Showing posts with label தினமலர் - வெற்றிக்கதைகள். Show all posts
Showing posts with label தினமலர் - வெற்றிக்கதைகள். Show all posts

உலகுக்கே வழிகாட்டும் இந்தியா


நம் நாட்டில் உள்ள தொழில் மையங்களின் வெற்றிக்கதைகளை பார்த்தோம். இந்த மையங்களின் வெற்றிக்கு தனி மனிதர்கள், அவர்களின் குடும்பம், அவர்கள் சார்ந்த சமுதாயம் போன்றவையே காரணமாக இருந்துள்ளதையும் பல ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இந்த தொழில் மையங்களின் வளர்ச்சி, பொருளாதார வீழ்ச்சியில் உலகத்தின் முன்னணி நாடுகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா ஸ்திரமான வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் நம் நாட்டில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் உயர்ந்த காலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறை தான். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்தது. எந்தவொரு செயல்பாட்டையும் தனித்துப்பார்க்க இயலாது. ஒவ்வொன்றுக்கான தாக்கம் இன்னொன்றிலிருந்து வந்திருக்கும். அதனால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுமே ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.குடும்பம், சமூகம், சுற்றுப்புறம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒட்டியே மனிதனின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைகள் அமைகின்றன. மற்ற அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மனித வாழ்க்கையும் சரியாக அமையும். அதனால் தான் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள பிற உயிர்கள், செடி கொடிகள், இயற்கை என்று எல்லாமே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை அமையப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நமது பண்டைய பொருளாதார முறைகள் அமைக்கப்பெற்றன.சோம்பலின்றி மனிதன் தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். பொருள் உற்பத்தியும் செழிப்பும் அதிக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நம் நாட்டில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அது நமது ஜீன்களில் இரண்டற கலந்து விட்டதால் மற்ற நாடுகளைக் காட்டிலும் தனி மனித தொழில் முனையும் தன்மை நம்மிடம் அதிகம் உள்ளது. இது தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணம்.இதைத்தவிர நாம் செய்யும் தொழில் நியாயமான முறையில் செய்யப்படவேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தவறான முறையில் பணம் சம்பாதிக்க முனையக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைப் பின்பற்றிய காரணத்தால் தான் சூரத் முதல் திருச்செங்கோடு வரை நம் நாட்டு தொழில் முனைவோர் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் தொழில் தர்மத்தை கைவிட்டு பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு செயல்படும் போது அந்த தொழிலே அழிந்து போயிருப்பதையும் நாம் பார்க்க முடியும். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போல கிளம்பி மேலை நாட்டு சிந்தனையோடு செயல்பட்ட நிதிநிறுவனங்களின் உதாரணங்களை கூறலாம்.நம் நாட்டில் குடும்பங்களும், சமூகங்களும் தொழிலில் ஈடுபட்ட போது அரசுகள் தேவையான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. அதே சமயம் தவறுகளை தண்டிப்பதற்கான கடுமையான வழிமுறைகளையும் அரசுகள் வைத்திருந்தன. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைக்குத் தொழில்களும், வியாபாரமும் எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்காமல் செயல்படும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்ட போது தொழில்கள் வெற்றி பெற்றன. சில பிரிவினருக்கு மட்டும் நன்மை பயப்பதாகவும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் தொழில்கள் அமையவில்லை.இந்திய நாட்டின் வரலாற்றில் தனது வளர்ச்சிக்காக எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தி வைத்திருந்ததையோ, சுரண்டியதையோ காணமுடியாது. சொந்த திறமைகளைகளால், வளங்களால் ஏற்படுத்திய அதிக உற்பத்தியை வைத்தே பொருளாதார வல்லரசாக விளங்கவந்தது. தற்போதும் வளர்ந்து வருகிறது. சமூகத்தில் சீரழிவுகள் வரும், அதனால் சமூகங்கள் அழியும். ஆனால் இந்தியா பல நூற்றாண்டுகளாக செழிப்பான நாடாகவே விளங்கி வந்துள்ளது. அதற்கு காரணம் மக்களின் கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறைதான். ஒரு பக்கம் செல்வம் இருந்த போதும், மறுபக்கம் கட்டுப்பாடும், ஒழுக்கமும், சிக்கனமும் வலியுறுத்தப்பட்டன. மிதமிஞ்சிய வாழ்க்கை முறை சமூகத்தால் வெறுக்கப்பட்டது. அதனால் தான் உலகிலேயே நீடித்த தன்மையுடன் இன்றளவும் வாழ்ந்து வரும் தன்மையை இந்தியா பெற்றுள்ளது. ஆனால் மேற்கத்திய பொருளாதார முறைகள் அப்படியல்ல. கடந்த 500 ஆண்டுகளில் நில உடமை முறை, வணிகத்துவ முறை, முதலாளித்துவ முறை, கம்யூனிச முறை, சந்தைப் பொருளதார முறை எனப் பலவித முறைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை எவற்றிலுமே பெரும்பான்மையான மக்கள் அமைதியுடனும், வளமாகவும் வாழக்கூடிய தன்மைகள் இல்லை. எனவே அவை ஒவ்வொன்றாகத் தோற்றுப்போய்க் கொண்டே வந்துள்ளன.