சியாம பிரசாத் முகர்ஜி என்னும் தேசபக்தர்

 

மேற்கு வங்கத்தில் பிறந்து தேச ஒருமைப்பாட்டைக்  காப்பாற்றப் போராடி காஷ்மீரில்  தனது லட்சியத்துக்காக  உயிரையே  துறந்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி  பன்முகத் தன்மை கொண்டவர். ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, சிறந்த கல்வியாளராக, சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய தொழில் துறை அமைச்சராக,  பின்னர் அசுர பலம் பொருந்தி அப்போது ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் தேசியக் கட்சியை நிறுவி அதன் முதல் தலைவராகப் பணியாற்றியவர்.

1901 ஆம் வருடம் ஜூலை ஆறாம் நாள் மேற்கு வங்காளத்தில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் சியாம பிரசாத் பிறந்தார். அவரது தந்தை பின்னாளில் கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். சியாம பிரசாத் எம்.ஏ மற்றும் பி.எல். பட்டங்களைப் பெற்று பின்னர் இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றார். அதன் பின் இந்தியா திரும்பி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

1929 ஆம் ஆண்டு அவரது 28 வயதிலேயே வங்காள மாநில சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர்  33 ஆவது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார். அப்போது  இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், விவசாயக் கல்வி, இந்திய வரலாறு மற்றும் பண்பாடு பற்றிய ஆய்வுகள் உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

 அந்த சமயத்தில் கவிஞர் ரவீந்திர நாத தாகூரைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த அழைத்தார். அங்கு தாகூர் முதன் முதலாக வங்க மொழியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி, தாய் மொழிக்குப் பெருமை சேர்க்கும் செயலுக்கு வித்திட்டார்.  அப்போது சியாம பிரசாத் அவர்கள் கல்வி முறையைத் தொழில்களோடு இணைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

1941 ஆம் வருடம் அப்போதைய வங்காளப் பகுதியின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.  அந்தச் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான அவரது பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் 1942 ஆம் வருடம் ஆங்கிலேய அரசு அதிகாரத்தைத் தக்கவைத்து கொண்டு கொடுமையான முறையில்  நாட்டு மக்களைத் துன்புறுத்தவதாக் கூறித் தனது பதவியைத் துறந்து அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

அந்தக் கால கட்டத்தில்  வங்கப்பகுதியில் இந்துக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வந்தனர். ஆங்கிலேய அரசு மதவாதிகளுக்குத் துணை போகும் வகையில் நடந்து கொண்டு வந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்து மகாசபையில் இணைந்து, பின்னர் அதன் அகில பாரத தலைவராகப் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் வங்கப்பகுதி முழுவதையும் பாகிஸ்தானுடன் இணைத்து ஒன்றாக்க முஸ்லீம் லீக் நடவடிக்கை எடுத்து வந்தது. 1946ல் அதற்கெதிராக இந்துக்கள் பெரும்பான்மையாக  வாழும் வங்காளப் பகுதி தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என முகர்ஜி அறைகூவல் விடுத்தார்.  அதற்காக வங்காள இந்துக்களின் தாய் மண் இயக்கத்தை ஆரம்பித்துப் போராட்டத்தை முன்னெடுத்தார். 

அதன் பலனாகத் தான் 1947ல் தேசப்பிரிவினையின் போது தற்போதைய மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதியாக நமக்குக் கிடைத்தது. எனவே வங்காளத்தை நமது நாட்டின் ஒரு பகுதியாக்கி அதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததில் சியாம பிரசாத் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. 

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், சர்தார் பட்டேல் அவர்களின் முயற்சியில் சியாம பிரசாத் நேருவின் தலைமையில்  அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டார்.  1948 ஆம் வருடம் இந்தியாவின் முதல் தொழில் கொள்கையை அறிவித்தார். தேசத்தின் அடிப்படைத் தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் சுய சார்படைய வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளரத் திட்டமிட்டார்.  

