதமர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்து வருகின்றன. வெளி நாடு வாழ் இந்தியர்கள் பெருமையுடன் தமது தாய் நாட்டைப் பற்றிப் பேசுவது அதிகரித்துள்ளது. இனி உலக அரங்கில் எந்த வித சர்வதேசப் பொருளாதார அரசியல் முடிவுகளையும் நமது நாட்டின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது என்னும்  நிலை உருவாகியுள்ளது. அண்மையில் நடந்த சர்வதேச சுற்றுச் சூழல் மாநாட்டில் இந்தியா முக்கியமான பங்கினை ஆற்றியது இங்கு குறிப்பிடத் தக்கது.

அறுபத்தைந்து வருடங்களாக நம்மை ஆட்சி செய்து வந்த அரசுகள், இந்த நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பெருமையாகக் கருதாத ஒரு அவல நிலை நீடித்து வந்தது. பிரதமர் வெற்றி பெற்றதும் தனது தொகுதியான வாரணாசியில் நெற்றியில் சந்தனமும் குங்குமும் பூசி, ஆரத்தி எடுத்து இறைவனை வழி பட்டது இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத ஒரு அரிய செயலாகும். 

அனைவருக்கும் வளர்ச்சி என்கின்ற மந்திரத்தை முன் வைத்து உறுதியுடன் செயல்பட்டுக்குக் கொண்டிருக்கும் மத்திய அரசு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியது.  அரசு எடுத்து வரும் வெவ்வேறு முயற்சிகளில், சிலவற்றின் பலன்கள் உடனடியாகத் தெரிகின்றன. இன்னும் பலவற்றின் பலன்கள் எதிர் வரும் காலங்களில் தான் முழுமையாகத் தெரியும். ஏனெனில் இப்போது போடப்படுவது செழிப்பான எதிர்காலத்துக்கான வலுவான அஸ்திவாரங்கள். மோடி அரசின் பணிகள் மென்மேலும் சிறக்க வேண்டும்; அதன் மூலம் வெகு சீக்கிரமே நமது தேசம் உலக அளவில் முதன்மை நிலைக்கு வர வேண்டும்.


( சுதேசி செய்தி, ஜூன் 2016)

கம்யூனிச சித்தாந்தம் பலனளிக்குமா?



ஏப்ரல் 19 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நிறைவுற்ற  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்தியொன்றாவது காங்கிரஸில் புதிய தேசிய பொதுச் செயலாளராக திரு. சீதாரம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 1964 ஆம் வருடம் உருவான  அந்தக் கட்சியின் ஐந்தாவது பொதுச் செயலாளர். 

இது வரை அந்தப் பதவியை வகித்து வந்த பிரகாஷ் கராத் கட்சியின் கோட்பாடுகளை  வலியுறுத்துவபர்  என்று அறியப்பட்டவர். மாறாக யெச்சூரி  நடைமுறையாளர் என்றும், பிற கட்சித் தலைவர்கள் பலருடனும் நெருக்கமான தொடர்பினை  வைத்துக் கொண்டுள்ளவராகவும்   அறியப்படுகிறார். 

2008 ஆம் வருடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  அமெரிக்காவுடனான மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து,  காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு வெளியில் வந்தது. அந்த முடிவுக்கு இடது சாரிக் கட்சிகளுக்குள்ளேயே  கருத்தொற்றுமை இல்லை. ஆயினும் அத்தகு முடிவை எடுப்பதற்கு பிரகாஷ் கராத்தின் உறுதியான அணுகுமுறைதான் காரணம் என்று கூறப்பட்டது.  அந்த நிலைப்பாட்டை அப்போது கட்சிக்குள் எதிர்த்தவர் யெச்சூரி என்று கூறப்படுகிறது. அதனாலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப் படுகிறார்.   

அவர் பொறுப்பேற்றதும் கம்யூனிஸ்ட் கட்சி சிரமமான சூழ்நிலையில் இருப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேரளாவைச் சேர்ந்த  இராமச்சந்திரன் பிள்ளையைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற்குக் கடைசி வரை கட்சிக்குள் ஒரு குழு முயற்சித்து வந்தது. 

1925 ஆம் வருடம் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில்  ஆரம்பிக்கப்பட்டது.  சுதந்திரத்துக்கப்புறம் 1957ல் முதன் முதலாக ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அக்கட்சி  தலைமை தாங்கிய அரசு கேரளாவில் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மேற்கு வங்காளத்தில் 1977 தொடங்கி முப்பத்தி நான்கு வருடங்கள் தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி ஆட்சி செய்து வந்தது. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிக் கூட்டணியின் தற்போதைய முதல்வர் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறார்.    

கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு விழுக்காடு தொடர்ந்து பல வருடங்களாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. 2004 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு எண்ணிக்கையில்  உறுப்பினர்களைப் பெற்றனர். பின்னர் 2009 பாரளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த வாக்கு விழுக்காடு 1.43 மட்டுமே. 2014ல்  நடைபெற்ற தேர்தலில் வெறும் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளனர். வலது கம்யூனிஸ்டுகள் ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் கம்யூனிஸ்ட்  கட்சி  தற்போது ஆட்சியில் இருப்பது திரிபுராவில் மட்டும் தான். கேரளாவில் இடது சாரிக் கூட்டணி எதிர்க் கட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. அண்மைக் காலமாக அக்கட்சியைச் சேர்ந்த பலர், பாஜக போன்ற மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.

கேரளாவில் நிலவும் கடும் கோஷ்டிப் பூசலால் கட்சி   பெரிய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை  நிறுவியவர்களில் தற்போதுள்ள ஒரே தலைவர்  கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். அவருக்கு எதிராகக் கடந்த பல வருடங்களாக அந்த மாநிலத்தின் கட்சித்  தலைமையே  தொடர்ந்து செயல்பட்டு வருவது அன்னைவருக்கும் தெரிந்தது தான். அவர் கட்சியின் மாற்றியமைக்கப்பட்ட தற்போதைய   மத்திய குழுவில் உறுப்பினராகக் கூட இல்லை; வெறும் அழைப்பாளர் மட்டுமே.

கம்யூனிச கட்சிகள் உலகளவில் கடந்த பல வருடங்களாகவே கடும் தோல்விகளைச்  சந்தித்து வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் முன் வைக்கும் தவறான சித்தாந்தத்தின் ஒற்றைப்படையான  தன்மையாகும். அதற்காக அவர்கள் உலக முழுவதுமே  வன்முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். ஜனநாயகக் குரல்வளையை நெறிக்கின்றனர். 

