Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

உயர் கல்வித் துறையில் சிந்தனை மாற்றம் அவசியம்



உலகின் மற்றெந்த நாட்டையும் விட கல்வித் துறையில் நமக்கு ஒரு பெரிய பாரம்பரியமும், நீண்ட வரலாறும் உள்ளது. உயர் கல்வியைப் பொறுத்த வரையில் உலகின்  முதல் பல்கலைக் கழகமான தட்சசீலாவில் தொடங்கி, நாளந்தா உள்ளிட்ட பல புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயல் பட்டு வந்துள்ளன.

ஒரு காலனி நாடாக இந்தியா மாறிய பின்னர்,  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம்மை ஆளுமை செய்து வந்த ஆங்கிலேயர்கள் இங்கு  நிலவி வந்த கல்வி முறையை  மாற்றினர். அதற்கான நோக்கம் நமது தேசத்தின் அடிப்படையைத் தகர்த்தெரிந்து, நாட்டை அடிமையாக வைக்க வேண்டும் என்பது தான்.

அதனால் இங்கு நிலவி வந்த கல்விக்கான கட்டமைப்புகள் உடைக்கப்பட்டன. கல்வித் திட்டம், பாடங்கள், போதனை முறைகள் ஆகிய பலவும் மாற்றப்பட்டன. அதனால் இந்தியக் கல்வி முறை ஒரு மிகக் குறுகிய காலத்தில்  சிதைந்து போனது.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர், 1820களில் நாட்டின் பல பகுதிகளில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் கல்வி முறை சிறப்பாகச் செயல்பட்டு வந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன. அப்போது கல்வி அறிவு பெற்றோர் சுமார் சுமார் எழுபத்தைந்து விழுக்காடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பின்னர் மெக்காலே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அறுபது வருடங்கள் கூட ஆகாத நிலையில், 1891ல் கல்வி அறிவு பெற்றோர் வெறும் ஆறு விழுக்காடாகக் குறைந்து போனதாக அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் வேதனையுடன் குறிப்பிடுகிறார். அதைத் தான் மகாத்மா காந்தி ஒரு அழகான மரம் அழிந்து போனது என்று 1931ல் இலண்டனில் குறிப்பிட்டார்.  

இப்போது நமது நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தேழு ஆண்டுகள் முடிந்து விட்டன. கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.  ஆயினும் கல்வித் துறையில் காலனிய மற்றும் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கமே அதிகம் நிறைந்துள்ளது.  
அதனால் நமது நாட்டைப் பற்றிய சரிதான புரிதல் நம்மிடத்தில் இல்லை. நமது வரலாறு, சிந்தனைகள்,  மக்களின்  வாழ்க்கை முறை,  நடை முறைகள் ஆகிய எவை பற்றியும் நமது பல்கலைக் கழகங்கள் சரியாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. 

ஏனெனில் நாடு குறித்த தெளிவான கருத்துக்கள் நமது கல்விக் கூடங்களில் இல்லை. அவை பற்றி அங்குள்ளவர் பலருக்கும் தெரிவதே இல்லை.  அதற்குக் காரணம் அவர்கள் இங்கு நிலவும் நிலைமையை நேரடியாகக் கண்டறிந்து தெரிந்து கொள்வதில்லை. அதற்குப் பதிலாக மேல் நாட்டு ஆசிரியர்கள் எழுதுவதை அப்படியே வைத்து, அவர்களின் கருத்தோட்டம் மூலமே இந்தியாவை நோக்குகின்றனர்.

காலனி ஆட்சியின் போது ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட  சார்பு மன நிலை இன்னமும் நமது உயர் கல்வித் துறையைப் பீடித்து வருகிறது. அப்போது ஐரோப்பியர்களிடம் அடகு வைக்கப்பட்ட நமது மூளை, இன்னமும் எல்லாவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளை  நம்பிக் கொண்டிருக்கிறது.

அதனால் மொழி, வரலாறு, பொருளாதாரம், அறிவியல், சமூகவியல் என எந்தத் துறையை எடுத்தாலும் நமது அடிப்படைகளைப் பிரதிபலிக்கின்ற கருத்தோட்டங்கள் இங்கு பெரும்பாலும் இல்லை. இந்தப் போக்கு நமது நாடு குறித்த தவறான எண்ணங்களை மாணவர்களிடம் விதைத்து வருகிறது. அதனால் தேசம் குறித்த நேர் மறை எண்ணங்கள் குறைந்துள்ளன; நாட்டின்   முன்னேற்றம் தடை பெற்றுள்ளது.

