துணைவேந்தர் நியமனத்தை அரசே மேற்கொள்வது அரசியல் தலையீடு மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும் - பேரா கனகசபாபதி அறிக்கை

 

பொதுவாக தற்போது தமிழகப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் செய்ய வேண்டி வரும் போது, அதற்காக மூன்று பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அதில் பல்கலைக் கழக சிண்டிகேட் மற்றும் செனட் சார்பாக ஒவ்வொருவர் குழுவுக்கு நியமிக்கப்படுகின்றனர்.  மாநில ஆளுநர் மூத்த கல்வியாளர் ஒருவரை அதற்கு அமைப்பாளராக நியமிக்கிறார். சில பல்கலைக் கழகங்களில் விதி முறைகள் சற்று மாறுபடும். 

அந்தக் குழு துணைவேந்தர் பொறுப்புக்கு விருப்ப மனு செய்துள்ள பேராசியர்களின் தகுதி மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆலோசித்து, மூன்று பேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்குக் கொடுக்கும். அந்த மூவரில் தகுதியானவர் என ஆளுநர் கருதுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகிறார். இது தான் இப்போது வரை இருந்து வரும் நடைமுறை.

இந்த முறையை மாற்றி நியமனத்தை முழுதும் தமிழக அரசே செய்யும் வகையில் சட்டமன்றத்தில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது சட்டமாக்கப்பட்டால், தமிழக உயர் கல்வித் துறை முழுவதும் அரசியலாக்கப்படும். மேலும் ஊழல் பெருகும். அதனால் உயர் கல்வித் துறை சீர் கெட்டு விடும்.

கடந்த காலங்களில் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் தமிழக பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் தான். பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் அவரது அதிகார பூர்வ வீட்டில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக நேரடியாகப் பிடிபட்டார். அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் லஞ்ச வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.

மேலும் தமிழ் நாடு விவசாயப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகம், உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மேல் வழக்குகள் நடந்து வருகின்றன. தவறாக நியமிக்கப்படும் துணைவேந்தர், மேலும் தவறுகளில் ஈடுபடுகிறார். ஆசிரியர்- பணியாளர் நியமனங்களில் ஊழல்கள், முறைகேடுகள், விதி மீறல்கள் என வெவ்வேறு வகைகளில் அவை அமைகின்றன.  அதனால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல விசயங்களிலும் பணம் முக்கியமாக இருந்தாகப் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் வந்த பின்னரே தமிழகத்தில் துணை வேந்தர்கள் நேர்மையான முறையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் சில வருடங்களாக தமிழக கல்வித் துறையில் நம்பிக்கை வந்துள்ளது.

கல்வித் துறை பொதுப் பட்டியலில் உள்ளது மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக் குழு கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறது. பல்கலைக் கழக கட்டமைப்பு வசதிகள், ஆய்வு நிதிகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே இதில் மாநில சுயாட்சியில் தலையீடு என்பது இல்லை.

ஆளுநர் குடியரசுத் தலவரின் பிரதிநிதியாக மாநிலத்தில் செயல்பட்டு வருகிறார். அவருக்கென பொறுப்புகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் இருக்கும் போது தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் நமது சட்டங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்துள்ளன.  

நேர்மையான முறையில் நியமனங்கள்  நடைபெற்று, தமிழகத்தில் கல்வித் துறை உயர வேண்டும் என நினைப்பவர்கள் ஏன் தற்போதுள்ள முறையை மாற்ற வேண்டும்? எனவே தற்போது திமுக அரசு உத்தேசித்துள்ள மாற்றம் அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. தமிழக அரசு உயர் கல்வித் துறையின் எதிர்காலம் கருதி தற்போது கொண்டு வந்துள்ள தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.

நம்மை விடப் பல மாநிலங்கள் கல்வித் துறையில் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டுள்ளதை புள்ளி விபரங்கள் எடுத்துச் சொல்கின்றன. எனவே நாம் செய்ய வேண்டிய ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய உள்ளன.

மாறாக தமிழக அரசு தீர்மானத்தில் உறுதியாக இருந்தால் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து மாநில அரசை வலியுறுத்த வேண்டும். மாநில ஆளுநர் இந்த தீர்மானத்துக்கு அங்கீகாரம் கொடுக்க கூடாது.

( தினமலர், ஏப் 27, 2022)