ஒரு காலத்தில் சூரியனே மறையாத நாடுகளை வைத்திருந்த நாடு இங்கிலாந்து. ஆனால் இன்று பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. கடந்த நூற்றாண்டின் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்த நாடு அமெரிக்கா. அதனால் உலக முழுமைக்கும் தமது கொள்கைகளை சரியென்று சில மாதங்களுக்கு முன்பு வரை மார்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று மீளமுடியாத பிரச்னைகளில் மாட்டிக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியிலுள்ள நாடுகளை தமது காலனிகளாக்கிக் கொள்ளையடித்து வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சிரமங்களில் மூழ்கியுள்ளன.அவர்களின் பொருளாதார முறைகள் அஸ்திவாரமற்றவை. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைமுறையை உயர்த்தும் நோக்கம் அவற்றில் இல்லை. பிற உயிர்களை தமது போல் நேசிக்கும் பண்பு இல்லை. இயற்கையை தாயாக பாவிக்கும் தன்மை இல்லை. அதனால் தம்முடைய நுகர்வுக்கு எதையும் செய்யத்துணிகின்ற பக்குவற்ற தன்மை உள்ளது.நான் வேறு, குடும்பம் வேறு, சமூகம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தன்மையினால் பொருளாதாரம் சார்ந்த அனைத்து சிந்தனைகளும் அவர்களது தனிமனித நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பகட்டு, ஆடம்பர வாழ்க்கை நோக்கில் அமைந்துள்ள பொருளாதார முறை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. குடும்பம், சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றிற்கும் பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என்று அவர்கள் நம்பினர். தங்களின் ஆதிக்கக் கொள்கைகளால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரங்களை வளப்படுத்த முடியும் என்று எண்ணி வந்தனர். அதனால் தொடர்ந்து தோல்விகளையும் சரிவுகளையும் சந்தித்து வருகின்றனர்.மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவு சமூகங்களிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது தனிமனித சிந்தனை, குடும்ப மற்றும் சமூக உறவுகளை பெருமளவு அழித்துவிட்டது. அதனால் பொருளாதாரமும் சீரழிந்து கடும் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சாரங்கள், அதையொட்டிய சமூக அமைப்புகள், வாழ்வியல் நோக்குகள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பொருளாதாரங்களின் போக்கில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. மேற்கத்திய நாடுகள் தற்போது இந்த நோக்கில் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. நமது நாட்டை சரியாக புரிந்திருந்த சில மேற்கத்திய சிந்தனையாளர்கள், உலகுக்கே இந்திய நாடு தான் வழிகாட்ட முடியும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். அண்மைக் காலங்களில் இந்த கருத்து வலுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சமூகவியல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மேலாண்மைத்துறை நிபுணர்கள் பலரும் நமது நாட்டை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். இந்திய வழிமுறைகள் குறித்து பல வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பகவத்கீதையும், கர்மவினை குறித்த பாடங்களும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.எனவே உலகின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் நம்மை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நம் எண்ணங்களை ஆக்கிரமித்துள்ள மேற்கத்திய சிந்தனைகளை வைத்து நமது வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் எடைபோடக்கூடாது. நமக்கே உரித்தான வாழ்க்கை முறை, சிந்தனைகள் ஆகியவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசவேண்டும். மேற்கத்திய பொருளாதார சிந்தனைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக சிக்கல்களை தந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்ற போதும் அதனால் முழுமையடைவில்லை. விவசாயம் பெரிய சிரமங்களில் சிக்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன.அதற்கெல்லாம் தீர்வு, மகாத்மா காந்தியடிகள் கூறியது போல நமது நாட்டிலிருந்தே பாடம் கற்று நமக்குத் தேவையான திட்டங்களை நாமே தீட்டிக் கொள்ளும் பக்குவம் தான்.உயர்தரமான நமது கலாச்சாரம் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக அன்று முதல் இன்று வரை விளங்கி வருகிறது. அது தான் நமக்கு மிகப்பெரிய பலம். அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதார சக்தியாக வளர அதுவே அடிப்படைக் காரணம். நமது பொருளாதாரம் வெற்றிப்பாதையில் தொடர்ந்து நடைபோட நமது கலாச்சாரம், பண்பாடு, தொழில்முனையும் தன்மை, சுயசார்பு தன்மை ஆகியவற்றை காப்பாற்றப்பட வேண்டும். இது நம் நாட்டின் கடமை மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இரண்டு நாடுகளும் உலகின் முக்கிய பொருளாதார சக்திகள். இரண்டு நாடுகளிலுமே தொழில் வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் உள்ளவை. அதன்மூலம் மக்களின் கைகளில் பணமும் இருந்தது. அமெரிக்கா வங்கிகளில் போடப்பட்டிருந்த பணத்திற்கான வட்டியை குறைத்த போது மக்கள் பணத்தை எடுத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்தனர். அதையே ஜப்பான் வங்கிகள் செய்த போது ஜப்பானியர்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவில்லை. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் தற்போது வங்களில் பணம் இல்லை. ஆனால் ஜப்பானிய வங்கிகளில் உலகிலேயே அதிகமான டெபாசிட்டுகள் உள்ளன. ஒரே மாதிரியான கொள்கைகளுடைய இரு நாடுகளில் இருவிதமான அணுகுமுறைகள். இதற்கு காரணம் கலாச்சாரம். ஜப்பானில் குடும்ப கலாச்சாரம் உள்ளது. அமெரிக்காவில் தனி நபர் கலாச்சாரம் உள்ளது. எனவே ஜப்பான் தப்பித்துக் கொண்டது. அமெரிக்கா சிக்கிக் கொண்டது.