உதாரணமாக பொருளாதாரத் துறையை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இன்றைக்குப் பொருளாதாரமே  மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானதாக முன் வைக்கப்படுகிறது.  நமது பாடப்புத்தகங்களைப் படிக்கும் போது  பழைய காலந் தொட்டு இந்தியா ஒரு ஏழை நாடாக விளங்கி வந்ததாகவே ஒரு வலுவான எண்ணம் உருவாகும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஆரம்ப காலந் தொடங்கி, ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நம்மை ஆளுமைப் படுத்தும் வரை, இந்தியா உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடாக விளங்கி வந்துள்ளது. பொது யுகம் தொடங்கி கடந்த இரண்டாயிரம் வருட காலமாக உலகப் பொருளாதாரம் செயல் பட்டு வந்த விதம் குறித்து, 1980 களில் இருந்து சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் வெளி வந்து கொண்டுள்ளன.

அவை ஐரோப்பியர்கள் காலனி ஆதிக்க காலத்தில் உருவாக்கி வைத்த உலக வரலாறு குறித்த தவறான பிம்பங்களை அப்படியே உடைத்துப் போட்டுள்ளன.  யாராலும் மறுக்கப்படாத பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் குழுவினரின் ஆய்வுகள்  பொது யுக தொடக்க காலத்தில் இந்தியா உலகப் பொருளாதாரத்துக்கு மூன்றில் ஒரு பங்கினை அளித்து ஒரு பெரிய வல்லரசாக விளங்கி வந்ததை எடுத்து வைக்கின்றன.

மேலும் இந்தியா கடந்த இரண்டாயிர வருட காலத்தில் எண்பது விழுக்காடு காலம் முதல் நிலையில் இருந்து வந்ததையும், இந்தியாவும் சீனாவும் உலகின் இரு பெரும்  பொருளாதார சக்திகளாக விளங்கி வந்தைதையும் கூறுகின்றன. மேலும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற  நாடுகள் உலகப் பொருளாதார வரை படத்தில் தங்களின் தலையைக் காட்டுவதே பதினாறாம் நூற்றாண்டுகளில் தான் என்பதும், காலனி நாடுகள் மூலமே ஐரோப்பாவில் பொருளாதாரம் மேலெழுந்தது என்பதும் தெளிவாக்கப் பட்டுள்ளன. 

இந்தியப் பொருளாதாரம் தனது இடத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இழந்துள்ளது. இவை இப்போது உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மைகள். ஆனால் இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்த முக்கியமான விபரங்கள் எதுவும் தெளிவாக சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் நமது பேராசிரியர்கள் இன்னமும் நமது நாடு குறித்த உண்மைகளை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் மேற்கண்ட ஆய்வுகளை நடத்தியவர்கள் பலரும் மேலை நாட்டவர்கள் தான்.

பழைய வரலாறு பற்றி மட்டுமல்ல; நிகழ்கால நடை முறைகள் பற்றியும் நமது கல்வித் துறைக்குச்  சரியான பார்வையில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே உலகின் முக்கிய பொருளாதார சித்தாந்தங்களாக அறியப் படும் கம்யூனிசம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவி வருகின்றன. மேலும் ஐரோப்பிய அமெரிக்க கோட்பாடுகள்  அவர்களின் நாடுகளிலேயே தோல்வியில் முடிந்து வருகின்றன.  

அதே சமயம் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு உலக அளவில் அதிகரித்து வருகிறது.  இன்றைக்கு உலகின் நான்கு பெரிய பொருளாதாரங்களில் அமெரிக்காவைத் தவிர மற்ற மூன்றும் ஆசியாவில் தான் உள்ளன.

2008 ம் வருடத்திய உலகப் பொருளாதார நெருக்கடியில்  அதிகம் பாதிக்கப்படாத நாடாக இந்தியா இருந்தது. எதிர் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்ற எல்லா நாடுகளை விடவும் சிறப்பாக இருக்கும் எனப் பலராலும் கணிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம் நமது நாட்டின் தனித் தன்மைகள். நமது குடும்ப அமைப்பு முறை, சேமிப்புகள், சமூக உறவு முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாசாரம் ஆகிய பலவும்  நமது வளர்ச்சிக்குத் துணை புரிந்து வருகின்றன. எனவே நமது வளர்ச்சிக்கான காரணம் பற்றி அறிந்து கொள்ள மேல் நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை மெதுவாக இங்கு வந்து கொண்டுள்ளன.

ஆனால் நமது நாட்டிலுள்ள எத்தனை பல்கலைக் கழகங்கள், இந்தியாவில் நடைமுறையில் உள்ள  பொருளாதார, வியாபார, மேலாண்மை முறைகள் பற்றிப் படித்து வருகின்றன?  தேடிப் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

மும்பையில் தினமும் தவறாமல் மதிய உணவு கொண்டு செல்லும் டப்பாவாலாக்களைப் பற்றி நம்மில் சிலருக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அப்படி திறமையாகச் செயல்பட்டு வருவது வெளி உலகுக்குத் தெரிந்ததே இங்கிலாந்து இளவரசர் அவர்களைப் பற்றி அறிந்து பின்னர் நேரில் இங்கு வந்து பார்த்த செய்திகள் வெளியான பின்னர் தான்.  

