தேசியமே அம்பேத்கரின் உயிர் மூச்சு




அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891 ஆம் வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி தற்போதைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். மிகுந்த சிரமங்களுக்கிடையில் திறமையாகப்  படித்து, மேற்படிப்புகளுக்காக வெளிநாடுகள் சென்றார். அங்கு அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஒன்று, இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக் கழகத்தில் இன்னொன்று என பொருளாதாரத் துறையில் இரண்டு டாக்டர் பட்டங்களை பெற்றார். மேலும் இங்கிலாந்தில்  சட்டப் படிப்பிலும்  தேர்ச்சி பெற்றார்


பின்னர் நாடு திரும்பி ஆரம்பத்தில் கல்வித் துறையிலும், பின்னர் சட்டத் துறையிலும் பணியாற்றினார். அப்படியே பொது வாழ்வில் நுழைந்து,  பின்னர் சமுதாயத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததிலும், சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றதிலும் அவரது பங்கு அசாத்தியமானது. ஆனாலும் அவரை அவற்றுக்குள் மட்டுமே அடக்கி விட முடியாது.  அவர் பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்தவர். ஒரு மாமேதை; தீர்க்க தரிசி.  ஒரு அப்பழுக்கற்ற தேசியவாதி


அதனால் தான்  நாம் முதலிலும், கடைசியிலும் இந்தியர்கள்என முழங்கினார். மேலும், “ நான் அனைவரையும் முதலில் இந்தியனாக இரு;  கடைசி வரைக்கும் இந்தியனாக  இரு; நாம் இந்தியர்கள் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை என்று இருக்க வேண்டுமென விரும்புகின்றேன்என்று கூறினார்


அவரது எண்ணங்களும்,  செயல்பாடுகளும் தேசத்தின் நலன் மற்றும் எதிர்காலம் பற்றியே இருந்தது. அவரது ஆழ்ந்த படிப்பு மற்றும் அறிவுத் திறனால், சம காலத்திய அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துக்களை மீறி அவர்  சிந்தித்தார். உதாரணமாக, ஆரியர்கள் என்று ஒரு இனத்தவர் வெளியிலிருந்து நமது நாட்டுக்கு ஊடுருவி வந்தார்கள் என்று ஒரு கட்டுக்கதை, கோட்பாடு என்கின்ற பெயரில் காலனி ஆதிக்க காலத்தில் ஐரோப்பியர்களால் பரப்பப்பட்டது


அதை ஒட்டித் தான் நமது தமிழ் நாட்டில் கூட ஆரியம், திராவிடம் என மக்களை இரு பிரிவுகளாகப் பிரித்து, அதன் மூலம் பிரிவினைவாத கருத்துக்கள் எல்லாம் பல வருட காலமாக  பேசப்பட்டு வந்தன. ஆனால் அண்ணல் அம்பேத்கர் அதற்காக தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு, தனது புத்தி கூர்மையால் 1946 ஆம் ஆண்டிலேயே அந்தக் கோட்பாடு முழுமையாகத் தவறானது  எனக் கூறினார். அது பொய்யானது என பின்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லா விதமான அறிவியல் ஆய்வுகளும் தெளிவு படுத்தின. தொடர்ந்து ஆங்கிலேயர்களே கூட அதைத் தவறென ஒப்புக் கொண்டு விட்டனர்


அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அந்தக் குழுவின் தலைவராக அம்பேத்கர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து கொடுக்கும் வகையில்  சட்டத்தில்  வழிவகை செய்ய வெண்டுமென ஷேக் அப்துல்லா அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு முரணானது என அம்பேத்கர் எடுத்துச் சொன்னார்.  அவர் ஷேக் அப்துல்லாவிடம், “ இந்தியா உங்கள் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும்; உங்கள் பகுதிகளில் சாலை போட வேண்டும்; உங்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும்; ஆனால் இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக் கூடாதுஎன்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம் ஆகும் எனக் கேட்டார்.


ஆகையால் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்தால், அது இந்திய நலன்களுக்கு எதிராக துரோகம் செய்ததாகி விடும். எனவே சட்ட அமைச்சராக இதை நான் எப்போதும் செய்ய மாட்டேன்என தெளிவாகக் கூறினார். பின்னர் ஷேக் அப்துல்லா நேருவை அணுகினார். ஏனெனில் அது குறித்து நேரு முன்னரே அப்துல்லாவிடம் வாக்கு கொடுத்திருந்தார். எனவே அண்ணலின் விருப்பத்துக்கு மாறாக அப்துல்லா விரும்பிய படி நேருவின் உதவியால் சட்டப் பிரிவு 370 சேர்க்கப்பட்டது


அப்போது தொடங்கி  சுமார் எழுபது  ஆண்டுகள்  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் நிறைய அதிகாரங்களும் சலுகைகளும்  கொடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலங்களில் காஷ்மீர் பகுதியில் பிரிவினை வாதமும் தீவிரவாதமும் பெருகின. சுமார் ஐந்து லட்சம் இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். அதே சமயம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தொகைகள் வருடா வருடம் மத்திய நிதியாக அங்கு சென்று கொண்டிருந்தது. சென்ற வருடம் தான் அம்பேத்கர் விரும்பிய படி சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 மோடி அரசால் நீக்கப்பட்டு நாடு முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டது.  