வெற்றிக் கதைகள் - 25




குடும்பங்களே நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்

இந்திய கலாச்சாரத்தின் உன்னதமான படைப்பு குடும்ப அமைப்பாகும். இது ஒரு சமூக அமைப்பு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரமும் ஆகும். நமது நாடு பொருளாதார, சமூக மற்றும் காலாசார ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருவதற்கு குடும்ப அமைப்பு முறை அடித்தளமாக இருந்து வருகிறது. குடும்பம் நடத்துபவன் தான் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் துணையாக அமைய முடியும் என்று வள்ளுவர் கூறுகிறார். "துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை' என்னும் குறள் மூலம் இதை விளக்குகிறார். எனவே குடும்பம் நடத்துவது என்பது ஒரு அத்யாவசிய கடமையாக நமது நாட்டில் காலங்காலமாக எடுத்துரைக்கப்ப்டடு வருகிறது.குடும்பத் தலைவன் தனது குடும்ப உறுப்பினர்களுக்காகத் தனது தனிப்பட்ட நலனைத் தியாகம் செய்பவனாக இருக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எப்படி மதிக்கப்பட வேண்டும், குழந்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவான விளக்கங்களை நமது முன்னோர்கள் கொடுத்துச் சென்றுள்ளனர். அதனால் தான் நமது நாட்டின் பல பகுதிகளிலும் குடும்பங்களை வைத்தே அனைவரையும் அறியும் முறை பரவலாக உள்ளது. நமது நாட்டில் தனிநபர் என்று யாரையும் சொல்லஇயலாத நிலையே உள்ளது.2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவில் 19.2 கோடி குடும்பங்கள் உள்ளன.ஒவ்வாரு வீட்டிலும் சராசரியாக 5 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த குடும்பங்கள் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்கு அசாத்தியமானது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சேமிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் சேமிப்பு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் உள்ளது. அதில் குடும்ப அமைப்புகளின் பங்கு எப்போதும் முதன்மையாக இருந்து வருகிறது. 195051 ல் நம்நாட்டில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். ஆனாலும் நாட்டின் சேமிப்பு 9 சதவீதம் இருந்தது. அதில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மட்டும் மூன்றில் இரண்டு பங்கு இருந்தது. அன்று தொடங்கி இன்று வரை குடும்பம் சார்ந்த அமைப்புகள் நாட்டிற்கு தேவையான சேமிப்புகளை அதிக அளவில் அளித்துவருகின்றன. 199091 ம் ஆண்டில் நாட்டின் சேமிப்பில் 91 சதவீதம் குடும்பம் சார்ந்த அமைப்புகளால் மட்டுமே கொடுக்கப்பட்டது.சேமிப்புகளை மேற்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் சேமிக்கின்றனர். எனவே சேமிப்புகள் நம்பிக்கையான முதலீடுகளில் போடப்படுகின்றன. வங்கிகளிலும் அரசுத்துறை சார்ந்த அமைப்புகளிலும் அதிக அளவில் முதலீடுகள் குவிகின்றன. குடும்ப அமைப்புகளால் 200607 ம் ஆண்டில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்ட முதலீடுகள் வங்கிகளில் பல வகை டெபாசிட்டுகளாக போடப்பட்டுள்ளன. அதேபாலே ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சிறுசேமிப்புகள், பிராவிடண்டு மற்றும் பென்சன் பண்டுகள் என்று பல வழிகளிலும் பணம் சேமிக்கப்படுகிறது.மேற்கண்ட சேமிப்புகள் தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடாக மாறுகிறது. குடும்பம் சார்ந்த அமைப்புகள் மட்டும் நம்நாட்டின் மொத்த முதலீட்டில் 40 சதவீத அளவை மேற்கொள்கின்றன. மீதி கம்பெனி மற்றும் அரசுத்துறைகளால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த இரண்டு துறைகளும் கூட குடும்ப அமைப்புகளின் உதவியைக் கொண்டே பெருமளவில் தொழில்களில் முதலீடுகளைச் செய்கின்றன.நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. நாட்டின் முக்கியமான பல தொழில்களிலும் குடும்பங்களின் பங்கு அதிகமாக உள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் தொழில் மற்றும் சேவைத்துறைகள் மூலம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் குடும்பங்களின் பங்களிப்பே அதிகம். கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்த கட்டுமானம், வியாபாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் குடும்பங்களே பிரதான இடத்தை வகிக்கின்றன.தொழில்துறையை பொருத்தவரையில் மிக சிறு தொழில்கள் முதல் பெரிய கம்பெனிகள் வரை பல லட்சக்கணக்கான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் நமது நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலுமே முக்கிய பங்கினை குடும்பங்கள் வகிக்கின்றன. அதனால் அவற்றுக்குத் தேவையான நிதிகளைத் திரட்டி நல்ல முறையில் தொழில்களை நடத்தும் பொறுப்பை குடும்பங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. கம்பெனி அமைப்புகளில் 95 சதவீதத்திற்கு மேல் குடும்பங்களிடமே உள்ளன.தொழில்துறையில் குடும்ப உறுப்பினர்கள் இணைந்தும், கூட்டுக்குடும்பங்களாகவும் இன்றும் பல தொழில்களை நடத்தி வருகின்றன. இவர்கள் நடத்தும் தொழில் வேகமாக வளருகிறது. மேலும் மூத்தவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து தொழிலை நடத்தும் போது அனுபவரும், இளமையும் கைகோர்த்து தொழிலை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கின்றது.தொழிலுக்குத் தேவையான நடைமுறை அனுபவத்தை பெரியவர்கள் கொடுக்கின்றனர். அதனால் எந்தப்பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத பாடங்களை அவர்கள் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தொழில் குடும்பங்கள் பலவற்றிலும் பரவலாக 70 வயதைக் கடந்தவர்கள் கூட தொழிலுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறுவதையும், தேவையான சமயத்தில் தாமே முன்னின்று முக்கிய முடிவுகளை எடுப்பதையும் காணமுடிகிறது. சில சமயங்களில் அவர்களே முழு ஈடுபாட்டுடன் தொழிலை நடத்துவதையும் பார்க்க முடிகிறது. பெரிய நிறுவனங்களை பொறுத்தவரையில் குடும்பத்தில் மூத்தவரே கம்பெனியில் தலைவராக இருப்பதும் நடைமுறையில் உள்ளது.எனவே இந்திய பொருளதாரமும் தொழில்களும் குடும்பங்களாலேயே நடத்தப்படுகின்றன என்றால் அது மிகையானது அல்ல. பலவித அந்நிய தாக்குதல்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போடுவதற்கு குடும்ப அமைப்புமுறையே அஸ்திவாரமாக விளங்குகிறது. மேலை நாடுகளைப்பொறுத்தவரையில் தனிநபர் காலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது. அதனால் ஒவ்வொருவரும் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளைப் பார்த்து முடிவுகளை எடுக்கின்றனர். எனவே அங்கு குடும்ப அமைப்பு வேகமாக சிதைந்து வருகிறது. ஆகையால் மிக அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. குடும்பங்கள் சிதைந்து போவதால் சிறுவயதிலேயே தகாத உறவுகள் அதிகரிக்கின்றன. அதனால் திருமணமாகாமல் விரும்பிய காலம் வரை ஒன்று சேர்ந்து வாழும் முறையும் அதிகரித்து உள்ளது. அந்த உறவுகள் அந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய தன்மையுடையது.திருமணமாகாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை இங்கிலாந்தில் 42 சதவீதமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் கணிசமான பேருக்கு கடைசிவரை தனது தந்தை யாரென்றே தெரிவதில்லை. இதனால் தங்கள் சந்ததியினருக்கு என்று பெற்றோர்கள் யாரும் சேமிப்பதில்லை. குடும்பங்கள் சிதைவதால் மேலைநாட்டினரின் சமூக அமைப்புகளும், பொருளாதாரமும் ஆடிப்போயுள்ளன. சமூகங்களில் குற்றங்கள் அதிகரித்து அரசுகளுக்கு பெரிய செலவுகள் ஏற்பட்டு, பொருளாதாரச் சுமை அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்தில் குடும்ப சிதைவுகளால் அரசுக்கு ஏற்படும் செலவு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய். மேறகத்திய அரசுகள் தனிநபர் மற்றும் சமூகங்களின் பாதுகாப்புக்கு என்று பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒன்று முதல் இரண்டு பங்கு வரை செலவிடுகின்றனர். ஆயினும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.அங்கு குடும்பங்கள் சிதைந்துபோனதால் சேமிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் அரசுகளை சார்ந்து நிற்கின்றனர். நமது நாட்டில் குடும்ப அமைப்புகள் வலுவாக இருப்பதால் சேமிப்புகள் பெருகி மக்கள் தாமாக தொழில்களில் ஈடுபடுவது மட்டுமன்றி அரசு மற்றும் கம்பெனி துறைகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் அளிக்கின்றனர். அதனால் நம் நாட்டின் சமூகமும், பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே குடும்ப அமைப்பே நமது பலம். நமது நாட்டின் பல தொழில் மையங்களின் வெற்றிக்கும், சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சியின் போதும் நமது பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு காரணம் நமது குடும்ப அமைப்புமுறை தான். மேற்கத்திய கலாச்சார தாக்குதலில் சிதைந்து போகாமல் குடும்ப முறையை காப்பாற்றுவது நமது எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