நமது நாட்டிலும் அவர்களின் செயல்பாடுகள் பலவும் தவறானதாகவே இருந்து வந்துள்ளது. 1962ஆம் வருடம் சீனா நமது நாட்டின் மீது படையெடுத்த போது அவர்கள் சீனாவை ஆதரித்தார்கள். 1979ல் மேற்கு வங்கத்தில் மரிச்சபி தீவில் வாழ்வதற்கு உரிமை கேட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் காணாமல் போயினர். பல நூறு பேர் கொல்லப்பட்டனர். பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. அந்த நடவடிக்கைகளை  ஜோதி பாசு  நியாயப்படுத்தினார். இன்று வரைக்கும் அதற்காக ஒரு மன்னிப்பு கூட யாரும் கேட்கவில்லை. அவர்களின்  மதச் சார்பின்மை வாதம் எவ்வளவு போலியானது என்பது சற்று  கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

கம்யூனிசமே ஐரோப்பியர்களின் குறுகிய அனுபவங்களின்  அடிப்படையில் பதினெட்டு- பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அங்கு நிலவிய சூழ்நிலைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது.  எனவே அது மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட எல்லா உலக நாடுகளுக்கும் எப்படிப் பொருந்த முடியும்?

உலக வரலாற்றில் ஐரோப்பாவின் அனுபவம் மிகவும் குறுகியது. அவர்களின் வரலாறும் கூட அப்படித் தான். ஏறத்தாழ பதினைந்தாவது நூற்றாண்டு வரைக்கும் அங்கு நிலப் பிரபுத்துவ முறை நிலவி வந்தது. அனைத்து நிலங்களும் சிலரிடத்தில் மட்டுமே இருந்தன. பெரும்பாலான மக்கள்  கஷ்டப்பட்டு உழைத்து வாழும் சாமானிய மக்களாக இருந்தனர். அவர்களுக்கு உரிமைகள் இல்லை.

அதற்குப் பின்னர் அங்கு ’மெர்க்கண்டலிசம்’ எனப்படும் வணிகத்துவ முறை நடைமுறைக்கு வந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த அரசுகள் வணிகத்தின் மூலம் தங்களது கஜானாவிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி இருப்புகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டன. அதற்காகக் கடலில் செல்லும் கப்பல்களைக் கொள்ளையடிப்பது ஒரு வழி முறையாகக் கருதப்பட்டது. அதற்கு அரசுகளின்  அங்கீகாரமும் இருந்தது.

தொடர்ந்து பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் முறை தோன்றியது. அதுவே பின்னர் காலனி ஆட்சி முறைக்கு வலி கோலியது. ஐரோப்பிய அரசர்கள் வணிகத்துக்காகப்  பிற நாடுகளைக் கைப்பற்றுவதற்கு ஊக்கமளித்தனர்; படைகளை அனுப்பினர். அதன் மூலம் உலகின் பல பகுதிகளையும் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தன. காலனி நாடுகளின் வளங்கள்  சுரண்டப்பட்டு, ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஆதிக்க நாடுகளின் கஜானாக்களில் செல்வங்கள் சேர்ந்து வணிகர்கள் கொழுத்த போதும், சாதாரண மக்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை. அவர்களுக்குரிய ஊதியம், தேவையான ஓய்வு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன.

அந்த சமயத்தில் 1776 ஆம் வருடம் வணிகத்துவ முறைக்கு மாற்றாக, ஆடம் ஸ்மித் என்னும் பொருளாதார நிபுணர் முதலாளித்துவ முறையை முன் வைத்தார். அதன் மூலம் அரசுகளின் தலையீடு இல்லாமல் தொழில்கள் உருவாக்கப் பட வேண்டும்; அதன் மூலம் நிறைய தொழில்கள் உருவாகி பல பேர் தொழில் துறைக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் அடிப்படை.

அந்த சமயத்தில் காலனி நாடுகள் மூலம் செல்வம் பெருகியது.  அதனால் தொழில்களும் அதிகரித்தன. தொழில் வளம் அதிகரிக்க இந்தியாவிலிருந்து திருடப்பட்ட வளங்கள் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தது என்று அவர்களின் வரலாற்றசிரியர்களே சொல்லியுள்ளனர்.   ஆனால் அந்த வளர்ச்சியின்  பலன்கள் பெரும்பாலான மக்களுக்குச் சென்றடையவில்லை. தொழிலாளர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாயினர். பெண்களும், குழந்தைகளும் கூட வேலைகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர். சாமானிய மக்களின் வாழ்க்கை மிகவும்  மோசமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில் தான் அங்கு 1867 ஆம் வருடம் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் “ தாஸ் கேபிடல்” என்ற நூலை எழுதி வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மையமாக வைத்து கம்யூனிச சித்தாந்தம் உருவானது. அதன்படி தொழில்கள் தனியாரிடம் இருக்கக் கூடாது; அவை அரசாங்கத்தின் கை வசமே இருக்க வேண்டும் என்னும் கொள்கை முன் வைக்கப்பட்டது. அதை நடைமுறைப் படுத்த கம்யூனிச ஆட்சி முறை உருவாக வேண்டும் என்று சொல்லப்பட்டது.

பின்னர் 1917 ஆம் வருடம் அப்போதைய சோவியத் ரஷ்யாவில் முதன் முதலாக லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி அமைக்கப்பட்டது.  1989 ல் கம்யூனிசம் தோற்றுப் போய் விட்டதாக  அந்த நாட்டின் தலைமையே  அறிவித்தது.  சோவியத் ரஷ்யாவே பத்துக்கு மேற்பட்ட நாடுகளாக உடைந்து போனது. 

கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கப்பட்ட இன்னொரு பெரிய நாடு சீனா. அங்கு  1949ல் மாசேதுங் கம்யூனிஸ்ட் ஆட்சியை அமைத்தார்.  பின்னர் 1970 களிலேயே சீனாவில் கம்யூனிசப் பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டன. அதன் பின் அவர்கள் முதலாளித்துவம் சார்ந்த கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றனர்.

நடைமுறையில் பிரபலமாக முன் வைக்கப்படும் இரண்டு பொருளாதாரக் கொள்கைகளான முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் இரண்டுமே ஐரோப்பியச் சித்தாந்தங்கள் தான். அவை உலக முழுமைக்கும் பொருத்தமானதாக ஆக முடியாது. ஏனெனில் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரித்தான தனித் தன்மைகள் உண்டு. அதற்கெனத் தனியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் ஆகியவை உள்ளன. அவையெல்லாம் அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம், சமூகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை.