மேலும் நாட்டில் வேறுபாடின்றி அனைவருக்கும் சட்டங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்;  அதன் மூலம் சமூக அமைப்புகளில் சமனற்ற நிலை நீக்கப்பட்டு, மறுமலர்ச்சி கொண்டு வர வேண்டும் என்று அவர் கருதினார். அதுதான் மக்களாட்சியில் ஒரு நாடு கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறையும் ஆகும். எனவே அதற்காக நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்  நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அப்போது அதற்கு எதிர்ப்பு வந்ததால்,  அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில்  சட்டப் பிரிவு 44 மூலம் அதைச் சேர்த்தார். அம்பேத்கரின் அந்த விருப்பம்  இன்னமும் நிறைவேறாமல் இருக்கிறது.


1947ல் நாடு பிரிக்கப்பட்ட போது, அப்போதைய பாகிஸ்தான் பகுதிகளில்  இருந்த இந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பெருமளவில் தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில்  கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அப்போது அம்பேத்கர் அங்கிருக்கக் கூடிய சிறுபான்மை மக்களை எப்படியாவது இந்தியா திரும்பி வந்து விடுமாறு அறைகூவல் விடுத்தார். இரண்டு நாடுகளும் மக்கள் தொகை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அரசுகளுக்கு ஆலோசனை கூறினார்


அம்பேத்கர் அப்போது விடுத்த எச்சரிக்கை சரியெனக் கொஞ்ச நாட்களிலேயே அனைவருக்கும்  புரிய ஆரம்பித்தது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஜோகேந்திரநாத் மண்டல் நியமிக்கப்பட்டார்.  ஏனெனில் அவர் பட்டியலின மக்களை பாகிஸ்தான் நன்றாக நடத்தும் என நம்பி, ஆயிரக் கணக்கானோரைத் திரட்டி அந்நாட்டுக்கு ஆதரவளித்தார். ஆனால் சீக்கிரமே  சிறுபான்மை இந்துக்களுக்கு அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு அவர் தலைமையிடம் எடுத்துச் சொன்னார். எதுவும் நடக்கவில்லை. கொடுமைகளைத் தடுத்த நிறுத்த முடியாத தனது நிலைமை உணர்ந்து வெறுத்துப் போய், அமைச்சர் பதவியை விட்டு விலகி விட்டு 1950 ஆம் வருடமே இந்தியா திரும்பி வந்து பின்னர் இங்கேயே காலமானார்.   


 சுதந்திர காலம் முதல் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பின்னர் உருவான வங்காள தேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப் பட்டனர். கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். அதனால் அவர்களின் மக்கள் தொகை அங்கு பெருமளவு வீழ்ச்சியடைந்து,   அடிப்படை உரிமைகள் கூட இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பான்மை மக்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அந்தச் சிரமங்களில் இருந்து  2014 ஆம் ஆண்டு வரை இங்கு தப்பி வந்த சிலருக்குத்தான் மோடி அரசாங்கம் அண்மையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது


அண்ணல் அவர்கள் மத மாற்றம் மக்களை தேசியத்திலிருந்து விலக்கி விடும் என்று கருதினார். எனவே மலை வாழ் மக்கள் மதம் மாறக் கூடாது என்று கூறினார். அப்போதிருந்த சூழ்நிலையில் தீண்டாமை காராண்மாக 1965 ஆம் வருடம் அவரே தனது மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு  முன்னர் புத்த மதத்துக்கு மாறினார். அதற்குக் காரணம் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத கூறு எனக் கண்டறிந்தார். தனது மத மாற்றம் இந்திய நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்றையும் பாதிக்கக் கூடாது என்பதில் தான் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாகக் கூறினார். அதனால் தான் இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும்,  இந்து மதமும்  பௌத்தமும் ஒரே மதத்தின் கிளைகள் எனவும் கூறினார்.