நாட்டின் சேமிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு(மொத்த பொருளாதார உற்பத்தியில் சதவீதம்)
1950- 51 1970- 71 1990- 91 2006- 0௭
மொத்தஉள்நாட்டுசேமிப்பு: 8.6 14.2 22.8 34.8
இதில்குடும்பங்களின்பங்கு: 5.7 9.5 19.4 23.8
கம்பெனிஅமைப்புகள்: 0.9 1.5 2.7 7.8
பொதுத்துறைகள்: 2.0 3.3 1.8 3.2
ஆதாரம்: மத்திய அரசின் பொருளாதார சர்வே 200708

வெற்றிக்கதைகள்-22


குடிசைகளில் குவியும் கோடிகள்


தாராவி!
இந்தப் பெயரை நம்மில் பல பேர் சினிமாவில் குடிசைகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாக பார்த்திருக்கலாம். ஆனால் தாராவி ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் தொழில் மையம் என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.தாராவி மும்பை நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் இரண்டு முக்கிய ரயில்வே இணைப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மேற்கில் மாஹிம் மற்றும் பந்த்ரா, கிழக்கில் மாதுங்கா, வடக்கில் மிதி ஆறு, தெற்கில் சியான் ஆகியவை தாராவியின் எல்லைகள்.300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு தீவுகளைக் கொண்ட பகுதியாக இது இருந்தது. கோலி இன மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு அங்கு வாழ்ந்து வந்தனர். நீர்தேங்கியிருக்கும் ஈரமான பகுதிகள் அந்த தீவுகளைச் சுற்றியும் இருந்தன. பின்னர் அப்பகுதிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு ஒரே நிலப்பகுதியாக மாறிவிட்டது. மீன்பிடி தொழிலும் காலப்போக்கில் அழிந்தது. வெளியில் இருந்து வந்த மக்கள் குடியேறத் தொடங்கினர்.19,20 ம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து குஜராத், தமிழகம், உத்திரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மும்பைக்கு பிழைப்பு தேடி வரத்தொடங்கினர். அவர்கள் வாழ்க்கை நடத்த வாய்ப்பையும் தங்குவதற்கு இடத்தையும் தாராவி கொடுத்தது. மும்பை மக்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்ய ஆட்கள் கிடைத்தனர். நகரை விட்டு தள்ளி அவர்கள் வெளியே இருந்ததால் நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தாராவி அடித்தட்டு மக்களின் புகலிடமாக மாறியது.காலப்போக்கில் மும்பை நகரம் வளர்ந்து வடக்கு நோக்கி சென்றதால், இப்போது தாராவி மும்பையின் மையப்பகுதியில் முக்கியமான இடத்தில் உள்ளது. புதியதாக உருவாகியுள்ள நிதி மற்றும் வணிக மையமான பந்த்ராகுர்லா காம்ப்ளக்ஸ் தாராவியிலிருந்து கல்லெறி தூரத்தில் அமைந்துள்ளது. மும்பையின் பூகோள அமைப்பும், நிலப்பற்றாக்குறையும் தாராவியின் இட மதிப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேறியதன் விளைவாக வித்யாசங்கள் இல்லாத அனைத்துப் பிரிவு மக்களும் வாழும் இடமாக தாராவி மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அதிகமாக உள்ளனர். இதற்கு அடுத்ததாக உத்ரபிரதேச மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தாராவி 100 க்கும் மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த நகர் மற்றும் குடியிருப்புகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. வாழ்க்கையில் சாதாரண நிலையில் உள்ள மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அங்கு வாழ்ந்து வருகின்றனர். போதுமான ரோடு வசதி, சுகாதார வசதிகள் தாராவியில் இல்லை. தகரங்கள் சுவர்களாகவும், பிளாஷ்டிக் சீட்டுகள் ஓடுகளாகவும் கொண்ட வீடுகள் தான் அங்கு அதிகம். ஒரே அறையில் வாழக்கூடிய குடும்பங்கள் ஏராளம். கழிவறை வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் வாழ்பவர்கள் தான் தாராவி மக்கள்.ஆனால் தாராவியின் சிறப்பே அங்கு வாழும் மக்கள் பல விதமான கஷ்டமான வாழ்க்கைக்கு இடையேயும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை பெருக்கும் தன்மை தான். ஆரம்பத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து வந்த மக்கள் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு ஒரு காலனியை உருவாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற பல பேர் தோல் சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டனர். உத்ரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரெடிமேடு ஆலைத் தொழிலில் முனைந்தனர்.பின்னர் பல விதமான தொழில்கள் அங்கு பெருகின. அவற்றில் பிளாஷ்டிக், கண்ணாடி போன்றவற்றை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகத்துக் கொண்டு வரும் தொழில், ரெடிமேடு துணிகள் தயாரிப்பு, தரமான தோல் பொருட்கள் தயாரிப்பு, பானைகள் மற்றும் பிளாஷ்டிக் தொழில்கள் ஆகியவை முக்கியமானவை. கனரக உலோக வேலைகள், மரவேலைகள், நகைத்தயாரிப்புகளும் அங்கு நடக்கின்றன.நமது நாட்டில் விற்கப்படும் விலை உயர்ந்த மிக முக்கியமான வெளிநாட்டு ரக ரெடிமேடு பிராண்டுகள் கூட தாராவியில் தான் தயாரிக்கப்படுகின்றன. நகரங்களில் வாழும் நவீன பெண்கள் விரும்பும் கைப்பைகள், சூட்கேஸ்கள், காலணிகள் ஆகியவையும் தாராவியில் தயாராகின்றன. நாடு முழுவதும் விற்பனையாகின்றன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்து 902 யூனிட்டுகள் தாராவியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் ஜவுளி சம்மந்தமாக ஆயிரத்து 36 யூனிட்டுகளும், பானைத் தொழிலில் 932 யூனிட்டுகளும், தோல் தொழிலில் 567 யூனிட்டுகளும், பிளாஷ்டிக் பிராசசிங் தொழிலில் 478 யூனிட்டுகளும் இருப்பது தெரியவந்தது. பல தொழில்கள் குறுந்தொழில்களாக வீடுகளிலேயே செய்யப்படுவதால் அவை குறித்த சரியான கணக்குகள் இல்லை. ஒரே ஒரு அறையில் மட்டும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மட்டும் தாராவியில் 15 ஆயிரம் உள்ளன.தாராவியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அங்கேயே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி அங்கு வேலை செய்வதற்காக பிறப்பகுதியிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள மறுசுழற்சிக்கான தொழிலில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தாராவி மக்களின் சாராசரி மாத வருமானம் 3 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.இந்த தொழிற்சாலைகளுக்கு சைக்கிள்களில் எடுத்துச் சென்று டீ விற்பது, முறுக்கு விற்பது போன்ற தொழில்களிலும் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். தாராவியில் குடிசையில் தங்கி தொழில் செய்து சம்பாதித்து தங்கள் சொந்த ஊர்களில் பல லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள மாளிகைகளை கட்டுபவர்கள் பல ஆயிரம் பேர். இப்படி தாராவியில் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானஉற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.மிககஷ்டமான சூழ்நிலையில்வாழ்ந்த போதும் வேறு யாராவது தங்களுக்கு வாய்ப்பைத் தருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தொழில் முனையும் தன்மையுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தாராவி மக்கள் உழைப்புக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். அதனால் தாராவி பகுதியையே அமைப்பு சாராத் தொழிஞூலகளின் முக்கிய மையமாக உருவாக்கியுள்ளனர். எனவே தாராவி சாதாரண மக்கள் வாழும் நாட்டின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மட்டுமல்ல. அவர்கள் குடிசையில் வாழ்ந்துவந்தாலும் அசாதாரணமான தொழில் முனையும் தன்மையை பெற்ற பலர் வெற்றிகரமாக தொழில் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புரளும் முக்கியமான இடமும் ஆகும்.



*ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக உருவாகியுள்ள தாராவியின் மக்கள் தொகை குறித்த சரியான புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை. ஆனால் 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை அங்கு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தாராவியின் மத்திய பகுதியான சாம்ரா பஜாரில்தான் மக்கள் மிகவும் அதிகம். உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கமாக வாழம் இடங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. ஒரு சதுர கி.மீ.க்கு 29 ஆயிரத்து 500 பேர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாராவியில் மும்பையின் சாராசரியை விட 11 மடங்கு மக்கள் நெருக்கம் உள்ளது.

வெற்றிக்கதைகள்-19




வைரம் பட்டை தீட்டும் தொழிலால் மின்னும் சூரத்

வெற்றிக்கதைகள்-18

பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

சூரத்!
நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் சூரத்திற்கு தொழில் நகரம் என்ற அந்தஸ்த்தை அளித்தவர்கள் அந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் என்பதும், அவர்கள் தொழிலை கற்க நகரத்திற்கு வரும் போது இன்று வரை பிளாட்பாரங்களில் தான் தங்குகிறார்கள் என்பதும் வியப்பான செய்தி.சூரத் நகரம் ஜவுளி, வைரம் என்று இரு முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது. குஜராத்தின் மொத்த ஜவுளி விற்பனையில் 80 சதவீதம் சூரத்தில் நடக்கிறது. இங்கு 30 ஆயிரம் கடைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜவுளி சந்தை உள்ளது. குஜராத் மாநிலத்தின் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்து வரும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஜவுளி தொழிலிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 60 சதவீதம் பேர் இவர்கள் தான். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நூல் உற்பத்தி, விவிங், பிராசசிங் மற்றும் எம்ப்ராய்டரிங், செயற்கை இழை நூல் தயாரிப்பு என்று ஜவுளித் தொடர்பான அனைத்து தொழில்களும் ஒருங்கே அமைந்துள்ள சூரத்தில் நாளொன்றிற்கு 6 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு 25 சதவீதம் ஆகும். அதற்கு சூரத் நகர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுவதால் இங்கு மட்டும் 400 சொந்த பிராண்டு ஜவுளி ரகங்களை உருவாக்கியுள்ளனர். ஜவுளி தொழிலில் மட்டும் ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியஸ்டர் நூல் உற்பத்தியில் 90 சதவீதம் இந்நகரில் தான் உற்பத்தியாகிறது. ஜவுளி தொழிலில் பல லட்சம்பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத் நகரில் வைரம் பட்டைத்தீட்டும் தொழில் 1909 ல் துவங்கியது. குஜராத் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்ற சிலர் அங்கு வைரம் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 1909ல் நாடு திரும்பினர். சூரத் நகருக்கு வந்த அவர்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலை சிறிய அளவில் துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நகை தொழில் உட்பட வியாபாரத் தொழிலில் சிறந்து விளங்கி வந்த பாலன்பூரி ஜெயின் சமூகத்தினர் இந்த தொழிலில் இறங்கியதும், வைரம் பட்டைத் தீட்டும் தொழிலின் வளர்ச்சி அதிகரித்தது. சூரத் நகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இத்தொழில் மிக வேகமாக வளர்ந்தது விவசாயிகளாக இருந்த படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தொழிலில் இறங்கிய பின்னர் தான். குஜராத் மாநிலத்தின் சவுராஷ்ட்ர பகுதியில் மானாவரி விவசாயமே அதிகம். இதில் விவசாயிகள் ஆண்டில் 6 மாதம் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடியும். அதிலும் போதிய வருமானம் இருக்காது. இதனால் பலர் விவசாய வேலை இல்லாத சமயங்களில் வேறு தொழில் செய்து வருமானம் பார்ப்பதும், மழை பெய்ததும் விவசாயத்திற்கு திரும்புவதும் வாடிக்கையான ஒன்று. இப்படி பல தொழில்களில் இறங்கிய விவசாயிகள், விவசாயத்தைவிட தொழிலில் லாபம் அடையும் போது விவசாயத்தில் காட்டிய ஈடுபாட்டையும், உழைப்பையும் புதிய தொழிலில் காட்டியதால் பெரும் வளர்ச்சிப் பெற்றனர். சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும் இப்படித் தான் வளர்ந்தது. சவுராஷ்ட்ரா பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேலையில்லாத ஆறு மாதங்கள் சூரத் நகருக்கு வந்து வைரம் பட்டைத்தீட்டும் பட்டறைகளில் வேலைக்கு சேருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேலை பழகும் வரை தொழிலதிபர்கள் குறைந்த சம்பளம் கொடுப்பது குறித்து இவர்கள் கவலைக் கொள்வதில்லை. காலையிலிருந்து மாலை வரை பட்டறைகளில் வேலை செய்யும் இவர்கள், வேலை முடிந்தவுடன் ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரங்களிலேயே தூங்குகின்றனர். விவசாய வேலை இல்லாத சமயங்களில் மட்டும் சூரத் வரும் இவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் தொழிலை கற்றுக் கொண்டுவிடுகின்றனர். பின்னர் தாங்களே சொந்தமாக சிறிய பட்டறையை ஆரம்பித்து சூரத்திலேயே தங்கிவிடுகின்றனர். இதற்கு தேவையான மூதலீட்டை அவர்களது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அளிக்கின்றனர். தொழிலில் லாபம் கிடைத்ததும் அவற்றை திருப்பி செலுத்தும் இந்த தொழில் முனைவோர், தங்களது கிராமங்களுக்கு தேவையான ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தல், கோயில்களை புணரமைத்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த நடைமுறை இன்றும் தொடருகின்றது. இதனால் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் புதிய தொழில் முனைவோர் வைரம் பட்டை தீட்டும் தொழிலை துவங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலை கற்கும் வரை பிளாட்பாரவாசிகளாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாதாரண ஏழை மக்களால் வைரம் பட்டை தீட்டும் தொழில் சூரத்தில் பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உலகில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் 80 சதவீதம் சூரத்தில் பட்டை தீட்டப்பட்டுகிறது.10 லட்சம் பேர் இந்த தொழிலில் இங்கு ஈடுபட்டுள்ளனர். இதில் 20 சதவீதம் பேரின் மொத்த முதலீடே 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் தான். சில தொழிலதிபர்கள் சீனாவில் தங்களது கிளை நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகளில் கிளை நிறுவனங்கள் அமைத்து நேரடி ஏற்றுமதி வர்த்தகம் நடக்கின்றது. வைரத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் சூரத்தில் நடக்கின்றது.பெல்ஜியம் நாட்டில் உள்ள உலகின் வைரச்சந்தையான ஆன்ட்வர்ப் நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தகம் சூரத் வர்த்தகர்களால் நடத்தப்படுகிறது. இதனால் அந்த வைரச்சந்தையில் சூரத் வியபாரிகளின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்கின்றது.