பொருளாதார முறை என்பது ஒவ்வொரு நாட்டிலும்  வாழக் கூடிய மக்களின்  தன்மைகள், பழக்க வழக்கங்கள்,  எண்ணங்கள் ஆகியவற்றை மையமாக வைத்தே அமைகிறது. அதனால் தான் கம்யூனிசமே கூட சோவியத் ரஷ்யாவிலும், சீனாவிலும் ஒரே மாதிரி அமையவில்லை. ஆனால் மேற்கத்திய பொருளாதார சித்தாந்தங்கள் இரண்டும் உலக முழுமையையும் ஐரோப்பிய- அமெரிக்க  நோக்கிலேயே பார்க்கின்றன.

அதனால் தான் கம்யூனிசமும், மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியான சந்தைப் பொருளாதாரமும் உலக முழுவதும் தோல்வியைத் தழுவி வருகின்றன. அவை இரண்டுமே மேற்கத்திய பார்வையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஒன்று சந்தையை முன் வைக்கிறது. இன்னொன்று கட்சியையும், அரசாங்கத்தையும் முன் வைக்கிறது. அவை இரண்டிலுமே மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் குடும்பம், சமூகங்கள், உறவுகள் ஆகியவற்றுக்கு எந்த இடமும் இல்லை. நாடுகளின் வரலாறுகள், கலாசாரம், மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியனவற்றுக்கு இரண்டிலுமே எந்த விதப் பங்கும் இல்லை.

கடந்த முன்னூறு காலப் பொருளாதார வரலாறு ஒரு முக்கியமான விசயத்தை உலகுக்கு உணர்த்துகிறது.  ஒரு நாட்டு மக்களின் வேர்களுக்குப் பொருத்தமில்லாத  எந்த வித அந்நிய சித்தாந்தமும் அங்கு தோல்வியிலேயே முடியும் என்பது தான் அது.  மேலும், அந்நாட்டு மக்களுக்கு அது தீங்கிழைத்தும் விடும் என்பதையும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

சோவியத் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்துவதற்காக கோடிக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.  பல இலட்சக் கணக்கான பேர் பட்டினியால் மடிந்து போயினர்.  மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தீர்த்துக் கட்டப்பட்டனர். கலாசாரம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது. தனி நபர்களின் வாழ்க்கை முறையில் கூட கட்சியும் அரசாங்கமும் தலையிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? பின்னர் அந்த சித்தாந்தமே மக்களால் தூக்கி எறியப்பட்டது.

சந்தைப் பொருளாதாரமும் அப்படித்தான். கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் தங்களின் கோட்பாடுகளே உலக முழுமைக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும் என அதை  ஆதரிப்போர் கூக்குரல் போட்டனர். பின்னர் 2008 ஆம் வருடத்திய உலகப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் சிரமங்களைச் சந்தித்தன. எனவே இப்போது அவர்களால் எதுவும் பெருமையாகப் பேச முடிவதில்லை.

நாளுக்கு நாள் உலகம் வேகமாக மாறி வருகிறது. இந்த சமயத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாறுபட்ட சூழ்நிலைகளில் உருவான ஒரு சித்தாந்தம் தான் இந்தியாவுக்கும்  பொருந்தும் என்று சொல்லுவது நகைச் சுவை. கார்ல் மார்க்ஸ் போன்றவர்களுக்கு இந்தியாவைப் பற்றிச் சரியாகத் தெரியாது என்பதற்கு அவர் நமது நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள சில விசயங்களே போதுமானது. அவர் ஐரோப்பியர்கள் கொடுத்த சித்திரத்தை வைத்து நமது நாடு வெள்ளையர்களால் அழிக்கப்படுவதை ஆதரித்தார்.

நமது நாட்டுக்கெனப் பண்டைய காலந் தொட்டு  ஒரு தொடர்ச்சியான நீடித்த பொருளாதார முறை இருந்து வந்துள்ளதைக் கடந்த  முப்பது ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் வெளி வந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பொருளாதார வரலாற்றாசிரியான ஆங்கஸ் மாடிசன் அவர்களின் பொருளாதார வரலாற்று ஆய்வுகள், கடந்த இரண்டாயிரம் வருட காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதல் நிலையிலும், சீனா இரண்டாமிடத்திலும் தொடர்ந்து எண்பது விழுக்காடு காலம் இருந்து வந்ததை எடுத்து வைக்கின்றது.

2015 வருடத்துக்கு முன்னால் பொது யுக தொடக்க காலத்தில், உலகப் பொருளாதாரத்துக்கு இந்தியா மட்டுமே 32.9 விழுக்காடு பங்காக அளித்து முதல் நிலையில் இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் வந்து நமது பொருளாதாரத்தைச் சீரழிக்கும் வரை, இந்தியா உலகின் செல்வந்த நாடாக மிகப் பெரும்பாலான காலம் இருந்து வந்துள்ளது.   இன்னொரு பழமையான கலாசாரமான சீனாவுக்கும் தனித் தன்மை வாய்ந்த பொருளாதார முறை இருந்துள்ளது.

காலங்காலமாகத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நம்மை முதன்மை நிலையில் வைத்திருந்த பொருளாதார முறை ஒன்று இருந்துள்ளதே; அதன் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா? சுதந்திர இந்தியாவில், முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சோசலிச சிந்தனைகளை ஒட்டியே கொள்கைகள் வகுக்கப்பட்டன. எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை.

பின்னர் 1990 களில் தொடங்கி, உலக மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனால் நமது பொருளாதாரத்துக்குப்  பல்வேறு சிரமங்கள். மேற்கண்ட இரண்டு தவறான சித்தாந்தங்களைத் தொடர்ந்து  நடைமுறைப் படுத்திய பின்னரும், இந்தியப் பொருளாதரம் பல்வேறு சிரமங்களையும் மீறி நடை போட்டு வருகிறதே அதற்கு என்ன காரணம்?