அவர் கம்யூனிசத்தை கடுமையாக எதிர்த்தார். அது மக்களாட்சியை அழிக்கும்; கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பவர்கள்; எனவே நான் கம்யூனிசத்துக்கு பரம்பரை எதிரி எனக் கூறினார். தனிப்பட்டவர்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அழித்து, எதேச்சாரிகாரத்தைக் கொண்டு வருவதையே லட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சியுடன் தமது  பட்டியலின வகுப்பினர் அமைப்பும், கட்சியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உறவு  வைத்துக் கொள்ளாது என அறிவித்தார். 1952ல் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் அவர் மும்பையில் போட்டியிட்ட போது, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரும்   அவரைத் தோற்கடித்தனர்


கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அம்பேத்கர் அவர்கள் பட்டியலின மக்களுக்கு அன்று கொடுத்த எச்சரிக்கை, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில்  நிரூபணமானது. 1977 தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்காக  வங்காளதேச நாட்டிலிருந்து  அடைக்கலம் கேட்டு திரும்பி வந்த பட்டியலின ஏழை அகதி மக்களுக்கு உரிமைகள் கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். அதை நம்பிய மக்கள் அவர்களுக்கு ஆதரவளித்தனர். ஆட்சியில் அமர்ந்த பின்னர், 1979ல் மரிச்சபி தீவு பகுதியில் வாழ்ந்த அந்த மக்கள் சுமார் 30000 பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்


அதற்காக அந்த மக்களைக் கட்சியினரும் போலீசும்  கொடுமைப் படுத்தினர். அவர்கள் தங்களின் தீவுப்பகுதியை விட்டு வெளியில் சென்று உணவுப் பொருட்கள் கூட வாங்க முடியாமல்  பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் குடிசைகளுக்குத் தீ வைத்தனர். படகுகளை உடைத்தனர். குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி, நீரில் தள்ளியும், அடித்தும், கற்பழித்தும் கொன்றனர். அதுதான் சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய பட்டியலின மக்கள் படுகொலை. இறந்து போனவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்


அண்ணல் அம்பேத்கர் இந்தியர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென விரும்பினார். அவர் சிறுபான்மையினரை தாஜா செய்வது ஜனநாயக அரசின் அடிப்படைக் கொள்கைகளை வேரோடு அழிப்பதாகும் எனக் கூறினார். மேலும் பெரும்பான்மையோரின் விருப்பத்தை சிறுபான்மையினர் கருத்துக்கும் கீழான நிலைக்குத் தள்ளுவது எந்த விதத்திலும் நியாயமாகாது என எச்சரித்தார். இது தற்போதுள்ள பெரும்பான்மை போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு ஒரு பொருத்தமான அறிவுரையாகும்


நமது தேசத்தின் தொன்மையான நூல்கள் மேல் அவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். மேலும் நீதி மற்றும் தர்ம சாஸ்திரங்களைப் போல மனித குலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது எனக் கூறினார். மதம் குறித்த அவரது பார்வையிலும் பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடமிருந்து அவர் மாறுபட்டிருந்தார். மதம் மக்களுக்கு அபினியல்ல; மாறாக மனிதனுக்கு மதம்  கண்டிப்பாகத் தேவை என்றார். தன்னிடம் இருக்கும் நல்ல பண்புகளுக்கும் தன் கல்வியால் சமுதாயத்துக்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் தனது மத உணர்வுகளே காரணம் எனச் சொன்னார்


மேலும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட காலம் கட்டாயம் இராணுவப் பயிற்சி அவசியம் எனக் கூறினார். அதன் மூலம் தேசப்பற்று வளரும் என அவர் நம்பினார். நமது நாடு பொருளாதார முன்னேற்றத்தை அடைய தொழில் துறை வளர வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற அவர்களுக்கு குறந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்க வேண்டும் எனக் கோரினார். மத்திய மாநில அரசுகளிடையே நிதிகளைப் பகிர்ந்தளிக்கும் நிதிக் குழு அமைக்கப்பட்டதில் அவரது பங்கு முக்கியமானது


பிரதமர் நேருவுடன் பல சமயங்களில் அவர் கருத்து வேறுபட்ட போது, அதைச் சொல்ல தயங்கியதில்லை. வெளியுறவுக் கொள்கை உட்பட்ட பல விசயங்களில் நேருவின்  தவறுகளை நேரடியாக சுட்டிக் காட்டினார். பின்னர் தனது உறுதியாக நிலைப்பாடு காரணமாக 1951 ஆம் வருடமே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.  அறுபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து 1956ல் மறைந்த அவரின் சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் நமது தேசத்தின் நலனே மையமாக இருந்தது. பாரத் ரத்னா டாக்டர் அம்பேத்கர் ஒரு மிகச் சிறந்த தேசியவாதி.