1.விலை மதிப்பு மிக்க வைரங்களை கையாளும் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் சிறு முறைகேடு நடந்தாலும் தொழில்முனைவோர் பெருத்த நஷ்டம் அடைய நேரிடும். சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடக்க இந்த தொழிலில் இறங்கியுள்ள பாலன்பூரி ஜெயின்களும், படேல் சமூகத்தினருக்கும் உள்ள அதீத கடவுள் நம்பிக்கையும் மதத்தலைவர்கள் மீதான மதிப்பும் தான் காரணம். பாலன்பூரி ஜெயின்களின் மத குருமார்கள் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வைக்க வேண்டிய லாபம் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளனர். அந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வருவதால் நிறைந்த தரமும், சரியான விலையும் அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அதன்காரணமாகவே சர்வதேச அளவில் வைர வியாபார போட்டியில் வெற்றியை அள்ளியிருக்கிறார்கள். இவர்களைப்போலவே படேல் சமூகத்தினரின் தொழில் நேர்மை அவர்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
2: சூரத் வைரத் தொழில் வெற்றிக்கு பட்டை தீட்டுவதில் உள்ள தரம் மற்றொரு காரணமாக உள்ளது.
3: சூரத் பிளாட்பாரங்களில் ஆறுமாதங்கள் முகாமிடும் தொழிலாளர்களால் நகரின் அழகு கெடுகிறது என்ற புகார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அவர்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். அப்போது வைரம் பட்டைத் தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் சந்தித்து, நாங்களும் ஒரு காலத்தில் பிளாட்பாரவாசிகளாக இருந்தோம், தற்போது தொழில் துவங்கி வரி செலுத்தி வருகிறோம். சூரத் மாநகராட்சி நிர்வாகம் இதை வைத்தே நடக்கிறது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, வருங்கால தொழிலதிபர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
4: சூரத் வைர ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளவர்களில் 26 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். மீதமுள்ளவர்கள் பள்ளிக்கூட படிப்பு மட்டுமே படித்தவர்கள். தங்கள் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு உதவ ஆங்கில மொழி தெரிந்த பட்டதாரிகளை வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். அவர்களை "ஆடிட்டர்' என்று அழைக்கின்றனர். ஆங்கில மொழி தெரியாத வெளிநாட்டு அதிபர்கள் வரும் போது மொழிபெயர்ப்பாளர்கள் உடன் வருவது போல, சூரத் தொழிலதிபர்கள் ஏற்றுமதி தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த "ஆடிட்டர்களை' உடனழைத்து செல்கின்றனர்.

புள்ளி விபரங்கள்:
சூரத் வைர தொழிலதிபர்களில்....
* உறவினரை பின்பற்றி தொழிலுக்கு வந்தவர்கள் 51 சதவீதம்* உறவினர் மூலம் முதலீடுக்கான தொகை பெற்றவர்கள் 90 சதவீதம்* தொழிலின் நடைமுறை மூலதனத்திற்கு சக தொழில்முனைவோரை சார்ந்திருப்பவர்கள்(கைமாற்றுதல் முறை): 60 சதவீதம், வங்கிகளை சார்ந்திருப்பவர்கள் 9 சதவீதம்* சூரத் நகரில் வசிக்கும் தொழில் முனைவோரின் சராசரி ஆண்டு வருமானம் 4.6 லட்சம் ரூபாய்* ஆண்டு மொத்த வர்த்தகம்: 50,000 கோடி ரூபாய்
* சூரத்தின் வளர்ச்சி விகிதம் 11.6 சதவீதம். இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை காட்டிலும் அதிகம். இந்தியாவின் மிக வளர்ச்சி விகிதம் பெற்ற நகரங்களில் சூரத்தும் ஒன்று.