அந்தக் காரணத்துக்கான அடிப்படை இந்த மண்ணில் உள்ளது; நமது மக்களிடம் உள்ளது.  எனவே நமது நாட்டுக்குத் தேவையான வழி முறைகள் இங்கிருந்து தான் உருவாக முடியும். நமக்கான சித்தாந்தம் நம்மிடத்திலிருந்து மட்டுமே தோன்ற  முடியும். ஏனெனில் நமக்கென ஒரு பெரிய பொருளாதார வரலாறு மட்டுமன்றி, இன்றளவும் நடை முறைகளும் இருந்து வருகின்றன. அதனால் தான் நமது மக்கள் உலக அளவில் இன்றும் அதிகமாகச் சேமித்து வருகின்றனர்; இலண்டன் மேலாண்மை நிறுவனத்தின் கணக்குப்படி எட்டரை கோடிப்பேர் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் இந்தியப் பொருளாதாரம் அந்நியக்  கோட்பாடுகளையும்,  அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசுகளையும் மீறி நடை போட்டு வருகின்றது. எனவே  நமது நாட்டுக்குக் கம்யூனிசம் உள்ளிட்ட மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே பொருந்தாது. இந்தக் கருத்தை இப்போது பெரும்பாலான உலகச் சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.  அமெரிக்கப் பொருளாதார முறைகளை ஆதரிக்கும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கூட ஒற்றைப் படையான பொருளாதாரக் கோட்பாடுகள் உலக முழுமைக்கும் பொருந்தாது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டன. ஏனெனில் இது சரித்திரம் கற்றுத் தரும் உண்மை.  

எனவே இந்த சமயத்தில் கம்யூனிச சித்தாந்தம் நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை. அப்படிச் சொல்பவர்கள் கம்யூனிசக் கட்சி ஆட்சி நடத்தும் சீனாவில் போய், ஏன் மார்க்ஸ் மற்றும் மாசேதுங் ஆகியோரின் கொள்கைகளைக் கடைப் பிடிக்கவில்லை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அல்லது முப்பத்தி நான்கு வருடங்கள் ஒரு மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடத்த வாய்ப்புக் கொடுத்த பின்னரும், ஏன் அவர்கள் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர வைக்க முடியவில்லை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டுக்கெனத் தனித்தன்மைகள் நிறைய உள்ளன. அதனால் நமது சமுதாயத்தில் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அவை தான் நமது மிகப் பெரிய பலம். எனவே நாம் நமது வரலாற்றையும், தற்போதைய நடை முறைகளையும் பார்ப்போம். அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். எந்த விதமான அந்நியக் கோட்பாடுகளை விடவும் பாரம்பரியம் மிக்க இந்த மண்ணின் செயல்பாடுகள் உயிப்புடையது.


( சுதேசி செய்தி, மே 2015)

மாதொருபாகன் நாவல் விவகாரம்: மக்களின் மீதான தாக்குதல்


திருச்செங்கோடு தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நகரம். திருச்செங்கோடு என்றவுடனே நினைவுக்கு வருவது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில்தான். ஆணும் பெண்ணும் சரிபாதி என்னும் இந்தியப் பண்பாட்டின் உயர்ந்த தத்துவத்தை நிலை நாட்டும் வகையில் மாதொரு பாகனாக ஆண்டவன் அங்கே காட்சி தருகிறார். கொங்கு நாடு முழுவதுமுள்ள கிராமங்கள் பலவற்றுக்கும்   அர்த்தநாரீஸ்வரர் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.  

திருச்செங்கோடு  பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் போதிய நீர்வளம் இல்லாததால் மக்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறினார்கள். தங்களின் கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் இன்று வெவ்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு ஒரு சுதேசி தொழில் மையம். முழுக்க முழுக்க சாதாரண மக்களின் உழைப்பினால் அரசின் துணையின்றி உருவான பகுதி. சில விதங்களில் தொழில் முனைவுக்கு தேச அளவில் கூட ஒரு எடுத்துக்காட்டு. அந்தப்பகுதி மக்களின் தொழில் திறமை தமிழகத்தின் பல  பகுதிகளை விடச் சற்று அதிகம். அவர்களிடத்தில் அசாத்தியமான தொழில் முனையும் தன்மை உள்ளது.

சென்ற 2011 ஆம் வருடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரப் பயணமாகச் சென்றிருந்தோம். முதல் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் கருத்தரங்கு முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது.

அருகில் சென்ற பார்த்த போது அது திருச்செங்கோட்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இவ்வாறு அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் இப்போது திருச்செங்கோடு நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது. போக்குவரத்துத் தொழிலில் பக்கத்தில் உள்ள நாமக்கல் மற்றும் சங்ககிரி தேசிய அளவில் மிக முக்கியமான தொழில் மையங்கள். எனவே அந்தத் தொழில் திருச்செங்கோட்டிலும் உள்ளது. மேலும் விசைத்தறி,  ஜவுளி உள்ளிட்ட தொழில்களை  மக்கள் செய்து  வருகின்றனர். 

 அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் தொழில் முனையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் பெருமையுடன் அறியப்பட்டு வந்த திருச்செங்கோடு,  கடந்த இரண்டு மாதங்களாக ஒரு தவறான காரணத்துக்காக பரவலாகப் பேசப்பட்டு  வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள், தேசிய மற்றும் மாநில    ஊடகங்கள்  எனப் பலவற்றிலும் தொடர்ந்து கட்டுரைகளும்,  விவாதங்களும், செய்திகளும் தொடர்ந்து  வந்து கொண்டுள்ளன. 

அதன் பின்னணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான பெருமாள் முருகன் என்பவர் எழுதிய மாதொரு பாகன் என்னும் நாவல் உள்ளது. அவரது புத்தகத்தில்  எழுபது வருடங்களுக்கு முன்னால் அங்கு நடந்தவற்றைச் சொல்வதாகக் கதையைப் படைத்துள்ளார்.  அது திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில்  வாழ்ந்த மக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

தனது நாவலுக்காகக்  கள ஆய்வுகள் மூலம் தகவல்களைச் சேகரித்ததாக அவர் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அதை எழுதுவதற்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நிதி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகம் வெளிநாட்டு வாசகர்களுக்காகப் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

நாவலின் கதாநாயகர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகிப்  பல வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.  திருமணமானவர்கள் குழந்தைப் பேற்றுக்காக இறைவனை வேண்டுவதும்,  மலைக்கு மேலே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று வழிபடுவதும் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.

நாவலில் குழந்தைப் பேறு தாமதமானதால், கதாநாயகி கோவில் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று இரவு முகம் தெரியாத வேறு ஆணுடன் உறவு கொள்ளுமாறு உறவினர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அது குழந்தைப் பேறு தாமதமானவர்களுக்கு வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைதான் என்றும், அதற்காகவே அன்று ஆண்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடப்பார்கள் என்றும், எனவே அதில் தவறு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் ‘சாமி குழந்தைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் நாவல் கூறுகிறது.