நமது நாட்டைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொண்டு வரும் சில நல்ல விசயங்கள் கூட மேலை நாட்டு ஆய்வாளர்கள் சொல்லியதாகத் தான் உள்ளது. அந்த அளவுக்கு நம்முடைய உயர் கல்வித் துறையில் ஒரு தேக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை. 

இவ்வாறு மேலை நாட்டவரின் கருத்துக்களையே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் எல்லாத் துறைகளிலும் நிலவுகிறது. எந்த பொருளாதாரப் புத்தகத்தில் தமிழ் நாட்டின் பண்டைய வணிகம் பற்றிப் பேசப்படுகிறது? உலகின் தலை சிறந்த  மருத்துவரான சுஷ்ருதரின் கருத்துக்கள் மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படுகிறதா? 

எனவே உயர் கல்வித் துறையைப் பொறுத்த வரையில் பெரிய சிந்தனை மாற்றம் அவசியமாகிறது. அரவிந்தர்,  தாகூர்,  மகாத்மா காந்தி உள்ளிட்ட நமது தேசத்தின் தலை சிறந்த சிந்தனையாளர்கள் வலியுறுத்தியவாறு தேசம் சார்ந்த கல்வி முறை வர வேண்டும்.

மாறி வரும் சூழ்நிலையில் இந்தியா இன்று உலக அளவில் மிக முக்கியமான நாடாக உருவாகி வரும் உள்ளது.  நமது நாடு உயர வேண்டுமெனில், அடுத்த தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையும், தேசம் குறித்த சரியான பார்வையும் தேவை. அதற்கு உயர் கல்வித் துறை தன்னுடைய சரியான கடமையைச் செய்ய வேண்டும்.

( தினமணி மாணவர் மலர் மே 2015)


வணிக மயமாகும் கல்வி



பண்டைய காலந் தொட்டு உலக அளவில் இந்திய நாடு கல்விக்குப் பெயர் பெற்று விளங்கி வந்துள்ளது. உயர் கல்வித் துறையில் உலகத்திலேயே முதன் முதலாக சுமார் இரண்டாயிரத்து எழுநூறு வருடங்களுக்கு முன்னரே தட்சசீலத்தில் பல்கலைக் கழகம் செயல்பட்டு வந்ததை வரலாறு எடுத்துச் சொல்கிறது. அதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து படித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பின் வந்த நூற்றாண்டுகளில் நாளந்தா உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டு நன்கு செயல்பட்டு வந்துள்ளன. 

அப்போதெல்லாம் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரையில் கல்வி அளிக்கும் பொறுப்பை சமூகங்களே தங்களின் தலையாய கடமையாக ஏற்றுக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் நமது தேசத்தில் நிலவிய கல்வி முறைகள் பற்றி, 1820 களில் அவர்கள் நடத்திய கணக்கெடுப்புகளே  தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.

மறைந்த சிந்தனையாளர் திரு.தரம்பால் அவர்கள் அப்போதைய கல்வி முறை குறித்து ஆங்கிலேயர்களின் ஆவணங்களை வைத்தே விபரமாக எழுதியுள்ளார். அவை ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு பள்ளிக் கூடமாவது இருந்து வந்ததையும், கல்வி அனைத்து ஜாதியினருக்கும் கொடுக்கப்பட்டு வந்ததையும் விரிவாகத் தெரிவிக்கின்றன. மேலும் அன்றைய கல்வியின் நோக்கமே  மனிதனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொருவரையும் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்குத் தயார் படுத்தும் வகையிலும் அமைக்கப் பட்டிருந்திருக்கிறது..

இந்தியக் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வி பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருந்ததை ஆங்கிலேயர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். அங்கு கல்வி என்பது தாமதமாக பிந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கி மேட்டுக் குடியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதுவும் முக்கியமாக மதம் சார்ந்த கல்வியாகவே இருந்துள்ளது. காலனி ஆதிக்க காலத்தில் அவர்கள் நமது கல்வியை முறையைப் பார்த்துத் தெரிந்து கொண்ட பின்னரே,  அங்கு கல்வியை விரிவு படுத்துவது பற்றிய தெளிவு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி மனித வாழ்க்கையின் அடிப்படையான அம்சமாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் பிரமச்சரியம் என்று ஒரு குறிப்பிட்ட காலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஆரம்பத்திலும் கல்வி கற்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்ப காலந் தொட்டே நமது நாட்டில் இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், கணிதம், நுண்கலைகள் எனப் பல துறைகளும் சிறந்து விளங்கி வந்துள்ளன.  அதனால் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இன்றளவும் உலகுக்கு முன்னோடியாக விளங்கி வரும் ஞானிகளையும், அறிஞர்களையும், வல்லுநர்களையும் இந்தியா  உருவாக்கி வந்துள்ளது.