வெற்றிக்கதைகள்-17


பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

ராஜ்கோட்டின் ராஜநடை
வெற்றிக்கதைகள்17நம் நாட்டின் தொழிற்வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கடந்த 50 ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ள தொழில் மையங்கள் தான். இவற்றில் பெரும்பாலானவை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தால் விவசாயத்தை தொடர முடியாமல் புதிய தொழில்களில் இறங்கி வெற்றியடைந்ததால் உருவானவை. விவசாயத்தில் காட்டிய கடும் உழைப்பை நேரம் காலம் பார்க்காமல் புதிய தொழில்களிலும் காட்டியதால் அவர்களால் வெற்றிக்கொடியை நாட்ட முடிந்தது. இந்த வரிசையில் குஜராத்தின் நான்காவது பெரிய நகரமான ராஜ்கோட்டும் ஒன்று. இங்கு விவசாயத்தில் படேல் இன மக்களும், விவசாயத்திற்கு தேவையான கருவிகளை செய்யும் பணியில் "ராம்கடியா' இன மக்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு இயந்திரத்தை பார்த்தவுடன் அதேபோல செய்துவிடும் திறன்படைத்த ராம்கடியா மக்களும், கடும் உழைப்பாளிகளான படேல் இன மக்களும் ஒன்று சேர்ந்து மாற்றுத் தொழில்களில் இறங்கினர். விளைவு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழில்நகரமாக ராஜ்கோட் தற்போது உருவாகி நிற்கின்றது.ஆஜி மற்றும் நயாரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ள ராஜ்கோட் நகரம் 1612 ம் ஆண்டில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த ஜடேஜா ராஜபுத்திர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் வரை விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகரமாக இருந்து வந்தது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இறைக்கும் டீசல் இன்ஜின்களை லீசஸ்டர் என்ற இங்கிலாந்து நிறுவனம் விற்பனை செய்து வந்தது. 1950 களில் லீசஸ்டர் டீசல் இன்ஜின் ஒன்றை பிரித்து பார்த்த படேல் ஒருவர், அதேபோல இன்ஜினை உருவாக்கி லீசஸ்டர் மாடல் டீசல் இன்ஜின் என்று பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார். ஒரிஜினல் லீசஸ்டர் இன்ஜினைவிட விலை குறைந்தும், தரமானதாகவும் லீசஸ்டர் மாடல் இன்ஜின்கள் இருந்ததால் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மேலும் பலர் டீசல் இன்ஜின் உற்பத்தியில் இறங்கினர். சில ஆண்டுகளிலேயே லீசஸ்டர் இன்ஜின்களின் விற்பனை பாதாளத்திற்கு போய்விடவே அந்த கம்பெனி நிர்வாகிகள் ராஜ்கோட்டிற்கு வந்து ஆராய்ந்தனர். இனி லீசஸ்டர் இன்ஜின்களை இந்தியாவில் விற்பது சிரமம் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். "லீசஸ்டர்' என்ற பெயரிலேயே இன்ஜின்களை தயாரித்து விற்றுக் கொள்ள அனுமதிப்பதாகவும், அதற்கு ராயல்டியாக ஒரு தொகையை அளிக்கும்படியும் ராஜ்கோட் டீசல் இன்ஜின் தயாரிப்பாளர்களான படேல்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு படேல்கள் உடன்படவில்லை. மாறாக புதிய பெயர்களில் இன்ஜின்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கினர். 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்டேண்டர்டு ஆக்ரோ, பீல்டு மார்ஷல் இன்ஜின்கள். தற்போது ராஜ்கோட் டீசல் இன்ஜின்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. விவசாயத்திலிருந்து விவசாயத்திற்கு தேவையான டீசல் இன்ஜின் தொழிலுக்கு மாறிய ராஜ்கோட் விவசாயிகள், விவசாயத்தைவிட தொழில்துறை நல்ல லாபத்தை அளிக்கவே மெல்ல மெல்ல மற்ற தொழில்களிலும் இறங்கினர்.முதலில் டீசல் இன்ஜின்பாகங்கள் தயாரிப்பதற்காக வார்ப்படத் தொழிலும், லேத்துப்பட்டறைகளும் துவங்கப்பட்டன. டீசல் இன்ஜின் உற்பத்தியிலேயே முடங்கிப்போய்விடாமல் வாய்ப்புகளைத் தேடி தொழில்முனைவோர் சென்றதால் ஆட்டோமொபைல், ஜவுளி இயந்திரங்கள் போன்றவற்றிற்குத் தேவையான உதிரிபாகங்களும் இந்த பட்டறைகளில் உற்பத்தியாகத் தொடங்கின. முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே இல்லாமல் தற்போது மதர்மெஷினரி எனப்படும் உற்பத்தி இயந்திரங்களை உருவாக்கத் தேவைப்படும் இயந்திரங்கள் ராஜ்கோட்டில் தான் உருவாகின்றன. உலகில் அறிமுகப்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், வாகனம் அறிமுகமாகி நான்கே மாதத்தில் ராஜ்கோட்டில் உற்பத்தி செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீட்டில் பயன்படும் கேஸ் அடுப்பு முதல் இந்திய விமானப்படைக்குத் தேவையான உதிரி பாகங்கள் வரை பல ஆயிரக்கணக்கான பொருட்கள் தற்போது ராஜ்கோட்டில் உற்பத்தியாகின்றன.ராஜ்கோட்டின் இந்த அசுர வளர்ச்சியின் பின்னணியில் அந்நகர மக்களுக்கே உரித்தான சில விசேஷ குணங்கள் காரணமாக அமைந்துள்ளது.ராஜ்கோட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கி பல ஆண்டுகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனர். மாதந்தோறும் தங்கள் செலவிற்கு மட்டும் பணம் பெற்றுக் கொள்ளும் இவர்கள் குறைந்ததது 5 ஆண்டுகள் வரை தங்களது சம்பளத்தை நிறுவன உரிமையாளரிடம் விட்டு வைக்கின்றனர். தொழிலை நன்கு கற்றுத் தேர்ந்தவுடன் இதுவரை விட்டுவைத்த மொத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு தொழிலாளியும் சொந்தமாக தொழிலை ஆரம்பிக்கிறார். அப்போது பழைய நிறுவன முதலாளியே முதல் ஆர்டரை கொடுப்பதுடன் முதலீட்டிற்கு தேவையான கூடுதல் பணத்தையும் அன்பளிப்பாக தந்து உதவுகிறார். இதன்காரணமாகவே ராஜ்கோட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.ஒவ்வொரு தொழிலாளியும் தானும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் உழைப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை என்பதோடு தொழிற்சங்கங்களும் இந்நகரில் இல்லை.இதுதவிர இந்நகரில் உள்ளவர்களுக்கு குடிபழக்கம் இல்லாததும் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. மது அருந்துவது கேவலம் என்ற மக்களின் மனநிலையே இதற்கு முக்கிய காரணம்.ராஜ்கோட் நகரம் தொழில்வளத்தில் சிறந்து வழங்கி செல்வ செழிப்பில் திகழ்ந்தாலும் இந்நகர மக்கள் ஆன்மீகம், சமுதாய சேவை போன்றவற்றிலேயே அதிக ஈடுபாடு காட்டி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

* ராஜ்கோட் நகரின் தொழிற்வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் ராம்கடியா மக்கள் எந்த ஒரு இயந்திரத்தையும் ஒரு முறை பார்த்தவுடனேயே அதைப்போலவே தயாரித்துவிடும் வல்லமை பெற்றவர்கள். இதனால் ஜெர்மனி போன்ற இயந்திர தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் ராம்கடியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
ராஜ்கோட்டில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள்:13,000*பிரபல எஸ்கேஎப் பேரிங்குகள் மற்றும் ரிங்குகள் ஜெர்மனிக்க மட்டும் ஆண்டிற்கு 10 லட்சம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.*பொறியியல் உற்பத்தி 700 கோடி ரூபாய். * பவுண்டரிகள் 500* ராஜ்கோட் தங்க சந்தை நாட்டின் முக்கியமான தங்க சந்தைகளில் ஒன்றாகும். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகிறது.
தொழில்கள் பட்டியல்:வார்ப்படத்தொழில், ஏர்கம்பரசர், பர்னிச்சர், மரம்வெட்டும் இயந்திரங்கள், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு, லேத் மெசின்கள் தயாரிப்பு, வைரம் வெட்டும் இயந்திரங்கள், ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பு, வெள்ளிநகை தயாரிப்பு, தங்கநகைத்தயாரிப்பு, கேஸ் லைட்டர் தயாரிப்பு, பித்தளை பாகங்கள் தயாரிப்பு, பேரிங்குகள், மினிடிராக்டர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஐடி மென்பொருள் தயாரிப்பு என்று ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன.