திருச்செங்கோடு பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வருடா வருடம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமானது. பதினைந்து நாட்கள் நடை பெறும் அந்த விழாவில் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து அது மிகவும்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியை அறிந்து கொள்ள இரு வாரங்களுக்கு முன்பு ஈரோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழில் துறை நண்பர்களுடன் திருச்செங்கோடு சென்றிருந்தேன். அப்போது அங்கு வாழும் பல சமூகங்களைச் சேர்ந்த மக்களையும், கோவில் கட்டளைதாரர்களையும் சந்தித்தோம். அப்போது அவர்கள் உண்மைகள் வெளியில் தவறாகச் சித்தரிக்கப்படுவதாக மிகுந்த மன வேதனையுடன்  கூறினர்.   

சென்ற வருட இறுதியில் அந்த நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சிங்கப்பூரில் வாழும் அந்த ஊரைச் சேர்ந்தவர் படித்திருக்கிறார். அதன் பின் அவர் இங்குள்ள  தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு, அந்தப் புத்தகத்தின் மூலமான தமிழ் நாவலைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார். அதன் பின்னரே அதிலுள்ள விசயம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

காலங்காலமாக தாங்கள் பிரதானமாக வழிபட்டு வரும் தெய்வத்தின் தேர்த் திருவிழா நிகழ்வுகள் பற்றியும், தங்கள் ஊர்ப் பெண்களின் கற்பு பற்றியும் மிகவும் கேவலமாகச்  சித்தரித்துள்ளதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அங்குள்ள சிலர் நாவலாசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அவர் அதற்கு முறையாகப் பதில் அளிக்காமல், இணைப்பையும் துண்டித்து விட்டதாகச் சொல்கின்றனர். அங்கு நாங்கள் சந்தித்த இரண்டு பேர்   அவரிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் தனது குடும்பம்  நாவலாசிரியருக்கு  நெருக்கமானது  எனக் கூறினார். 

பின்னர் உண்மையை அறியும் நோக்கில் ஊர் மக்கள் கூடிப் பேசி  காவல் துறையை அணுகி நாவலாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர்.  நாட்கள் கடந்த பின்னரும், அங்கு எதுவும் நடக்காததால், திருச்செங்கோடு நகரில் அவர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடையடைப்பு அனைவரின் ஒருமனதான ஆதரவாலும் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நிலைமையின் தன்மையைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், அதன் பின்னர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எழுத்தாளரிடமும் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் தனித் தனியாகப் பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ள விசயங்களுக்கு நாவலாசிரியர் ஆதாரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இல்லையெனில், தவறாகக் குறிப்பிட்டுள்ள பத்திகளை நீக்க வேண்டும் எனவும், அடுத்த பதிப்புகளில் அவை இடம் பெறக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்போது சம்பந்தப்பட்ட  அதிகாரியின் முன்னிலையில் நாவலாசிரியர் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் கற்பனையென்றும், அந்தப் புத்தகத்தின் விற்காத பிரதிகளைக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக்  கொள்வதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.  பொது மக்கள் தரப்பில் இனிமேல் எந்தவிதப்  போராட்டமும் நடத்தப் படக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். அவற்றை ஒரு ஒப்பந்தமாக அந்த அரசு அதிகாரி இரு தரப்பிலும் கையெழுத்துகளை வாங்கி முடித்துள்ளார்.

மறு நாள் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் தனக்குள்ளிருந்த நாவலாசிரியர் செத்து விட்டதாகவும், இனிமேல் ஒரு கல்லூரி ஆசிரியராக மட்டுமே அவர் செயல்படுவாரென்றும் அறிவித்தார். உடனே அந்த விசயம் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள்,  ஊடகங்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இடது சாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால்  அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  

அதற்காகப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன; நாடு முழுவதும் செய்திகள் வந்தன. தேசிய அளவிலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலிருந்து, தமிழகத் தொலைக் காட்சிகள் வரை பலவற்றிலும் விவாதங்கள் நடத்தப் பட்டன.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.  சர்வதேச அளவில் பி.பி.சி. மற்றும் பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.

அவை எல்லாவற்றிலும் முக்கியமாக உள்ளூர் மக்கள் ஜாதியவாதிகளாகவும், மத வெறி பிடித்தவர்களாகவும் ஒரு மனதாகச் சித்தரிக்கப்பட்டனர்.  ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி அவர்களை ‘லும்பென்’ (lumpen) என மோசமாகக் குறிப்பிட்டது. தமிழகத்தின் ஒரு இடதுசாரி அறிவுஜீவி ‘ பாசிசக் குழு’ என அம்மக்களை வர்ணித்ததாக பத்திரிக்கைச் செய்தி வந்தது.

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் நாவலாசிரியரின் எழுத்துரிமைக்கு என்று சொல்லி  வாதாடும்  அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விசயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? தாங்கள் புனிதமாக வழிபடும் தெய்வத்தின் தேர்த் திருவிழா பற்றியும், தங்கள் பகுதி பெண்களின் மானம் பற்றியும் வரலாறு என்று சொல்லித் தவறுதலாகச் சித்தரித்தற்கு ஆதாரம் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லையா?

ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு  எந்தவிதமான  ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும்  பொறுப்புக்கள் உள்ளன. அதற்கான கட்டளைகள் அவர்கள் அனைவருக்கும் காலங்காலமாக இருந்து வருகிறது.

மேலும் தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அமைதியான முறையில் தமது எதிர்ப்புகளைச் சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஊர்வலமாகச் சென்றபோது, சிலபேரால் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகள் எரிக்கப்பட்டன.    

அதற்காக அவர்களை வன்முறையாளர்கள் என ஊடகங்கள்  சித்தரிக்கப்படுவது  குறித்து மிகவும் கவலை  தெரிவிக்கின்றனர். அந்த  மக்களைப் பற்றி எவ்வளவோ குறைகளைச் சொல்லும்  ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விசயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன?

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்த்திருவிழாவின் பதினான்காவது நாள் நிகழ்ச்சிக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் மக்கள் கூறுகின்றனர். புலவர் இராசு கொங்கு நாட்டின் முக்கியமான சமகால வரலாற்றாசிரியர். தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தவர்.  நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியவர். தமிழக அரசின் முதல் உவேசா விருதினைப்  பெற்றவர்.  திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர். 