நமது தேசத்தின் ஆதாரங்களைப் புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியக் கல்வி முறையைச் சிதைத்தால் தான் நாட்டை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.   அதன் படி 1830களில் ஆங்கிலேயர்களின் ஆயுதமாக ‘மெக்காலே’ கல்வி முறை நமது நாட்டில் புகுத்தப்பட்டது.  அதன் மூலம் கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக இருந்த நிலை மாற்றப்பட்டது. தொடர்ந்து வசதி படைத்த குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கல்வித் திட்டத்தின் நோக்கம் ஆட்சியாளர்களின் நிர்வாகத்துக்கு உதவி செய்வதற்கு சில இந்திய இளைஞர்களைத் தயார் செய்வது என மாறிப் போனது. ஆரம்ப காலந் தொட்டுப் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்வி போதனைகள் மாற்றப்பட்டன. அதனால் நமது நாட்டுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு அந்நிய முறை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய  கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியதன் அவசியம் குறித்து மகரிஷி அரவிந்தர், ரவீந்திர நாத் தாகூர், காந்திஜி உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் விபரமாக எடுத்துச் சொல்லியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் கல்வித் துறையில் அவசியமான மாற்றங்கள் இன்னும் ஏற்படுத்தப் படவில்லை.

அதனால் நமது தேசம் சார்ந்த கல்வி இன்னமும் போதிக்கப்படுவதில்லை. எனவே நமது வரலாறு மட்டுமன்றி, நிகழ்கால நடைமுறைகள் கூட கல்வித் திட்டத்தில் இல்லை. அதில் சொந்த சிந்தனைகள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மாறாக அந்நியக் கருத்துக்களும் வழி முறைகளும் ஆரம்பக் கல்வி தொடங்கி, பல்கலைக் கழகங்கள்  வரை ஆக்கிரமித்துள்ளன. ஆகையால் முழுமையில்லாத ஒரு கல்வி முறையைத் தான் நாம் இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் வணிக நோக்கு அதிகரித்து வருகின்றது. இது கல்வித் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது. அதனால் கல்வி வியாபாரப் பொருளாக மாறி, கல்விக் கூடங்கள் விற்பனை மையங்களாக மாறி வருகின்றன.

ஆரம்பக் கல்விக்கே இலட்சக் கணக்கில் பணம் கேட்கும் பள்ளிக்கூடங்கள் உருவாகி விட்டன. பொறியியல் மற்றும்  மருத்துவக் கல்வி போதிக்கும் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு பெற்றோர்கள் பல இலட்சக் கணக்கில் நன்கொடைகளைக்  கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக கல்விக் கட்டணங்களும் அதிகமாகி வருகின்றன.

எனவே சாதாரண நிலையில் இருக்கும் குடும்பங்கள் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளையே நாட வேண்டியுள்ளது. தரம் வாய்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அரசின் அடிப்படை விதி முறைகளைக்  கூடக் கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கல்வி வணிக மயமாவதால் பல சமயங்களில் ஆசிரியர்களின் தரமும் குறைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள்  குறைவான சம்பளத்தைக் கொடுத்து அதிகமாக வேலை வாங்குவதைத் திறமையெனக் கருதிச் செயல்படுகின்றன. அதனால் ஆசிரியர்களின் மனநிலை ஆக்க பூர்வமாக இருப்பதில்லை. கூடவே அரசு நிறுவனங்களில் அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்களிடமும் கடமை உணர்வு வெகுவாகக் குறைந்து வருகிறது.  

அண்மைக் காலமாக உயர்கல்வித் துறையில் துணை வேந்தர் உள்ளிட்ட மேல் பொறுப்புகளில் அதிக அளவில் தவறுகள் நடப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தவறான வழியில் வரும் தகுதியில்லாத நபர்கள் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப் படும்போது, கல்வித் துறையே நம்பிக்கை இழந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே கல்வித் துறையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும்  சிரமங்களின்றிக் கிடைக்கும் வகையில் தேவையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசம் சார்ந்த தரமான கல்வியை  மக்களுக்கு அளிப்பது ஒரு தேசியக் கடமையாகக் கருதப்பட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

( பி.எம்.எஸ்.செய்தி, மே 2014)