வெற்றிக் கதைகள் -16


வெற்றிக்கதைகள்-16

முட்டைத்தொழிலில் கொடி கட்டிய நாமக்கல்
குடும்பத்தலைவர்கள் லாரி தொழிலில் ஈடுபட்டு நாமக்கல்லிற்கென்று தனி முத்திரை பதித்தார்கள் என்றால், குடும்பத்தலைவிகள் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல்லிற்கு பெயர் பெற்று தந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க செய்தி.நாமக்கல் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. தமிழகத்தின் மொத்த முட்டை உற்பத்தியில் 65 சதவீதம் நாமக்கல்லில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு நாமக்கல் முட்டை உற்பத்தி 3 கோடியாகும். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் 90 சதவீதம் நாமக்கல் முட்டைகள் தான். நாளொன்றிற்கு அதிகபட்சமாக 45 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு தேவையான முட்டைகள் நாமக்கல்லிருந்தே பெரும்பாலும் சப்ளை செய்யப்படுகின்றன. முட்டை உற்பத்தியில் முன்னணி வகிப்பதால் நாமக்கல் முட்டை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முன்னணி இடத்தை பெற்றதற்கு லாரி தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி தான் காரணம். லாரி தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைவர்கள் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வெளியூர்களிலேயே இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் பெயரளவிற்கு விவசாயத்தில் ஈடுபட்டும், மாடுகளை வளர்த்தும் வந்த குடும்ப பெண்கள் சிறிய அளவில் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடும் போது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவும் முடியும் என்பதால் பெண்கள் தயக்கமின்றி இந்த தொழிலில் இறங்கினர். அதிக வெப்பம், அதிக மழை இல்லாத சூழ்நிலை நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் வளருவதற்கு உதவியாக இருந்தது. கோழிப்பண்ணைக்குத் தேவையான தீவனம், மருந்து உள்ளிட்ட பொருட்களை லாரி உரிமையாளர்கள் தங்கள் சொந்த லாரிகளிலேயே கொண்டு வர முடிந்ததால் மற்ற இடங்களைவிட குறைந்த செலவில் கோழிகளை வளர்க்க முடிந்தது. கொங்குப்பகுதி பெண்களுக்கே உரித்தான கடும் உழைப்பு பண்ணைகளின் எண்ணிக்கையையும் கோழிகளின் எண்ணிக்கையையும் விடுவிடுவென உயர்த்தியது. இதில் கிடைத்த வெற்றியை கண்டு பின்னாளில் பல ஆண்களும் கோழிப்பண்ணைத் தொழிலில் முழுநேரமாக ஈடுபட்டது தனி வரலாறு. ஆனால் கோழிப்பண்ணைத் தொழிலில் நாமக்கல் முக்கிய இடம் பிடித்ததற்கு அப்பகுதி பெண்களின் கடும் உழைப்பு தான் காரணம்.லாரி, கோழிப்பண்ணைத் தொழிலில் முத்திரைப்பதித்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களின் தொழில்முனையும் தன்மையால் விசைத்தறி தொழில், நூல்மில்கள், ஆத்தூர் பகுதியில் விளையும் மரவல்லிக்கிழங்கைப் பயன்படுத்தி சாகோ தொழிற்சாலைகள், காகித தொழிற்சாலைகள் என்று பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அண்மைக் காலமாக கல்வித்துறையிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. தரமான பள்ளிகள் இப்பகுதியில் உருவாகியதால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநிலஅளவிலான ரேங்குகளை இப்பகுதி மாணவர்கள் குவித்து வருகின்றனர். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கென்றே தனியான பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். சில பிரபல பள்ளிகள் தங்களது கிளைகளை வெளிமாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளன. கல்லூரி கல்வியிலும் நாமக்கல் தனி முத்திரைப்பதித்து வருகிறது. விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் 25 மாணவிகள் கல்லூரி கல்வி கற்று வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து இளம்பெண்களும் கல்லூரி கல்வி முடித்த பெண்களாக இருப்பார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பிடத்தக்க வளம் ஏதுமில்லாத நாமக்கல் கடந்த 30 ஆண்டுகளில் பல தொழில்களின் மையமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிக படிப்பறிவு இல்லாவிட்டாலும், கடுமையான உழைப்பை மூலதனமாக்கி பாடுபட்ட சாதாரண விவசாயக் குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களது கடின உழைப்பு, தொழில்முனையும் தன்மை, சேமிப்பு, அர்பணிப்பு ஆகியவை நாமக்கல் என்ற பெயரை உலக அறியச் செய்திருக்கின்றது.
* நெம்பர் 1 நாமக்கல்!
நாட்டிலேயே அதிக சரக்கு வாகனங்கள் உள்ள பகுதி
நாட்டில் அதிக அளவு முட்டை ஏற்றுமதி
மாநிலத்தில் அதிக அளவு முட்டை உற்பத்தி

வெற்றிக்கதைகள் -15


வெற்றிக்கதைகள் -15. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


லாரி தொழிலில் நாமக்கல்லின் வெற்றிப் பயணம்-


வெற்றிக்கதைகள் -14


வெற்றிக்கதைகள் -14. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


சாதாரண மக்களின் உழைப்பால் உயர்ந்த திருப்பூர்

வெற்றிக்கதைகள் -13


வெற்றிக்கதைகள் 13. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

உற்பத்தி 15,000 கோடி, வரி 3,000 கோடி

வெற்றிக்கதைகள் -12

வெற்றிக்கதைகள் -12. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


கோவை ஜெயித்த கதை-



வெற்றிக்கதைகள் -11

வெற்றிக்கதைகள் தொடரின் பகுதி-11. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள தொழில்மையங்கள்

வெற்றிக்கதைகள் -10

வெற்றிக்கதைகள் - 10. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


சேமிப்பும் சுயசார்புமே இந்தியர்களின் பலம்



வெற்றிக்கதைகள் -9


வெற்றிக்கதைகள் -9 . பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.

இந்தியர்களின் சுய தொழில் ஆர்வம்




வெற்றிக்கதைகள் -8

வெற்றிக்கதைகள் -8 . பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவிய உறவுகள்



வெற்றிக்கதைகள் -7

வெற்றிக்கதைகள் - 7. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


சேமிப்பால் உயர்ந்த இந்தியா

வெற்றிக்கதைகள் - 6

வெற்றிக்கதைகள் - 6 . பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


இந்தியாவைச் சுரண்டிய இங்கிலாந்து

வெற்றிக்கதைகள் 5

வெற்றிக்கதைகள் - 5. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


உலகப் பொருளாதரத்தை ஆட்சி செய்த இந்தியா

வெற்றிக்கதைகள்-4


வெற்றிக்கதைகள் - 4 . பெரிதாகப் பார்க்க படத்தின்மேல்.
 க்ளிக்கவும்.

வறட்சியில் வளர்ந்த திருச்செங்கோடு



வெற்றிக்கதைகள்-3

வெற்றிக்கதைகள் தொடரின் மூன்றாம் பகுதி. பெரிதாகப் பார்க்க படத்தின்மேல் க்ளிக்கவும்.


கடிகாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கலக்கும் மோர்வி