அவர் நாவலில் குறிப்பிட்டுள்ள அந்த விசயங்களுக்காக எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.  மேலும் கொங்கு நாட்டுப் பெண்கள் ஆரம்ப முதலே தமது உயிரை விடவும் மானத்தைப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறார். அங்குள்ள வயதில் மூத்தவர்களும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி எதுவும் இருந்ததாகத் தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே  இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் அந்த நாவலில் வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கு தேவடியாள் தெரு என இருந்ததாகப் புத்தகத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவரடியார்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவில் கட்டளைதாரருமான ஏ. கோபால கிருஷ்ணன் அது முற்றிலும் தவறு என மறுக்கிறார். அது தேரடித் தெரு என்றும், அதிலுள்ள முதல் வீடே அந்த  நகரத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குச் சேர்ந்தது என்றும், இன்னமும் அது அவர்களின் குடும்பத்திடமே இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

சுப்பராயன் அவர்கள் 1926 முதல் 1930 வரை மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராகவும், பின்னர் நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், இந்தோனேசியா நாட்டுக்கு நமது தூதராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இன்று வரை அரசாங்கத்தில்  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

நன்கு படித்து சொந்தமாகத் தொழில் புரியும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடத்தில் சொன்னார். “ சார், திருமணமாகி ஆறு வருடங்களாக எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகத் தினமும் நான்  மாதொருபாகனை வேண்டி வருகிறேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது, இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டுமென இந்த முற்போக்கு வாதிகள் விரும்புகிறார்கள்?” அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களில் நீர் ததும்பியது.

பிரபல சமூகவியலாளர் பிரான்சிஸ் புகுயாமா சொல்கிறார்: “ சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல” இந்திய தேசம் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும்  அமைதியான முறையில் இயங்கி, மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தமது கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றையொட்டித் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. அரசாங்கத்தைக் கூடச் சார்ந்து நிற்பதில்லை.

இந்தப் பண்புகள் தான் இன்று உலக அளவில் நமது தேசத்தின் மிகப் பெரிய பலம். நமது சமூகங்கள் தேசத்தின் அமைதிக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஆற்றி வரும் பங்கு பற்றி ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன.   அப்படித்தான் திருச்செங்கோடு, நாமக்கல், சங்ககிரி,  சிவகாசி, சூரத்  ஆகியன இன்று தேசப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன.  அதற்கு அந்த மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை நெறிகள் ஆகியவையே காரணமாக இருந்து வருகின்றன.   

எனவே தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி  வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள்  மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்? 

 ஊடகத்தின் மூலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாத மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உதவுதுதான் அறிவுலகவாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அது முற்றிலும் மாறாக நடக்கிறதே? கொலைக் குற்றவாளிக்குக் கூட  அவனது கருத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த பின்னரே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விசயத்தில் எந்த வித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் அந்த ஊர் மக்கள் அனைவர் மீதும் தொடர்ந்து  குற்றம் சாட்டிக் கொண்டே செல்வது எந்த வகையில் நியாயமாகும்?

எந்த வித ஆதாரமும் இல்லாமல் நடைமுறைகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன;  கற்பனை வரலாறாகிறது. பின்னர் அவற்றுக்கு விளக்கம் கேட்கும் மக்கள் தொடர்ந்து கேவலப்படுத்தப் படுகின்றனர். எனவே இந்தப் பிரச்னை கருத்துச் சுதந்திரம் பற்றியதல்ல. மாறாக பாரம்பரியமான தமிழ் கலாசாரத்தின் மீதும், தமது உயிரை விட மானத்தைப் பெரிதாகக் கருதும் பெண்கள் மீதும், அந்தப் பகுதி சார்ந்த ஒட்டு மொத்த மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவே உள்ளதாக மக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.   

( சுதேசி செய்தி, மார்ச் 2015)


நீதி ஆயோக்: தேச முன்னேற்றத்துக்குப் பாரதீய அணுகுமுறை

சென்ற வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் அறிவிக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று திட்டக்குழுவைக் கலைப்பதென்பதாகும். ஏனெனில் அந்த அமைப்பு கடந்த பல வருடங்களாகவே வெவ்வேறு தரப்பினரிடமிருந்தும்  கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தது.  

இந்தியா சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் வருடம் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு  திட்டக் குழுவை  அமைத்தார். அதற்கான தாக்கத்தை அவர் கம்யூனிச ஆட்சியின் கீழிருந்த அப்போதைய சோவியத் ரஷ்யாவிடமிருந்து  பெற்றார்.  

அதற்குப்பின் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சித்தாந்தங்களாக மேற்கத்திய சிந்தனையாளர்களால் முன் வைக்கப்பட்ட கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டுமே பெருமளவு நிராகரிக்கப்பட்டுள்ளன.

1980களின் இறுதியில் கம்யூனிச சித்தாந்தம் தோற்றுப் போய், சோவியத் ரஷ்யாவே பல பிரிவுகளாகச் சிதறுண்டு போனது. கம்யூனிசத்தின் மற்றொரு முகமான சீனா,   சோசலிச பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு விட்டது.  கம்யூனிச ஆட்சி அதிகாரத்தின் கீழ் தமக்கேற்றவாறு சந்தைக் கோட்பாடுகளைக் கொண்ட  ஒரு பொருளாதார முறையை அது நடைமுறைப் படுத்தி வருகிறது.

மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தம் காலப் போக்கில் முழுவதும் சந்தைப் பொருளாதாரமாக மாறிப் போனது. தொடர்ந்து வந்த காலங்களில் உருவான புதிய கோட்பாடுகள் அனைத்தும் நிதிச் சந்தைகளை மையமாக வைத்தே அமைந்தன. அதில் அமெரிக்க சிந்தனைகளின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. 

அந்த சித்தாந்தமும் ஆரம்ப முதலே உலகின் பல பகுதிகளிலும் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் மேற்கத்திய பணக்கார நாடுகள் அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தங்களின் வழி முறைகள் மட்டுமே உலக முழுமைக்கும் பலன் தரக் கூடியவை எனச்   சொல்லி வந்தன.