தேசப் பிரிவினைக்குப் பின் ஆரம்பம் முதலே பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உள்ளிட்ட பிற இனத்தவர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். அந்த விசயம் குறித்து நேருவிடம் முகர்ஜி தனது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். பின்னர் மத்திய அரசு பாகிஸ்தானுடன் சேர்ந்து நேரு - லியாகத் ஒப்பந்தம் போட்டது. அதன் மூலமும் அங்கு வாழும் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி முகர்ஜி தனது எதிர்ப்பைத் தெரிவித்து 1950ல்  மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்.

அதன் பின் நமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒட்டு மொத்த மக்களின் நலன்களையும் காப்பாற்றக் கூடிய வகையில் ஒரு கட்சி தேசத்துக்கு அவசியம் எனக் கருதி தேச பக்தர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார். தொடர்ச்சியாக  1951 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பாரதிய ஜன சங்கம் கட்சி நிறுவனப்பட்டு, அதன் முதல் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  

1952 ஆம் வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜன சங்கம் மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் ஒருவர் சியாம பிரசாத் முகர்ஜி. நேருவின் தலைமையில் அப்போதே காங்கிரஸ் கட்சியின் போக்கு  பல வகைகளிலும் தவறானதாக இருந்தது. அதில் தேச ஒருமைப்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளும் இருந்தன.

அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்களின் எதிர்ப்புகளையும் மீறி நேரு அரசு, ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகளை சட்டப்பிரிவு 370 மூலம் அளித்தது. அதன் மூலம் அந்த மாநிலத்துக்கு மட்டும் வேறான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு  செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்னும் முறை கொண்டு வரப்பட்டது.

எனவே அவற்றை சியாம பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார்.  ஒரே நாட்டில், இரண்டு அரசியலமைப்புகளும், இரண்டு பிரதமர்களும், இரண்டு தேசிய சின்னங்களும் எப்படி இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். ஒரே நாட்டுக்குள் செல்வதற்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை எனவும், பிற மாநில மக்கள் அங்கு சென்று குடியேறுவதற்கு உரிமை வேண்டுமெனவும் கூறினார். தனிப்பட்ட சலுகைகள் தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும் என எடுத்துச் சொன்னார்.  ஆனால் அவற்றுக்கு எந்த பதில்களும் இல்லை.

எனவே நியாயமில்லாத சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடைகளை நீக்க வேண்டி 1953 மே மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு  நேரடியாகச் சென்றார்.  அந்த மாநிலத்தின் எல்லையைக் கடக்கும் போது  கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அங்கிருந்த போது சுமார் உடல் நலம் குன்றி சுமார் ஐம்பது நாட்களுக்கப்புறம் ஜீன் 23 ஆம் தேதியன்று  அவர் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை வேண்டி முகர்ஜியின் தாயார் நேருவுக்குப் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அதற்குச் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேயில்லை.

தேச ஒற்றுமையையும்  ஒருமைப்பாட்டையும் வேண்டிப் போராடி வந்த சமயத்தில் அந்த மகத்தான தலைவர் தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். சுதந்திர இந்தியா தனது பண்பாடு, கலாசாரத்துடன் ஒற்றுமையாக  வாழ வேண்டும் எனக் கனவு கண்டு உழைத்த மாமனிதரின் வாழ்க்கை நிறைவு பெற்றது.

அவர் காலமானது பற்றி ஆச்சாரிய கிருபளானி சொல்லும் போது  பாரதத் தாயின் மீதும் தேச ஒற்றுமையிலும்  முகர்ஜிக்கிருந்த பற்று அளப்பரியது எனக் கூறினார். மேலும் வங்காள அமைச்சரவையிலிருந்தும், நேரு  அமைச்சரவையிலிருந்தும் அவர் விலகியதும், ஜம்மு-காஷ்மீர் சென்று போராடியதும் இந்த நாட்டுக்கும் அதன் ஒருமைப்பாட்டுக்காகவுமே  என்று  பாராட்டினார். அதே சமயம் அவரது அகால மரணத்தால்  நாட்டுக்கு அவரது சேவை முழுமையாக கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பெருமையும் மிக்க நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து அதனை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதே  நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பது சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் வாழ்வும் மரணமும் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

( கட்டுரையாளர் -  அறங்காவலர், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம், புது டெல்லி)

( தினமலர்.காம்  – ஜூலை 6,2023)