பின்னர் 2008 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உருவாகி தொடர்ந்து உலகின் பல நாடுகளையும் பாதித்த உலகப் பொருளாதார நெருக்கடி, அவர்களின் நம்பிக்கையையே தகர்த்துப் போட்டது. அதனால் அந்த நாடுகளைச் சேர்ந்த பெரும் நிபுணர்களே இப்போது அவர்களின் சித்தாந்தை வெளிப்படையாகக் குறை கூறுகின்றனர்.  கடந்த சில வருடங்களாக  மேற்கத்திய நாடுகள் பலவற்றில் தொடரும்  பிரச்னைகள், அந்த வாதங்களுக்கு வலு சேர்க்கின்றன.

எனவே உலக நாடுகள் அனைத்துக்கும் மேற்கத்திய கொள்கைகளே பொருத்தமாக இருக்கும் என ஆலோசனை கூறி வந்த சர்வதேச அமைப்புகளான உலக நிதி ஆணையம் போன்றவையெல்லாம் கூட , ஒரே மாதிரி கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது எனக் கூற ஆரம்பித்து விட்டன. ஆகையால் நாடுகள் ஓவ்வொன்றும்   முன்னேறுவதற்கு வெவ்வேறு வகையான வழிமுறைகள் இருக்க  முடியும் எனப் பரவலாக இன்று ஒத்துக் கொள்ளப்படுகிறது. 

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரம் பெற்ற பின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சோசலிச சித்தாந்தமே அரசின் கொள்கைகளில் மையமாக இருந்து வந்தது. ஆனால் அது எதிர்பார்த்த பலனைத் தராததால், 1990 களின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலக மயமாக்கல் சிந்தனைகளை ஒட்டிய  திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. எனவே அரசின் கொள்கைகள் பெருமளவு மேற்கத்திய சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளை ஒட்டியே கடந்த அறுபத்தைந்து வருடங்களாக இருந்து வருகின்றன.

அதனால் தான் நமது தேசத்தின் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்த போதும் நம்மால் முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை. இன்னமும் வறுமையும், அடிப்படையான   பிரச்னைகளும் நமக்குச் சவால் விட்டுக் கொண்டுள்ளன.

அதே சமயம் மேல் மட்டத்தில் கொள்கை வகுப்பவர்கள் தொடர்ந்து தவறான சித்தாந்தங்களைத் தேர்வு செய்து வரும் போதும், மக்கள் தேசத்தின் பொருளாதாரத்தை தங்களால் முடிந்த அளவு முன்னெடுத்துச் சென்று கொண்டுள்ளனர். நமது மக்களுக்கே உரிய தனித் தன்மைகளான  குடும்பம் சார்ந்த வாழ்க்கை முறை, அதிக சேமிப்புகள், கடுமையான உழைப்பு, தொழில் முனையும் தன்மை, சமூக மூலதனம் ஆகியன தேசத்தின் வளர்ச்சிக்கு,  மேற்கத்திய சித்தாந்தங்களையும் மீறி, வழி வகுத்து வருகின்றன.

 திட்டக் குழுவைப் பொறுத்த வரையில் அது எப்போதோ காலாவாதி ஆகிவிட்ட அமைப்பு. இந்தியாவைப் போல ஒரு பரந்த பெரிய தேசத்துக்கு வெளிநாடுகள் அல்லது பெரு நகரங்களைச் சேர்ந்த   பல்கலைக் கழகங்களில் பொருளாதாரம் படித்த சித்தாந்த வாதிகள் சில பேர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கீழ் நோக்கித் திட்டம் தீட்டும் முறை என்பதே மிகவும் தவறானதாகும்.

ஏனெனில் நமது தேசம் பல்வேறு வகையான வளங்கள், திறமைகள்,  மற்றும் தொழில்களைக் கொண்டது. அவையெல்லாம் அந்தப் பகுதி மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் பின்னிப் பிணைந்தவை. அவற்றுக்கெனத்  தனியான சிறப்புகள் உண்டு. ஆனால் அவையெவற்றைப் பற்றியும் பாடத்திட்டங்களில் எதுவும் இல்லை. 

பல்கலைக் கழகங்களின் பாடங்கள் பலவும் மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் மற்றும் அவர்களின் சிந்தனைகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்களை மையமாக வைத்தே உள்ளன. மேற்கத்திய சிந்தனைகள் பலவும் தங்களின் கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் மட்டுமே உயர்ந்தவை; எனவே தமது வழிமுறைகள் மட்டுமே சரியானவை என்கின்ற அடிப்படையைக்  கொண்டவை.

சுதந்தர இந்தியாவில் முதல் முறையாக மத்திய அரசு கொள்கை வகுப்பதில் பாரதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரைக்கும் வந்த அரசுகள் நமது நாட்டுக்கென உள்ள தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் திட்டமிடுதலில் முன் வைக்கவில்லை. அவை நமக்கென தனித்தன்மைகள் உண்டு என்று சொல்லக் கூடத் தயங்கி வந்தன.

 அண்மைக் காலங்களில் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், நமது தேசம் பழைய காலங்களிலும் இன்றும் தனது தனித் தன்மைகள் மூலமே சிறப்பாக இயங்கி வந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் மட்டும், ஏறத்தாழ எண்பத்தைந்து விழுக்காடு காலம் இந்தியா உலகின் செல்வந்த நாடாக முதல் நிலையில் இருந்து வந்தது என்பதை வெளியிட்டுள்ளார்.

கடந்த நாற்பது வருடங்களாக மேற்கத்திய கோட்பாடுகள் உலகின் பல நாடுகளிலும் பெரும் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால் நமது தேசம் உள் நாட்டுக் கொள்கைக் குழப்பங்களையும், வெளி நாட்டுத் தலையீடுகளையும் மீறி தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்குக் காரணம் நமக்கென உள்ள தனித் தன்மைகள் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி வருகின்றது.

நமது தேசத்துக்கென உள்ள திறமைகளையும் வாய்ப்புகளையும் உலகம் உணரத் தொடங்கி வருகிறது. ஆனால் நமது நாட்டைச் சேர்ந்த பொருளாதார வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகள் ஆகியோரில் பலரும் அவற்றை அங்கீகரிக்கத் தயங்கி வந்தனர். 

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கைக் குழு, கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று, அவற்றைச் சரி செய்யும் நோக்கில் அமைக்கப் பட்டிருக்கிறது.  பல்துறை நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் பிரதிநிதிகள் எனப் பல பேருடன் கலந்து, நிறைய விவாதித்து  இந்த அமைப்பு ஏற்பத்தப்பட்டுள்ளது.

பழைய திட்டக் குழுவில் இருந்து வந்த பெரிய பிரச்னையே, மத்திய மாநில அரசுகளுக்கிடையில் இருந்து வந்த சுமுகமில்லாத போக்கு. மத்திய திட்டக் குழு, மாநில அரசுகளை நடத்திய விதம் பல சமயங்களில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. தற்போதைய கொள்கைக் குழுவில் மாநில அரசுகளின் வளர்ச்சி மூலமே தேசம் வளர்ச்சி பெறும் என்பது அடிப்படையாக ஆக்கப் பட்டிருக்கின்றது.

மத்திய- மாநிலக் கூட்டுறவுக்கான வழி முறைகள் கொள்கைக் குழுவில் மையமாக வைக்கப்பட்டிருக்கிறது.  மாநில முதல்வர்கள் அனைவரும் குழுவின் அங்கமாக ஆக்கப்பட்டுள்ளனர்.  மாநிலங்களுக்கிடையில் வரும் பிரச்னைகள் எழும் போது  மண்டலக் குழுக்கள் உருவாக்கப் படும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

திட்டங்கள் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டு, அவை மேல் நோக்கிச் செல்லும் வகையில் குழு செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. விவசாயத் துறையைப் பொருத்த வரையில் உற்பத்தித் திறன்கள் அதிகரிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு என்பதை மீறீயதான வளர்ச்சியாக இருக்கும்.

நமது நாட்டில் சிறு, குறு மற்றும் , மத்திய தரத் தொழில்களே மிகப் பெரும் பங்கு வகித்து வருகின்றன.  சாதாரணக் குடும்பங்களால் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கிடையே நடத்தப் பட்டு வரும் அவை,   பொருளாதாரத்துக்கு ஏறத்தாழ பாதியளவு பங்கினை அளித்துக் கொண்டுள்ளன; வேலை வாய்ப்புகளில் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் பங்களித்து வருகின்றன.

நமது தேசத்தில் தொழில்களை வளர்ப்பது, தொழில் முனைவோரை உருவாக்குவது, ஏற்றுமதிகள் செய்வது எனப் பலவகைகளிலும் அவற்றின் பங்கு அதிகமாக உள்ளது. அவற்றை முடுக்கி விட்டால், நாட்டின் பொருளாதார  முன்னேற்றத்தை அதிகரிக்க முடியும் ஆனால் அவை தொடர்ந்து வந்த அரசுகளால் இதுவரை கண்டு கொள்ளப்படவேயில்லை. இப்போது முதல் முறையாக அவற்றுக்கு உதவி செய்யும் வகையில் கொள்கைகள் அமைக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படக் கூடிய பல விதமான முறைகளை அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகின்றனர். அவற்றில் பலவற்றை வேறு இடங்களிலும் செயல்படுத்த முடியும். ஆனால் அவை பற்றி மற்ற இடங்களில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது ஒரு மையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் மூலம் நாட்டில் நடக்கும் நல்ல செயல்பாட்டு முறைகள் அனைவருக்கும் சொல்லப்படும்.

நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணம் ’ சமூக மூலதனம்’ என்பதாகும். அது பிறருடன் இணக்கமாக இருந்து செயல்படும் தன்மை. அது வெளி நாடுகளில் மிகவும் குறைவு. ஏனெனில் அவர்களின் தனி நபர் வாழ்க்கைத் தத்துவம் கடந்த சில வருடங்களில் உறவுகளை வேகமாக அழித்து வருகிறது. நமது நாட்டில் அது அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் அரவணைத்துச் செல்லும் நமது மனப்பாங்கு மற்றும் உறவுகள் சார்ந்த நமது வாழ்க்கை முறை.

பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மூலதனம் பெருமளவு உதவி புரிந்து வருகின்றது. எனவே அதை அதிகரிக்க வெளி நாடுகளில் எவ்வளவோ முயற்சி செய்து வருகின்றனர்.  இப்போது முதன் முறையாக சமூக மூலதனம் தேச வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது என அங்கீகரிக்கப்பட்டு, அது கொள்கைகள் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் சேவைத் துறைகளை உலகத் தரம் வாய்ந்ததாக உயர்த்த கொள்கைக் குழு முயற்சிகளை  மேற்கொள்ளும் என்பது நமது தேசம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதற்கான ஒரு நடவடிக்கையாகும். மேலும் இதுவரை உலக அரங்கில் பொருளாதார விவாதங்கள் மற்றும் கொள்கை வகுப்பதில் குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகளே முக்கிய பங்கு வகித்து வந்தன. இனிமேல் அத்தகு சமயங்களில் இந்தியா முக்கியமான இடத்தை வகிக்குமளவு கொள்கைக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நமது நாட்டை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் இன்னொரு முக்கிய முயற்சியாகும்.

வெளி நாடு வாழ் இந்தியர்கள் உலகின் பல நாடுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் செல்வாக்கையும்  இதுவரை வந்த அரசுகள்  முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது அவர்களை நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கொள்கைக் குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் முனையும் தன்மை, கண்டுபிடிப்புகள், பாரம்பரிய அறிவு ஆகியவை நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவற்றை முழுமையாக வெளிக் கொணர்ந்து நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை கொள்கைக் குழு செய்ய உள்ளது. இதுவும் ஒரு முக்கியமான விசயமாகும்.

இளைஞர்களின் சக்தியை கல்வி, தொழில் நுட்பம் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் மூலம் பயன்படுத்துவது கொள்கைக் குழுவின் ஒரு நோக்கமாகும். மக்களிடையே உள்ள வித்தியாசங்களைக் களைதல், வாய்ப்புக்கள் குறைந்த பிரிவினருக்கு அதிக கவனம் கொடுத்தல், பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய அம்சங்களை கொள்கைக் குழு கவனிக்கும்.  மத்திய தர வர்க்கத்தினர் தங்களின் முழுத் திறமைகளை வெளிப்படுத்த கொள்கைக் குழு கவனம் செலுத்தும்.

மொத்தத்தில் நமது தேசத்தின் அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு , வெளிநாட்டுச் சித்தாந்தங்களை மையப்படுத்தாமல் நமக்குப் பொருத்தமான வகையில் திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக கொள்கைக் குழு  அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் பயன் பெரும் வகையில் ஒட்டு மொத்தமான முன்னேற்றம் ஏற்பட முடியும். தொடர்ச்சியாக இந்தியா உலக அளவில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக இதன் மூலம் பெரிய உந்துதல் கிடைக்கும் என நம்புவோம். 


 ( சுதேசி செய்தி, பிப். 2015)